இணையத்தை கலக்கும் ‘Dogecoin' - அப்படினா என்ன? பிட்காயின் போல் இதில் முதலீடு செய்யலாமா?
இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் டாகிகாயின் கிரிப்டோ நாணயத்தில் முதலீடு செய்யலாமா? என்பதில் துவங்கி இந்த விநோதமான கிரிப்டோ நாணயம் தொடர்பான அனைத்து அம்சங்கள் குறித்தும் ஒரு விரிவான அறிமுகம்.
நாம் இப்போது பிரபலமாகப் பேசப்படும் 'டாகி காயின்' 'Dogecoin' பற்றிதான் பார்க்கப் போகிறோம்.
எல்லோரும் டோஜி காயின் எனக் குறிப்பிடும் கிரிப்டோ நாணயத்தை டாகி காயின் என நாம் குறிப்பிடுவதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. ஏனெனில் டாகி காயின் பற்றி நாம் சரியாக தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்கள் இருக்கின்றன. இதன் பெயரின் சரியான உச்சரிப்பும் இதில் ஒன்றாக அமைகிறது.
Dogecoin - பெயர் குழப்பம் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் அடிப்படையான இன்னும் பல விஷயங்கள் குறித்து தெரிந்து பார்த்து விடலாம். இணைய உலகில் இப்போது பிட்காயினுக்கு நிகராக பேசப்பட்டாலும், டாகி காயினும் பிட்காயினும் ஒரே வகை அல்ல என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
கிரிப்டோ பணம்
பிட்காயின், கிரிப்டோ நாணயம் எனப்படும் புதிய வகை பணமாகக் கருதப்படுகிறது. பிட்காயின் போலவே மேலும் பல கிரிப்டே நாணயங்கள் இருக்கின்றன. பிட்காயின் மட்டும் அல்ல, மற்ற கிரிப்டோ நாணயங்களின் செல்வாக்கும் அதிகரித்து வருகின்றன.
பிட்காயின் போன்ற கிரிப்டோ நாணயங்களை வாங்கி வைத்திருந்தால் அவற்றின் மதிப்பு உயரும் போது கணிசமாக லாபம் பார்க்கலாம் எனக் கருதப்படுகிறது. ஏற்ற இறக்கத்தை மீறி ஒரு பிட்காயினின் இப்போதைய மதிப்பு 37,000 ரூபாய்க்கு மேல் என்பது வாயை பிளக்க வைக்கலாம்.
சில காலம் முன் இதுவே ஒரு லட்சத்திற்கு மேல் இருந்தது என்பது வேறு விஷயம். ஆக சில ஆண்டுகளுக்கு முன் பிட்காயினை வாங்கி வைத்திருந்தால் இப்போது கோடீஸ்வரர் அல்லது லட்சாதிபதியாகி இருக்கலாம் என நினைக்கலாம். இப்படி கோடீஸ்வரரானவர்களும் இருக்கின்றனர்.
பிட்காயின் மகிமை
இன்னும் பலவித காரணங்களினால், பிட்காயின் புதுமையான கிரிப்டோ நாணயமாக மட்டும் அல்லாமல் சிறந்த முதலீடாகவும் பார்க்கப்படுகிறது. பிட்காயின் முதலீடு பாதுகாப்பனதா எனும் கேள்வியை விட்டுத்தள்ளுங்கள். அது பிரபலமான முதலீடாக தற்போது இருக்கிறது.
அதிலும் குறிப்பாக மில்லினியல்கள் எனப்படும் இளைய தலைமுறை மத்தியில் கிரிப்டோ முதலீடு ஈர்ப்புடையதாக இருக்கிறது. அவர்கள் பிட்காயினில் ரிஸ்க் எடுக்கத்தயாராக இருக்கின்றனர்.
இப்போது பிட்காயின் போலவே டாகிகாயின் முதலீடு பற்றி பேசப்படுகிறது என்றாலும் டாகி காயினை நினைத்து உற்சாகம் கொள்வது சரியல்ல. அண்மைக்காலமாக டாகி காயினின் மதிப்பு உயர்வதாக சொல்லப்பட்டாலும், அதற்கென தனி ரசிகர் பட்டாளம் இருந்தாலும், இந்த பட்டாளத்தில் கோடீஸ்வரர் எலன் மஸ்க் போன்றவர்கள் அண்மையில் இணைந்திருப்பதாக கருதப்பட்டாலும், டாகி காயினை பிட்காயின் போல கருதுவது பிழையாகவே அமையும்.
ஏனெனில், பிட்காயினும், டாகி காயினும் ஒன்றல்ல என்பது தான் விஷயம். இரண்டுக்கும் இடையே முக்கிய வேறுபாடு இருக்கிறது. உண்மையில் டாகி காயின் கிரிப்டோ நாணயமே அல்ல. அது மீம் நாணயம். இன்னும் பல வேறுபாடுகள் இருக்கின்றன.
லட்சிய நோக்கம்
பிட்காயின் தொடர்பான சர்ச்சைகள்,விமர்சனங்களை மீறி இந்த கிரிப்டோ நாணயம் அடிப்படையில் லட்சிய நோக்கிலானது என்பதை மறுப்பதற்கில்லை. ஆம், மையம் இல்லா தன்மை, பயனாளிகளிடையே நேரடி பரிவர்த்தனை செய்யக்கூடிய ஆற்றல், விநியோகிக்க அல்லது கட்டுப்படுத்த மூன்றாம் அமைப்பு இல்லாதது ஆகிய அம்சங்கள் தான், கிரிப்டோ நாணயமான பின்காயினை புது யுக பணம் எனப் பேச வைக்கிறது.
பிட்காயினின் நோக்கத்தையும், கொள்கையையும் விளக்கும் வெள்ளை அறிக்கை இருக்கிறது. (அதன் மர்ம நிறுவனராகக் கருதப்படும் சடோஷி வெளிட்ட்டது). மேலும் பிட்காயினுக்கு என்று வலுவான தொழில்நுட்பக் கட்டமைப்பு இருக்கிறது. பிளாக்செயின் எனப்படும் பகிரப்படும் டிஜிட்டல் லெட்ஜர் அடிப்படையில் இது செயல்படுகிறது.
மீம் நாணயம்
பிட்காயின் தன்மை பற்றி இன்னும் விவரித்துக்கொண்டே போகலாம். பிட்காயினுக்கு பின் வெளியான ஈத்தர் போன்ற கிரிப்டோ நாணயங்களும் அதனதன் அளவில் தனித்தன்மை வாய்ந்தவை.
ஆனால், டாகி காயின் இந்த வகையின் கீழ் வரவில்லை. அது சும்மா உருவாக்கப்பட்ட கேலி கிரிப்டோ நாணயம். ஆம், பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ நாணயங்களின் செல்வாக்கையும், அவை தொடர்பான பரபரப்பையும் கேலிக்கு உள்ளாக்கும் வகையில் விளையாட்டாக உருவாக்கப்பட்டது தான் டாகி காயின்.
பியர் டு பியர் பணம் எனச் சொல்லப்படும், பயனாளிகள் இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பரிவர்த்தனை செய்ய வழி செய்யும் புதிய பணமாக இருக்க வேண்டும் எனும் நோக்கத்தில் பிட்காயின் உருவாக்கப்பட்டது என்றால், டாகி காயினோ, இணையத்தில் பிரபலமாக இருந்த ஒரு மீமை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
ஆம், பத்தாண்டுகளுக்கு முன் இணைய உலகில், ஷிபா இனோ எனும் நாயின் படம் மிகவும் பிரபலமான மீமாக உலா வந்து கொண்டிருந்தது. இதே காலகட்டத்தில் கிரிப்டோ நாணயங்களும் பிரபலமானதால், இந்த போக்கை நையாண்டி செய்ய விரும்பிய பில்லி மார்கஸ் மற்றும் மேக்னஸ் பால்மார் ஆகிய இருவர் இணைந்து டாகி காயினை உருவாக்கினர்.
ஜப்பானிய நாய்
இணையத்தை கலக்கில் ஷிபோ நாயின் பெயரில், அந்த நாயின் படத்துடன் டாகி காயின் அறிமுகமானது. (இதற்கு பெயரிடவும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. நாயின் பெயரிலான நாணயம் என்பதை குறிக்கும் வகையிலும், கிரிப்டோவின் பகடி நாணயம் என்பதை உணர்த்தவும், Dogecoin என வைத்து அதன் இடையே ஒரு கூடுதல் எழுத்தையும் சேர்த்துக்கொண்டனர். எனவே டோஜி காயின் என உச்சரிக்கப்பட்டாலும், அதன் நோக்கத்தை புரிந்து கொண்டவர்கள் டாகி காயின் என்றும் சொல்வது உண்டு).
ஆக டாகி காயின் அடிப்படையில் ஒரு நகைச்சுவையாக மட்டுமே அறிமுகமானது. அந்த நிறுவனர்கள் கூட அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. (அது மட்டும் அல்ல, நிறுவனர்கள் கையில் இருந்த டாகி காயினை எல்லாம் விற்று வெளியேறிவிட்டனர்.)
பிட்காயின் உருவாக்கத்திற்கு என்று ஒரு உச்ச வரம்பு இருக்கிறது. ஆனால், டாகி காயின் உருவாக்கத்திற்கு வரம்பே இல்லை. எவ்வளவு டாகி காயினை வேண்டுமானாலும் உருவாக்கி புழக்கத்தில் விடலாம். தற்போது ஒரு பில்லியன் காயின்கள் இருப்பதோடு, ஐந்து மில்லியன் புதிய நாணயங்கள் புழக்கத்தில் விடப்படுகின்றன.
ஆனால், டாகி காயினின் கிண்டலும், கேலியும் பலருக்கு பிடித்திருந்தது, அவர்கள் இந்த நாணயத்தை புன்னகையோடி ஆதரித்தனர். இப்படி தான் மீம் நாணயமாக டாகி காயின் உருவானது. டாகி காயின் போல, மேலும் பல மீம் நாணயங்களும் இருக்கின்றன. ஆனால், இவை எல்லாம் பிட்காயினாகி விட முடியாது.
ஏன் புகழ்?
எல்லாம் சரி, இந்த கேலி நாணயம் இணையத்தில் இத்தனை பிரபலமானது எப்படி?
இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. முதல் விஷயம் டாகி காயினுக்கு என்று விசுவாசமான ஒரு அபிமானிகள் இருக்கின்றனர். இவர்கள் டாகி காயினை பரிவர்த்தனை செய்து அதை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றனர்.
அது மட்டும் அல்ல, அண்மையில் கேமர்ஸ்டாப் சர்ச்சை அமெரிக்க பங்குச்சந்தையில் வெடித்த போது, ஒரு சாதாரண பங்கு ரசிகர்களால் உச்சத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதே உத்வேகத்தில் ஒரு சிலர் டாகி காயின் மதிப்பை உயரச்செய்தனர்.
இதன் பயனாக, அதுவரை விளையாட்டாக மட்டுமே கருதப்பட்ட டாகி காயின் மதிப்பு உயர்ந்தது. இந்த நேரம் பார்த்து, டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க், டாகி காயின் பற்றி ஒரு குறும்பதிவு வெளியிட அந்த மதிப்பு இன்னும் அதிகரித்தது.
இது நல்ல முதலீடா?
ஆனால் மஸ்க் ஏன், டாகி காயினை ஆதாரித்தார் என்பதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. ஒன்று மட்டும் நிச்சயம், அவர் இன்னொரு பிட்காயினாக டாகி காயினை கருதி ஆதரவு தெரிவித்திருக்க வாய்ப்பில்லை.
இருந்தும் டாகி காயின் தலைப்புச்செய்திகளை பிடித்து அதன் மதிப்பு கவனத்தை ஈர்த்தது. அதன் மதிப்பு அமெரிக்க டாலரில் சில செண்ட்களாகவே இருந்தாலும் அதன் எதிர்கால மதிப்பு குறித்த எதிர்பார்ப்பு பலரை முதலீடு நோக்கில் அணுக வைத்தது.
இது தான் டாகி காயின் அல்லது டோஜே காயினின் பின்னணி. இது பிட்காயினுக்கு நிகரானதா? இதில் முதலீடு செய்வது பலன் தருமா என்பதை எல்லாம் நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
பிட்காயின் போலபே டாகி காயினை கிரிப்டோ பரிவர்த்தனை மையங்களில் வாங்கலாம் என்றாலும், டாகி காயினை கொண்டு நிஜ உலகில் ஒரு பொருளையும் வாங்க முடியாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்!