இந்தியப் பெண்கள் 10-ல் 8பேருக்கு, போன் மூலம் தொல்லைகள் ஏற்படுகிறது: ஆய்வில் தகவல்
எந்த நகரங்களில் தொலைபேசி அழைப்பு, குறுஞ்செய்திகள் மூலம் பாலியல் தொல்லைக்கு பெண்கள் அதிகம் உள்ளாகின்றனர் தெரியுமா?
இந்தியாவில் பத்தில் எட்டு பெண்கள், தொலைபேசி வழி தொல்லைக்கு உள்ளாவதாகவும், சென்னை, தில்லி மற்றும் புனே ஆகிய நகரங்கள் தொலைபேசி அழைப்பு/ குறுஞ்செய்தி வாயிலான தொல்லைகளுக்கு அதிகம் இலக்காவதாக ட்ருகாலர் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
ட்ருகாலர் சார்பில், இந்தியாவில் பெண்களுக்கு தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் வாயிலாக தொல்லை அதனால் ஏற்படும் பிரச்சனையை புரிந்து கொள்வது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கருத்துக்கணிப்பில் பங்கேற்ற பத்து பெண்களில் எட்டு பெண்கள், தொலைபேசி அழைப்பு/ குறுஞ்செய்தி வாயிலான தொல்லைகளுக்கு அதிகம் இலக்காவதாக தெரிவித்துள்ளனர் என அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும், ஐந்தில் ஒரு பெண், செக்ஸ் தொடர்பான மற்றும் பொருத்தமில்லாத அழைப்புகளை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். சென்னை, தில்லி, புனே மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் உள்ள பெண்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்தியா, கென்யா, கொலம்பியா, பிரேசில், எகிப்து உள்ளிட்ட கருத்துக்கணிப்பு நடத்தப்பட்ட நாடுகளில், இந்தியாவில் உள்ள பெண்கள் தான், இந்த வகை தொல்லைக்கு அதிகம் இலக்காகின்றனர் என்றும் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் உள்ள பெண்கள், தங்கள் செல்பேசி எண்களை வெளிப்படையாக பகிர்ந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். குறிப்பாக, போன் சார்ஜ் செய்யும் போது, ரெஸ்டாரண்ட் செல்லும் போது, போட்டிகளில் பங்கேற்கும் போது, செல்பேசி எண்களை பகிர்ந்து கொள்கின்றனர்.
தொலைபேசி வழி தொல்லைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது என வரும் போது, 85 சதவீதம் பேர் எண்களை பிளாக் செய்கின்றனர். பெரும்பாலான பெண்கள் இதை அலட்சியம் செய்தாலும், 12 சதவீதம் பேர் தான், அதிகாரிகளிடம் புகார் செய்கின்றனர்.
"அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி மூலம் பாலியல் தொல்லை அதிகரிப்பது கவலை அளிக்கும் போக்காகும். இதை சகசமாக கருதுவது பாதிக்கப்பட்டவர்கள் மீது தாக்கத்தை அதிகமாக்குகிறது. இது போன்ற அழைப்புகளுக்கு எதிராக பெண்கள் புகார் செய்வதை #MakeTheCall மூலம் ஊக்குவிப்பது தான் எங்கள் நோக்கம்,” என்று ட்ருகாலர் நிர்வாக இயக்குனர் சந்தீப் பட்டேல் கூறியுள்ளார்.
செய்திள்: பிடிஐ | தமிழில்: சைபர்சிம்மன்