‘ரிஸ்க்’ என்ன? லாபம் எவ்வளவு? - மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு செபி புதிய முன்மொழிவு!
மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் ரிஸ்க் மற்றும் லாபங்களை தெரிந்து கொண்ட பிறகு முதலீடு செய்ய செபி புதிய முன்மொழிவை பரிசீலனை செய்து வருகிறது.
பரஸ்பர நிதி (Mutual Fund) நிறுவனங்கள் தாங்கள் வைத்திருக்கும் பல்வேறு திட்டங்களில் ‘ரிஸ்க்’ அல்லது இடர்பாடுகளைக் கணக்கில் கொண்ட பிறகு லாபம் எவ்வளவு கிடைக்கும் என்பதை தானாக முன் வந்து முதலீட்டாளர்களுக்குத் தெரிவிக்க வகை செய்யும் திட்டத்தை பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி முன்மொழிந்துள்ளது.
தற்போது இருக்கும் நடைமுறையின் படி, பரஸ்பர நிதி நிறுவனங்கள் தாங்களாகவே முன் வந்து முதலீட்டாளர்களுக்கு லாபங்கள் பற்றி தெரிவிக்க வேண்டிய தேவையில்லை. ஆனால், முதலீட்டாளர்கள் அதாவது பரஸ்பர நிதியத்தில் முதலீடு செய்பவர்கள் முழு தகவலறிந்த பிறகு முடிவுகளை எடுக்க வசதியாக செபி தற்போது இந்த முன்மொழிவை முழு அளவில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பான கருத்துக்களை பொதுமக்கள் ஜூலை மாதம் 19ம் தேதி வரை தெரிவிக்கலாம் என்று செபி அறிவித்துள்ளது. மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் போது முதலீட்டாளர்கள் எந்த ஒரு விவரமும் இல்லாமல் முதலீடு செய்ய வேண்டியிருக்கிறது. எனவே, ஒரு திட்டத்தில் முதலீடு செய்யும் போது அதன் மீது முதலீட்டாளர்களுக்கு லாபம் எவ்வளவு கிடைக்கும் என்பதைத் தெரிவிப்பதுதான் சரியாக இருக்கும், என்று செபி கருதுகிறது.
பரஸ்பர நிதி நிறுவனங்கள் தங்கள் முதலீட்டுத் திட்டங்கள் எத்தனை லாபத்தை முதலீட்டாளர்களுக்குப் பெற்றுத்தரும் என்பதை வைத்தே தங்கள் திட்டங்களை விற்கின்றன.
ஆகவே, இனி வரும் காலங்களில் மியூச்சுவல் பண்ட்டில் முதலீடு செய்பவர்கள் அதில் உள்ள ரிஸ்க் அல்லது இடர்பாடுகளை அறிந்து ரிஸ்குகளையும் தாண்டி எத்தனை லாபம் கிடைக்கும் என்பதை அறிந்து முதலீடு செய்ய வழிவகை செய்வதைச் செபி நோக்கமாகக் கொண்டுள்ளது.