யுபிஐ பரிவர்த்தனை தோல்வி அடைந்தால் என்ன செய்வது?
அதற்கான காரணங்கள் என்ன என்பதை பார்ப்போம்.
இன்றைய உலகில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகி விட்டது. அதுவும் யுபிஐ (Unified Payments Interface) வரவு நிதி சார்ந்த பரிவர்த்தனைகளை மிகவும் சுலபமாகிவிட்டது. அது எந்த அளவுக்கு என்றால் நம் வீடுகளுக்கு பக்கத்தில் இருக்கும் பலசரக்கு கடைகள் தொடங்கி வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புவது, உணவு ஆர்டர் செய்வது என நீள்கிறது. இது அனைத்தும் நமது போன்களின் வழியே சுலபமாக மேற்கொள்கிறோம்.
பெரும்பாலான மக்கள் போன்பே, கூகுள் பே போன்ற யுபிஐ செயலிகளின் வழியாக தான் பணம் அனுப்புவதும், பெறுவதுமாக உள்ளனர். யாருமே இப்போது கைகளில் பணம் அதிகம் வைத்துக் கொள்வதில்லை. அனைத்தும் யுபிஐ மயம் தான்.
இருந்தாலும் சமயங்களில் இந்த யுபிஐ பரிவர்த்தனை பயனர்களை சங்கடத்தில் ஆழ்த்துவதும் உண்டு. பணம் அனுப்பும் போது அது தோல்வியை தழுவினாலோ அல்லது அப்படியே சிக்கிக்கொண்டாலோ சங்கடம் தான்.
யுபிஐ பரிவர்த்தனை தோல்வி அடைவதற்கு பல காரணங்கள் உள்ளன. தவறான யுபிஐ ஐடி-யை எண்டர் செய்தால், பெறுநரின் விவரம் சரியாக இல்லை என்றால், வங்கியின் சர்வர் டவுனாக இருந்தால், இணைய இணைப்பில் சிக்கல்/தடங்கல் இருந்தால் யுபிஐ பரிவர்த்தனை தோல்வி அடையும். அந்த சமயங்களில் அந்த பரிவர்த்தனையை பூர்த்தி/நிறைவு பெற என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.
யுபிஐ பரிவர்த்தனை தோல்வி அடைந்தால் என்ன செய்ய வேண்டும்?
பயனர்கள் தங்களது தினசரி பேமெண்ட் லிமிட்டை சரிபார்க்க வேண்டும்: பெரும்பாலான வங்கிகள் மற்றும் பேமெண்ட் கேட்வேக்கள் யுபிஐ பேமெண்ட்டின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துகின்றன. இதோடு நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவின் வழிகாட்டுதலின்படி பயனர்கள் அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் வரை மட்டுமே அனுப்ப முடியும்.
பயனர்கள் தினசரி அதிகபட்ச தொகையை தாண்டி இருந்தாலோ அல்லது சுமார் 10 யுபிஐ பரிவர்த்தனை மேற்கொண்டிருந்தால் அடுத்த 24 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டி இருக்கும். இது மாதிரியான சூழல்களில் மாற்று பேமெண்ட் செயலி அல்லது அதே யுபிஐ ஐடி-யில் வேறொரு வங்கிக் கணக்கில் இருந்து பணம் அனுப்பலாம்.
பயனர்கள் தங்கள் யுபிஐ ஐடி உடன் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்கை இணைக்கலாம்: பெரும்பாலான யுபிஐ பரிவர்த்தனை தோல்வி அடைய காரணமே வங்கிகளின் சர்வர் டவுனாக இருக்கின்ற காரணத்தால் தான். இந்த சிக்கலில் இருந்து தப்பிக்க பயனர்கள் தங்கள் யுபிஐ ஐடி உடன் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்கை லிங்க் செய்து வைக்கலாம். இதன் மூலம் சிக்கலின்றி மாற்று வங்கிக் கணக்கில் இருந்து எளிதில் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.
பெறுநரின் விவரங்களை சரிபார்க்கவும்: யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது க்யூ.ஆர் கோட், மொபைல் எண்ணுக்கு மட்டுமில்லாமல் வங்கிக் கணக்கில் அனுப்பினால் பெறுநரின் வங்கிக் கணக்கு அனுப்ப வேண்டி இருந்தால் அந்த கணக்கின் எண், ஐஎப்எஸ்சி கோட் போன்ற விவரங்களை சரிபார்க்க வேண்டும். அதை செய்யாமல் பணம் அனுப்பினால் பரிவர்த்தனை தோல்வி அடைய வாய்ப்பு உள்ளது.
சரியான யுபிஐ ஐடி-யை உள்ளிட வேண்டும்: யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது சரியான ஐடி-யை உள்ளிட வேண்டும். இப்போது மின்னஞ்சல், ஏடிஎம் பின், போன் பாஸ்வேர்டு என ஏராளமான பாஸ்வேர்டுகளை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. அதனால் தவறான ஐடி-யை உள்ளிட்டால் யுபிஐ பரிவர்த்தனை தோல்வி அடைய வாய்ப்புள்ளது. யுபிஐ ஐடி-யை மறந்து விட்டால் அதை சுலபமாக மாற்றிக் கொள்ள முடியும். அப்படியும் அதை நினைவில் வைத்துக் கொள்வது சவாலாக இருந்தால் பாதுகாப்பான இடத்தில் எழுதி வைக்கலாம்.
இணைய இணைப்பை சரிபார்க்க வேண்டும்: இணைய இணைப்பில் சிக்கல் இருக்கின்ற காரணத்தால் யுபிஐ பரிவர்த்தனை தோல்வி அடைய வாய்ப்புள்ளது. அதனால் பரிவர்த்தனை மேற்கொள்வதற்கு முன்னர் அதை சரிபார்க்க வேண்டியது மிகவும் அவசியம். இணைய இணைப்பு ஸ்லோவாக இருந்தால் மாற்று வழியில் போனில் Wi-Fi மூலமாக இணைப்பை பெற்று பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம். போனை ரீஸ்டார்ட் செய்தும் முயற்சிக்கலாம்.
யுபிஐ லைட்: குறைந்த அளவிலான தொகையை பயனர்கள் அனுப்ப உதவும் அம்சம் தான் UPI Lite. அதிகபட்சமாக 200 ரூபாய் வரையில் இதன் மூலம் பயனர்கள் ஒவ்வொரு முறையும் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். மொத்தமாக நாள் ஒன்றுக்கு ரூ.2,000 என இரண்டு முறை பயனர்கள் இதில் பணம் அனுப்ப முடியும். மொத்த லிமிட் ரீச் ஆகும் வரையில் பயனர்கள் பலமுறை பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.
உதாரணமாக ஒரு பயனர் ரூ.200 மதிப்புள்ள 6 பரிவர்த்தனைகள், ரூ.150 மதிப்புள்ள 4 பரிவர்த்தனைகள், ரூ.10 மதிப்பிலான 20 பரிவர்த்தனைகளையும் ஒரே நாளில் இதன் மூலம் மேற்கொள்ளலாம். ரூ.2,000 என்ற எண்ணிக்கையை எட்டியதும் அதே நாளில் மீண்டும் ஒரு முறை இதில் ரூ.2,000 சேர்க்கலாம்.
தற்போது இந்த அம்சம் பேடிஎம் மற்றும் போன் பே போன்ற செயலிகளில் கிடைக்கிறது.
PhonePe மற்றும் GPay-வில் யுபிஐ ஐடியை சேர்ப்பது, நீக்குவது எப்படி? எளிய விளக்கம்!
Edited by Induja Raghunathan