ஆப்பிரிக்காவில் ‘100 கிணறுகளை’ அமைத்து கொடுத்த அமெரிக்க யூடியூபர் - Mr.Beast-க்கு குவியும் வாழ்த்துக்கள்!
யூடியூப் பிரபலமான மிஸ்டர் பீஸ்ட் ஆப்பிரிக்காவில் 100 கிணறுகளை அமைத்து உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
யூடியூப் பிரபலமான மிஸ்டர் பீஸ்ட் ஆப்பிரிக்காவில் 100 கிணறுகளை அமைத்து உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
யூடியூபர் என்றால் என்ன செய்ய முடியும், யூமர், மூவி ரிவ்யூ, ப்ரான்க் வீடியோக்களை வெளியிட்டு லைக்குகளையும், பணத்தை வாரிக்குவிக்க முடியும். ஆனால், உலகிலேயே அதிகமான சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட, யூடியூப்பில் அதிகம் சம்பாதிக்கும் நம்பர் ஒன் யூடிப் சேனலான 'மிஸ்டர் பீஸ்ட்' (Mr Beast) நிறுவனர் தனது வருமானத்தில் பெரும் பகுதியை ஏழை மக்களுக்கான சேவைக்காக செலவிட்டு வருகிறார்.
யார் இந்த மிஸ்டர் பீஸ்ட்:
மிஸ்டர் பீஸ்ட் என உலக நெட்டிசன்களால் அறியப்படும் இவரது உண்மை பெயர் ஜிம்மி டொனால்ட்சன். அமெரிக்காவின் கேன்சஸ் நகரில் வசித்து வருகிறார். இவர் கடந்த 2012ம் ஆண்டில் இருந்து யூடியூபராக திகழ்ந்து வருகிறார். வெறும் 24 வயதே நிரம்பிய ஜிம்மியின் யூடியூப் ஏறுமுகம் கடந்த 2017ம் ஆண்டு துவங்கியது. அதன் பிறகு, ஜிம்மி டொனால்ட்சன் வாழ்வில் தோல்வி என்பதோ, இறங்குமுகம் என்பதோ கண்டதே இல்லை. ஆனால், அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம்.
சர்ச்சை நாயகனாக வலம் வந்தாலும், இவர் தனது சமூக சேவைகளால் 20.7 கோடி சப்கிரைபர்களை கவர்ந்துள்ளார். பார்வை மாற்றுத்திறனாளிகள் 100 பேருக்கு கண்புரை அறுவைச் சிகிச்சை, கால்கள் இழந்த 2000 பேருக்கு செயற்கை கால்கள் உள்ளிட்ட உதவிகளை செய்துள்ளார்.
மிஸ்டர் பீஸ்ட், மிஸ்டர் பீஸ்ட் 2, மிஸ்டர் பீஸ்ட் கேமிங், மிஸ்டர் பீஸ்ட் ஷார்ட்ஸ், பீஸ்ட் ரியாக்ட்ஸ், பீஸ்ட் ஃபிலந்த்ரோபி ஆகிய யூடியூப் சேனல்களை நடத்தி வரும் ஜிம்மி, ஆண்டுக்கு 26 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை சம்பாதித்து வருகிறார். இந்திய மதிப்பில் மாதத்திற்கு சுமார் 40 கோடி ரூபாய் சம்பாதிப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
பிரபல யூடியூபரான மிஸ்டர் பீஸ்ட் எனப்படும் ஜிம்மி டோனல்ட்சன் பிரபல டைம்ஸ் இதழின் உலகின் அதிக செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
ஆப்பிரிக்காவிற்கு 100 கிணறுகள்:
தற்போது மிஸ்டர் பீஸ்ட் 8 மாதங்கள் கடின உழைப்பு செலுத்தி தென்னப்பிரிக்காவில் 100 கிணறுகளை உருவாக்கியுள்ளார். கென்யாவில் உள்ள கிராமப்புறங்களுக்காக 52 கிணறுகள் மற்றும் ஜிம்பாப்வே, உகாண்டா, சோமாலியா மற்றும் கேமரூன் ஆகிய நாடுகளுக்கு 48 கிணறுகள் கட்டிக் கொடுத்துள்ளார்.
ஆனால், ஆப்ரிக்காவுக்கு 100 கிணறுகளை உருவாக்கித் தருகிறேன் என்று பதிவிட்டுப் அவரது வீடியோ மற்றும் ட்வீட், நிறைய மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் பெறவில்லை.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,
“மக்களுக்கு உதவும் வீடியோவைப் பதிவேற்றியதால், நான் ரத்து செய்யப்படுவேன் என்று எனக்கு முன்பே தெரியும், மேலும், 100% தெளிவாகச் சொல்வதென்றால், நான் கவலைப்படவில்லை. நான் எப்போதும் மக்களுக்கு உதவ எனது சேனலைப் பயன்படுத்தப் போகிறேன், மேலும் எனது பார்வையாளர்களை அதையே செய்ய ஊக்குவிக்க முயற்சிப்பேன்," எனக்குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம், சோசியல் மீடியாக்களில் தற்பெருமைக்காவும், விளம்பரத்திற்காகவுமே மிஸ்டர் பீஸ்ட் இதுபோன்ற சமூக சேவை வீடியோக்களை பதிவிடுவதாக நெகட்டிவ் கமெண்ட்களும் பரவி வருகின்றன.