கே.எல்.ராகுலிடம் களத்தில் காட்டம்; வீட்டில் விருந்து - யார் இந்த எல்எஸ்ஜி உரிமையாளர் சஞ்சிவ் கோயங்கா?
எல்.எஸ்.ஜி அணியின் உரிமையாளர், கேப்டன் கே.எல்.ராகுலை சாடியது கடும் விமர்சனங்களைக் கிளப்ப, ராகுலை அழைத்து விருந்து வைத்துள்ளார். இந்திய தொழிலதிபர் சஞ்சிவ் கோயங்கா பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயித்த 167 ரன்கள் இலக்கை 9.4 ஓவர்களில் நோ-லாசில் சேஸ் செய்து ஊதித்தள்ளியதையடுத்து லக்னோ உரிமையாளர் சஞ்சிவ் கோயங்கா, டிவி கேமராக்கள் முன்னிலையில் கேப்டன் கே.எல்.ராகுலைச் சாடியது கடும் விமர்சனங்களைக் கிளப்ப, சஞ்சிவ் கோயங்கா விமர்சனங்களைக் கருத்தில் கொண்டோ அல்லது தன் சொந்த மன மாற்றத்தின்படியோ கே.எல்.ராகுலை தன் வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்துள்ளார்.
சஞ்சிவ் கோயங்காவின் வசை வீடியோ வைரலாக கடும் விமர்சனங்கள் அவரை நோக்கிப் பாய்ந்து கே.எல்.ராகுல் மீதான ஆதரவு பெருகியது. இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் கே.எல். ராகுலை தனது இல்லத்திற்கு அழைத்து விருந்து வைத்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது, கே.எல். ராகுல் மற்றும் சஞ்சீவ் கோயங்கா இருவரும் கட்டியணைத்து பரஸ்பரம் தெரிவித்தனர். இந்தப் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இதன்மூலம் ராகுல் கேப்டன்சியை துறப்பார் என்ற ஊகங்கள் முடிவுக்கு வந்துள்ளன.
சஞ்சிவ் கோயங்கா சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை தோனி வழி நடத்தியபோதும் தோனிக்கும் இவருக்குமான முரண் உறவுகள், கருத்து மோதல்கள் குறித்த செய்திகளோ வதந்திகளோ உலா வந்தவண்ணம் இருந்ததையும் ரசிகர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. தோனியை கேப்டன்சியை விட்டு நீக்கியது தொடர்பாக இவர் மீது கடும் சர்ச்சைகள் 2016ம் ஆண்டு எழுந்தன.
யார் இந்த சஞ்சிவ் கோயங்கா:
சஞ்சீவ் கோயங்கா ஒரு இந்திய பில்லியனர் தொழிலதிபர். அவர் RPSG குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர். இவருடைய சொத்து மதிப்பு ரூ.28,390 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவரது நிறுவனம் கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது. இவர் இந்தியாவின் 84வது பணக்காரர் என்கிறது ஃபோர்ப்ஸ் உலக அளவில் பணக்காரர்கள் பட்டியலில் 949வது இடத்தில் உள்ளார்.
2011ல் குடும்ப வணிகங்கள் பிரச்சனை தொடர்பாக கோயங்கா RPSG குழுமத்தை நிறுவினார். மின்சாரம், தகவல் தொழில்நுட்பம், ஊடகம், நுகர்வோர் மற்றும் சில்லரை விற்பனைத்துறை, விளையாட்டு, கல்வி, உள்கட்டமைப்பு, மின்சாரம், கார்பன் பிளாக் உள்ளிட்ட பலதுறைகளில் இவரது நிறுவனம் செயல்பட்டு வருகின்றது.
கிரிக்கெட்டில் ’லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்’ அணியுடன் தென் ஆப்பிரிக்கா லீகில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் சஞ்சிவ் கோயங்காவுடையதுதான். அதே போல், ஆர்பிஎஸ்ஜி மேவரிக்ஸ் கொல்கத்தா அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடரின் அணிகளுள் ஒன்றாகும். கால்பந்து லீகில் மோகன்பகான் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளரும் சஞ்சிவ் கோயங்காதான்.
சஞ்சிவ் கோயங்கா ஐஐடி-கரக்பூரில் கவர்னர்கள் குழுவின் தலைவராக பணியாற்றினார். இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) மற்றும் இந்திய வர்த்தகக் கூட்டமைப்பு (ICC) ஆகியவற்றின் இளைய தலைவர் என்ற பெருமையையும் பெற்றவர். 2023ம் ஆண்டு பத்ம விருதுகள் குழுவின் உறுப்பினராக இருந்தார்.
ஆர்பி சஞ்சிவ் கோயங்கா குழுமம் 35 நாடுகளில் உள்ளது. மொத்தம் உலகம் முழுதும் 120 அலுவலகங்கள் உள்ளன. 44 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இவரது குழுமங்களில் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.