Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

ஒரே ஒரு லேப்டாப், ஒரு ஸ்மார்ட்போன்: ரூ.1 கோடி வருமானம் ஈட்டும் யூடியூப் சேனல்!

4 ஆண்டுகளுக்கு முன்பே இணையத்தை நம்பி யூடியூப்பில் அரசு தேர்வுகளுக்கான பயிற்சி வழங்கும் சேனலை துவங்கி, ஆண்டுக்கு 1 கோடி வருவாய் அளிக்கும் நிறுவனமாய் மாற்றியுள்ளார் ஆஷா பினீஷ்.

ஒரே ஒரு லேப்டாப், ஒரு ஸ்மார்ட்போன்: ரூ.1 கோடி வருமானம் ஈட்டும் யூடியூப் சேனல்!

Monday December 07, 2020 , 4 min Read

உணவு, உடை, உறைவிடம் ஆகிய மூன்று அடிப்படை தேவைகளுக்கு அடுத்தபடியாக நான்காவதாய் இணைந்துள்ளது இணையம். லாக்டவுன் நாட்களில் யூடியூப் தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது. காமெடி, கலாய், கருத்து தொடர்பான சேனல்கள் நிரம்பிக்கிடக்கும் யூடியூப்பில் கல்வி சேனல்களும் பெருகிவிட்டன. அதில், யுபிஎஸ்சி, கேபிஎஸ்சி மற்றும் வங்கித் தேர்வுகளுக்கான பாடத்தை கற்பிப்பதில் தனித்து நிற்கிறது ‘காம்படிட்டிவ் கிராக்கர்ஸ்'.


3 லட்சம் சப்ஸ்கிரைபர்களுடன் கடந்த 3 ஆண்டுகளாக ஒன் வுமன் ஆர்மியாக சேனலை வெற்றிகரமாக இயக்கி வருகிறார் ஆஷா பினீஷ்.

ஒரு லேப்டாப், ஒரு அடிப்படை மாடல் ஸ்மார்ட்போன் மற்றும் ரூ30,000 பணம். இவை தான் ஆஷாவின் முதலீடு. தனிமனிதியாய் துவங்கிய பயணம் இன்று 27 பேர் கொண்ட குழுவாக விரிந்ததுடன், வாட்ஸ் அப், டெலிகிராம், வலை பூ, இணையதளம், மொபைல் ஆப் என பல்வேறு தளங்களில் செயல்பட்டு ரூ.1 கோடி வருவாய் ஈட்டும் நிறுவனமாய் வளர்ந்துநிற்கிறது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவரது வெற்றிகரமான யூடியூப் சேனலான ‘Competitive Cracker' அறிமுகப்படுத்தியதன் மூலம் ஒரு தொழில்முனைவோரான ஆஷா பினீஷின் வளர்ச்சி பாதை.

asha

காம்படிட்டிவ் கிராக்கர்-ன் பயணம்

கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆஷா பினீஷ் அவரது தாய்மொழியான மலையாளத்தில் யுபிஎஸ்சி, கேபிஎஸ்சி மற்றும் வங்கித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை யூடியூப் வழி எடுத்துவருகிறார்.


2006ல் இளங்கலை பட்டப்படிப்பை முடித்த அவர், அவரது கல்லூரி தோழர்களைப் போலவே, அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு தயாராகத் தொடங்கினார். 4 ஆண்டுகள் பல்வேறு தேர்வுகளைச் சந்தித்தார். அதில் வெற்றியும் கண்டடைந்தார்.

‘‘நான் வங்கித் தேர்வில் தேர்ச்சி பெற்று, அதற்கான பயிற்சி பெற்றேன். அப்போதான் இந்த போட்டித் தேர்வுகளுக்கு நல்ல பயிற்சி வகுப்புகள் குறைவாக இருப்பதை உணர்ந்தேன்,'' என்று தெரிவித்தார் ஆஷா.

தரமான பயிற்சி வகுப்புகள் இல்லாததால், சொந்தமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் ஆழமாக இருந்தது. அதற்கான சரியான நேரத்தை அமைத்து கொடுத்துள்ளது அவருடைய தாய்மை காலம்.


திருமணம் முடிந்து சாப்ட்வேர் துறையில் பணிபுரிந்து கொண்டிருந்த ஆஷா, குழந்தை வளர்ப்பிற்காக பணியை துறந்தார். 9 டூ 5 பணியை துறந்ததில் கிடைத்த அதிகபடியான நேரத்தினால், நீண்ட நாள் மனதிலிருந்த பயிற்சி வகுப்பு எண்ணம் துளிர்விட்டது. அதன் முதல் முயற்சியாய் 2015ம் ஆண்டில், சில கற்றல் வீடியோக்களை படமெடுத்து, அவற்றை யூடியூப்பில் பதிவேற்றினார்.


ஆரம்பத்தில், கணிதம் மற்றும் ஜி.கே தொடர்பான வீடியோக்களை யூடியூப்பில் பதிவேற்ற முடிவு செய்துள்ளார். ஆனால், முதல் இரண்டு வீடியோக்களை எவருமே பார்க்கவில்லை. மூன்றாவதாகவும் ஒரு வீடியோவை பதிவேற்றினார். குறைந்த அளவிலான ரெஸ்பான்ஸ் கிட்ட தொடங்கியது. ஆஷாவிற்கு நம்பிக்கையும் கிடைத்தது.


தொடர்ந்து வீடியோக்களை பதிவேற்றினார். வியூசும் கூடியது. அவருடைய வீடியோவின் உள்ளடக்கத்தை உன்னிப்பாக கவனித்து மக்கள் பாராட்டத் தொடங்கினர். கொஞ்சம் கொஞ்சமாய் யூடியூப் ஆசானாக தன்னை மெருகேற்றிக் கொண்டார். போட்டி தேர்வுகளுக்கான பொதுஅறிவு தொடர்பான கேள்விகளுக்கான பதிலை எளிமையாக மனப்பாடம் செய்ய சில யுக்திகளையும் கையாளுகிறார். அப்படியாக ஒரு வீடியோவில்,

இரண்டாக வெட்டிய சேனைக் கிழங்கை கையில் ஏந்தியபடி நிற்கும் ஆஷா, சமையல் கற்று கொடுக்கவில்லை. வெஜிடேரியன் மட்டனாகிய சேனைக்கிழங்கு சாப்பிட்டால் ஏற்படும் நமைச்சலுக்கு காரணம் அதிலுள்ள கால்சியம் ஆக்சிலேட் என்ற தாதுப்பொருள் என்றார். தொடர்ந்து ரசத்திற்கு தேவையான புளியை கரைத்து, அதன் நிறம் ஒப்பீட்டளவில் தாரின் நிறத்தோடு ஒத்தது என்று கூறி புளியில் டார்டாரிக் அமிலம் இருக்கிறது என்கிறார். எளிதில் நினைவில் நிலை நிறுத்திக் கொள்ள சமையலோடு தொடர்புப்படுத்தி தந்திரமாக கற்று கொடுக்கிறார் ஆஷா.
asha

P.C: The better india

‘‘நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றிலும் கற்றுக்கொள்ள ஏதாவது இருக்கிறது. ஆனால், அதற்கு ஒருவர் சரியான கேள்விகளை முன்வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். எனக்கு சமையல், கற்றல் மற்றும் கற்பித்தலில் அதிக ஆர்வம். இந்த லாக்டவுன் இவை அனைத்தையும் ஒன்றிணைக்க எனக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்தது.'' என்றார் ஆஷா.

மூன்றாவது வீடியோவுக்குப் பிறகு, நேரடி வகுப்புகள் எடுக்கும்படி மாணவர்கள் கேட்கத் தொடங்கினர். காத்திருந்த சமிக்ஞை கிட்டியதும் ஆஷா அவரது பயிற்சி வகுப்புகளைத் தொடங்க எர்ணாகுளத்தில் ஒரு சிறிய இடத்தை வாடகைக்கு எடுத்தார்.

‘‘முதலில், மூன்று மாணவர்கள் மட்டுமே வகுப்பில் சேர்ந்தனர், ஆனால் மெதுவாக வாய்மொழியாக ஆஷாவின் பயிற்சி வகுப்பு குறித்து ஊர் முழுவதும் பரவியது. அதிகமான மாணவசேர்க்கையும் நடந்தது,'' என்று காம்போடிட்டீவ் கிராக்கர்ஸ் பிறந்த கதையை நினைவு கூர்ந்தார்.

அங்கிருந்து துவங்கிய காம்படிட்டிவ் கிராக்கர்-ன் பயணம் நேரடி வகுப்புகள், ஆன்லைன் வகுப்புகள், மொபைல் ஆப், வலை பூ என்று பல்வேறு தளங்களிலும் விரிந்து யுபிஎஸ்சி மற்றும் வங்கி தேர்வாளர்கள் விரும்பும் ‘பிராண்ட்' ஆக மாறியுள்ளது.


கோட்டயத்தில் வசிக்கும் மாணவரான தீப்பு, 2016ம் ஆண்டு ஆஷாவின் பயிற்சி வகுப்பில் சேர்ந்து உள்ளார். ஆஷாவின் ஆரம்பகால மாணக்கர்களுள் ஒருவரான தீப்பு ஆஷா கற்பிக்கும் திறன் குறித்து கூறுகையில், ‘‘இந்த வகுப்புகளில் உள்ள தனித்துவம் என்னவென்றால், ஆஷாவின் அணுகல் முறை தான். எனக்கு என்ன சந்தேகங்கள் இருந்தாலும், எப்போது கால் செய்து கேட்டாலும் பொறுமையாய் எனக்கு தீர்வு கொடுப்பார், என்றவர் கேரள பொது சேவை ஆணையத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

சந்தை போட்டியும்! ஒரு கோடி வருவாயும்!

தரமான உயர்கல்வியை தேடும் மக்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிப்பதாலும், குழந்தைகளின் பாதுகாப்பான எதிர்காலத்திற்காக பெற்றோர்கள் பயிற்சி நிறுவனங்களை நாடுவதாலும், இந்தியாவில் பயிற்சி வகுப்புகளுக்கான சந்தை 2022ம் ஆண்டில் 50மில்லியன் டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.35,000 ஆரம்ப முதலீடாகக் கொண்டு தொடங்கப்பட்ட ‘காம்படிட்டிவ் கிராக்கர்', 2019-20 நிதியாண்டில் ரூ.1 கோடி வருவாயை வெற்றிகரமாக ஈட்டியது. நேரடி வகுப்புகள் மூலம் கிடைக்கும் வருவாய் மொத்த வருவாயின் 25 சதவீதமே!
‘‘நான் ஒரு யூடியூப் ஆசிரியர், ஆஷா பினீஷை யூடியூப் மூலம் மட்டுமே மக்கள் அறிவார்கள். யூடியூபிலிருந்து கிடைக்கும் வருவாய் ஒப்பீட்டளவில் மிகக் குறைவுதான் என்றாலும், விற்பனையை இயக்குவதிலும், மாணவர்களை வலைத்தளத்தை நோக்ச்கி செலுத்துவதிலும் யூடியூப்பிற்கு பெரும் பங்குள்ளது,'' என்றார்.

டிஜிட்டல் தளங்கள் வழியாக மக்களை அணுகுவது எளிது என்றாலும், அதற்கேற்ற போட்டியும் நிறைந்தே உள்ளது. அதற்காகவே, மற்ற தளங்களான வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் ஆப் மூலம் நுழைவுத் தேர்வுகளுக்கான பாடங்களை குறைந்த சைஸீல் வழங்கி வருகிறார்.


ஆரம்பத்தில், ஆஷாவும் அவரது நண்பர் மிதுவும் வகுப்புகளை நடத்தி உள்ளனர். நாளடைவில், மாணவ சேர்க்கை அதிகரிக்கவே ஆசிரியர்கள் தேவையும் அதிகரித்தது. காம்படிட்டிவ் கிராக்கர்-ல் மாணவர்கள் விரும்பி இணைந்தது போலவே கற்பித்தல் சமூகத்தின் ஒரு பகுதியாக இருக்க பல ஆசிரியர்களும், ஐஐடி பட்டதாரிகளும் ஆர்வமாக அணுகினர்.


தற்போது, அவரது அணியில் 27 ஆசிரியர்கள் உள்ளனர். குழுவை ஒருங்கிணைப்பதுடன், யூடியூப் சேனலுக்கான உள்ளடக்கத்தை உருவாக்குவது, வீடியோக்கள் எடுப்பது, சந்தைப்படுத்தல், விற்பனை மற்றும் நிதி ஆகிய அனைத்தையும் ஒன் வுமன் ஆர்மியாக இருந்து கவனித்து வருகிறார் ஆஷா.

asha

P.C: The better india

ஆஷாவின் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாயிருந்து வரும் அவரது கணவர் பினீஷ் காம்பாடிட்டிவ் கிராக்கர்க்காக அவரது கார்ப்ரேட் பணியையும் விட்டார். எம்பிஏ பட்டதாரியான அவர், இந்துஸ்தான் லைஃப் கேரில் பணிபுரிந்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு, முழுநேர காம்பாடிட்டிவ் கிராக்கர்சில் சேர முடிவு செய்துள்ளார்.

‘‘ஆஷா மீது எனக்கிருந்த அபரிமிதமான நம்பிக்கையும், அவர் செய்து கொண்டிருந்த வேலையும் தான் எனது இலாபகரமான மற்றும் நிலையான கார்ப்பரேட் வாழ்க்கையை விட்டு வெளியேற வழிவகுத்தது. நான் அவளை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். எனது ஆதரவையும் நிபுணத்துவத்தையும் காம்பாடிட்டிவ் கிராக்கர்க்கு வழங்குவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது,'' என்று பெருமையுடன் கூறினார் பினீஷ்.
‘‘நான் ஒரு ஆசிரியராகவும், ஒரு தொழில்முனைவோராகவும் எனது பணியில் உறுதியாக இருக்கிறேன். நான் எனது தயாரிப்பை நம்புகிறேன். ஒவ்வொரு நாளும் கற்றுக் கொண்டே இருக்கிறேன்'' என்று கூறி முடித்தார் ஆஷா.

ஆங்கிலத்தில்: டென்சின் | தமிழில்: ஜெயஸ்ரீ