அந்தமான் தீவை பிளாஸ்டிக் இல்லா பகுதியாக மாற்ற முயற்சிக்கும் பெண்!
கரிமா பூனியா 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் கச்ரேவாலா திட்டத்தின் மூலம் அந்தமானின் நைல் தீவுகளில் உள்ள கடற்கரைகளில் இருந்து 250 கிலோ கழிவுகளை சேகரித்து வகைப்படுத்தியுள்ளார்.
உலகம் முழுவதும் ஆறுகளிலும் கடல்களிலும் காணப்படும் நீர் மாசு குறித்து கவலை அதிகரித்து வருகிறது. கழிவு மேலாண்மை மோசமாக இருப்பதன் காரணமாக பிளாஸ்டிக் மற்றும் இதர கழிவுப் பொருட்கள் ஆறுகளிலும் டல்களிலும் கலக்கப்படுகின்றன.
சுற்றுலாப் பயணிகளும் பிளாஸ்டிக் பாட்டில்களையும் பைகளையும் நீர்நிலைகளில் போடுவதால் அவை மாசுபட்டு நீர்வாழ் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கிறது.
கடற்கரைகள், ரிசார்டுகள் மற்றும் சாலைகளில் கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததைக் கண்ட 26 வயது கரிமா பூனியா தனது நேரத்தை செலவிட்டு அந்தமானின் நைல் தீவுகளில் உள்ள கடற்கரைகளை சுத்தப்படுத்தத் தீர்மானித்தார்.
கல்லூரிப் படிப்பை இடைநிறுத்தம் செய்த கரிமா இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகாண 2017-ம் ஆண்டு கச்ரேவாலா (Kachrewala Project) திட்டத்தைத் தொடங்கினார்.
இவர் இதுவரை நைல் தீவுகளில் உள்ள ஐந்து கடற்கரைகளில் இருந்து 250 கிலோ கழிவுகளை சேகரித்து பிரித்தெடுத்துள்ளார். கடற்கரைகளில் இருந்து மட்டுமல்லாமல் ரிசார்டுகளில் இருந்தும் உணவகங்களில் இருந்தும் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் குழந்தைகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இவர் கழிவுகளை பிரித்தெடுப்பது குறித்த பயிற்சி பட்டறைகளையும் நடத்துகிறார். பிளாஸ்டிக் மாசு காரணமாக ஏற்படும் மோசமான விளைவுகள் குறித்து குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கவேண்டும் என்பதே பட்டறையின் நோக்கமாகும்.
‘ஸ்பீக்கிங் ட்ரீ’ உடனான உரையாடலில் கரிமா கூறும்போது,
“இது ஒரு நீண்ட கால திட்டமாக இருக்கும் என நான் நினைக்கவில்லை. ஏனெனில் நான் கடந்த ஆண்டு சஸெக்ஸ் பல்கலைக்கழகத்தில் டெவலப்மெண்ட் ஸ்டடீஸ் படிக்க சென்றிருக்கவேண்டும். ஆனால் அந்தமான் தீவுகளை சுத்தப்படுத்தும் பணிகளுக்கே முக்கியத்துவம் இருப்பதை உணர்ந்தேன். சூழலியலைப் பொறுத்தவரை தனித்துவமானது என்பதால் இந்தத் தீவுகளைப் பாதுகாக்கவேண்டியது முக்கியம். இங்கு சுமார் 1,000 உள்ளூர் இனங்கள் வசிக்கின்றன,” என்றார்.
கரிமா தனது குடும்பத்துடன் விடுமுறைக்காக அந்தமான் சென்றிருந்தபோதே இத்தகைய தீர்மானத்தை எடுத்துள்ளார். ஸ்கூபா டைவிங் உரிமம் பெறும் பணியில் ஈடுபட்டிருந்தபோதே இந்தத் தீவில் கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் மோசமாக இருப்பதைக் கண்டார்.
இதுவே தீவுகளில் கடல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள ’ரீஃப்வாட்ச்’ என்கிற அரசு சாரா நிறுவனத்தில் இணைய உந்துதலளித்தது. இங்கு கரிமா திடக்கழிவு மேலாண்மை குறித்த திட்டத்தை குழுவிற்கு முன்மொழிந்தார். அத்துடன் போர்ட் ப்ளையரில் உள்ள முறைசாரா மறுசுழற்சித் துறையைப் புரிந்துகொள்ளும் முயற்சியிலும் ஈடுபட்டார்.
இது குறித்து ’ஷீ தி பீப்பிள்’ உடன் உரையாடும்போது,
“திட்டத்திற்கு நிதியுதவி செய்ய விருப்பமுள்ளவர்களைக் கண்டறிய தனியார் துறையைச் சேர்ந்த பலரை சந்தித்தேன். யாரும் முன்வரவில்லை. இறுதியாக ஒருவர் எனக்கு இரண்டு பணிகள் கிடைக்க உதவினார். அது என்னுடைய தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ளவும் என்னுடைய திட்டத்தில் பணிபுரியவும் உதவியது. நிர்வாகத்தின் ஆதரவு முக்கியம் என்பதால் அவர்களுக்கு உதவுவதில் விருப்பம் உள்ளதா என தெரிந்துகொள்ள அவர்களை சந்தித்தேன். இந்த திட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நைலில் முறையாகத் தொடங்கப்பட்டது,” என்றார்.
கடந்த ஆண்டு போர்ட் பிளேயரில் உள்ள நேவி சில்ட்ரன் பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு கழிவு மேலாண்மை மற்றும் பாதுகாப்பு தொடர்பான பயிற்சி பட்டறையை கரிமா ஏற்பாடு செய்தார். இந்த நடவடிக்கையின் மூலம் 33 குழந்தைகள் 100 கிலோ கழிவுகளை சேகரித்தனர்.
தற்போது அந்தப் பகுதியில் கழிவுகளை வகைப்படுத்துவது தொடர்பான பல்வேறு சுவரொட்டிகளைக் காணலாம். தீவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆட்டோரிக்ஷாவிலும் இதை ஒட்ட கரிமா திட்டமிட்டுள்ளார்.
கழிவுகள் சேகரிப்பைப் பொறுத்தவரை தீவில் இருந்து பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களை நீக்கிவிட கரிமா தற்போது உள்ளூர் அதிகாரிகளுடன் பணியாற்றி வருகிறார்.
கட்டுரை: THINK CHANGE INDIA