இன்ஸ்டாவில் Excel சொல்லிக் கொடுத்து ரூ.1 கோடி வரை சம்பாதிக்கும் பெண்..!
ஒரு வருடத்தில் உச்சத்தை தொட்ட கேட் நார்டான்!
சமூக வலைதளங்கள் மூலமாக சம்பாதிக்கும் போக்கு அதிகரித்துள்ளது. பலர் இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்தி லட்சம் முதல் கோடி வரை சம்பாதித்து வருகின்றனர். என்றாலும், இதில் பலர் பொழுதுபோக்கு அம்சங்களை பகிர்ந்து இந்த வருமானம் ஈட்டி வருகின்றனர்.
ஆனால், தனது திறமையை மட்டுமே சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி கோடி ரூபாய் ஈட்டி வருகிறார் ஒரு பெண் இருக்கிறார். கேட் நார்டான் என்கின்ற 27 வயது பெண் தான் அவர்.
மைக்ரோசாஃப்ட் எக்செல் மற்றும் கூகுள் ஸ்ப்ரெட்ஷீட் தொடர்பான நுணுக்கங்களை வலைதளங்கள் மூலமாக கற்றுக்கொடுக்கும் வீடியோவாக எடுத்து அதன்மூலம் மாதம் ரூ.1 கோடி வருமானம் ஈட்டி வருகிறார். பலருக்கு எக்செல் பயன்படுத்துவது மிக சிரமமனதாக இருக்கிறது. இதனை மனதில் வைத்து அதனை எளிதாகச் சொல்லிக்கொடுக்கும் முனைப்பில் கேட் நார்டான் இந்த முயற்சியில் இறங்கினார்.
மிகவும் எளிய முறையில், அதேநேரம் வேடிக்கையான முறையில் எக்செல்லில் டெக்னிக்குகளை விளக்கி பாடம் எடுத்து அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். வீடியோக்களில் ஆடல் பாடலுடன் பாடமும் எடுப்பதால் எளிதாக மக்களை கவர்கிறது.
இவர் சொல்லிக்கொடுப்பது எளிமையாக புரிகிறது என்பதால் ஒரு வருடத்திற்குள்ளாகவே, 1 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் அவருக்குக் கிடைத்துள்ளனர். அதுவரை ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்த கேட், மைக்ரோசாஃப்ட் எக்செல் ஆன்லைனில் கற்பிப்பதற்காக தனது வேலையை விட்டுவிட்டார். இது அவரது வாழ்க்கையை மாற்றியமைக்க காரணமாக இருந்துள்ளது. Instagram இல் @miss.excel என்ற பேஜ்ஜில் நவம்பர் 2020 இல் தனது ஆன்லைன் கற்பித்தல் வீடியோக்களை பதிவிடத் தொடங்கினார்.
இப்படியாகத் தொடங்கிய ஆறு மாதங்களுக்காகவே லட்சங்களில் வருமானம் ஈட்டத் தொடங்கினார். தற்போது லட்சத்தில் இருந்து கோடி வரை, ஒவ்வொரு மாதமும் ஆன்லைனில் சொல்லித் தருவதன் மூலம் சம்பாதிக்கிறார் கேட் நார்டான். மைக்ரோசாஃப்ட் எக்செல் மற்றும் கூகுள் ஷீட் பற்றிய வகுப்புகளை எடுப்பதுடன் இதர மைக்ரோசாஃப்ட் மற்றும் ஆன்லைன் புராடக்ட்களையும் வகுப்புகளாக எடுக்கத் தொடங்கியுள்ளார்.
தனது வேலையை விட்டுவிட்ட பிறகு காதலுடன் சேர்ந்து ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய நகரத்திற்குச் சென்று அங்கிருந்து புதிய வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். எக்செல் சொல்லிக்கொடுப்பதன் மூலமாக கேட் ரூ.1 கோடி வருமானம் ஈட்டி வருவது தொடர்பான செய்தி வெளியானதில் இருந்து அவர் குறித்து ஆச்சர்யமாக பதிவிட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.
தொகுப்பு: மலையரசு