‘மாதவிடாய் கப்’ தயாரித்து ஏழைப் பெண்களிடம் கொண்டு சேர்க்கும் பெண் தொழில்முனைவர்!
ஏழ்மை நிலையில் இருக்கும் கிராமப்புற பெண்களுக்கு மாதவிடாய் கப் சென்று சேரவேண்டும் என்று விரும்பிய இரா குஹா ’ஒன்று வாங்கினால், ஒன்று நன்கொடை வழங்கலாம்’ என்கிற பிரச்சாரத்தை தொடங்கினார்.
தொழில்நுட்ப வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள் என என்னதான் நாம் வளர்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்று மார்தட்டிக் கொண்டாலும் சில விஷயங்கள் இன்னமும் கவனம் பெறாமல், அதிக முக்கியத்துவம் அளிக்கப்படாமல், அதிகம் விவாதிக்கப்படாமல் இருக்கின்றன.
அத்தகைய விஷயங்களில் ஒன்று மாதவிடாய். நகர்புறப் பெண்களைக் காட்டிலும் கிராமப்புறப் பெண்கள் மாதவிடாய் தொடர்பாக பல்வேறு சிக்கல்களை சந்திக்கிறார்கள். இன்றளவும் மாதவிடாய் தொடர்பான வெளிப்படையான கருத்து பரிமாற்றங்களும் விழிப்புணர்வும் குறைவாகவே உள்ளன. இதற்கு முக்கியக் காரணம் மாதவிடாய் குறித்த கற்பிதங்கள்.
இதைத் தகர்த்தெறிர்ந்து பெண்கள் தங்கள் பிரச்சனைகளை பொதுவெளியில் வெளிப்படையாக பேசினால் எத்தனையோ பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.
மாதவிடாய் சமயத்தில் துணிகளைப் பயன்படுத்திய பெண்களுக்கு வரப்பிரசாதமாக அறிமுகமானது சானிட்டரி பேட்கள். துணிகளுக்கு சானிட்டரி பேட் சிறந்த மாற்று என்றாலும் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகவே இவை இருக்கின்றன. இதுதவிர தடிப்புகள் ஏற்படுதால் பெண்கள் சிரமப்படுகிறார்கள்.
இதற்கான மாற்றாக அறிமுகமானதுதான் மாதவிடாய் கப். பெங்களூருவைச் சேர்ந்த இரா குஹா மாதவிடாய் கப் வடிவமைத்துத் தயாரித்து வருகிறார்.
ஏன் மாதவிடாய் கப் தேர்வு செய்தார்?
2017-ம் ஆண்டு இரா குஹா ஹார்வர்ட்-கென்னடி பள்ளியில் பொது கொள்கை பிரிவில் முதுகலைப் பட்டம் படித்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பெங்களூரு வந்தார். அங்குதான் இவரது பெற்றோர் வசித்து வந்தனர்.
பெங்களூருவில் மேரி என்பவர் இராவின் பெற்றோருக்கு சமையல் செய்து உதவி வந்தார். இரா பெங்களூரு வந்த சமயத்தில் மேரி உடம்பு சரியில்லை என விடுப்பு எடுத்திருந்தார். விடுப்பு முடிந்து மேரி மீண்டும் வேலைக்கு வந்தார். இரா மேரியிடம் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். அப்போது மேரி மாதவிடாய் பிரச்சனை குறித்து கூறியுள்ளார்.
மாதவிடாய் சமயத்தில் தடிப்புகள் ஏற்படுவதாகவும் சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படுவதாகவும் கூறியுள்ளார். இதனால் மேரியின் ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சியும் வலி நிறைந்ததாகவே இருந்துள்ளது.
”நான் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பாலிடிக்ஸ் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் இருந்தே மாதவிடாய் கப் பயன்படுத்தி வருகிறேன். என்னிடம் ஒரு கப் கூடுதலாக இருந்தது. மேரியிடம் கொடுத்துப் பயன்படுத்திப் பார்க்கச் சொன்னேன். மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்றார். பயன்படுத்தவும் எளிதாக இருக்கிறது என்றார். அதுமட்டுமில்லாமல் அவரது சகோதரிக்கும் ஒன்று தருமாறு என்னிடம் கேட்டார். பின்னர் எங்கள் பகுதியான குன்னூரில் வீட்டு வேலை செய்து வந்த பெண்களுக்கும் நாங்கள் மாதவிடாய் கப் கொடுத்தோம்,” என்கிறார் இரா.
ஒவ்வொரு முறை இந்தியா வரும்போதும் மாதவிடாய் கப் விநியோகிப்பதற்காகவே 300 டாலர் வரை செலவிட்டார்.
மாதவிடாய் கப் தயாரிப்பு எப்படித் தொடங்கியது?
பொது கொள்கை படிப்பில் ஆர்வம் இருந்த காரணத்தால் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபடவே விரும்பினார்.
மாதவிடாய் தொடர்பாக பெண்கள் சந்திக்கும் சிக்கல்கள் குறித்து தெரிந்துகொண்டதும் மாதவிடாய் கப் வடிவமைத்து, தயாரிக்கத் தீர்மானித்தார்.
“நாங்கள் உயர்தர மாதவிடாய் கப்களை பெண்களுக்கு கொடுத்தோம். அவர்கள் பயன்படுத்திய பின்னர் அவர்களிடம் கருத்து கேட்டபோது ரத்தப்போக்கு வெளியில் கசிவதாகவும் கப்பை அகற்றுவது கடினமாக இருப்பதாகவும் தெரிவித்தார்கள். எனவே பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் ’ரிமூவல் ரிங்’ இணைக்கப்பட்ட உலகின் மிகச்சிறந்த மாதவிடாய் கப் வடிவமைக்கத் தொடங்கினோம்,” என்கிறார் இரா.
இப்படித் தொடங்கியதுதான் Asan Menstrual Cup. இந்த தயாரிப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்நாட்டு சந்தை குறித்த நிபுணத்துவம் பெற்ற முன்னாள் ஆலோசகர் அனுராதா மகாதேவன் உடன் இணைந்து செயல்பட்டார் இரா.
Asan தயாரிப்பு எத்தகையது? அதன் தனித்துவமான அம்சம் என்ன?
Asan தயாரிப்பு ஹார்வர்ட் இன்னொவேஷன் லேப் பொறியாளர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல கட்டங்களாக தயாரிப்பை சோதனை செய்து இறுதியில் தனித்துவமான வடிவமைப்பை உருவாக்கியுள்ளனர்.
Asan மாதவிடாய் கப் மருத்துவ கிரேடு சிலிக்கானால் தயாரிக்கப்பட்டவை. கப்பை அகற்றுவதற்காக பிரத்யேகமாக ரிங் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் மற்ற மாதவிடாய் கப் தயாரிப்புகளுடன் ஒப்பிடுகையில் இவற்றைப் பயன்படுத்துவது எளிது. இந்த கப்களை 10 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம்.
Asan மாதவிடாய் கப் எப்படி பயனர்களைச் சென்றடைகிறது?
கிராமப்புற பெண்களுக்கே மாதவிடாய் கப்பிற்கான தேவை அதிகம் உள்ளது. இவர்களால் இதுபோன்ற தயாரிப்புகளுக்கு பணம் செலவிட முடிவதில்லை. இதனால் இவர்களை சென்றடையும் நோக்கத்துடன் ’ஒன்று வாங்கினால், ஒன்று நன்கொடை வழங்கலாம்’ என்கிற பிரச்சாரத்தை இரா தொடங்கினார்.
“பெங்களூரு புறநகரான கனகபுரா பகுதியில் உள்ள கிராமங்களில் பெண்களின் ஆரோக்கியம் தொடர்பாக செயல்படும் என்ஜிஓ-க்களுடன் இணைந்து செயல்பட்டோம். சோதனை முயற்சியாக முதலில் 10 சுகாதார பணியாளர்களை பிரச்சாரத்தில் இணைத்துக்கொண்டோம்,” என்கிறார் இரா.
முதலில் இவர்கள் பயன்படுத்தினால் மற்றவர்களுக்கு விவரிப்பது எளிதாக இருக்கும் என்று நினைத்த இரா முதலில் அவர்களுக்குக் கொடுத்துள்ளார். மாதவிடாய் கப் பயன்படுத்திய சுகாதாரப் பணியாளர்கள் இந்தத் தயாரிப்பு தங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு சேர்த்ததாக மகிழ்ச்சியடைந்தார்கள். கிராம மக்களுக்கும் இந்தத் தயாரிப்பு குறித்து விவரித்தார்கள்.
இந்தத் தயாரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இரா சுகாதாரப் பணியாளர்கள் உதவியுடன் உள்ளூர் மொழியில் வீடியோ உள்ளடக்கமும் உருவாக்குகிறார்.
’ஒன்று வாங்கினால், ஒன்று நன்கொடை வழங்கலாம்’ என்கிற வணிக மாதிரியின்கீழ் செயல்படுவதால் Asan கப் 1,800 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Asan வலைதளம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
”மாதவிடாய் கப் விற்பனை செய்வது மட்டுமே எங்கள் நோக்கம் அல்ல. சரியான தகவல்கள் பெண்களை சென்றடையவேண்டும் என்று விரும்புகிறோம். கப்பை எப்படி பயன்படுத்துவது என்பதை கற்றுக்கொடுக்கிறோம். பயனருக்கான வழிகாட்டல்களை மகளிர் நல மருத்துவர்கள் வடிவமைத்துள்ளார்கள்,” என்கிறார்.
இராவிற்கு ஹார்வர்ட் பெண்கள் மற்றும் பொது கொள்கை திட்டத்தால் Warner Fellowhsip வழங்கப்பட்டுள்ளது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கிங்ஸ் கல்லூரி தொழில்முனைவு போட்டியில் முதலிடம் பிடித்துள்ளார். இதுபோல் கிடைத்த உதவித்தொகையை ஆரம்பகட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்குப் பயன்படுத்தியுள்ளார்.
”கார்பரேட் சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் கிராம மக்களுக்கு உதவ கார்ப்பரேட்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மேலும் பலரை சென்றடைய மற்ற வழிமுறைகளையும் ஆராய்ந்து வருகிறோம்,” என்கிறார் இரா.
ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: ஸ்ரீவித்யா