‘ரெட் இஸ் தி நியூ கிரீன்’ - மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் டியன்!
“பிறருக்கு சேவை செய்வதில் உங்களை ஈடுபடுத்திக்கொள்வதே, உங்களை அறிவதற்கான சிறந்த வழி,” என்ற மகாத்மாவின் வரிகளுக்கு ஏற்ப நடக்கிறார் இவர்.
“பிறருக்கு சேவை செய்வதில் உங்களை ஈடுபடுத்திக்கொள்வதே, உங்களை அறிவதற்கான சிறந்த வழி,” என்பது மகாத்மா காந்தியின் வரிகள்.
26 வயதான டியன் டீ மெனெசெஸ் இந்த வரிகளுக்குப் பொருத்தமானவர். சமூக நலனில் அக்கறைக் காட்டவேண்டும் என்பது சிறு வயது முதலே அவரது மனதில் ஆழப் பதியவைக்கப்பட்டுள்ளது. எனவே வளரும் பருவத்தில் அதையே தன் வாழ்க்கையின் நோக்கமாகக் கொண்டார்.
மாதவிடாய் தொடர்புடைய தவறான கருத்துக்களை தகர்க்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் டியன். இதற்காக 2016ம் ஆண்டு ‘ரெட் இஸ் நியூ கிரீன்’ (RING) என்கிற முயற்சியை தொடங்கினார்.
இவர் முதலில் சிறியளவில் இந்த முயற்சியைத் தொடங்கினார். மாணவர்களிடையே பயிற்சி பட்டறைகள், விழிப்புணர்வு அமர்வுகள் போன்றவற்றை ஏற்பாடு செய்தார். அதன் மூலம் மாதவிடாய் சுகாதாரம் குறித்து மக்களிடையே வெளிப்படையாக பேசத் தொடங்கினார். அதே பெயரில் லாப நோக்கமற்ற நிறுவனத்தை நிறுவினார்.
மாதவிடாய் சுகாதாரப் பொருட்கள் அனைவருக்கும் எளிதாகக் கிடைக்க உதவும் பணிகளில் ஈடுபட்டார். 50-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரங்களையும் எரியூட்டும் இயந்திரங்களையும் நிறுவினார்.
கொரோனா பெருந்தொற்று பரவல் சமயத்தில் மற்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது போன்றே சானிட்டரி நாப்கின்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டது. மாதவிடாய் குறித்த தவறான கருத்துக்கள் நிலவுவதால் இதுபோன்ற சோதனையான காலகட்டங்களிலும் அது குறித்து பேச பலர் தயங்குகின்றனர்.
டியன் தலையிட்டு மகாராஷ்டிராவின் கிராமப்புறங்கள் மற்றும் குடிசைப்பகுதிகளில் உள்ள கிட்டத்தட்ட 12,700 பெண்களுக்கு இரண்டு லட்சத்திற்கும் அதிகமான சானிட்டரி பேட்களை வழங்கி உதவினார்.
“இந்தியாவில் மாதவிடாய் சுகாதாரம் தொடர்பான புள்ளிவிவரங்கள் பற்றி என்னுடைய ஆய்வுப் பணியில் அறிந்தபோது அதிர்ந்துபோனேன். இந்தியாவில் வெறும் 36 சதவீத பெண்கள் மட்டுமே மாதவிடாய் காலத்தில் சானிட்டரி பேட்களைப் பயன்படுத்துகிறார்கள் என்று தேசிய குடும்பநல மற்றும் சுகாதார கணக்கெடுப்பு தெரிவிக்கிறது,” என்றார்.
பதின்ம வயதினரின் நிலையிலும் சற்றும் மாற்றம் இல்லை என்கிறார் டியன். போதிய மாதவிடாய் சுகாதார வசதிகள் இல்லாத காரணத்தால் ஆண்டுதோறும் 23 மில்லியன் சிறுமிகள் பள்ளிப் படிப்பை இடைநிறுத்தம் செய்வதாக ‘தஸ்ரா’ என்கிற என்ஜிஓ 2014ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
“பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்த பிறகு என்னால் இதில் பங்களிக்காமல் இருக்க முடியவில்லை,” என்று டியன் சோஷியல்ஸ்டோரி இடம் தெரிவித்தார்.
தொடக்கம்
டியன் சக வயதுடைய மற்ற பெண் குழந்தைகள் போலவே கனவுகளுடன் வளர்ந்தவர். மும்பையில் வளர்ந்த இவர் தாதரில் உள்ள ஜேபி வச்சா உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.
சிறு வயது முதலே இவருக்குக் கணிதம் மீது ஆர்வம் அதிகம். எனவே செயிண்ட் சேவியர்ஸ் கல்லூரியில் இளங்கலை அறிவியல் படித்தார். 2015-ம் ஆண்டு அவரது கனவு நிறைவேறியது. இந்தியாவின் முன்னணி கொள்கை ஆலோசனை மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் ஒன்றில் ஆராய்ச்சி ஆய்வாளராக தேர்வானார்.
‘ரெட் இஸ் தி நியூ கிரீன்’ தொடங்கும் எண்ணம் கழிப்பறையில் உருவானது. பரபரப்பான அலுவலக நேரத்தில் டியனுக்கு மாதவிடாய் ஏற்பட்டது.
“யாரிடம் உதவி கேட்பது என்றே தெரியவில்லை. எப்படியோ அருகிலிருந்த மருந்தகத்தில் நாப்கின் வாங்கினேன். எனினும் என் மனதில் பல கேள்விகள் எழுந்தன. ஒருவேளை வறுமை நிலையில் இருந்திருந்தால் நான் என்ன செய்திருப்பேன்? மாதவிடாய் சமயத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து எனக்கு தெரியாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?” என்று பலவாறு மனதில் கேள்வியெழுந்ததை டியன் நினைவுகூர்ந்தார்.
மாதவிடாய் குறித்து தீவிரமாக ஆராய்ந்தார். மாதவிடாய் சமயத்தில் பாதுகாப்பற்ற மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்துவது, தவறான நம்பிக்கைகள், சானிட்டரி நாப்கின்களை முறையாக அப்புறப்படுத்தாமல் போவது என இது தொடர்பாக பல்வேறு சவால்களை இருப்பதை உணர்ந்தார். இந்த நிலையை மாற்றத் தீர்மானித்த டியன் RING நிறுவினார்.
மும்பை பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே டியனின் முதல்கட்ட திட்டமாக இருந்தது. சில நண்பர்களின் உதவியுடன் பல்வேறு பயிற்சி வகுப்புகளை ஏற்பாடு செய்தார். இதில் மாதவிடாய் குறித்தும் சுகாதாரமாக இருக்கவேண்டியதன் அவசியத்தையும் தொற்று ஏற்படாமல் தடுக்க எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் வலியுறுத்தினார். இவரது பயணம் எளிதாக இருந்துவிடவில்லை.
“பள்ளி நிர்வாகமே எங்களைத் திருப்பியனுப்பிய சம்பவங்கள் நடந்துள்ளன. இதுபோன்ற கலந்துரையாடல்கள் இடம்பெறவேண்டியதன் அவசியத்தை அவர்களுக்கு எடுத்துரைப்பது கடினமாக இருந்தது. ஆனால் எடுத்த முயற்சியை பாதியில் நிறுத்திவிட எங்களுக்கு விருப்பமில்லை. வெற்றி கிடைக்கும் வரை தொடர்ந்து முயற்சித்தோம்,” என்கிறார் டியன்.
பயிற்சிப் பட்டறைகள் ஏற்பாடு செய்தது நல்ல பலனளித்தது. 50 பள்ளிகளில் சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரங்களையும் எரியூட்டும் இயந்திரங்களையும் நிறுவ திட்டமிட்டார். இயந்திரங்களுக்காக இந்துஸ்தான் லைஃப் கேர் உடன் இணைந்து செயல்பட்டார். இவற்றை நிறுவுவதற்கு சில நன்கொடையாளர்களை அணுகினார்.
“சானிட்டரி நாப்கின்களை வழங்கும் இயந்திரங்கள் மூலம் உடனடியாக நாப்கின்கள் கிடைக்கப்பட்டன. அதேபோல் பயன்படுத்தப்பட்ட நாப்கின்கள் திறந்தவெளிகளில் எரிக்கப்படும் பிரச்சனைக்கு எரியூட்டும் இயந்திரம் தீர்வானது. இந்த முயற்சிகளால் பள்ளி மாணவிகளிடையே நம்பிக்கை பிறந்தது. மாணவிகள் இடைநிறுத்தமும் கணிசமான அளவு குறைந்தது,” என்றார் டியன்.
நேர்மறையான மாற்றம்
டியன் இரண்டாண்டுகள் வரை பணிபுரிந்தவாறே `ரெட் இஸ் தி நியூ கிரீன்’ முயற்சியை நிர்வகித்து வந்தார். அதன் பிறகு பணியை விட்டு விலகினார்.
“மாதவிடாய் சுகாதாரம் குறித்து பணியாற்றுவதற்காக என் முழு நேரத்தையும் செலவிட விரும்பினேன். சற்று கடினமானதாக இருந்தது, இருப்பினும் இந்த முடிவை எடுத்தேன்,” என்றார்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கிடையே சமீபத்தில் மும்பையில் உள்ள பல்வேறு குடிசைப்பகுதிகளைச் சேர்ந்த ஏழைப் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் சானிட்டரி நாப்கின்களை வழங்கியுள்ளார். இந்த ஏற்பாடுகளுக்காக RING-ல் உள்ள ஆறு முக்கிய உறுப்பினர்கள் அடங்கிய குழு ஆஷா, பிரதம், ஸ்நேகா போன்ற மற்ற என்ஜிஓ-க்களுடன் இணைந்து செயல்பட்டது.
இவர்கள் புலம்பெயர்ந்த பெண் தொழிலாளிகளின் மாதவிடாய் தேவைகளை பூர்த்தி செய்ய ‘ஜீவன் ரத்’ என்கிற முயற்சியை யூனிசெஃப் உடன் இணைந்து தொடங்கினார்கள். இதில் பெண்களுக்கு மாதவிடாய் சுகாதாரப் பொருட்கள் அடங்கிய கிட் வழங்க மொபைல் நிலையங்களை அமைத்தனர்.
“மாதவிடாய் தொடர்பாக பல்வேறு தவறான கருத்துக்கள் உருவாக்கப்பட்டதால் பெண்களுக்கு அடிப்படையான உரிமைகள்கூட கிடைப்பதில்லை. இன்றளவும் இந்தியாவில் உள்ள பல பெண்களுக்கு மாதவிடாய் பொருட்கள் கிடைப்பதில்லை. கழிப்பறையைப் பயன்படுத்தும் வசதிகள்கூட கிடைப்பதில்லை. ஒருங்கிணைந்த அணுகுமுறையே இதற்கு தீர்வாக அமையும்,” என்றார் டியன்.
பெண்கள் மற்றும் என்ஜிஓ-க்களுடன் பணியாற்றுவதுடன் இவர்கள் அரசாங்கத்துடனும் இணைந்து செயல்படத் தீர்மானித்தனர். “நாங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த அருணாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநில அரசாங்கங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். வருங்காலத்தில் மேலும் பலருடன் இணைந்து செயல்பட உள்ளோம்,” என்றார்.
பாதுகாப்பான, ஆரோக்கியமான மாதவிடாய் தொடர்பான முயற்சிகளை விரிவுபடுத்த இம்பாக்ட்குரு உடன் இணைந்து ஆன்லைனில் நிதி திரட்டும் முயற்சியையும் டியன் தொடங்கியுள்ளார்.
மாதவிடாய் தொடர்பான முயற்சிகள் மூலம் உலக நலனில் பங்களிப்பதற்காக 2018-ம் ஆண்டு ராணி எலிசபெத், டியனை பக்கிங்காம் அரண்மனையில் கௌரவித்தார். ராணியின் ‘இளம் தலைவர் விருது’ கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வடிவமைத்த ஓராண்டு தலைமைத்துவம் சார்ந்த படிப்பை உள்ளடக்கியது. டியன் இதை நிறைவு செய்தார். இன்று டியன் நாடு முழுவதும் பலருக்கு ஊக்கமளிக்கிறார்.
“என்னால் முடியும் எனில் உங்களாலும் முடியும். உங்களுக்கு ஆர்முள்ள பகுதியில் ஒரு சிறு முன்னெடுப்பை நீங்கள் மேற்கொண்டாலும் அது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படத்தக்கூடும்,” என்பதே இந்தியாவில் உள்ள இளம் தலைமுறையினருக்கு அவர் தெரிவிக்க விரும்பும் கருத்து.
ஆங்கில கட்டுரையாளர்: ரோஷ்னி பாலாஜி | தமிழில்: ஸ்ரீவித்யா