வழக்கமான பிளவுஸ்’கள் அணிந்து போரடித்து விட்டதா? இதோ புதுமையான ஜாக்கெட்கள் வழங்கும் அம்மா-மகள்!
மனிகாவும் அவரது மகள் அருனிஷா சென்குப்தாவும் புதுமையான பிளவுஸ் வகைகளை வழங்க Choli Boli தொடங்கியுள்ளனர்.
புடவையில் எத்தனையோ வகைகள் இருக்கின்றன. எத்தனையோ புதுமைகள் வந்துள்ளன. ஆனால் பிளவுஸ் எப்போதும் ஒரே மாதிரியாகவே அணியப்படுகிறது. ஜன்னல் வைத்தோ, பிரிண்ட் செய்யப்பட்டோ இருக்குமே தவிர பெரிதாக புதுமை என்று எதுவும் இருப்பதில்லை.
இதை மாற்றும் வகையில் புதுமையான பிளவுஸ் வகைகளை வழங்குகிறது Choli Boli. 67 வயது மனிகாவும் அவரது மகளான 47 வயது அருனிஷா சென்குப்தாவும் இந்த பிராண்டை தொடங்கியுள்ளனர். வழக்கமாக இறுக்கமாக அணியும் ஜாக்கெட்டுகள் போலல்லாமல் புதுமையான பிளவுஸ் வகைகளை இந்த பிராண்ட் வழங்குகிறது.
“இறுக்கமாக ரவிக்கைகள் அணிந்த காலம் மலையேறிவிட்டது. உங்கள் புடவைக்கு மேட்சிங்காக பிளவுஸ் வாங்கியது போதும். உங்கள் மனநிலையை வெளிப்படுத்தும் விதமான ஸ்டேட்மெண்ட் பிளவுஸ்களுடன் புடவைகளை அணிந்துகொள்ளுங்கள்,” என்கிறார் அருனிஷா.
அருனிஷா சென்குப்தா மார்கெட்டிங் கம்யூனிகேஷன் பிரிவில் அனுபவமிக்கவர். Blue Ocean IMC என்கிற ஏஜென்சியின் நிறுவன உறுப்பினர் குழுவில் இவரும் ஒருவர். அதற்கு முன்பு Percept Profile நிறுவனத்தில் எட்டாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ளார். Tops Security நிறுவனத்தின் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் துணைத் தலைவராக இருந்தார்.
மனிகா பிளவுஸ் இறுதி தயாரிப்பை நிர்வகிக்கும் பொறுப்பு வகிக்கிறார். அருனிஷா மார்கெட்டிங் மற்றும் செயல்பாடுகளுக்கு பொறுப்பேற்றுள்ளார். மிகச்சிறந்த பிளவுஸ் வடிவமைப்பிற்காக இவர்கள் டிசைனர்கள் மற்றும் கைவினைஞர்களுடன் கைகோர்த்து செயல்படுகிறார்கள். புலம்பெயர் தொழிலாளர்களில் தையல் தெரிந்தவர்களுக்கு இவர்கள் வேலை வாய்ப்பு வழங்குகிறார்கள். மும்பை முழுவதும் இதுபோன்று பலருக்கு இவர்கள் வேலை வாய்ப்பை வழங்கியுள்ளனர்.
“நான் ரெடிமேட் பிளவுஸ் விற்பனை செய்யவில்லை. வாடிக்கையாளர்கள் கொடுக்கும் ஆர்டர்களுக்கு ஏற்ப பிளவுஸ் விற்பனை செய்வதில்லை. பிளவுஸ் மூலம் நான் கதை சொல்ல விரும்புகிறேன். பிளவுஸ் தொடர்பான எந்தவித கற்பிதங்களும் திணிக்கப்படக்கூடாது. ஸ்டேட்மெண்ட் புடவைகள் போன்று நானும் என் குழுவினரும் ஸ்டேட்மெண்ட் பிளவுஸ் உருவாக்கியுள்ளோம்,” என்றார் அருனிஷா.
உங்களுக்கு டீ பிடிக்குமா? உங்களுக்காகவே தனியாக பிளவுஸ் கலெக்ஷன் உள்ளது. உங்களுக்கு கவிதை பிடிக்குமா? உங்களுக்காகவும் பிரத்யேகமாக பிளவுஸ் உள்ளது. நீங்கள் ஹாலிவுட் பிரபலங்களைக் கண்டு ரசிப்பவரா? கவலையை விடுங்கள். உங்களுக்கும் பிரத்யேக பிளவுஸ் உள்ளது.
இப்படி பல வகையான, மிகச்சிறந்த, புதுமையான பிளவுஸ் வகைகளை வழங்குகிறது Choli Boli. அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.
ஸ்வதேஷி (Swadeshi): இவை காதி, மங்களகிரி, கோட்டா போன்ற உள்நாட்டு துணிகளுடன் தாபு, கலம்காரி, அஜ்ரக், பந்தேஜ், இகாட் போன்ற இந்திய பிரிண்ட் மற்றும் ஸ்டைல்கள் கொண்டவை.
கார்ப்பரேட் (Corporate): இவை மெல்லிய துணியாலும் காற்று எளிதில் புகக்கூடிய பருத்தியாலும் ஆனவை. ஃபார்மல் உடையாக அணியும் வகையில் பிரத்யேகமாக டிசைன் செய்யப்பட்டுள்ளன. நாள் முழுவதும் இதை அணிந்துகொள்ள ஏதுவாக வடிவமைக்கப் பட்டுள்ளது.
மல்டிகலர்டு ஹேப்பினெஸ் (Multicoloured Happiness): இது இளம் வாடிக்கையாளர்களுக்காக லைட் வெயிட் பொருட்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டவை.
சாய் கலெக்ஷன் (Chai Collection): கைகளால் பிரிண்ட் செய்யப்பட்டு, கைகளால் எம்பிராயிடரி செய்யப்பட்ட இந்த வகை பிளவுஸ் தேநீர் பற்றிய மீம்ஸ்களைக் கொண்டிருக்கும்.
ஹாலிவுட் திவா (Hollywood Diva): மர்லின் மன்றோ, எலிசபெத் டெய்லர், சோஃபியா லாரன், ஆட்ரே ஹெப்பர்ன் போன்ற ஹாலிவுட் பிரபலங்களின் உருவங்கள் அச்சிடப்பட்டிருக்கும்.
சுஃபி (Sufi): ரூமி, ஒமர் கய்யாம், அமீர் குஸ்ரு, கலீல் ஜிப்ரான் ஆகிய நான்கு பிரபலங்களை கௌரவப்படுத்தும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கைகளால் எம்பிராயிடரி செய்யப்படும் இந்த வகை பிளவுஸ்கள் சிலவற்றில் கவிதைகளின் பிரபல வரிகள் எம்பிராயிடரி செய்யப்பட்டிருக்கும்.
அம்மா-மகள் இருவரும் ஆறு மாதங்களுக்கு முன்பு 1,00,000 ரூபாய் முதலீடு செய்து Choli Boli பிராண்டின் மின்வணிக தளத்தைத் தொடங்கியுள்ளார்கள். முதல் கட்டமாக இந்தியப் பெண்களை சென்றடைவதை இலக்காகக் கொண்டுள்ளனர். இரண்டாம் கட்டமாக எல்ஜிபிடிக்யூ சமூகத்தினரையும் புலம்பெயர்ந்த இந்தியர்களையும் வாடிக்கையாளர்களாக இணைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
உலக மக்கள் அனைவரும் தங்களது ஆடைத்தொகுப்பில் புடவையை சேர்த்துக்கொள்ள ஊக்குவிக்கவேண்டும் என்பதே இவர்களது விருப்பமாக உள்ளது.
கோவிட்-19 தொற்று பரவல் இவர்களது வணிக செயல்பாடுகளை பாதித்தது உண்மைதான். ஆனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு விற்பனை அதிகரித்தது. பெண்களுக்கு சம வாய்ப்புகள் இருப்பதால் இந்தியாவில் அதிக பெண்கள் தொழில்முனைவில் ஈடுபட முன்வரவேண்டும் என்கிறார் அருனிஷா.
“பெண்கள் தொழில்முனைவில் ஈடுபட தடையாக இருப்பது அவர்களது மனநிலையும் சமூக அழுத்தகமும் மட்டுமே. மனதளவில் அவர்கள் உறுதியாக இருந்தார்களானால் எதுவும் தடையாக இருக்காது,” என்றார் அருனிஷா.
ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: ஸ்ரீவித்யா