40 ஆண்டுகளுக்குப் பின் புதுச்சேரியில் மீண்டும் ஒரு பெண் அமைச்சர்!
40 ஆண்டுகளுக்கு பின் திரும்பிய வரலாறு!
யூனியன் பிரதேசமான புதுச்சேரி அமைச்சரவை வரலாற்றில் மீண்டும் ஒரு பெண் அமைச்சராக பதவியேற்றுள்ளார். அதுவும் சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் ஒருவர் அமைச்சராகியுள்ளார். காரைக்கால் பிராந்தியத்தை சேர்ந்த நெடுங்காடு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர், சந்திர பிரியங்கா. இவர் தான் தற்போது அமைச்சராக்கப்பட்டுள்ளார். புதுச்சேரியின் என்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் இவர்.
காரைக்கால் பிராந்தியத்தின் பிரபல அரசியல்வாதியான மறைந்த முன்னாள் அமைச்சர் சந்திர காசு. இவர் நெடுங்காடு தொகுதியில் இருந்து ஆறு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இதில் இரண்டு முறை அமைச்சர் பதவியை வகித்திருந்தார். இவரின் மகள் தான் தற்போது அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் சந்திர பிரியங்கா.
தந்தையின் அரசியல் வாரிசாக 2016ல் முதல்முறையாக தந்தையின் தொகுதியான நெடுங்காடு தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார் சந்திர பிரியங்கா.
2016ல் எம்எல்ஏ ஆனவர், தற்போது நடந்து முடிந்த தேர்தலிலும் இதே தொகுதியில் களம்கண்டார். தொகுதியில் மக்களிடம் அவருக்கு இருக்கும் செல்வாக்கு காரணமாக, 31 வயதான சந்திர பிரியங்கா தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் உறுப்பினரை 2214 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடினார்.
கடந்த 1963 முதல் யூனியன் பிரதேசமாக செயல்பட்டு வரும் புதுச்சேரி சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக ஒரு பெண் அமைச்சர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் சந்திர பிரியங்கா.
முன்னதாக இந்த பெருமையை வைத்திருந்தவர் ரேணுகா அப்பாதுரை என்பவர். இவர் ஒரு முன்னாள் பொருளாதார பேராசிரியை. 1980 தேர்தலில் ரெட்டியார்பாளையம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று திமுக - காங்கிரஸ் கூட்டணி அரசில் கல்வித்துறை அமைச்சராக ரேணுகா அப்பாதுரை பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
அதன்பின் பல முறை பெண்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வானாலும், அவர்கள் அமைச்சர் ஆவதற்கு 40 ஆண்டுகாலம் தேவைப்பட்டிருக்கிறது!