5,700 ஆண்டுகளுக்கு முன் சுவிங்கம் மென்ற பெண்ணின் உருவம்!
மென்று துப்பிய சுவிங்கத்தால் கண்டறியப்பட்டது 5,700 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இப்பெண்ணின் பெயர் ‘லோலா’
சுவிங்கம் என்பது ஒரு நவீன காலத்தில் அசைப்போட வைக்கும் திண்பண்டம் தானா? ஏனெனில், சமீபத்தில் டென்மார்க்கில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆராய்ச்சிக்காக குழி தோண்டுகையில் மிகவும் பழமையான சுவிங்கம் கண்டறியப்பட்டது. அதுவும், கிட்டத்தட்ட 5,700 ஆண்டுகளுக்கு முந்தையதாம்ம்.
இச்செய்தியே அம்மாடியோவ் என வியக்க செய்கையில், விஞ்ஞானிகள் மனித மரபணுவையும் சுவிங்கத்திலிருந்து கண்டறிந்துள்ளனர். அம்மரபணுவை வைத்து, அதை மென்றது யார்? அவரது உருவம் என்ன? அவர் எங்கு வசித்தவர்? வரை கண்டுபிடித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். ஆம்,
மென்று துப்பிய சுவிங்கம்மில் இருந்த மரபணுவை வைத்து 5,700 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெண்ணின் உருவத்தை கண்டறிந்துள்ளது டென்மார்க்கின் கோபன்ஹேகன் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள். தெற்கு டென்மார்க்கின் லொலண்ட் தீவில் உள்ள சில்தோல்மில் என்ற பகுதியில் ஆராய்ச்சியாளர்கள் தொல்பொருள் தோண்டலில் ஈடுப்பட்டிருந்த போது இந்த சுவிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அச்சுவிங்கமானது ‘பெர்ச்’ மரங்களின் பட்டைகளிலிருந்து பெறப்படும் கருப்பு-பழுப்பு பிசினை சூடாக்கி, அதனை குளிர்விப்பதன் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. அக்காலத்தில் இச்சுவிங்கம் கருவிகளை உருவாக்க பசைகளாகவும் பயன்படுத்தப்பட்டது. மேலும், குளிரால் இறுக்கமடைந்துவிடும் சுவிங்கத்தை, பசையாகப் பயன்படுத்துவதற்கு முன்பு பண்டைய மனிதர்கள் அதை மெல்வார்கள் எனக்கூறப்படுகிறது.
தவிர, இந்த சுவிங்கம் பல் துலக்க, பல் வலிக்கு, பசியை அடக்க என பிற நோக்கங்களுக்காகவும் பண்டைய மனிதர்கள் பயன்படுத்தினார்கள் என்றும் சொல்லப்படுகிறது. எந்தவொரு குறிப்பிட்ட நோக்கமுமற்று ஃ பன்னுகாக மட்டும் இன்று சுவிங்கத்தை உண்பதுபோல், அன்றைய காலத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று வியக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
நமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும், பல அணுக்களும், சைட்டோபிளாசமும் இருக்கின்றன. ஒவ்வோர் அணுவுக்குள்ளும் பல குரோமோசோம்கள் உள்ளன. குரோமோசோம்கள் பல ஜீன்களால் ஆனவை. இந்த ஜீன்களின் பண்புகளைத் தீர்மானிக்கும் குறியீடுதான் மரபணு.
ஓர் உயிரினத்தின் இயல்பை, அமைப்பை, குணத்தை அதன் அடுத்தடுத்த சந்ததிகளுக்குக் கடத்த உதவுவதுதான் மரபணு. இதுதான் நம் கண் நிறத்திலிருந்து, நம் குணாதிசயங்கள் வரை அனைத்தையும் தீர்மானிக்கிறது. ஒவ்வொரு மரபணுவிலும் வாழும் உயிரினத்தை உருவாக்க மற்றும் பராமரிக்கத் தேவையான அனைத்து தகவல்களும் உள்ளன.
சுவீங்கத்திலிருந்து கிடைத்த மரபணுவின் மூலம், அதை மென்ற நபரின் பாலினம், முக அமைப்பையும் கண்டுபிடித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். ஆம், சுவிங்கத்திலிருந்தது கிடைத்த மரபணு உயிரணுக்கள் ஒரு பெண்ணினுடையது. 5,700 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அப்பெண் நியோலித்திக் காலத்தை சேர்ந்தவர். அவருடைய உருவத்தையும் கண்டறிந்து, அவருக்கு ‘லோலா’ என பெயரிட்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
காந்த பார்வை, நீல கருவிழியுடன், அடர் கருப்பு நிறத்திலான அப்பெண், ஐரோப்பாவின் மத்திய பகுதியில் ஸ்காண்டிநேவியாவில் வேட்டையாடும் பெண் என்பதையும் கண்டறிந்துள்ளனர்.
“மனித எலும்பைத் தவிர்த்து ஒரு பொருளிலிருந்து ஒரு முழுமையான பண்டைய மனித மரபணுவைப் பெற்றிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. நம் முன்னோர்கள் வித்தியாசமான சூழலில் வாழ்ந்தவர்கள், வித்தியாசமான வாழ்க்கை முறையையும் உணவு பழக்கவழக்கங்களையும் கொண்டிருந்தனர். எனவே, இது அவர்களின் நுண்ணுயிரிகளில் எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பது சுவாரஸ்யமானது,” என்றார் கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியருமான ஹேன்ஸ் ஷ்ரோடர் தெரிவித்துள்ளார்.
பண்டைய சுவிங்கத்திலிருந்து பெறப்படும் நமது மூதாதையர்களின் நுண்ணுயிரிகள், மனித நோய்க்கிருமிகளின் பரிணாம வளர்ச்சியை ஆராய்ச்சி செய்வதில் பெரும் பங்காற்றியது என்றார் ஷ்ரோடர்.
“காலப்போக்கில் நோய்க்கிருமிகள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் பரவுகின்றன என்பதையும், அதே நேரத்தில், எதிர்காலத்தில் ஒரு நோய்க்கிருமி எவ்வாறு செயல்படும், மற்றும் அது எவ்வாறு அடங்கக்கூடும் என்பதைக் கணிக்க இது உதவக்கூடும்” என்றார் கூறினார்.
இறுதியாக, ‘லோலா' மென்ற சுவிங்கத்திலிருந்து தாவர மற்றும் விலங்கு டி.என்.ஏ-களும் கிடைத்துள்ளன. ஹேசல்நட் மற்றும் வாத்து ஆகியவற்றின் டி.என்.ஏ-வான அவை லோலாவின் உணவின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தகவல்உதவி: firstpost