‘இந்தியாவின் அதிசயப் பெண்’ - 14 வயதில் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஊக்கம் தரும் பேச்சாளர்!
9 வயதில் ஜான்ஹவிக்கு ‘இந்தியாவின் அதிசயப் பெண்' என்ற பெயர் சூட்டப்பட்டது. ஏன்? எதற்கு தெரியுமா?
14 வயதான ஜான்ஹவி பன்வார் என்ற பெண் இந்தியாவின் அதிசயப் பெண்ணாக கருதப்படுகிறார். தனது 9 வயதில் ஜான்ஹவிக்கு ‘இந்தியாவின் அதிசயப் பெண்' என்ற பெயர் சூட்டப்பட்டது.
ஜான்ஹவி பன்வார் வயது பெண்கள் 8ம் வகுப்பு படித்து வரும் நிலையில், ஜான்ஹவி டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இது மட்டுமின்றி ஜான்ஹவி எட்டு வெளிநாட்டு மொழிகளை நல்ல உச்சரிப்புடன் பேசுவதில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதில் பிரெஞ்சு, ஜப்பானிய மொழி, ஆங்கிலம், இந்தி மற்றும் ஹரியானவி ஆகியவை அடங்கும்.
ஜான்ஹவி பன்வாரின் தந்தை பிரிஜ்மோகன் பன்வார், சமீபத்தில் ‘தி பெட்டர் இந்தியா' இடம் பேசும்போது,
“எனது மகள் கடவுள் கொடுத்த பரிசு. அவள் ஒரு வயது இருக்கும்போது 500-550 ஆங்கில சொற்கள் உச்சரிக்க திறமை பெற்றிருந்தாள். நாங்கள் ஜான்ஹவியை 3 வயதில் எல்லாம் குழந்தைகளையும் போல நர்சரியில் அனுமதிக்க சென்றபோது, பள்ளி நிர்வாகம் அவள் திறமையை பார்த்து அவளை நேரடியாக சீனியர் கே.ஜி.யில் அனுமதித்தனர்," என்று நெகிழ்கிறார்.
இதன்பின்னர் பிரிஜ்மோகன், ஜான்ஹவி திறமைக்காக பள்ளி நிர்வாகத்திடம் ஆலோசித்து ஒரே வருடத்தில் இரண்டு வகுப்பு படிக்க வைத்து தேர்ச்சி பெற சிறப்பு அனுமதி பெற்றுக் கொடுத்தார்.
ஜான்ஹவி தாய் இல்லத்தரசி. ஜான்ஹவி தந்தை பிரிஜ்மோகன் பள்ளி ஆசிரியர். தங்களிடம் வசதி குறைவாக இருந்தாலும், ஜான்ஹவி திறமையை மேலும் வளர்க்க தங்களால் முடிந்த உதவிகளை அவர்கள் செய்து கொடுத்தனர்.
“நாங்கள் பாரம்பரியமாக கிராமப்புற பின்னணியைச் சேர்ந்தவர்கள், எனக்கும் என் மனைவிக்கும் ஆங்கிலத்தில் சரளமாக பேச தெரியாது. ஜான்ஹவி படிக்கும் பள்ளியில் கூட, ஜான்ஹவி அளவிற்கு ஆங்கிலத்தில் பேசும் ஆசிரியர்கள் இல்லை. உள்ளூர் மொழி ஹரியானவி அல்லது இந்தி பேசும் ஆசிரியர்கள் இருந்தனர். ஆனால், நான் என்னால் எவ்வளவு உதவி செய்ய முடியுமோ அவ்வளவு செய்தேன். ஜான்ஹவியை அழைத்து டெல்லி செங்கோட்டைக்கு செல்வேன். அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுடன் பேச வைத்து, சரளமாக மற்ற மொழிகளை கற்றுக்கொள்ள உதவி செய்தேன்.
மேலும், பிபிசி செய்தி வீடியோக்களை பதிவிறக்கம் செய்து ஜான்ஹவியிடன் கொடுப்பேன். அவள் ஒரு மணி நேர அதனை கேட்டு, பிபிசி செய்தி தொகுப்பாளர் உச்சரிப்பதைபோல், உச்சரித்து பேசுவாள். ஜான்ஹவி முதலில் உச்சரிப்புடன் பேசியது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.
தொடர்ந்து, ஜான்ஹவிக்கு பயிற்சி அளிக்க அவளை ரேகா ராஜ் என்ற மொழியியலாளரிடம் சேர்த்தேன். ரேகா ராஜ் அவளை அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் ஆன்லைனில் மொழியியல் வகுப்புகளில் சேர்த்து விட்டார். இதற்குபின் ஜான்ஹவி தனது 11 வயதில் 8 மொழிகளை உச்சரிப்புடன் கற்றுகொண்டாள். இதன்பின்னும், ஆங்கில உச்சரிப்பு மேலும் திறன்பட டெல்லியில் உள்ள தூதரகங்களுக்கு நாங்கள் ஜான்ஹவியை அழைத்து சென்றோம்.
ஆனால், 16 வயதிற்குள் உள்ள பெண்கள் வரக் கூடாது என்று தூதரகத்தில் மறுத்துவிட்டார்கள். ஜான்ஹவியின் லட்சியமே பிபிசி செய்தி தொகுப்பாளர் ஆக வேண்டும் என்பதுதான். ஐஏஎஸ் ஆக வேண்டும் என்றும் ஆசை இருக்கிறது. அதற்காக இப்போதே படிக்க ஆரம்பித்துவிட்டாள். ஏற்கனவே 14 வயதில் ஊக்கமளிக்கும் பேச்சாளராக உள்ளார். மேலும் கல்வி நிறுவனங்களுக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கும் பேச்சுக்களை வழங்கியுள்ளார்.
எனது மனைவி கர்ப்பமாக இருந்தபோது, கிராமப்புற அமைப்புகளில் உள்ள பெரும்பாலான குடும்பங்களைப் போலவே, எங்கள் குடும்பமும் இது ஒரு மகனாக இருக்கும் என்று நினைத்தார்கள். ஆனால் ஜான்ஹவியின் பிறப்பு அவ்வளவு ஆர்வத்துடன் கொண்டாடப்பட்டது.
என் மகள் என் பெருமை என்று நான் எப்போதும் கூறுவேன். ஜான்ஹவி எந்த வகையிலும் குறைந்தவள் இல்லை. ஜான்ஹவி மட்டுமல்ல எந்த பெண்களும் ஆண்களுக்கு பின் இரண்டாம் நிலை என்பது இல்லை. நம்மில் பெரும்பாலோர் பிஸியாக இருப்பதால், நம் குழந்தைகளுக்கு அவர்கள் தகுதியான நேரத்தை வழங்குவது முடிவதில்லை. அவர்களுக்கு தகுந்த நேரத்தை வழங்குவது முக்கியம். அவர்கள் கல்வி ரீதியாக பிரகாசமாக இருக்கிறார்களா இல்லையா என்பது முக்கியமல்ல, அவர்களை நம்புங்கள் மற்றும் அவர்களின் கனவுகளில் அவர்களுக்கு ஆதரவளியுங்கள்," என்று நெகிழ்கிறார் பிரிஜ்மோகன்.
தகவல் மற்றும் படங்கள் உதவி - The Better India