'தாய்ப்பால் மூலம் கொரோனா வைரஸ் பரவாது’ - மருத்துவர்கள் அறிவுரை!

கொரோனா பாதிப்பு ஏற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைக்கு தாய்பால் கொடுக்கலாமா? சந்தேகங்களுக்கு மருத்துவர்கள் கூறும் ஆலோசனை இதோ:

31st Jul 2020
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

தாய்ப்பால் மூலம் கொரோனா வைரஸ் பரவாது என்பதை உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி உள்ளது. கொரோனா பாதித்த தாய் தனது குழந்தைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கையாண்டு தாய்ப்பால் கொடுக்கலாம். அதேபோன்று தாய்க்கு இல்லாமல் குழந்தைக்கு மட்டுமே தொற்று இருந்தாலும் தாய்ப்பால் கொடுக்கலாம்.


கர்ப்பிணிகளைப் பாதுகாப்பது நம் அனைவரின் பொறுப்பாகும். கர்ப்ப காலத்தில் வழக்கமாக நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும். அதனால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் வாய்ப்புகளை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகள் அடிக்கடி வெளியில் செல்லக்கூடாது.


பிரசவ தேதிக்கு ஐந்து நாட்களுக்கு முன் கர்ப்பிணிகள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அவசரமாக மருத்துவமனையில் ஒரு கர்ப்பிணி சேர்ந்து விட்டாலும்கூட அவருக்கும் கொரோனா பரிசோதனை செய்தாக வேண்டும். 

குழந்தை பிறந்த பிறகு எந்தக் காரணம் கொண்டும் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டாம் என்று தமிழ்நாடு அரசு பொதுசுகாதார முன்னாள் இயக்குனர் டாக்டர் க.குழந்தைசாமி வலியுறுத்தினார்.
1

புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் மக்கள் தொடர்பு கள அலுவலகமும் விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டமும் இணைந்து இன்று(30.7.2020) முற்பகல் 11 மணிக்கு நடத்திய அங்கன்வாடி பணியாளர்களுக்கான கோவிட்-19 பெருந்தொற்றுக் காலகட்டத்தில் கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் உரிமைகளையும் பாதுகாப்பது எப்படி என்பது குறித்த காணொலி கருத்தரங்கத்தில் சிறப்புரை ஆற்றியபோது டாக்டர் குழந்தைசாமி இவ்வாறு தெரிவித்தார்.

கொரோனாவுக்கு எதிரான மிகப் பெரிய ஆயுதம் சோப்பும் தண்ணீரும்தான். வீட்டை விட்டு வெளியில் செல்லாவிட்டாலும்கூட ஒரு நாளைக்கு 15-20 முறை கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். பொது இடங்கள் அனைத்திலும் கைகழுவும் வசதியை அரசே ஏற்படுத்தி தரவேண்டும்.

அங்கன்வாடி மையத்தில் டிஜிட்டல் பிபி கருவி, பல்ஸ் ஆக்சிமீட்டர், தொடாமல் உடல் வெப்ப நிலையைப் பார்க்கும் தெர்மல் மீட்டர் ஆகியன வைத்திருப்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். இவற்றை நன்கொடையாகவோ அல்லது பெருநிறுவனங்களின் சமூக பொறுப்புடைமை நிதி மூலமோ வாங்கலாம்.

அனைவருமே பல்ஸ் ஆக்சிமீட்டர் மூலம் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை கண்காணித்துக் கொள்ளலாம். நார்மல் அளவான 100-95 என்பதற்குக் குறைந்தால் உடனடியாக மருத்துவமனை சென்றுவிட வேண்டும் என்று டாக்டர் குழந்தைசாமி மேலும் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு தேசிய சுகாதார இயக்கத்தின் நிபுணர் ஆலோசகர் டாக்டர் எஸ். ரத்னகுமார் தனது உரையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு கொரோனா தொற்று இருந்தால் அவருடைய வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுமா என்று உறுதியாகக் கூறமுடியாது. அதற்கு நீண்ட கால ஆய்வு தேவை.


தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கையில் கொரோனா தொற்றுள்ள கர்ப்பிணிகளுக்குப் பிரசவம் பார்க்கப்படுகின்றது பிரசவ நேரத்தின்போது உடன் இருக்க ஒருவரை அனுமதிப்பார்கள். இந்தக் கொரோனா காலத்தில் அதை கைவிட்டுவிடக் கூடாது. தனி நபர் பாதுகாப்பு முழுக் கவச உடையுடன் துணைவர் பிரசவ அறைக்குள் இருக்கலாம். துணை நோய்கள் இருக்கும் கர்ப்பிணிகளுக்கு வழக்கமான காலத்தை விட இப்போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று டாக்டர் ரத்னகுமார் கேட்டுக் கொண்டார்.

தாய்ப்பால் குடிப்பது குழந்தையின் உரிமை என்றும் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் உலகில் 8 லட்சம் உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன என்று மத்திய அரசின் சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தின் இணை இயக்குனர் ஜெ.காமராஜ் தெரிவித்தார்.

கோவிட்-19ஐ உள்ளடக்கிய வாழ்வியலை எப்படிப் பழகிக் கொள்வது என்பது சவாலாக உள்ளது.  ஊரகம் மற்றும் நகரப் பகுதிகளில் பணியாற்றுகின்ற அங்கன்வாடி பணியாளர்களுக்கு இதுபோன்ற காணொளி கருத்தரங்குகள் புதிய இயல்பு வாழ்க்கையை கற்றுத் தரும் என்று குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் மாவட்ட திட்டஅலுவலர் லலிதா குறிப்பிட்டார்.


உலகத்தாய்ப்பால் வாரத்திற்கான இந்த ஆண்டின் மையக்கருத்து ஆரோக்கியமான பூமிக்கு தாய்ப்பால் கொடுக்கும் பழக்கத்தை வலுப்படுத்துவோம் என்பதாகும். தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் புட்டிப்பாலைத் தவிர்ப்பதால் இந்த பூமியில் சுற்றுச்சூழல் சீர்கேடு குறைவதோடு பசுமை இல்ல வாயுக்களின் உற்பத்தியும் குறையும் என்று சிவக்குமார் குறிப்பிட்டார்.


பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் டாக்டர்கள் உரிய பதில் அளித்தனர். கூகுள் மீட் மற்றும் யு-டியூப் நேரலை மூலம் இந்தக் காணொளி கருத்தரங்கில் சுமார் 600 பேர் கலந்து கொண்டனர்.


தகவல் உதவி: பிஐபி

Want to make your startup journey smooth? YS Education brings a comprehensive Funding Course, where you also get a chance to pitch your business plan to top investors. Click here to know more.

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India