'உலகக் கோப்பை செஸ்ஸில் சாதனை படைக்கும் தமிழ்மகன்' - ஆனந்த கண்ணீருடன் ரசித்த பிரக்ஞாவின் தாய்!
செஸ் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரரான பிரக்ஞானந்தாவின் வெற்றியை கண்களில் ஆனந்தத் துளிகளோடு ஒரு ஓரத்தில் இருந்து ரசித்த அவரின் தாய் நாகலட்சுமி உலக அரங்கின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
FIDE நடப்பு உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா முதல் சுற்று போட்டியை டிரா செய்துள்ளார். முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன் இறுதிப் போட்டியை எதிர்கொண்டார்.
இந்தத் தொடரானது அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதி ஆட்டத்தில் பிரக்ஞானந்தா, உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் ஃபேபியானோ கருனாவுடன் மோதினார்.
இந்திய செஸ் உலகின் முடிசூடா மன்னனான விஸ்வநாதன் ஆனந்தை தொடர்ந்து உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியர் என்ற சாதனையை அவர் இதன் மூலம் படைத்துள்ளார்.
எளிமையே வலிமை
நெற்றியில் விபூதி, எண்ணெய் வைத்து வகுடெடுத்து வாரிச்சீவிய தலைமுடி, அமைதியான முகம் - எளிமையான தோற்றம் பெருஞ்சாதனைகளுக்கும் மிகச்சிறிய புன்னகையை மட்டுமே பதிலாக கொடுத்துவிட்டு ஆர்ப்பாட்டம் இல்லாமல் கடந்து செல்லும் செஸ் உலக இளவரசர் சென்னையைச் சேர்ந்த பிரக்யானந்தா.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ரமேஷ்பாபு-நாகலட்சுமி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள். மகள் வைஷாலியை தொலைக்காட்சி பார்ப்பதில் இருந்து விலக்கி வைப்பதற்காக செஸ் வகுப்பில் சேர்த்து விட்டுள்ளனர். 4 வயதாக இருந்த போதில் இருந்து செஸ்ன் அடிப்படைகளை தன்னுடைய அக்காவிடம் இருந்து கற்றுக் கொண்டு விளையாடத் தொடங்கியுள்ளார் பிரக்ஞானந்தா.
மாநில, தேசிய அளவிலான போட்டிகள் என தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கிய வைஷாலி மற்றும் பிரக்ஞானந்தா செஸ் போட்டிகளில் வெற்றிக் கோப்பைகளை குவிக்கத் தொடங்கினர்.
வரலாற்று போட்டி
விஸ்வநாதன் ஆனந்திற்குப் பிறகு செஸ் வரலாற்றில் அதிக சாதனைகளைப் படைத்து வெற்றிகளை குவித்த பிரக்ஞானந்தா, 18 வயதில் ஆனந்தை வீழ்த்திய கார்ல்சனுடன் இறுதிப் போட்டியை எதிர்கொண்டுள்ளார். இருவரும் பங்கேற்ற போட்டிகளில் இதுவரை 5 முறை பிரக்ஞானந்தா கார்ல்சை வீழ்த்தி வெற்றி கண்டுள்ளார். உலக செஸ் போட்டியின் இறுதிப் போட்டிக்கு நுழைந்ததன் மூலம் அடுத்த ஆண்டு கனடாவில் நடைபெற உள்ள candidates chess போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் பிரக்ஞானந்தா.
7 முதல் 18 வரை
தனது 7வது வயதிலேயே உலக இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப்பை வென்றார். இது அவருக்கு ஃபெடரேஷன் இன்டர்நேஷனல் டெஸ் எச்செக்ஸ் (FIDE) மாஸ்டர் என்ற பட்டத்தைப் பெற்றுத்தந்தது. அதன்பிறகு, 2015ல், 10 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென் சர்வதேச இளைய செஸ் மாஸ்டர் என்ற பட்டத்தையும் பெற்றார்.
2016ம் ஆண்டில் செஸ் விளையாட்டில் ஒரு வரலாற்றை உருவாக்கியதன் மூலம் இளைய சர்வதேச மாஸ்டர் ஆனார். ஃபெடரேஷன் இன்டர்நேஷனல் டெஸ் எச்செக்ஸ் (FIDE) விளையாட்டில் விதிவிலக்கான திறமையை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு 'சர்வதேச மாஸ்டர்' பட்டத்தை வழங்குகிறது.
செஸ் விளையாட்டில் கிராண்ட்மாஸ்டருக்கு அடுத்தபடியாக உயர்ந்த பட்டம் இதுவாகும். இந்த பட்டத்தை வெல்வதற்கு, ஒரு வீரர் சர்வதேச போட்டியில் மூன்று சர்வதேச விதிமுறைகள் மற்றும் 2400 என்ற கிளாசிக்கல் அல்லது நிலையான FIDE மதிப்பீட்டைப் பெற வேண்டும். 2017 உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப்பில், பிரக்ஞானந்தா தனது முதல் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றார்.
அம்மாவின் அரவணைப்பு
பிரஞ்ஞானந்தா மற்றும் வைஷாலி இருவரின் வெற்றிக்குப் பின்னால் இருப்பது அவர்களது தாய் நாகலட்சுமி. பிரக்ஞாவின் தந்தையால் அதிகம் பயணம் செய்ய முடியாது என்பதால் இவர்களின் போட்டிகளின் போது உள்நாடு வெளிநாடு என எந்த இடமாக இருந்தாலும் உடன் பயணித்து அவர்களது வெற்றி தோல்விகளில் அவருக்கு உருதுணையாக இருந்துள்ளார் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த இல்லத்தரசியான நாகலட்சுமி.
தன்னுடைய மகன் எவ்வளவு சாதனை படைத்திருந்தாலும் கொஞ்சமும் ஆடம்பரம் இல்லாமல் எளிமையாகவே எங்கும் சென்று வருகிறார்.
கண்களில் மிளிர்ந்த ஆனந்தம்
இறுதிப் போட்டிக்குள் மகன் நுழைந்த தருணத்தை அரங்கின் ஒரு ஓரத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவருக்கு ஆனந்தக் கண்ணீர் வரவே அதனை முந்தானை தலைப்பில் துடைத்துக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தார். வெற்றி குறித்து பிரக்ஞானந்தா அளித்த பேட்டியை அருகில் இருந்து மகிழ்ச்சியோடு பார்க்கும் அந்த கண்களில் 13 ஆண்டு கால நீண்ட தூர பயணங்கள், வலிகள், மகிழ்ச்சிகள் என அனைத்தும் தெரிந்தது.
தாயன்பை வெளிப்படுத்தும் அந்த புகைப்படம் இணையத்தில் படு வைரலாகியுள்ளது. தன்னுடைய தாய் பற்றி பேசிய பிரக்ஞானந்தா, என்னுடைய செஸ் பயணத்தில் அம்மாவின் பங்கு மிக அதிகம். அவர் என்னுடனேயே எல்லா இடங்களுக்கும் வந்துவிடுவார், நான் தோற்றுபோகும் சமயத்தில் என்னைத் தேற்றி ஆறுதல் படுத்துவார் என்று கூறியுள்ளார்.
பரபரப்புடன் நகரும் இறுதிப்போட்டி
மேக்னஸ் கார்ல்சனுடன் பிரக்ஞானந்தா விளையாடிய இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் 35 நகர்வுகளுக்குப் பிறகு ஆட்டத்தை டிராவில் முடித்தனர். ஆகஸ்ட் 22ல் நடந்த போட்டியில் பிரக்ஞானந்தா வெள்ளை நிறக் காய்களைத் தேர்வு செய்து விளையாடினார் ஆகஸ்ட் 23ல் நடைபெறும் இரண்டாவது போட்டியில் கார்ல்சன் வெள்ளை நிறக் காய்களை வைத்து ஆட்டத்தைத் தொடங்க வேண்டும்.
நாளைய போட்டி நிச்சயமாக கடினமானதாகவே இருக்கும் அதற்கேற்ப நான் ஓய்வெடுத்து அமைதியான மனநிலையுடன் என்னுடைய விளையாட்டை நாளை விளையாடுவேன், என்னால் முடிந்தவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்றும் பிரஞ்ஞானந்தா இறுதிப் போட்டியில் முதல் சுற்று ஆட்ட முடிவிற்கு பின்னர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். செஸ் வரலாற்றில் புதிய சாதனையை படைப்பாரா பிரக்ஞானந்தா என்று அவரின் தாய் மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.