வீட்டில் தயாரிக்கும் சுத்தமான நெய் விற்பனை; மாதம் 6 லட்சம் வருவாய் ஈட்டும் நித்யா கணபதி!
நித்யா கணபதி தொடங்கிய `நெய் நேடிவ்’ என்கிற நெய் வணிகம் ஃபில்டர் காபி, திரட்டிப்பால் போன்ற இதர தயாரிப்புகளையும் இணைத்துக்கொண்டு 6 லட்ச ரூபாய் மாத வருவாய் ஈட்டி வருகிறது.
நித்யா கணபதி சொந்தமாக தொழில் தொடங்குவது பற்றி யோசித்துக்கூட பார்த்ததில்லை. வீடு, வேலை, குழந்தை என வாழ்க்கை நகர்ந்துகொண்டிருந்தது. கொரோனா சமயத்தில் இந்த வாழ்க்கை முறை சற்றே மாறியது வீட்டிலிருந்து வேலை, மகளின் ஆன்லைன் படிப்பு என கூடுதல் பரபரப்புடன் இருந்தார் நித்யா.
ஒருமுறை நித்யா அவரது அம்மாவுடனும் அத்தையுடனும் பேசிக்கொண்டிருந்தார். இந்த உரையாடல் அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு சேர்த்தது.
அத்தையின் பேத்திக்கு முதல் பிறந்தநாள். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நண்பர்களையும் உறவினர்களையும் அழைத்து கொண்டாட முடியவில்லை என அத்தை வருத்தப்பட்டார். இந்த நல்ல நாளைக் கொண்டாடும் வகையில் குடும்பத்தினருக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்பினார்.
நித்யாவும் அவரது அம்மாவும் வீட்டிலேயே பாரம்பரிய முறையில் நெய் தயாரிப்பது வழக்கம்.
“நாங்கள் வீட்டிலேயே நெய் தயாரிப்போம். அதை பல ஆண்டுகளாக எங்கள் அத்தை பயன்படுத்தி வருகிறார். எத்தனையோ இடங்களில் நெய் சாப்பிட்டுப் பார்த்த என் அத்தை நாங்கள் தயாரிக்கும் நெய் அளவிற்கு எதுவும் இல்லை என்பார். என் பாட்டி, அம்மா என நாங்கள் தயாரிக்கும் முறையைப் பற்றி வெளியில் யாருக்கும் சொன்னதில்லை,” என்கிறார் நித்யா.
அத்தை தன் பேத்தியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக குடும்பத்தினருக்குப் பரிசளிக்க 20 ஜார் நெய் கேட்டிருந்தார்.
“ஒரு வாரம்தான் அவகாசம் இருந்தது. அதற்கும் அத்தனை ஜார்களைத் தயாரிக்க முடியுமா என்கிற தயக்கம் இருந்தது. ஃபுல் கிரீம் ஏ2 மாட்டுப் பால் வாங்கினோம். பாரம்பரிய முறையில் பாலைக் காய்ச்சி, உறைவிட்டு தயிராக்கி, தயிர் ஏடு எடுத்து கைகளால் கடைந்து வெண்ணெய் எடுத்து அதிலிருந்து நெய் தயாரித்தோம். இந்த உழைப்பின் பலனாக வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட சுத்தமான நெய் கிடைத்தது. அத்தை கேட்டபடி கொடுத்துவிட்டோம். இவற்றைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு நெய்யின் சுவையும் மணமும் பிடித்துவிட்டது,” என்கிறார் நித்யா.
இதுவே தொழில் முயற்சியின் ஆரம்பப்புள்ளியாக அமைந்தது.
“அனைவரும் சுத்தமான நெய்யை வீட்டிலேயே தயாரித்தோ அல்லது தரமான நெய்யைக் கடையில் வாங்கியோ பயன்படுத்துவார்கள் என்று நினைத்திருத்தோம். ஆனால், அப்படி இல்லை என்பது புரிந்தது. எங்கள் தயாரிப்பு நல்ல வரவேற்பைப் பெற்றது,” என்கிறார்.
2021-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதி 'நெய் நேடிவ்’ 'Nei Native' தொடங்கினார்.
80, 90-களில் நித்யா டெல்லியில் வளர்தார். லேடி ஸ்ரீ ராம் மகளிர் கல்லூரியில் உளவியல் (ஹானர்ஸ்) பிரிவில் பட்டப்படிப்பு முடித்தார். மீடியா மற்றும் பொழுதுபோக்குத் துறையில் வேலை செய்வதற்காக மும்பைக்கு மாற்றலானார்.
MTV, The Times of India என பல்வேறு நிறுவனங்களில் சுமார் 23 வருடங்கள் வருவாய் மற்றும் வணிக மேலாண்மைப் பிரிவில் தலைமைப் பொறுப்பு வகித்தார். ஒரு கட்டத்தில் அனைத்தையும் விட்டு தொழில் முயற்சியில் கால் பதித்தார்.
நெய் தயாரிப்பு – வழக்கொழிந்த கலை
இன்று வீட்டிலேயே நெய் தயாரிப்பது வழக்கொழிந்துவிட்டது என்கிறார் நித்யா.
“மும்முரமான பணிச்சூழல், தனிக்குடித்தன அமைப்புகள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் வீட்டில் நெய் தயாரிக்கப்படுவதில்லை. வெகு சிலரே குறைந்த அளவில் வீட்டிலேயே தயாரிக்கின்றனர். வெவ்வேறு நெய் வகைகள் ஒரு லிட்டர் 400 ரூபாய் முதல் 4000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன,” என்கிறார் நித்யா.
பிரமாதமான நறுமணத்துடன் மணல் மணலாக இருப்பது நெய் நேடிவ் சிறப்பம்சம். பல தலைமுறைகளாக பாதுகாக்கப்படும் தயாரிப்பு முறையே இதற்குக் காரணம் என்கிறார் நித்யா.
ஒரு சிலருக்கு பிடித்திருப்பதை வைத்து வணிக முயற்சியாக மாற்றிவிடமுடியாது என்று நினைத்த நித்யா சோதனை முயற்சியாக கிட்டத்தட்ட 1,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு நெய் தயாரித்து வழங்கியுள்ளார். விலை நிர்ணயம் செய்தார்.
உரிமம், அனுமதி, மூலப்பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்குவது, லேபிள் உருவாக்குவது, பேக்கேஜிங், எஸ்கேயூ போன்ற நடவடிக்கைகளில் அடுத்த இரண்டு மாதங்கள் கழிந்தன.
அதன் பிறகு ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் பாரம்பரிய முறையில் நெய் தயாரிக்கப்பட்டது. ஒரு லிட்டர் நெய் தயாரிக்க சுமார் 25-30 லிட்டர் ஃபுல் கிரீம் பால் தேவைப்படும். நெய் நேடிவ் தயாரிப்புப் பணிகள் விக்ரம்கட் பகுதியில் மேற்கொள்ளப்படுகின்றன. நெய் நேடிவ் பிராண்டின் நெய் 250 மி.லி, 500 மி.லி ஆகிய அளவுகளில் கிடைக்கின்றன.
கூர்க், சிக்மங்களூர் ஆகிய பகுதிகளிலிருந்து காபி கொட்டைகள் வாங்கி தயாரிக்கப்படும் ஃபில்டர் காபி பவுடர், திரட்டுப் பால் ஆகிய இதர தயாரிப்புகளையும் இந்த பிராண்ட் விற்பனை செய்கிறது.
எருமைப் பாலில் இருந்து தயாரிக்கப்படும் நெய் 800-1,500 ரூபாய் விலையிலும் பசு நெய் ரூ.800-ரூ.1,550 என்கிற விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. காபி பவுடர் 290-465 ரூபாய் விலையிலும் திரட்டுப் பால் 300-600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
மலைத்தேன், குளிர் அழுத்த முறையில் தயாரிக்கப்படும் தேங்காய் எண்ணெய், ஏ2 பீனட் பட்டர் (சாக்லேட், தேன், வெல்லம் ஆகிய சுவைகளைக் கொண்டது), வெல்லப்பொடி ஆகியவற்றையும் விரைவில் இந்த பிராண்ட் அறிமுகப்படுத்த உள்ளது.
குடும்பத்தினர் பங்களிப்பு
நித்யாவின் அம்மா நெய் தயாரிக்கிறார். இவரது அப்பா காபி பவுடர் தயாரிப்பு வேலைகளை கவனித்துக்கொள்கிறார். இவரது மகள் இந்தப் பெயரை பரிந்துரை செய்துள்ளார்.
இவர்களைத் தவிர மேலும் மூன்று குடும்ப உறுப்பினர்கள் தயாரிப்பு, பிராடக்ட் டெவலப்மெண்ட், பகுப்பாய்வு, லாஜிஸ்டிக்ஸ், அக்கவுண்டிங் போன்றவற்றை கவனித்துக் கொள்கின்றனர்.
முதல் மூன்று மாதங்கள் வரை இவர்கள் வீட்டின் ஹால் பேக்கிங் ஏரியாவாகவும் சமையலறை தயாரிப்புப் பணிகள் மேற்கொள்ளும் இடமாகவும் அதை ஒட்டியுள்ள மற்றொரு அறை சேமிப்புக் கிடங்காகவும் செயல்பட்டது.
“டெலிவரி வேலைகளில் டிரைவர் உதவ லேபிலிங், பேக்கிங் போன்றவற்றில் வீட்டு வேலைகளுக்கு உதவுபவர் கைகொடுத்தார். இப்படி சிறியளவில் தொடங்கி பின்னர் 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒட்டுமொத்த தயாரிப்புப் பணிகளையும் பண்ணைக்கு மாற்றினோம்,” என்கிறார்.
மும்பை ப்ரீமியம் டவர்களில் வசிப்பவர்களிடம் 5,000-க்கும் மேற்பட்ட அளவில் சாம்பிள் விநியோகிக்கப்பட்டது.
தற்போது புரொடக்ஷன் ஹெட், லாஜிஸ்டிக்ஸ், சிஆர்எம் தலைவர், பிராண்ட் மற்றும் மின்வணிக மேலாளர், ரீடெயில் ஆக்டிவேஷன் மேலாளர் என சிறு குழுவுடன் இந்த பிராண்ட் செயல்பட்டு வருகிறது.
மும்பையில் இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் வட்டம் அதிகம். ஆனால் வலைதளம் மூலம் நாடு முழுவதும் சென்றடைந்துள்ளது.
தற்சமயம் 2,000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவையளித்து வருகிறது. 30 சதவீதத்தினர் தொடர்ந்து வாங்குகின்றனர். நெய் நேடிவ் 5 லட்ச ரூபாய் ஆரம்ப முதலீட்டுடன் தொடங்கப்பட்டுள்ளது.
பால்கர் மாவட்டம் விக்ரம்கட் பகுதியில் இந்நிறுவனத்தின் பண்ணை அமைந்துள்ளது. அங்கு லேபிளிங், பேக்கேஜிங் போன்ற வேலைகளில் உள்ளூர் பழங்குடியினரை பணியமர்த்தியுள்ளது நெய் நேடிவ்.
இந்தப் பிரிவில் பல பிராண்டுகள் செயல்பட்டாலும்கூட தங்கள் பிரத்யேக தயாரிப்பு முறை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவதாக நித்யா சுட்டிக்காட்டுகிறார்.
“ஏழு மாதகால உழைப்பிற்கு பிறகே ’நெய் நேடிவ்’ வடிவம் பெற்றது. அதன் பிறகு 2 மாதங்கள் சோதனை முயற்சி மேற்கொண்டோம். அதைத் தொடர்ந்து 6 லட்ச ரூபாய் மாத வருவாய் ஈட்டியிருக்கிறோம். நாள் ஒன்றிற்கு சுமார் 20 ஜார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் பல சந்தைகளைக் கைப்பற்றி, கூடுதல் தயாரிப்புகளை இணைத்துக்கொண்டு ஆண்டு இறுதிக்குள் 2 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டுவதை இலக்காகக் கொண்டிருக்கிறோம்,” என்கிறார் நித்யா.
ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: ஸ்ரீவித்யா