உலக அளவில் பிரபலமான மாமியார்-மருமகள் இணைந்து நடத்தும் யூட்யூப் சேனல்!
யூடியூப்பில் எத்தனையோ சேனல்கள் கொட்டிக்கிடக்க 'தமிழ் பாட்டி வைத்தியம்' சேனல் உலகத் தமிழர்கள் மத்தியில் வரவேற்பு பெற என்ன காரணம்?
இன்றைய காலகட்டத்தில் ஒரு வீட்டில் மாமியார், மருமகள் சண்டை சச்சரவுகள் இன்றி ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்றாலே மற்றவர்கள் பார்த்து ஏக்கப்படுவார்கள். ஆனால் இந்த மாமியார், மருமகள் ஒற்றுமைக்கான உதாரணம் மட்டுமல்ல சிறந்த பெண்கள் என்பதற்கான அத்தாட்சியும் கூட. ஒரே வீட்டில் இருப்பதுடன் இருவரும் இணைந்து யூடியூப் சேனலையும் நடத்துகிறார்கள். குடும்ப பொருளாதாரத்தை உயர்த்தவும் ஆரோக்கியம் சார்ந்த சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இந்த சேனல் உலகத் தமிழர்கள் மத்தியில் மிகப் பிரபலம்.
யூடியூப் சேனலின் துவக்கம் பற்றி அதன் உரிமையாளர் சந்தியா சேதுராமன் நம்முடன் உற்சாகமாக பேசத் தொடங்கினார்.
“உணவே மருந்து என்பதே தமிழ் பாட்டி வைத்தியத்தின் மூலக் காரணம். பொதுவாக எங்கள் வீட்டில் எல்லாமே பாரம்பரிய உணவு முறை தான். உடல்நிலை சரியில்லை என்றால் உடனடியாக மருத்துவமனையை நாடும் பழக்கம் எங்களுக்குக் கிடையாது. முதலில் வீட்டில் இருக்கும் நாட்டு மருத்துவத்தை நாடுவோம்.
காலையில் குடிக்கும் டீயில் தொடங்கி எல்லா விஷயத்திலும் ஆரோக்கியம் என்பதில் பாட்டி(மாமியார்) கவனமாக இருப்பார். உணவு மற்றும் உடல்நலம் பேணுதலில் நாங்கள் கடைபிடிக்கும் பழக்கத்தை சிறு வயதே முதலே பார்த்து வளர்ந்த என்னுடைய 5 வயது மகனுக்கும் அதுவே வழக்கமாகிவிட்டது. அடுத்த தலைமுறைக்கும் பாரம்பரிய உணவு பழக்கம் மற்றும் மருத்துவ முறையை கொண்டு செல்ல வேண்டும் என்ற தொடக்கத்தை என் மகனிடம் இருந்தே தொடங்கி இருக்கிறோம்,” என்கிறார் சந்தியா.
11 வருடங்களாக தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வந்த சந்தியா கல்லூரி ஒன்றில் துணை பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார். திடீரென எடுக்கப்பட்ட ஆட்குறைப்பு நடவடிக்கையால் அவரது பணி பறிபோயுள்ளது. எனினும் வெளியில் சென்று செய்தால் மட்டும் வேலையல்ல வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறார் இவர்.
தன்னுடைய தொழில்நுட்ப அறிவையும் பாட்டியின் உணவே மருந்து மகத்துவத்தையும் உலக மக்களுக்கு தெரிவித்து அவர்களுக்கு பயன் தருவதோடு வருமானமும் பெறலாம் என்று எண்ணி ஒன்றரை வருடத்திற்கு முன்னர் ’தமிழ் பாட்டி வைத்தியம்’ யூடியூப் சேனலைத் தொடங்கியுள்ளார்.
ராகி லட்டு, சிறுகீரை சூப், பச்சை வாசனை மாறாத கீரை சமையல் என நாங்கள் அடிக்கடி வீட்டில் சாப்பிடும் உணவுகளை வீடியோவாக எடுத்து சேனலில் போட்டு வந்தோம். அந்த வீடியோக்களுக்கு இந்திய மக்கள் மட்டுமின்றி கடல் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கும் உலகத் தமிழர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகக் கூறுகிறார் சந்தியா.
சந்தியா பாட்டி எனக் குறிப்பிடும் அவரது மாமியார் பற்றி கேட்கவே பிரமிப்பாக இருந்தது. 68 வயதிலும் இளமங்கையாக சுறுசுறுப்புடன் செயல்பட்டு கொண்டிருக்கிறார் வெண்ணிலா பாட்டி. கம்பம் அருகே அனுமந்தப்பட்டியைச் சேர்ந்த வெண்ணிலாவின் தாய், தந்தை ஆசிரியர்கள். எனினும் தனது உடன்பிறந்த 3 பேரை பார்த்துக் கொள்வதற்காக 6ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்.
சிறு வயது முதலே தனது உடன்பிறந்தவர்களை பராமரித்து வளர்க்கத் தொடங்கியவருக்கு நாட்டு வைத்தியத்தில் நல்ல அனுபவமும் பாரம்பரிய சமையலில் நிபுணத்துவமும் கிடைத்துள்ளது. ராதாகிருஷ்ணன் என்பவரை மணந்து மதுரைக்கு இடம்பெயர்ந்தவர் அந்த வட்டார பாரம்பரியத்தையும் கற்றுக் கொண்டுள்ளார். கணவர் இறந்துவிட மகன், மகள் இருவருமே சென்னையில் வசிக்க வெண்ணிலாவும் சென்னைவாசி ஆகிவிட்டார். எனினம் கிராமத்து பாரம்பரியத்திலேயே ஊறியவர் இங்கும் அதனை தொடர்ந்து வருகிறார்.
மருமகள் சந்தியா தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை பார்த்துக் கொள்ள தான் பின்பற்றிய நாட்டு மருத்துவக் குறிப்புகளை பிறருடன் பகிர்ந்து வருகிறார் வெண்ணிலா. அவரது யூடியூப் சேனலில் மூலிகைகளின் வாசம் கலந்த உணவுகளும், நோய்களுக்கு எளிதில் சரியாகக் கூடிய பின்விளைவுகள் இல்லாத நாட்டு வைத்திய சிகிச்சைகளும் கற்றுத் தரப்படுகிறது. அதுமட்டுமின்றி சிக்கென்று சுறுசுறுப்பாக இருக்க யோகா செய்வது எப்படி என்பன உள்ளிட்ட ஆரோக்கியம் சார்ந்த அம்சங்கள் கொட்டிக்கிடக்கின்றன.
கல்வியறிவு இல்லாவிட்டாலும் எதையும் எளிதில் கற்று புரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் இருக்கும் வெண்ணிலா பாட்டி தற்போது ஸ்மார்ட் போனில் நேயர்களுடன் கலந்துரையாடி வருகிறார். 3 வாட்ஸ் அப் குரூப்களை வைத்துள்ள இவர் அதில் நேயர்களின் கேள்விகளுக்கு தானாகவே பதில் தமிழில் டைப் செய்து அனுப்புகிறார், ஆங்கிலம் மற்றும் தங்கிலிஷ் கமென்ட்டுகளையும் படித்து பார்வையாளர்களுக்கு பதில் அளிக்கிறார். மேலும் பலருக்கு வாய்ஸ் மெசேஜ்களையும் தட்டி விடுகிறார். இதுமட்டுமின்றி சேனலில் கேட்கப்படும் சந்தேகங்களுக்கும் அவரே பதிலளிக்கும் வரை தொழில்நுட்பத்தை கற்றுக் கொண்டிருக்கிறார் வெண்ணிலா பாட்டி.
நாங்கள் வீடியோக்களில் போடும் ஆரோக்கிய பொடிகளை பார்த்து பலரும் தங்களுக்கும் செய்து கொடுக்க முடியுமா என்று கேட்டுக் கொண்டனர். இதனால் pattivaithiyam.in என்ற இணையதளம் மூலம் 11 மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படும் ஆரோக்கிய காபி பொடி, பல்பொடி, குளியல் பொடி, சீயக்காய் பொடி உள்ளிட்ட 9 வகைப் பொடிகளை வீட்டிலேயே தயாரித்து இந்தத் தளம் மூலம் விற்பனையும் செய்து வருகிறோம்.
இந்த பொடிகளை நாங்கள் முன்கூட்டியே தயாரிப்பதில்லை ஆர்டர்களுக்கு ஏற்ப தயாரித்து வேண்டுவோருக்கு கூரியர் செய்து வருகிறோம். 3 மாதங்களிலேயே சுமார் 400 ஆர்டர்களை டெலிவரி செய்திருக்கிறோம். FSSAI இடம் அனுமதி பெற்றே இந்த உற்பத்தி செய்யப்படும் நிலையில் எதிர்காலத்தில் பெரிய அளவில் ஒரு தொழில்சாலையாக தொடங்கி ஆரோக்கிய வாழ்விற்கான பொடிகளை தயாரித்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகக் கூறுகிறார் சந்தியா.
பெண் தொழில்முனைவோர்களுக்கு சந்தியாவும் வெண்ணிலாவும் இணைந்து “வுமன் இன் டிஜிட்டல்” அமைப்பை ஏற்படுத்தி பல தகவல் தொழில் நுட்ப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து அவர்களுக்கு தக்க ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர். பாட்டி வைத்தியத்தில் பெண்கள் குழந்தைகள் நலன் சார்ந்து பல ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டு அவர்கள் பயனடைந்துள்ள நிலையில் எதிர்காலத்தில் பெண்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக டிஜிட்டல் வகுப்புகளை எடுக்கவும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
’உணவே மருந்து’ என்ற தாரக மந்திரத்தை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை இலக்காக வைத்து செயல்படுவதாக தெரிவிக்கிறார் சந்தியா.
2018 ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்ட தமிழ் பாட்டி வைத்தியம் சேனலிற்கு 5 லட்சத்தை தாண்டிய சப்ஸ்கிரைபர்கள் இருக்கிறார்கள். சிக்கனம், எளிமையான வாழ்க்கை, ஆரோக்கியமான உணவு பழக்கம் என பாரம்பரியத்தை கடைபிடிக்கும் அந்த கால மனுஷி வெண்ணிலா ராதாகிருஷ்ணன் சந்தியா சேதுராமன் குடும்பத்திற்கு மட்டுமின்றி பாட்டி வைத்திய முறைகளை கடைபிடிக்க விரும்பினாலும் அது பற்றிய புரிதல் இல்லாதவர்களின் குடும்பங்களுக்கும் வழிகாட்டியாக இருக்கிறார்.