54 வயதில் யூடியூப்பில் கமகம சமையல் குறிப்புகளைத் தரும் சரஸ்வதி அம்மா!
’சரசூஸ் சமையல்’ யூடியூப் சேனல் மூலம் மருத்துவ குணம் நிறைந்த ஆரோக்கியமான உணவு வகைகளை செய்து காட்டி அசத்தும் இவர், எந்த வயதிலும் தங்களுக்குப் பிடித்ததை செய்தால் நிச்சயம் வெற்றியே என்று காட்டியுள்ளார்.
பெண்களுக்குள் எதாவது ஒருதிறமை ஒளிந்திருக்கும் சிலர் அதனை கண்டுபிடித்து சாதனைப் பெண்களாகின்றனர். மற்ற சிலருக்கு தூண்டுகோல்கள் மூலம் அந்தத் திறமையானது வெளிவந்து சமுதாயத்தில் சிறந்த அந்தஸ்தை பெற்றுத் தரும்.
கரூரைச் சேர்ந்த சரஸ்வதி அம்மாவிற்கும் அப்படித் தான் ஒரு தூண்டுகோல் மூலம் அவரது நளபாக சமையல் யூடியூப் மூலம் இன்று உலகம் முழுவதும் உலா வருகிறது.
கரூர் அருகேயுள்ள அரவக்குறிச்சியைப் பூர்விகமாகக் கொண்ட சரஸ்வதி, செட்டிநாடு சிமெண்ட் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த அசோகனை திருமணம் செய்துகொண்டு கரூரின் மருமகளானார். கணவர், மகள், குடும்பம், அன்றாட வேலைகள் என வாழ்க்கை அதன் போக்கில் சென்றுகொண்டிருக்க, 4 ஆண்டுகளுக்கு முன்னர் மூட்டுவலி பிரச்னைக்காக சிகிச்சை எடுக்கச் சென்றவருக்கு வாழ்க்கையை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்கான விடிவள்ளி கிடைத்திருக்கிறது.
கோவையில் இருக்கும் நேச்சுரோபதி மையத்தில் நான் சிகிச்சைக்காக சென்றிருந்தேன். அப்போது என்னுடைய அறையிலேயே தங்கி இருந்த சென்னையைச் சேர்ந்த உத்ராலட்சுமியின் அறிமுகம் கிடைத்தது. சிகிச்சை நேரம் போக மற்ற நேரங்களில் நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது உத்ராவிற்கு சமையல் சம்மந்தமாக நிறைய டிப்ஸ் சொன்னேன். இதைப் பார்த்ததும் உத்ரா “நீங்கள் வாயைத் திறந்தாலே டிப்ஸ்களாக கொட்டுகின்றன ஏன் நீங்கள் ஒரு யூடியூப் சேனல் தொடங்கக் கூடாது,” என்று கேட்டார்.
அவர் கூறியதைக் கேட்டு பெருமையாக இருந்தாலும் நான் +2 தான் படித்திருக்கிறேன். அவ்வளவாக கணினி அறிவு இல்லை என்று கூறியதாக தெரிவிக்கிறார் சரஸ்வதி. தொழில்நுட்பம் பற்றி தெரியாவிட்டாலும் மகள் மற்றும் கணவர் இருவருமே என்ஜினியர் என்பதால் அவர்களின் உதவியோடு யூடியூப் சேனலை சாத்தியமாக்க முடியும் என்று நம்பிக்கை கொடுத்துள்ளார் உத்ரா.
மூட்டுப் பிரச்னைக்குத் தீர்வு காண சென்றவர் புது உத்வேகத்துடன் கரூர் திரும்பி வாழ்க்கையின் முன்னேற்றப் பாதையை நோக்கி வெற்றி நடை போடத் தொடங்கியுள்ளார்.
ஊருக்குத் திரும்பியதுமே நடந்தவற்றை கணவரிடமும் மகளிடமும் கூறினேன். அவர்களும் என்னுடைய ஆர்வத்தை பார்த்து உத்ராவிடம் பேசி விவரங்களை கேட்டு 2015ல் ’சரசுஸ் சமையல்’ (Sarasus samayal) என்ற யூடியூப் சேனல் உதயமானது,” என்று மகிழ்ச்சியோடு கூறுகிறார் சரஸ்வதி அசோகன்.
வழக்கமாக சமைக்கும் இடமாக இருந்தாலும் முதல்முறையாக வீடியோ கேமரா முன்பு சமைத்த போதும் பயம், பதற்றம் என பரபரப்பாக இருந்தது. கேரட் கீர் செய்து பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ 10 நாட்களில் ஆயிரம் பார்வையாளர்களை பெற்றது. இந்த இனிப்பான தொடக்கமே 4 ஆண்டுகளைக் கடந்து என்னை இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது என்று புன்னகைக்கிறார் சரஸ்வதி.
இன்று பலர் போனிலேயே படம் பிடித்து வீடியோக்களை யூடியூப்பில் பதிவேற்றம் செய்கின்றனர். எங்களுக்கு வீடியோ எப்படி எடுக்க வேண்டும் என்று தெரியாததால் வீடியோகிராபரை வரவழைத்து தான் இப்போது வரை வீடியோக்களை படம்பிடிக்கிறோம். எடிட் செய்த வீடியோக்களை என்னுடைய கணவரோ அல்லது மகளோ தான் யூடியூப்பில் பதிவேற்றம் செய்கிறார்கள்.
பணம் செலவானாலும் பரவாயில்லை ‘செய்வன திருந்த செய்’ என்று என்னுடைய கணவர் அசோகன் வீடியோகிராபரை வைத்து தான் படப்பிடிப்பு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்,” என்கிறார் சரஸ்வதி.
4 ஆண்டுகளில் கணினி தொழில்நுட்பம் அவ்வளவு பரிட்சயப்படாவிட்டாலும் வீடியோக்களுக்கு வரும் கமென்ட்டுகளை எப்படி பார்க்க வேண்டும், டெஸ்க்டாப் மற்றும் ஸ்மார்ட் போனிலேயே அவற்றிற்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதை மட்டும் கணவன் மற்றும் மகளிடம் இருந்து கற்றுக் கொண்டிருப்பதாக கூறுகிறார் சரஸ்வதி.
பாரம்பரியமான உணவுகள், ஆரோக்கியத்திற்கான பூஸ்ட், உணவையே எப்படி மருத்துவ குணத்தோடு இணைத்து சமைத்து சாப்பிடுவது, குழந்தைகளுக்கான டேஸ்டி டிஷ்கள் என ’சரசுஸ் சமையல்’ யூடியூப் சேனலில் 287 வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
4 ஆண்டுகளில் இந்த யூடியூப் சேனல் 63 ஆயிரம் சப்ஸ்கிரைபர்களைப் பெற்றுள்ளது. இவரின் ஒரு சில வீடியோக்கள் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது.
சரஸ்வதி அம்மா கூறும் சமையல் குறிப்புகள் நம் வீட்டின் குடும்ப உறுப்பினர் ஒருவரே நமக்குச் சொல்லும் சமையல் ஆலோசனை போல பேச்சில் பொறுமையும், தெளிவும் காண்போரின் மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகிறது. சாந்த குணத்தாலும் பாந்த மொழியாலும் அனைவரின் அன்பையும் எளிதில் பெற்று விடும் சரஸ்வதி அம்மாவிற்கு யூடியூப் சேனல் மூலம் பிரபல சமையல் கலை வல்லுநர்களுடைய அறிமுகம் கிடைத்ததாகக் கூறுகிறார்.
கல்லூரி நிகழ்ச்சிகள், அலுவலகங்களில் ஒன்றுகூடல் என பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு விருந்தினராக பங்கேற்க சரஸ்வதிக்கு அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. இவை தவிர பிரபல நாளிதழ்களிலும் சமையல் குறிப்புகளை வழங்கி வருகிறார் இவர்.
சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த சரஸ்வதி வாழ்க்கையில் எதிர்பாராத ஒரு உயிரிழப்பு அவரை முடக்கிப் போட்டு விட்டது. என்னுடைய பேத்தி ஆருத்ரா மூளையில் ஏற்பட்ட கட்டியால எங்களை விட்டு பிரிஞ்சிட்டா. அந்த இழப்ப என்னால ஏத்துக்கவே முடியல. நான் எது செய்தாலும் ‘அம்மாச்சி கிரேட்’ என்று சொல்லிக் கொண்டே இருக்கும் அந்த மழலையின் வார்த்தை எங்களை விட்டு மறைந்ததால் 6 மாதங்களாக என்னுடைய அன்றாட பணிகளிலும் பாதிப்பு ஏற்பட்டது.
அந்த துக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறேன். என்னுடைய துக்கத்தை மறப்பதற்கான வடிகால் சமையல் குறிப்புகள் என்பதால் தற்போது மீண்டும் யூடியூப் சேனல் பக்கம் கவனத்தை திருப்பி இருக்கிறேன். மனமாற்றம் தேவை என்பதால் தற்போது வாரத்திற்கு 2 வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருவதாகவும் இதனால் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் கூறுகிறார் சரஸ்வதி.
இளசுகள் வட்டமிடும் சமூகவலைதளத்தில் 54 வயதில் யூடியூப் சேனல் மூலம் உழைப்புக்கு ஏற்ற வருமானத்தையும் தனக்கான அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார் சரஸ்வதி. தன்னுடைய இந்த வளர்ச்சிக்குக் காரணமாக இருந்த கணவர், மகள் மற்றும் 90 வயதைக் கடந்து தன் வேலைகளைத் தானே செய்து கொண்டு இன்றளவும் சரஸ்வதி அம்மாவிற்கு ஆசானாக இருந்து வரும் அவரின் தாயாருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறார் சரஸ்வதி.