8 வயதில் தொடங்கிய விளையாட்டுப் பயணம்: உலக கராத்தே சாம்பியன் ஆன சபரி!
‘விளையாட்டு மூலம் ஒவ்வொரு குழந்தையும் மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும்’ – கராத்தே சாம்பியன் சபரி!
இந்தியாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களில் நட்சத்திரங்களாக ஜொலிக்கும் பலரும் ஏழ்மை நிலையில் இருந்து பல்வேறு கடினமான சூழல்களைக் கடந்த பிறகே வெற்றியை வசப்படுத்தியுள்ளனர். அத்தகையவர்களில் ஒருவர்தான் 29 வயதான சபரி கார்த்திக்.
இவர் பல்வேறு கராத்தே போட்டிகளில் இந்தியா சார்பாக கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்றுள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கமும் தெற்கு ஆசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் மலேசிய ஓபன் போட்டியில் வெள்ளிpப் பதக்கமும் வென்றுள்ளார்.
சபரிக்கு 11 வயதிருக்கையில் அவரது அப்பா உயிரிழந்துவிட்டார். அந்த இளம் வயதிலேயே குடும்பப் பொறுப்புகளை சுமக்கவேண்டியிருந்தது. அவருக்கு 15 வயதிருக்கையில் ஜென் மார்ஷியல் ஆர்ட்ஸ், பிஎஸ்ஜி சர்வஜனா பள்ளி ஆகியவற்றில் கராத்தே கற்றுக்கொடுக்கத் தொடங்கினார்.
காலை நேரத்தில் பள்ளியில் இருப்பார். மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு கராத்தே நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்தார்.
சபரி குழந்தைகளுக்கு பயிற்சியளிப்பதன் மூலம் வருவாய் ஈட்டினார். குடும்பத்திற்கு பென்ஷன் தொகையாக 4,500 ரூபாய் கிடைத்தது. இவற்றைக் கொண்டு அன்றாட செலவுகளை நிர்வகித்து வந்தனர். ஆனால் கராத்தே சாம்பியனாக உருவாகவேண்டும் என்கிற சபரியின் கனவு நிறைவேற இந்தத் தொகை போதுமானதாக இல்லை. சபரி கடினமாக உழைத்தார். விரைவில் பிரபல பயிற்சியாளரான சென்செய் கார்த்திகேயனின் வழிகாட்டலுடன் பயிற்சியைத் தொடங்கினார்.
அதன் பிறகு தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் கராத்தே போட்டிகளில் பங்கேற்கத் தேர்வானார். எனினும் போட்டிகளில் வெற்று பெறுவதால் மட்டும் அவர் திருப்தியடைந்துவிடவில்லை. விளையாடுவதால் கிடைக்கும் நன்மைகளைத் தெரிந்துகொள்ள விரும்பினார்.
“திறந்த வெளியில் விளையாடும் விளையாட்டுகள் குழந்தைகளுக்கு முக்கியம். நான் விளையாட்டு வீரராக இருந்த சமயத்தில் என்னால் இதை நன்கு உணர முடிந்தது. விளையாட்டின் மூலம் கிடைக்கக்கூடிய மகிழ்ச்சியை ஒவ்வொரு குழந்தையும் அனுபவிக்கவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். அவர்களது உடலிற்குக் கிடைக்கும் புத்துணர்வு மன வலிமையையும் மேம்படுத்தும்,” என்று சபரி கார்த்திக் தெரிவித்தார்.
சபரி 2017-ம் ஆண்டு PHASE (Physical Health and Sports Education) என்கிற லாப நோக்கத்துடன் கூடிய சமூக நிறுவனத்தை நிறுவினார். குழந்தைகள் விளையாட்டுத் துறையில் கவனம் செலுத்த உதவவேண்டும் என்பதே இந்த பிரத்யேக முயற்சியின் நோக்கம். இதன் ஒரு பகுதியாக இந்நிறுவனம் பள்ளிகளுடன் இணைந்து செயல்படுகிறது. பாடதிட்டத்தை வடிவமைப்பதிலும் பயிற்சியளிப்பதிலும் விளையாட்டு தொடர்பான நடவடிக்கைகளைக் கண்காணிப்பதிலும் உதவுகிறது.
ஆரம்ப நாட்கள்
சபரி கோயமுத்தூரில் பிறந்து வளர்ந்தவர். அரசுப் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். அவரது அப்பா குணசேகரன் காவல் அதிகாரி. சபரிக்கு எட்டு வயதிருக்கையில் அவர் கராத்தே கற்றுக்கொள்ள அவரது அப்பா ஊக்குவித்துள்ளார். சபரி அந்த சமயத்தில்தான் ஜென் மார்ஷியல் ஆர்ட்ஸில் சேர்ந்துள்ளார்.
சில ஆண்டுகளில் சபரியின் அப்பா திடீரென்று உயிரிழந்தார். அவரது குடும்பமே நிலைகுலைந்தது. சபரி கடினமாக உழைத்து தனது கனவை நோக்கி பயணிப்பதில் முழுமையான கவனம் செலுத்தினார். கராத்தே பயிற்சியைத் தொடர்ந்தார். தற்காப்புக் கலை மீதான ஆர்வம் அதிகரித்தது.
“சிறு வயதில் கராத்தேவில் வெவ்வேறு விதமாக உதைக்கும் பயிற்சியைக் கண்டு வியந்து போனேன். வெறும் நுட்பங்கள் மட்டுமே ஒருவரை சாம்பியனாக உருவாக்காது என்பதையும் அது மனம் சம்பந்தப்பட்டது என்பதயும் உணர்ந்தேன்,” என்றார்.
சபரி பதினோறாம் வகுப்பு படிக்கத் தொடங்கியபோது அகாடமியில் குழந்தைகளுக்குப் பயிற்சியளிக்கத் தொடங்கினார். அதேசமயம் படிப்பிலும் கவனம் சிதறவில்லை. பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்த பின்னர் கேசிடி பிசினஸ் பள்ளியில் எம்பிஏ பயின்றார்.
2005-ம் ஆண்டு பிலிபைன்ஸ் நாட்டில் நடைபெற்ற உலகக்கோப்பை கராத்தே போட்டிக்குத் தேர்வானபோது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. இதுவே அவரது முதல் சர்வதேச போட்டியாகும்.
“ஆரம்பத்தில் மிகவும் கடினமாக இருந்தது. உதவித்தொகை பெறுவது, சரியான பயிற்சி எடுத்துக்கொள்வது, முறையான ஆதரவு கிடைப்பது என அனைத்துமே சவாலாக இருந்தது. என்னுடைய அப்பாவின் பென்ஷனில் இருந்து 30,000 ரூபாய் கடன் பெற்றுக்கொண்டேன். இதனால் மாதாந்திர வருவாயும் குறைந்தது. இருப்பினும் என்னுடைய விடாமுயற்சிக்குப் பலன் கிடைத்தது. பத்திற்கும் அதிகமான தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்றேன்,” என்று நினைவுகூர்ந்தார்.
2010-ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பாக பங்கேற்றார். 2011-ம் ஆண்டு தெற்காசிய கராத்தே போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்றார். 2009-ம் ஆண்டு தென்னாப்ரிக்காவில் நடைபெற்ற காமன் வெல்த் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கம் வென்றார். 34வது தேசிய விளையாட்டுகள் மற்றும் தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்றார்.
குழந்தைகளின் வாழ்க்கையில் மாற்றம்
சபரி இந்தியாவின் பிரபல கராத்தே சாம்பியனாக உருவெடுத்தபோதும் அவருக்குள் வெறுமையை உணர்ந்தார். விளையாட்டுத் துறையில் மாற்றத்தை கொண்டு சேர்க்க விரும்பினார். அதேபோல் தன்னைச் சுற்றியுள்ளவர்களிடையே மாற்றத்தை ஏற்படுத்த எண்ணினார். இந்த எண்ணமே அவர் இந்தியக் காவல் பணியைத் தேர்வு செய்ய ஊக்குவித்தது. யுபிஎஸ்சி தேர்வுகளுக்குத் தயாராக ஊட்டிக்கு மாற்றலானார்.
அங்குள்ள ப்ளூ மவுண்டென்ஸ் பள்ளியில் கராத்தே பயிற்சியாளராக சேர்ந்தார். அவரிடம் பயிற்சி பெற்ற மாணவர்களில் ஒருவர் கராத்தே பயிற்சி சுவாரஸ்யமாக இல்லை என்று சபரியிடம் கூறியுள்ளார். இதுவே திருப்புமுனையாக அமைந்தது.
“எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. மற்ற மாணவர்களும் இதேபோன்ற உணர்கிறார்களா என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பினேன். பெரும்பாலான மாணவர்கள் தற்காப்புக் கலைகளைப் பயிற்சி செய்வதைக் காட்டிலும் ஓடி ஆடி விளையாடுவதையே விரும்புகின்றனர் என்பதைத் தெரிந்துகொண்டேன். அந்தத் தருணத்தில்தான் சொந்தமான நிறுவனத்தைத் தொடங்கும் எண்ணம் தோன்றியது,” என்றார் சபரி.
மாணவர்கள் பதக்கம் வெல்லவேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்தி அவர்களுக்கு பயிற்சியளிப்பதில் சபரிக்கு விருப்பமில்லை. மாணவர்கள் விளையாட்டின் பலனை முழுமையாகப் புரிந்துகொள்ளவேண்டும் என்று அவர் எண்ணினார். விளையாட்டு தன்னை சிறந்த நபராக மாற்றியுள்ளதாக சபரி உணர்கிறார். இதையே குழந்தைகளிடமும் கொண்டு சேர்க்க விரும்புகிறார்.
எனவே சபரி கோவை திரும்பி PHASE Sports Pvt Ltd நிறுவினார். பள்ளி மாணவர்களை விளையாட்டுகள் மூலம் மகிழ்ச்சியாக மாற்றுவதில் இந்நிறுவனம் கவனம் செலுத்துகிறது. பள்ளிகளுடன் இணைந்து செயல்பட்டு பாடதிட்டம் வடிவமைப்பதில் உதவுகிறது. இந்தத் திட்டங்கள் மாணவர்களின் உடல் வலிமையை மேம்படுத்துவதுடன் மன அழுத்தத்தை நிர்வகித்தல், குழுவாக செயல்படுதல், தகவல் தொடர்பு, தலைமைப்பண்பு உள்ளிட்ட திறன்களையும் வளர்த்தெடுக்கிறது. இந்நிறுவனம் இத்தகைய சேவைக்காக பள்ளிகளில் இருந்து நியாயமான தொகை ஒன்றை கட்டணமாக வசூலிக்கிறது.
கடந்த இரண்டாண்டுகளில் சபரியின் நிறுவனம் இந்தியாவில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உதவியுள்ளது. ஹரியானாவில் உள்ள வித்யா தேவி ஜிந்தால் பள்ளி, கோயமுத்தூரில் உள்ள ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் வித்யா நிகேதன் பப்ளிக் பள்ளி, திருப்பூரில் உள்ள அன்னை அபிராமி பள்ளி ஆகியவை இதில் அடங்கும். 15-க்கும் அதிகமான ஊழியர்கள் இந்நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
“என்னுடைய முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு விளையாட்டுச் சூழலை மேம்படுத்துவதில் பங்களிக்க விரும்புகிறேன்,” என்றார் சபரி.
ஆங்கில கட்டுரையாளர்: ரோஷ்னி பாலாஜி | தமிழில்: ஸ்ரீவித்யா