கேலோ இந்தியா விளையாட்டு 2020-ல் தங்கப் பதக்கம் வென்றுள்ள டீக்கடைக்காரர் மகள்!
நந்தினி 5.65 மீட்டர் நீளம் தாண்டி 17 வயதிற்கு உட்பட்டோருக்கான நீளம் தாண்டும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
ஏழ்மை நிலையில் வாழ்க்கையைத் தொடங்கி உயரத்தை எட்டிய பலரது கதைகளை நாம் கேட்டிருப்போம். உதாரணத்திற்கு பானி பூரி விற்றுக்கொண்டிருந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலைக் குறிப்பிடலாம். இவரை ஐபிஎல் போட்டிகளுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தேர்வு செய்துள்ளது.
அதேபோல் நந்தினி அகசரா குவாஹாட்டியில் நடைபெற்ற கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுத் தொடரில் 17 வயதிற்கு உட்பட்டோருக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் தெலுங்கானா சார்பில் விளையாடி தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இந்த இளம் விளையாட்டு வீரரின் அப்பா டீ விற்பனையாளர். செகந்திராபாத்தின் கப்ரான் பகுதியில் டீக்கடை அமைத்துள்ளார். அதுமட்டுமின்றி செக்யூரிட்டியாகவும் பணியாற்றுகிறார்.
நந்தினி ’தெலுங்கானா டுடே’ உடனான உரையாடலில் கூறும்போது,
“இந்த பதக்கத்தை என்னுடைய அப்பாவிற்கும் என் பயிற்சியாளர்களான ரமேஷ், நாகராஜ், பிரவீன் ஆகியோருக்கு சமர்ப்பிக்கிறேன். நான் விளையாட்டுத் துறையில் செயல்படவேண்டும் என்பதற்காக என்னுடைய அப்பா பணத்தை கவனமாக சேமித்தார். அவர் ஒருபோதும் என்னுடைய கனவுகளுக்கு தடைபோடவில்லை. என் பெற்றோர் இருவருமே எனக்காக மிகப்பெரிய தியாகங்களை செய்துள்ளனர். எனக்கு இரண்டு தம்பிகள் உள்ளனர். நாங்கள் ஒரு படுக்கையறை வசதி கொண்ட வீட்டில் வசித்து வருகிறோம்,” என்றார்.
இந்த விளையாட்டில் நந்தினி 5.65 மீட்டர் நீளம் தாண்டி தங்கப் பதக்கத்தை வசப்படுத்தியுள்ளார். இவரைத் தொடர்ந்து குஜராத்தைச் சேர்ந்த நிர்மா அசாரி இரண்டாம் இடத்தையும் கேரளாவைச் சேர்ந்த அபிராமி பாலகிருஷ்ணா மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
இரண்டாண்டுகளுக்கு முன்பு கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இருந்த இவரது பயிற்சியாளர் இவரை ஊக்குவித்துள்ளார் என Siasat குறிப்பிட்டுள்ளது. நந்தினியின் திறனைக் கண்ட அவரது பயிற்சியாளர் அவருக்கு பயிற்சியளித்துள்ளார். அதன் பிறகு நந்தினி பல்வேறு போட்டிகளில் பங்கேற்றார். கூடுதல் பயிற்சிக்கு துரோனாச்சாரியா விருது வென்றவரான என் ரமேஷிடம் செல்லவும் பரிந்துரை செய்யப்பட்டது.
”நந்தினி பெரியளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் திறன் கொண்டவர். அவரை இணைத்துக்கொள்ள நான் சற்றும் தயங்கவில்லை. அவர் ஒரு சிறந்த தடகள வீராங்கனை. வருங்காலத்தில் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் மென்மேலும் பல்வேறு பதக்கங்களை வெல்வார்,” என்று Siasat உடனான உரையாடலில் என் ரமேஷ் குறிப்பிட்டார்.
கட்டுரை: THINK CHANGE INDIA