43% இந்தியர்கள் மனச்சோர்வுடன் உள்ளனர்- ஆய்வில் தகவல்!

உலக மனநல தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள GOQii நிறுவன் ஆய்வு கொரோனா முடக்கம் இந்தியர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை தெளிவாக உணர்த்துகிறது.
2 CLAPS
0

கொரோனா வைரஸ் இந்தியாவில் தாக்கம் செலுத்தி வரும் நிலையில், ஆரோக்கிய வாழ்க்கை முறையில் பெரும் மாற்றம் உண்டாகி வருகிறது. உடலியக்க செயல்பாடு, ஊட்டச்சத்து, மன அழுத்தம், தூக்கம், மன சோர்வு மற்றும் வாங்கும் பழக்கம் என எல்லாம் தாக்கத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

இந்த பின்னணியில், ஸ்மார்ட் தொழில்நுட்பம் சார்ந்த தடுப்பு மருத்துவச் சேவையான GOQii, பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் மத்தியில், கொரோனா எப்படி வாழ்வியல் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது என அறிய ஆய்வு நடத்தியது.

இந்த ஆய்வு, கொரோனாவுக்கு முன் மற்றும் பின் வாழ்வியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஒப்பிட்டு நோக்குகிறது.

பொதுமுடக்கம் மற்றும் வாழ்வியல் மாற்றம் காரணமாக, தற்போது 43% இந்தியர்கள் மனச்சோர்வுக்கு உள்ளாகி இருப்பதும் அதை எதிர்கொள்ள கற்று வருவதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது என GOQii,செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
26 சதவீத இந்தியர்கள் மிதமான மனச்சோர்வை எதிர்கொள்ளும் நிலையில், 17 சதவீதத்தினர் தீவிர மனச்சோர்வுக்கு இலக்காகி உள்ளதும் தெரிய வந்துள்ளது.

தற்போதைய நிலையில், பெரும்பாலனோர் எதையும் செய்வதில் ஆர்வம் இல்லாமல் இருக்கின்றனர் என ஆய்வு தெரிவிக்கிறது.

  • மக்கள் தொகையில் 59 சதவீதத்தினர் வழக்கமான செயல்களை செய்வதில் உற்சாகம் இல்லாமல் இருப்பது கவலை அளிப்பதாகவும் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. இவர்களில் 38 சதவீதத்தினர் சில நாட்கள் இந்த உணர்வு பெற்றிருக்கும் நிலையில், 9 சதவீதத்தினர் பாதிக்கு மேற்பட்ட நாட்களில் இவ்வாறு உணர்கின்றனர்.
  • மக்கள்தொகையில் 12 சதவீதத்தினர், இந்த காலத்தில் தினசரி எதிலும் ஆர்வம் இல்லாமல் இருக்கின்றனர்.
  • ஆய்வில் பங்கேற்றவர்களில், 56 சதவீதத்தினர், மனச்சோர்வு அல்லது நம்பிக்கையின்மையை உணராத நிலையில், 44 சதவீதத்தினர் இவ்வாறு உணர்வதாக ஆய்வு தெரிவிக்கிறது.
  • 10 சதவீதத்தினர் தினமும் அல்லது நாளின் பெரும்பகுதி சோர்வாக உணர்கின்றனர்.
  • கடந்த சில வாரங்களில், சில நாட்களேனும், சோர்வாக உணர்ந்ததாக 57 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர். 15 சதவீதத்தினர் பாதி நாட்கள் இவ்வாறு உணர்கின்றனர்.

இதன் காரணமாக பலரும் தூக்கமின்மை பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். வாழ்வியல் மாற்றம் காரணமாக மக்கள்தொகையில் பாதி பேர் தூக்கம் சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.

”கொரோனா தாக்கம் மற்றும் பொதுமுடக்கம் காரணமாக, நாட்டில் உள்ள பலரும் மனநலம் சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொண்டு வருவதை எங்கள் ஆய்வு உணர்த்துகிறது. அதிகரிக்கும் நிச்சயமற்றத்தன்மை மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்தாலும், சமமான ஊட்டச்சத்து, வாழ்வியல் மாற்றங்கள் மூலம் இவற்றை எதிர்கொள்ளலாம்,” என்று GOQii நிறுவனர் மற்றும் சி.இ.ஓ விஷால் கோண்டால் கூறுகிறார்.

”தடுப்பு மருத்துவ நலமே எதிர்காலம் என நாங்கள் நினைக்கிறோம். இந்திய மருத்துவத் துறை சந்தித்து வரும் சவால்களை மனதில் கொள்ளும் போது இதுவே நீண்ட கால தீர்வாக இருக்கும். மனநலம், உடல் நலம் மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கைத்தரம் மீது மிகப்பெரிய தாக்கம் செலுத்துகிறது. எனவே தான், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மூலம் இதை எதிர்கொள்வது அவசியம்,” என்றும் அவர் கூறியுள்ளார்.

உடற்பயிற்சி செய்வது, மனச்சோர்வை போக்க உதவும் எண்டோர்பின் ஹார்மோனை சுரக்கச் செய்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனச்சோர்வு அதிகம் இருக்கும் போது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே உடற்பயிற்சி செய்வதாக ஊக்கம் பெறுவது முக்கியம்.

பெரும்பாலும், மனச்சோர்வுக்கு உள்ளானவர்கள் நன்றாக சாப்பிடுவதன் மூலம் நன்றாக உணர்வதாக தெரிவிப்பதையும் இந்த ஆய்வு உணர்த்துக்கிறது.

GOQi நிறுவனம், வீடியோ சேவை, மன நல ஆலோசனை, மருத்துவ வல்லுனர் ஆலோசனை மூலம் மன நல சேவைகளை வழங்கி வருகிறது.GOQii play மூலம் இதை வழங்குகிறது. தொழில்முனைவோரான விஷால் கோண்டால், 2014ல் இந்த நிறுவனத்தை துவக்கினார்.

தொகுப்பு; சைபர்சிம்மன்

Latest

Updates from around the world