3 வயதில்; 6 ரெக்கார்ட்ஸ்: 5 நிமிடத்தில் 125 கார் மாடல்களை கண்டுபிடிக்கும் இனியன்!
கோவையைச் சேர்ந்த 3 வயதான சிறுவன், புகைப்படத்தில் காட்டிய 125 கார் மாடல்களின் பெயர்களை 5 நிமிடம் 17 வினாடிகளில் கண்டறிந்து ஆசிய புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்றுள்ளான்.
வயது என்பது வெறும் எண் மட்டுமே என்பதை நிரூபிக்கும் எண்ணற்றவர்களுள் ஒருவராகியுள்ளான் குட்டிப் பையன் இனியன்.
கோவையைச் சேர்ந்த கிருத்திகா - ஸ்ரீரங்க சாய் தம்பதியினரின் சுட்டிக் குழந்தை இனியன். வெறும் 3 வயதிலே 6 சாதனைகளை படைத்துள்ளார். அவன் வயதொத்த சிறுவர்கள், நர்சரி பள்ளிக்குச் செல்லவே அடம்பிடித்து கொண்டிருக்கையில்,
இனியன் 125கார் மாடல்களின் பெயர்களை 5 நிமிடம் 17நொடிகளிலும், 142 இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் லோகோக்களை 5 நிமிடம் 2 நொடிகளிலும் கண்டறிந்து இரண்டு சாதனைகளைப் படைத்து ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்சில் இடம்பெற்றுள்ளான். இது தவிர, 113 விமான நிறுவனங்களின் லோகோக்களை 2 நிமிடம் 31 நொடிகளில் கண்டறிந்து இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்சிலும் இடம்பெற்றுள்ளான்.
"சாதனைக்காக எதையும் நாங்கள் இனியனுக்கு கற்றுக்கொடுக்கவில்லை. அவனுடைய முயற்சிகளுக்கு அங்கீகாரமாக இருக்கட்டும் என்று தான் ஆசிய புக் ஆப் ரெக்கார்ட்சுக்கு விண்ணபித்தோம். சிறுவயதிலே அவனுக்கு ப்ளாஷ்கார்டுகள் காட்டி வந்தோம்.
பசங்களுக்கு பைக், கார்னா பிடிக்கும்னு தெரியும். இவன் 8 மாதத்திலே கட்டாக இருக்கும் ப்ளாஷ்கார்டில் கார் படம் வரைந்த ப்ளாஷ்கார்ட் மட்டும் எடுத்து உட்கார்ந்து பார்த்திட்டு இருப்பான். ஏற்கனவே, ப்ளாஷ்கார்டுகள் நிறைய காட்டியுள்ளோம். அதனால், இந்த சாதனைக்காக ஸ்பெஷலாக பயிற்சி எதுவும் அளிக்கவில்லை, ஒரு வாரம் தான் பயிற்சி அளித்தோம். அவனுக்கு ஆர்வமான டாபிக் என்பதால் எளிதில் சொல்லிவிட்டான்.
”அவனை வளர்ப்பதில் எப்போதும் நான் ஸ்பெஷல் அக்கறை எடுத்துக் கொள்வேன். சீனி, மைதா, ஜங்க் ஃபுட்ஸ் எதுவும் கொடுக்கமாட்டேன். இதுவரை டிவி பார்க்கவிட்டதில்லை. அவனுக்காக நான் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டேன். என்னுடைய முயற்சிகளுக்கு என் கணவரும் ஃபுல் சப்போர்ட்,” என்றார் இனியனின் அம்மா கிருத்திகா.
இனியனுக்காக கலர் பிரிண்டரும் வாங்கினோம். இன்றைய சூழலில் குழந்தை வளர்ப்பில் தான் எதிர்காலம் இருக்கிறது. அடுத்த ஒரு தலைமுறையினரை நன்றாக வளர்த்துவிட்டால், அவர்களில் இருந்து உருவாகும் தலைவனும் நல்லவனாக இருப்பான் என்பதை நான் அதிகம் நம்புகின்றேன்.
அதிலும், பெண் குழந்தையை காட்டிலும் ஆண் குழந்தையை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். எதிர்காலத்தில் இனியன் சமூகத்தில் ஒரு நல்ல மனிதனாக இருக்கவேண்டும் என விரும்புகிறனே். அதற்காகவே, அவனுக்கு என்ன மாதிரி கல்வி கொடுக்க வேண்டும் என்பதை அவன் 6 மாதக் குழந்தையாக இருக்கும் போதே தேடத் தொடங்கிவிட்டேன்.
அப்போது தான், அமெரிக்க பிசியோதெரபிஸ்ட் க்ளென் டோமன் பற்றியும், அவர் அறிமுகப்படுத்திய கல்விமுறை குறித்தும் அறிந்து கொண்டேன். அவர் எழுதிய 'How to teach your baby math' என்ற புத்தகத்தை நாங்கள் இருவருமே வாசித்தோம்.
அந்தப்புத்தகத்தை படித்தால் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ளும் திறன் குழந்தைகளுக்கு எவ்வளவு அதிகமாக இருக்கிறது என்பது தெரியும்.
சோ, நாங்க முதலில் படத்துடன் இருக்கக்கூடிய வார்த்தைகளை ப்ளாஷ்கார்டில் காட்டினோம். அவன் அந்த வார்த்தையை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக அதை செய்யவில்லை. ஸ்கூலுக்கு சென்ற பிறகு இந்த வார்த்தைகளை திரும்பி கேட்கும் போது, அவனுக்கு தெரிந்த ஒன்று என்பதால் அந்த பாடத்தின் மீது ஆர்வம் வரும் என்பதற்காக.
ஒரு விஷயத்தை மாற்று சிந்தனையில் அணுக வைக்க வேண்டும் என்பது மட்டுமே எங்களது எண்ணமாக இருந்தது. பெரும்பாலான குழந்தைகள் இன்று ஸ்மார்ட்போனுடன் தான் இருக்கின்றனர். அந்த தவறை நாங்கள் செய்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தோம்.
ஸ்மார்ட் போன், டிவி என பெரிய பெரிய விஷயங்களைக் கண்டுவிட்டனர் என்றால் ஃப்ளாஷ்கார்டுகளை பார்க்க மாட்டார்கள். அதுவே ஃப்ளாஷ் கார்டுகளை மட்டும் பார்த்து வளர்ந்தால், இந்த சின்ன சின்ன விஷயங்கள் வழியே நிறைய கற்கத் தொடங்குவர், என்று கூறிமுடித்தார் இனியனின் தாய்.