உலகிலேயே காஸ்ட்லியான மாம்பழம்: கிலோ ரூ.2.7 லட்சம் விற்கும் ‘மியாசாகி’ மாம்பழம்!
பழங்களின் அரசன் என வர்ணிக்கும் அளவிற்கு மாம்பழம் அதன் சுவை மற்றும் வாசனையால் உணவுப்பிரியர்களின் சுண்டி இழுக்கிறது. ஆனால், மாம்பழங்களுக்கு எல்லாம் அரசன் என சொல்லும் அளவுக்கு ஒருவகை மாம்பழம் உலக அளவில் பேமஸாக உள்ளது. அது ஏன் என்று தெரியுமா?.
பழங்களின் அரசன் என வர்ணிக்கும் அளவிற்கு மாம்பழம் அதன் சுவை மற்றும் வாசனையால் உணவுப்பிரியர்களின் சுண்டி இழுக்கிறது. ஆனால், மாம்பழங்களுக்கு எல்லாம் அரசன் என சொல்லும் அளவுக்கு ஒருவகை மாம்பழம் உலக அளவில் பேமஸாக உள்ளது. அது எது, ஏன் என்று தெரியுமா?
இந்தியா அதிக அளவில் மாம்பழம் விளையும் நாடாக உள்ளது. இங்கு மட்டும் பங்கனபள்ளி, அல்போன்சா, மல்கோவா, பாதாமி, கேசர், செந்தூரா என 1200 வகையான மாம்பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், கர்நாடகா, பீகார், குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் மாம்பழம் அதிகம் பயிரிடப்படுகிறது.
உத்தர பிரதேசம் மாம்பழ உற்பத்தியில் 23.47% பங்குடன் அதிக சாகுபாடி செய்யும் மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
உலகின் பல பகுதிகளிலும் விதவிதமான வகைகளில் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டாலும், ஜப்பானை பூர்வீகமாகக் கொண்ட ‘மியாசாகி’ வகை மாம்பழம் உலகிலேயே காஸ்ட்லியான மாம்பழமாக உள்ளது. ஜப்பானில் உள்ள மியாசாகி நகரில் அதிக அளவில் வளர்க்கப்படுவதால் இது அப்பெயரில் அழைக்கப்படுகிறது.
இருப்பினும், தற்போது இது இந்தியா, பங்களாதேஷ், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் ஆகிய இடங்களிலும் விளைவிக்கப்படுகிறது. இந்த மாம்பழத்தின் விலை உலக சந்தையில் கிலோ 2.7 லட்சமாக உள்ளது.
‘மியாசாகி’ மாம்பழத்தின் சிறப்பம்சங்கள்:
- உலகிலேயே ஜப்பான் நாட்டில் உள்ள மியாசாகி என்ற இடத்தில் தான் இந்த மாம்பழம் அதிக அளவில் விளைகிறது. அதற்குக் காரணம் வெப்பமான வானிலை, நீடித்த சூரிய ஒளி மற்றும் ஏராளமான மழைப்பொழிவு ஆகியவற்றுடன் உற்பத்திக்கு சாதகமான காலநிலையை இந்நகரம் கொண்டுள்ளது.
- மியாசாகி மாம்பழம் ஜப்பானில் நன்றாக வளர்ந்தாலும் இதன் தாயகம் அமெரிக்கா என்பது பலரும் அறியாத செய்தி. 1939ம் ஆண்டில் ப்ளோரிடாவை சேர்ந்த எஃப்.டி.இர்வின் என்பவர் தான் இந்த ரகத்தை முதன் முதலில் உருவாக்கியுள்ளார். 1985ம் ஆண்டு ஜப்பானில் மியாசாகி நகரில் விளைவிக்கப்பட்டது. அங்கு இந்த மாம்பழம் பிரபலமானதை அடுத்தே ‘மியாசாகி’ என அழைக்கப்படுகிறது.
- மாம்பழங்கள் எல்லாமே காயாக இருக்கும் போது பச்சையாக இருந்து, அதன் பின்னர், மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்திற்கு மாறும். ஆனால் மியாசாகி மாம்பழங்கள் காயாக இருக்கும் போது சிவப்பு நிறத்தில் இருக்கும், பழமாகும் போது ஊதா நிறத்திற்கு மாறிவிடும்.
- ‘மியாசாகி’ மாம்பழத்திற்கு உலக அளவிலான சந்தைகளில் மவுசு அதிகம், ஒரு கிலோ ரூ2.70 லட்சம் வரை விற்பனையாகிறது. மிக அரிதாக கிடைக்கும் மாம்பழம் என்பதால் இதன் விலை இவ்வளவு காஸ்ட்லியாக உள்ளது.
- ‘டைனாசர் முட்டை’ போன்ற வடிவத்தில் பர்ப்பிள் நிறத்தில் இருக்கும் ஒரு மியாசாமி மாம்பழம் 350 கிராம் எடை வரை இருக்கும். இதன் அடர் சிவப்பு நிறம் காரணமாக ஜப்பான் மக்கள் இதனை ‘டிராகன் முட்டை’ என்றும் அழைக்கின்றனர்.
- 350 கிராம் எடையுள்ள பழுத்த மியாசாகி மாம்பழத்தில் 15 சதவீதம் வரை சர்க்கரை நிறைந்திருக்கும்.
‘மியாசாகி’ மாம்பழத்தின் விலைக்குக் காரணம் என்ன?
உலகிலேயே சில பகுதிகளில் குறைவான அளவில் விளையக்கூடியது என்பதால் மியாசாகி மாம்பழத்திற்கு மவுசு என வைத்துக்கொண்டாலும், ஜப்பானில் இதனை வளர்க்கும் முறை நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.
பார்த்து, பார்த்து செதுக்கியது என்பார்களே, அதேபோல் மியாசாகியில் விளையும் அனைத்து மாம்பழங்களும் தனிக்கவனத்துடன் வளர்க்கப்படுகிறது. மாமரங்கள் என்றாலே வெட்ட வெயிலில் வளர்க்கப்படும். ஆனால் மியாசாகி மாமரங்கள் பசுமை குடிலுக்குள் வளர்க்கப்படுகின்றன.
அதுவும் வழக்கமான மாமரங்கள் போல் உயரமாக இல்லாமல், குட்டையான மரங்களாக உள்ளன. அப்போது தான் ஒவ்வொரு மாம்பழத்தின் மீதும் கவனம் செலுத்த முடியும் என்கின்றனர் விவசாயிகள். மரங்களில் பூக்கள் பூத்தவுடன் தேனீக்களைக் கொண்டு மகரந்த சேர்க்கை செய்கிறார்கள். ஒவ்வொரு மரத்திலும் நன்றாக திரண்டு வரும் பெரிய சைஸ் மாம்பிஞ்சுகளை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை நீக்கி விடுவார்களாம்.
அந்த மாங்காய் சற்றே பெரிதானதும் அதன் மீது வலை ஒன்றை கட்டிவிடுகிறார்கள். அத்தோடு பூச்சி, பறவைகள், விலங்குகள் என எவையும் தாக்காதவாறு மாங்காய்கள் கண்ணும் கருத்துமாக பாதுகாக்கப்படுகின்றன. மாங்காய் நன்றாக வளர்ந்து பர்ப்பிள் நிறத்திற்கு மாறியதும் அதனை அறுவடை செய்வது கிடையாது. மாறாக மாம்பழம் தானாக காம்பிள் இருந்து விழும் வரை காத்திருக்க வேண்டும்.
அதன் பின்னர், பல கட்ட தரப்பரிசோதனைக்குப் பிறகே விற்பனைக்கே வருகிறது. இதனால் தான் இந்த மாம்பழம் சர்வதேச சந்தையில் கிலோ 2.7 லட்சம் வரை விலை போகிறது. மியாசாகி மாம்பழங்கள் சுவை மற்றும் மணம் காரணமாகவும் அதிகம் பேரால் விருப்பப்படும் ஒன்றாக உள்ளது.
கடந்தாண்டு மத்திய பிரதேசத்தில் ஒரு தம்பதி தங்கள் வீட்டில் மியாசாகி மாம்பழத்தை விளைவித்தனர். சென்னையில் ரயில் பயணத்தின் போது சந்தித்த நபர் கொடுத்த மா கன்றுகளை வளர்த்தவர்களுக்கு அது விளையும் போது தான் மியாசாகி என்பதே தெரிய வந்தது.
6 நாய்கள், 4 ஆட்கள் பாதுகாப்புடன் அந்த மாம்பழங்கள் வளர்க்கப்பட்டன. ஒரு மாம்பழத்தை ரூ.21 ஆயிரம் வரை வாங்கிக்கொள்ள மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் முன்வந்தது குறிப்பிடத்தக்கது.