'உலகின் விலை உயர்ந்த தலையணை' - விலை ஜஸ்ட் ரூ.45 லட்சம் மட்டுமே!
உலகின் விலை உயர்ந்த தலையணை என்ற பெருமையைப் பெற்றுள்ளது நெதர்லாந்து நிறுவனம் கண்டுபிடித்துள்ள தலையணை. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 45 லட்சம் ஆகும். தங்க, வைர கற்கள் பதிக்கப்பட்டு, பிரத்யேக தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தலையணை, தூக்கமின்மைக்கு மருந்தாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இன்றைய காலகட்டத்தில் மக்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் சவாலாக இருப்பது நல்ல நிம்மதியான உறக்கம் தான். எந்த நோய் அறிகுறியுடன் மருத்துவரிடம் சென்றாலும், அவர் கேட்கும் முதல் கேள்வி, ‘இரவில் நன்றாக உறங்குகிறீர்களா?’ என்பதுதான். செல்போன், இரவு நேர வேலை, வாழ்க்கை முறை மாற்றம் என மனிதர்களின் தூக்கத்தை பறித்ததற்கு பல்வேறு காரணிகள் கூறப்படுகின்றன.
படுத்தவுடன் தூங்கி விடுபவர்களைப் பார்த்தால், பொறாமைப் படுபவர்கள் ஏராளம். அப்படிப்பட்டவர்களைக் குடுத்து வைத்தவர்கள் எனக் கூறும் அளவிற்கு, தூக்கம் என்பது மிகப்பெரிய வரமாகப் பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட தூக்கத்தை என்ன விலை கொடுத்தாவது வாங்கவும் மக்கள் தயாராக உள்ளனர்.
இதனாலேயே, நல்ல தூக்கத்தை தங்களது மார்க்கெட் தந்திரமாகப் பயன்படுத்தி, பிரத்யேக மெத்தை, தலையணை என புதிய பொருட்களை உருவாக்கி, அவற்றை விளம்பரப்படுத்துகின்றன சில நிறுவனங்கள். தற்போது சந்தையில் அப்படியாக அறிமுகமாகியுள்ள உலகிலேயே விலையுயர்ந்த தலையணை ஒன்றுதான் டாக் ஆப்தி டவுனே.
அந்த தலையணையின் மற்ற சிறப்பம்சங்களைப் பற்றி பார்ப்பதற்கு முன், அதன் விலையைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். அப்போது தான், சமூகவலைதளங்களில் அது ஏன் டிரெண்டிங் ஆகி இருக்கிறது என்பது புரியும்.
நெதர்லாந்தைச் சேர்ந்த பிசியோதெரப்பிஸ்ட் கண்டுபிடித்திருக்கும் இந்த தலையணையின் விலை 57,000 டாலர். அதாவது, இந்திய மதிப்புப்படி சுமார் 45 லட்சம் ரூபாய். விலையைக் கேட்கும் போதே மயக்கம் வருகிறதா... சரி விரிவாக இந்த தலையணையைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
1978 முதல் இயங்கி வரும் வான் டெர் ஹில்ஸ்ட் (Van der Hilst) என்ற பிரபல நெதர்லாந்து தலையணை நிறுவனம் தான் இந்த தலையணையை அறிமுகப்படுத்தியுள்ளது.
பிசியோதெரபிஸ்ட்டான திஜிஸ் வான் டெர் ஹில்ஸ்ட் (Thijs van der Hilst) நிறுவிய இந்த நிறுவனம், ஒரு குழுவை அமைத்து சுமார் 15 வருட ஆராய்ச்சிக்குப் பின் இந்த விலையுயர்ந்த தலையணையைக் கண்டுபிடித்திருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த தலையணையை உருவாக்கும் குழுவில் தூக்க நிபுணர்கள், மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
3டி ஸ்கேனர்கள், பிரிண்டர்கள் மற்றும் கணித அல்காரிதத்தைப் பயன்படுத்தி, மல்பெரி பட்டு, எகிப்திய பருத்தி மற்றும் 24 காரட் தங்க துணி ஆகியவற்றைக் கொண்டு இந்த தலையணையை உருவாக்கியுள்ளனர். இந்தத் தலையணையில் நீலக்கற்கள், தங்கம், வைரம் என விலை உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டிருக்கிறது. ரோபோட்டிக் மில்லிங் மிஷினால் பஞ்சுகள் நிரப்பப்பட்டுள்ள இந்த தலையணையின் ஜிப்பில் நான்கு வைரக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. இதுபோக Sapphire எனும் ஜெம்ஸ்டோனும் இந்த தலையணையில் இருக்கிறதாம்.
இவ்வளவு விலையுயர்ந்த தலையணையை வெறுமனே ஒரு கவரில் போட்டுக் கொடுத்தால் நன்றாக இருக்காது என்பதால், அதனை பிரத்யேகமாக ஒரு பெட்டியில் வைத்துக் கொடுக்கின்றனர் இந்த நிறுவனத்தினர்.
இன்சோம்னியா (Insomnia) எனப்படும் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு இந்தத் தலையணை நல்லதொரு, நிம்மதியான தூக்கத்தை தரும் என்கிறார்கள் இதனை உருவாக்கியவர்கள். இதுவரை முப்பதிற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்களது தலையணையை வாங்கி இருப்பதாக இந்நிறுவனம் தனது இணையதளத்தில் கூறியிருக்கிறது.
இந்த உலகிலேயே விலையுயர்ந்த தலையணை பற்றிய செய்தி இணையத்தில் வைரலாகியுள்ளது. இவ்வளவு விலைக்கு ஒரு தலையணையா என ஆச்சர்யம் தெரிவித்து வரும் நெட்டிசன்கள், மறுபுறம் நிம்மதியான தூக்கம் கிடைக்க அரை கோடி ரூபாய் செலவிட வேண்டுமா என ஆச்சர்யம் தெரிவித்துள்ளனர்.