உலகச் சாம்பியனை தோற்கடித்த இளம் கிரான்ட் மாஸ்டர்; சச்சின் முதல் முதல்வர் வரை குவியும் வாழ்த்து!
உலக சாம்பியன் மெக்னஸ் கார்ல்சனை தோற்கடித்து அசத்தி சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
உலக சாம்பியன் மெக்னஸ் கார்ல்சனை தோற்கடித்து அசத்திய சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
யார் இந்த பிரக்ஞானந்தா?
விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்று சொல்வதுண்டு அது அப்படியே பொருந்திப் போவது சென்னையைச் சேர்ந்த 14 வயது சிறுவன் பிரக்யானந்தாவிற்கு என்று சொல்லலாம். மூன்றரை வயதில் தனது சகோதரி செஸ் விளையாடுவதை பார்த்து ஆர்வத்தை வளர்த்துக் கொண்ட பிரக்யானந்தா 7 வயதில் இவர் 8 வயதுக்குட்பட்டோருக்கான உலக சாமியன்ஷிப் பட்டத்தை வென்றார்.
10 வயதில் உலகிலேயே இளம் சர்வதேச செஸ் மாஸ்டர் என்ற பெருமையை பெற்றதோடு, 14 வயதில் அண்டர் 18 பிரிவில் உலக இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாம்பியனாக மகுடம் சூட்டிக் கொண்டு இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.
மேலும், 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் செஸ் தரவரிசையில் 2600 புள்ளிகளை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்திருந்தார். பிரஞ்னாந்தாவின் திறமைக்கு ஆதரவு அளிக்கும் விதமாக கல்வி கட்டணத்தில் சலுகை கொடுத்துள்ள அவரது பள்ளி, பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பட்டம் வெல்ல வேண்டும் என்பதற்காக வருகை பதிவேட்டிலும் சலுகை வழங்கியுள்ளது.
பாடியில் வசித்து வரும் பிரக்யானந்தாவின் குடும்பம் மிகவும் சாதாரணமான நடுத்தர வர்க்கக் குடும்பம். அவருடைய தந்தை ரமேஷ் பாபு போலியோவால் பாதிக்கப்பட்டவர், இவரது மனைவி நாகலட்சுமி. கூட்டுறவு வங்கியில் பணியாற்றும் ரமேஷ்பாபுவின் ஒற்றை வருமானத்தை வைத்தே குடும்பம் ஓடிக்கொண்டிருக்கிறது. பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி செஸ் பயிற்சி பெற்று 14 வயதுக்குக்குட்பட்டோர் பெண்கள் பிரிவில் ஏற்கனவே சாம்பியன் பட்டம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
உலக சாம்பியனை தோற்கடித்த பிரக்ஞானந்தா:
’ஏர்திங்ஸ் மாஸ்டர்’ எனப்படும் செஸ் தொடர் காணொலி காட்சி மூலமாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் மொத்தம் 16 பேர் பங்கேற்றனர். இந்த போட்டியில் எட்டாவது சுற்றில் 16 வயதான பிரக்ஞானந்தா, உலகின் நெம்பர் 1 வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனும் மோதினார்.
இந்த போட்டியில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய பிரக்ஞானந்தா, கருப்பு நிற காய்களை திறம்பட நகர்த்தி அசத்தினார். வெறும் 39 நகர்வுகளில் வெற்றியை பெற்றார். 16 வயதில் உலக சாம்பியனை வீழ்த்திய பிரக்ஞானந்தாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து:
செஸ் போட்டியில் உலக சாம்பியனை வெற்றி கண்ட பிரக்ஞானந்தாவிற்கு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த பிரக்ஞானந்தா அவரிடம் வாழ்த்து பெற்றுள்ளார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“சூப்பர் கம்ப்யூட்டரையே தோற்கடித்த - தான் பார்த்து வியந்த உலகின் சிறந்த செஸ் ஆட்டக்காரரான கார்ல்சனை வீழ்த்தி ஒட்டுமொத்த உலகையே திகைப்பில் ஆழ்த்தியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயது கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மென்மேலும் வெற்றிகள் குவியட்டும்,” என்று பாராட்டி பதிவிட்டுள்ளார்.
கிரிக்கெட் கடவுள் என ரசிகர்களால் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர், பிரக்ஞானந்தாவின் திறமையை வியந்து பாராட்டியுள்ளார். சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“என்ன ஒர் அற்புதமான உணர்வு. அனுபவம் வாய்ந்த, உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை கறுப்பு காய்களுடன் விளையாடி தோற்கடித்தது மாயாஜாலம். மேன்மேலும் வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள். இந்தியாவுக்கு நீங்கள் பெருமை சேர்த்திருக்கிறீர்கள்,” என வாழ்த்தியுள்ளார்.
உலக நாயகன் கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“உலகின் நம்பர் ஒன் செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர். அவரை வீழ்த்தி இருக்கிறார் 16 வயதே ஆன பிரக்ஞானந்தா. தமிழகம் இந்தத் தம்பியால் பெருமை கொள்கிறது. மனமார்ந்த பாராட்டுக்கள்,” எனப் பதிவிட்டுள்ளார்.
தொகுப்பு: கனிமொழி