Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

ஒரு நாளைக்கு ரூ.20 சம்பாதித்த இளம் பெண்ணின் இன்றைய ஆண்டு வருமானம் 7.5 கோடி...

வீடுவீடாகச் சென்று கத்திகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களை விற்பனை செய்தார். அன்று தொடங்கிய அவரின் வியாபாரப் போராட்டம், இன்று வரை தொடர்ந்து அவரை ஓர் வெற்றியாளராக மாற்றியுள்ளது.

ஒரு நாளைக்கு ரூ.20 சம்பாதித்த இளம் பெண்ணின் இன்றைய ஆண்டு வருமானம் 7.5 கோடி...

Tuesday August 20, 2019 , 4 min Read

குடும்பப் பிரச்னையால் மும்பையில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறிய சினு கலாவுக்கு அப்போது 15 வயது. ஏதோ ஓர் கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிவிட்ட அந்த சிறுமிக்கு எதிரே ஒரு இருண்ட, நிச்சயமற்ற எதிர்காலம் நின்று கொண்டிருந்தது. ஆனால் அவள் அதைக் கண்டு அச்சமடைந்து விடவில்லை.


வீடுவீடாகச் சென்று கத்திகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களை விற்பனை செய்யத் தொடங்கினார் சினு. அன்று தொடங்கிய அவரின் வியாபாரப் போராட்டம், இன்று வரை தொடர்ந்து அவரை ஓர் வெற்றியாளராக மாற்றியுள்ளது. ஆம் அன்று நாளொன்றுக்கு ரூ. 20 சம்பாதிக்கப் போராடிய அவரின் இன்றைய ஆண்டு வருமானம் ரூ. 7.5 கோடி ஆகும்.

chinu

Chinu Kala, Founder, Rubans Accessories.

இதுகுறித்து அவர் கூறுவதாவது, வீடுவீடாகச் சென்று பொருள்களை விற்று, அன்றைய உணவுக்கு மட்டுமாவது சம்பாதிக்க வேண்டியிருந்தது. அன்று ஓர் நாள் வருமானமாக கிடைத்ததென்னவோ ரூ.20 தான். ஆனால் அதையும் சம்பாதிக்க பெரும்பாடு படவேண்டியிருந்தது. பெரும்பாலானவர்கள் முகத்தில் அறைந்தாற்போல கதவைச் சாத்தி, பொருள்களை வேண்டாம் எனக் கூறி விடுவார்கள். ஆனாலும், விடாமுயற்சியுடன் போராடி எப்படியாவது பொருள்களை விற்றுவிடுவேன் என்கிறார்.

அந்த வயதுக்கே உரிய எதிர்காலக் கனவுகள், துன்பம் வரும்போது அதை ஓர் பிடிவாதத்துடன் விட்டுக் கொடுக்காமல் வென்றுவிடும் தைரியம் போன்றவை அவரை ஓவ்வொரு படியாக உயர்த்தியது. 8 ஆண்டுகளில் பல்வேறு பணிகள், விதவிதமான அனுபவங்கள் என வாழ்க்கை அவருக்கு பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தது.


2004ம் ஆண்டு பெங்களூரில் திருமணம் நடைபெற்றது. அப்போது நண்பர்கள் அளித்த உத்வேகத்தினால் Gladrags Mrs India Pageant, 2008ல் பங்கேற்றேன். இதில் இறுதி நிலை வரை சென்றேன். இதனால் நான் என் வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு உயர்ந்து, மாடலிங் துறையில் நுழைந்தேன். இதைத் தொடர்ந்துதான் Fonte Corporate Solutions என்ற நிறுவனத்தைத் தொடங்கி ஓர் தொழில் முனைவோராக எனது பயணத்தைத் தொடங்கினேன்.

chinu1

Chinu Model

ஆனால் முதலீடு செய்வதற்கு என்னிடம் பணம் இல்லை. ஆனால், நான் மாடலிங் துறையில் நுழைந்த பிறகு, கார்ப்பரேட் வணிகமயமாக்கல் என்பது நான் காலடி எடுத்து வைக்கக்கூடிய ஒன்று என்பதை உணர்ந்தேன். மேலும், அதில் நான் அதிர்ஷ்டவசமாக வெற்றியும் பெற்றேன். ஏர்டெல், சோனி, ஈஎஸ்பிஎன், ஆஜ் தக் மற்றும் இன்னும் பல பிராண்டுகளுடன் இணைந்து பணியாற்ற முடிந்தது எனகிறார்.


நுகர்வோரின் கோரிக்கைகளை அவர்களின் தேவைகளுக்கு ஏற்றவாறான தயாரிப்புகள் மற்றும் சேவைகளுடன் பூர்த்தி செய்வதன் மூலம் மட்டுமே ஒரு வணிகத்தை வெற்றிகரமாக நடத்த இயலும் என்பதை சினு உணர்ந்தார். மேலும், இந்திய நகைத் துறையில் ஒரு பெரிய இடைவெளி இருப்பதையும் அவரால் உணரமுடிந்தது.

இந்திய நகை சந்தை பரந்த விரிந்திருந்தபோதும், வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய தனித்துவமான வடிவமைப்புகள் எதுவும் இல்லை என்று சினு உணர்ந்தார். எனவே, அவர் Fonte Corporate Solutions நிறுவனத்தை மூட முடிவு செய்தார்.


தனது மாடலிங் துறை, பேஷன் துறையில் தனது ஆர்வம், கார்ப்பரேட் வர்த்தகத்தில் தனது அனுபவம் என அனைத்தையும் இணைத்து 2014ல் அவர் Rubans Accessories -யை நிறுவினார்.

பெங்களூரில் உள்ள பீனிக்ஸ் மாலில் 70 சதுர அடி பரப்பளவில் ரூ.3 லட்சம் முதலீட்டில் ரூபன்’ஸ் ஆபரணங்கள் என்ற கடை தொடங்கப்பட்டது. 2019ம் ஆண்டிலேயே இந்நிறுவனம் ரூ. 7.5 கோடி விற்றுமுதல் பதிவு செய்தது.

இதையடுத்து, வாடிக்கையாளர்களின் பெரும் ஆதரவையடுத்து, பெங்களூரு, கோரமங்களாவில் உள்ள ஃபோரம் மாலை அணுகி, ஒரு இடத்தை வாடகைக்கு எடுக்க முடிவெடுத்தார். இங்கு கடை திறப்பது தனது பிராண்டுக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுக்கும் என நினைத்து அவர் மால் மேலாளரை அணுகியபோது, ​​ரூபன்ஸுக்கு இடம் மறுக்கப்பட்டது. ஆனால் சினு, எப்போதும் போல தனது விடாமுயற்சியின் மூலம் நம்பிக்கையை இழக்காமல் 3 மாதங்களாகப் போராடி அந்த மாலில் ஓர் கடையை திறக்க அனுமதி பெற்றார்.

chinu3

Rubans Fashion Earrings.

இதுகுறித்து சினு கூறும்போது,

“இத்துடன் போராட்டம் ஓய்ந்து விடவில்லை. கடைக்கு முன்வைப்புத் தொகை செலுத்த என்னிடம் பணம் இல்லை. பணத்தை ஏற்பாடு செய்ய எனக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டது. எப்படியோ போராடி கடையைத் திறந்தேன். வாடிக்கையாளர்களுக்கு எனது அணிகலன் சேகரிப்பு மிகவும் பிடித்துப் போனதால், 15 நாள்களில் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள நகைகளை விற்றேன். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் அளித்தது என்கிறார்.”

தனது இரண்டாவது கடையைத் திறந்த சினு, ரூபன்ஸ் ஆபரணங்களை ஹைதராபாத் மற்றும் கொச்சிக்கு விரிவுப்படுத்தினார். தற்போது ​​ரூபன்ஸ் ஆபரணங்கள் தயாரிக்க ஜெய்ப்பூர், ராஜ்கோட், அகமதாபாத், கொல்கத்தா போன்ற நகரங்களில் சுமார் 15 லிருந்து 20 பேர் பணிபுரிந்து வருகின்றனர். மும்பையில் உற்பத்தி பிரிவும் செயல்பட்டு வருகிறது. இங்கு வளையல்கள், காதணிகள், நெக்லஸ், மோதிரங்கள் மற்றும் பல்வேறு வெள்ளி நகைகளும் தயாரிக்கப்படுகின்றன. இந்த நகைகளை வடிவமைப்பதற்காக (NIFT) நிஃப்ட் பயிற்சி பெற்ற பட்டதாரிகளை இந்நிறுவனம் பயன்படுத்துகிறது.


Ruban

Rubans Fashion Jewellery.

சினு பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் கொச்சி என பல்வேறு நகரங்களில் 5 பிரத்யேக கடைகளைத் திறந்தார். விற்பனை குறையவில்லை என்றாலும், தனது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதை அறிந்தார். இதுகுறித்து ஆய்வு செய்தபோது, வாடிக்கையாளர்களில் கிட்டத்தட்ட 60 சதவீதம் பேர் ஆன்லைன் ஷாப்பிங் முறைக்கு மாறியுள்ளது தெரியவந்தது.


வாடிக்கையாளர்களிடம் இதுகுறித்து கேட்டபோது, ஆன்லைன் ஷாப்பிங் மிகவும் வசதியாக உள்ளதாகவும், நேரம் மிச்சமாவதுடன், அலைச்சலும் இல்லை எனத் தெரிவித்தனர். இதையடுத்து, ஆன்லைனில் வியாபாரத்தை கொண்டு செல்லும் அடுத்தகட்ட நகர்வுக்குத் தயாரானோம்.


சினு, தனது ஆஃப்லைன் கடைகளை மூடுவதற்கு முடிவெடுத்து, ஆன்லைன் விற்பனை முறைக்கு மாறினார். ஃபிளிப்கார்ட், மின்த்ரா மற்றும் ஜபாங் போன்ற பல்வேறு இணையவழி இணையதளங்களில் தனது வியாபாரத்தைத் தொடங்கினார்.


தற்போது, இவரது பிராண்ட் தினசரி ஆன்லைனில் 1,000 ஆர்டர்களைப் பெறுகிறது. மேலும் நகைகளை அமெரிக்கா, இங்கிலாந்துக்கு தனது சொந்த போர்டல் மூலம் விற்பனை செய்கிறது.

2016-17 ஆம் ஆண்டில், இந்த பிராண்ட் ரூ .56 லட்சம் வருவாய் ஈட்டியது. கடந்த நிதியாண்டில் (FY19) இந்த பிராண்ட் 114 சதவீதம் அதிகரித்து, ஆண்டுக்கு ரூ. 7.5 கோடி வருவாயை எட்டியுள்ளது.

தனது இந்த வெற்றி குறித்து சினு கூறியதாவது, நான் எனது வாடிகக்கையாளர்களின் தேவையைப் புரிந்துகொண்டேன். பெண்களின் தேவையைப் புரிந்துகொள்ள நான் பல்வேறு இடங்களுக்குச் செல்வது வழக்கம். வீதியோரக் கடைகளில் தொடங்கி, பெரிய மால்கள் என நான் போகாத இடமில்லை. இதனால் சந்தையின் போக்குகள், பேஷன் விவரங்கள் போன்றவற்றை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது. இதுவே எனது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவியது என நான் நினைக்கிறேன்.


எங்கள் நிறுவனத்தின் ஆரம்ப கால சவால்களில் முக்கியமானது எங்களுக்கென்று ஓர் முக்கிய இடத்தை உருவாக்குவது. அதாவது, 'வசுதைவ குடும்பகம்' (உலகம் ஒரு குடும்பம்) (the world is one family). இன்று எங்களின் நோக்கம் நிறைவேறியுள்ளது என்றே கருதுகிறேன்.

மேலும் ஓர் முக்கிய சவால் என்னவென்றால், எப்போதும் ஏதேனும் புதிது புதிதாக கண்டுபிடித்து வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கவேண்டும். இதற்காகவே, ஒவ்வொரு 15-20 நாள்களுக்கு ஒரு முறை ஓர் புதிய அணிகலன் தொகுப்பை வெளியிடுகிறோம் என்று கூறுகிறார்.

ரூபன்ஸ் குழு ‘2024-க்குள் மிஷன் ரூ. 150 கோடியில்’என்ற குறிக்கோளுடன் கடுமையாக உழைத்து வருகிறது. மேலும், நகைகளை விற்பனை செய்வதற்காக இந்தியா முழுவதும் உள்ள விற்பனையாளர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சினு கூறுகிறார்.


சினுவைப் பொறுத்தவரை, அவரது பயணம் நெடியது, ஆனால் வெற்றிகரமானது. "நீங்கள் வெற்றி நோக்கிச் செல்ல காத்திருக்க வேண்டாம். எல்லா நேரமும் நல்ல நேரமே, உங்கள் கனவைத் தொடர மட்டும் நீங்கள் மிகவும் உறுதியாக இருக்கவேண்டும் என்கிறார் சினு.


ஆங்கிலத்தில்: பலாக் அகர்வால் | தமிழில் திவ்யாதரன்.