2014-ல் 3.5 லட்ச ரூபாயுடன் துவங்கப்பட்டு இந்த ஆண்டு 100 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட உள்ள ஸ்டார்ட் அப்!
AKS என்கிற பெண்களுக்கான எத்னிக் ஆடைகள் பிராண்டை தனது 25 வயதில் துவங்கினார் நிதி யாதவ்.
மெரில் ஸ்ட்ரீப்பின் ’தி டெவில் வேர்ஸ் பிரதா’ 2006 பிளாக்பஸ்டர் திரைப்படத்தை பார்த்தது முதல் நிதி யாதவ் ஃபேஷன் பிரிவில் செயல்பட விரும்பினார். இந்தூரில் பிறந்து வளர்ந்த நிதி கணிணி அறிவியல் பட்டதாரி. டெலாய்ட் ஆலோசனை நிறுவனத்தில் ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றிய பிறகு அவருக்கு ஆர்வம் இருக்கும் பகுதியைத் தெரிந்துகொண்டார்.
நிதி பணியாற்றிய நிறுவனத்தில் வருடத்தின் இறுதியில் நடத்தப்பட்ட விளக்கக்காட்சியின்போது அவரிடம் ஒரு எளிமையான கேள்வி கேட்கப்பட்டது. அந்தக் கேள்வி அவரது வாழ்க்கையே மாற்றியது. “கடைசியாக நீங்கள் எப்போது அலுவலகத்திற்குச் செல்ல விரும்பினீர்கள்?” என்பதே அந்தக் கேள்வி. “எப்போதுமில்லை” என்பதே இந்தக் கேள்விக்கு அவர் நேர்மையாக அளித்த பதில்.
”என்னுடைய ஆலோசகர்கள் எனக்கு விருப்பம் இருக்கும் பகுதியை நான் அடையாளம் காண உதவினார்கள். நான் ஃபேஷன் பிரிவில் படிக்க ஊக்குவித்தனர்,” என்றார்.
விரைவில் நிதி ஃப்ளோரன்ஸ் Polimoda ஃபேஷன் பள்ளி, இத்தாலியில் Fashion Buying and Merchandising பிரிவில் ஓராண்டு படிப்பில் சேர்ந்தார். இத்தாலியன் எமிலியோ பூசி ஃபேஷன் பிராண்டில் அவருக்கு வேலை கிடைத்தபோதும் தனது குடும்பத்துடன் இருப்பதற்காக விரைவிலேயே இந்தியா திரும்பினார்.
நிதி யாதவ்; 2014-ம் ஆண்டு மே மாதம் 3.5 லட்ச ரூபாய் சீட் நிதியுடன் AKS அறிமுகப்படுத்தினார். இந்நிறுவனம் 18-35 வயதுடைய பெண்களுக்கான எத்னிக் ஆடைகளை குறைந்த விலையில் வழங்குகிறது. இன்று Myntra, Jabong, Flipkart போன்றவற்றில் இந்த பிராண்ட் கிடைக்கிறது. அத்துடன் AKS-க்கு சொந்தமான வலைதளத்திலும் கிடைக்கிறது. இந்தியா, சிங்கப்பூர், மலேசியா முழுவதும் அனுப்பப்படுகிறது. நாகாலாந்தில் இரண்டு ஸ்டோர்களும் உள்ளன.
Zara வாயிலாக கற்ற படிப்பினைகள்
நிதியின் தொழில்முனைவுப் பயணம் குருகிராமில் இருந்தே துவங்கப்பட்டது. குருகிராமில் மூன்று மாதங்கள் உள்ளூர் ஃபேஷன் பிராண்டுடன் பணியாற்றிய பிறகு இந்தூர் திரும்பினார். திருமணம் முடிந்து குழந்தையும் பிறந்தது.
“9 மணி முதல் 5 மணி வரை வேலை நேரம் கொண்ட வழக்கமான பணிக்கு நான் செல்ல விரும்பவில்லை என்பதை எங்களது திருமணத்திற்கு முன்பே என் கணவரிடம் கூறிவிட்டேன். வீட்டிலிருந்து பணிபுரிய அவர் என்னை ஊக்குவித்தார்,” என்றார் நிதி.
அவரது கணவர் சத்பால் யாதவ் அந்த சமயத்தில் ஜபாங் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நிதி இத்தாலியில் படித்திருந்தார். இந்தத் துறை குறித்த புரிதல் அவரிடம் இருந்தது. அவர் கூறுகையில்,
”நான் ஃபேஷன் டிசைனர் இல்லை. ஆனால் எது சிறப்பாக விற்பனையாகும் என்பதை அறிவேன். என்னுடைய ஸ்டார்ட் அப் முயற்சி குறித்து தெரிவித்தபோது குடும்பத்தினர் முதலில் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் எனக்கு தொடர்ந்து ஆதரவளித்தனர்,” என்றார்.
நிதி தன்னைத் தயார்படுத்திக்கொள்ள சர்வதேச பிராண்டான Zara குறித்து ஆறு மாதங்கள் ஆய்வு செய்தார். அதேபோன்ற விநியோகச் சங்கிலியை இந்தியாவிலும் பின்பற்ற விரும்பினார். அவர் விவரிக்கையில், “Zara ஒவ்வொரு மாதமும் புதிய கலெக்ஷனை அறிமுகப்படுத்தியது. அவை அனைத்துமே விற்பனையானது. ஆண்டு இறுதி வரை காத்திருந்து தள்ளுபடி வழங்காமல் ஒவ்வொரு மாத இறுதியிலும் தள்ளுபடி வழங்கியது,” என்றார்.
அந்த சமயத்தில் எத்னிக் ஆடைகள் பிரிவில் மிகப்பெரிய இடைவெளி இருந்ததை நிதி உணர்ந்தார். எனவே அவர் AKS அறிமுகப்படுத்தியபோது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை 15-20 புதிய ஸ்டைலை அறிமுகப்படுத்துவதை உறுதிசெய்தார்.
“அந்த காலகட்டத்தில் யாரும் இவ்வாறு செயல்படவில்லை. இன்று ஒவ்வொரு மாதமும் சுமார் 150 புதிய ஸ்டைல் அறிமுகப்படுத்தப்படுகிறது. வாடிக்கையாளர்கள் மீண்டும் வருகை தரும் விகிதம் 35 சதவீதமாகும்,” என்றார்.
AKS-ன் டிசைன்கள் Zara போலல்லாமல் அவ்வப்போதைய போக்குகளை அடிப்படையாகக் கொண்டதாகும். நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஆடைத் தொகுப்பும் எல்லா நேரங்களிலும் கிடைக்காது என்கிறார் நிதி.
”ஒருமுறை விற்பனை செய்யப்பட்ட பிறகு அதே டிசைனை மீண்டும் உருவாக்குதில்லை,” என்றார் யுவர்ஸ்டோரியிடம் நிதி.
ஜெய்ப்பூரை நோக்கிய பயணம்
AKS அமைக்கப்பட்ட ஆரம்ப மாதங்களில் பொருட்களை வாங்குவதற்காக நிதி ஒவ்வொரு வார இறுதியிலும் தனது கணவருடனும் பச்சிளம் குழந்தையுடனும் குருகிராமில் இருந்து ஜெய்ப்பூர் பயணித்துள்ளார்.
அங்கிருந்த உற்பத்தியாளர்களுடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது கடினமாக இருந்தது. இது குறித்து நிதி நினைவுகூறுகையில்,
“ஒவ்வொரு டிசைனிலும் 25 ஆடைகள் தேவைப்பட்டது. ஆனால் 200 ஆடைகளுக்குக் குறைவாக ஒப்புக்கொண்டால் தயாரிப்புச் செலவு அதிகமாக இருக்கும் என்பதால் அவர்கள் குறைவான எண்ணிக்கையிலான ஆர்டர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. சிலர் சில குறிப்பிட்ட ஸ்டைல்களில் 20-25 ஆடைகளைத் தேர்வு செய்ய அனுமதித்தனர். AKS வளர்ச்சியடைகையில் 300 ஆடைகள் அளவிற்கு ஆர்டர் செய்யத் துவங்கினோம்,” என்றார்.
இன்று ஜெய்ப்பூரில் இந்நிறுவனத்தின் அச்சிடுதல், சாயமிடுதல், தையல், தயாரிப்பு போன்றவற்றிற்கான யூனிட்களுடன் செயல்படுகிறது. மேலும் இதன் 25 சதவீத கிடங்கை டெல்லிக்கு மாற்றுகிறது.
பணி-குடும்பச் சமன்பாடு
பணி-குடும்ப சமன்பாட்டைப் பொறுத்தவரை குடும்பத்தின் ஆதரவு கிடைக்கவில்லையெனில் ஆண், பெண் இருவருமே சிரமங்களை சந்திக்க நேரிடும். நிதியின் கணவர் சத்பால் அவர்களது குழந்தையைப் பராமரிப்பதில் உதவுவதுடன் AKS-ன் செயல்பாடுகளுக்கும் கைகொடுத்துள்ளார்.
”நான் ஒவ்வொரு போட்டோஷுட்டிற்கும் செல்வேன். தயாரிப்பு துவங்குவதற்கு முன்பு ஒவ்வொரு மாதிரியையும் சோதனை செய்வேன். கேட்டலாக் தயாரிப்பு, டிசைனிங், ஆடைகளை வாங்குதல் என அனைத்தையும் நாங்களே மேற்கொண்டோம். எங்கள் வீடே பொருட்கிடங்காக இருந்தது,” என நினைவுகூர்ந்தார்.
குழந்தை தூங்கிய பிறகு அதிகாலை 3 மணி வரை இருவரும் பணிபுரிவார்களாம். இந்நிறுவனம் துவங்கப்பட்ட மூன்றாவது ஆண்டில் பத்து பேர் அடங்கிய இவர்களது குழு அலுவலகப் பகுதிக்கு மாற்றலானது. இன்று குருகிராமில் ஐந்து மாடி கட்டிடம் கொண்ட வணிக வளாகத்தில் 52 பேர் கொண்ட குழுவாகச் செயல்படுகிறது.
அத்துடன் அதன் பார்ட்னர்கள் வாயிலாக 250 டெய்லர்களுடனும் பணியாளர்களுடனும் இணைந்து செயல்படுகிறது. இறுதியாக சத்பால் முழு நேரமாக AKS நிறுவனத்தின் இணை நிறுவனராக இணைந்துகொண்டார்.
பெண்களின் பங்களிப்பு
பெண்கள் மேம்பாட்டில் பங்களிப்பதில் முக்கிய கவனம் செலுத்துகிறது AKS. இந்நிறுவனம் அவுட்சோர்ஸ் செய்யும் 50 சதவீத நிறுவனங்கள் பெண்கள் தலைமையில் இயங்கும் நிறுவனங்களாகும். ”நான் எப்போதும் வேலை வாய்ப்பினை உருவாக்கி சமூக நலனில் பங்களிக்க விரும்புகிறேன்,” என்றார் நிதி.
AKS நிறுவனத்தின் ஊழியர்களில் ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள். அதேபோல் சுமார் 60 சதவீதம் சப்ளையர்கள் பெண்கள்.
"ஒரு பெண்ணின் திருமண வாழ்க்கை துவங்கப்பட்ட பிறகு அவரது பணி வாழ்க்கையின் முன்னேற்றம் தடைபடும் என்பதே பொதுவான கருத்து. இது தவறு என்கிறார் நிதி. உங்கள் குழந்தை தன் அம்மாவைப் பற்றி பெருமைகொள்ளும் விதத்தில் இருக்கவேண்டியது அவசியம் என்பதால் பணி வாழ்க்கையில் ஈடுபடவேண்டும்,” என்றார்.
கடந்த ஆண்டு Indian Women Convention & Women Leadership-ன் ஆடை பிராண்ட் ஸ்டார்ட் அப்களுக்கான இளம் பெண் தொழில்முனைவோர் விருது வென்றார் நிதி.
வெற்றிக்கான வரையறை
2014-ம் ஆண்டு AKS 1.6 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது. அதற்கடுத்த ஆண்டு 8.5 கோடி ரூபாய் ஈட்டியது. மூன்றாமாண்டு 23 கோடி ரூபாயாகவும் நான்காமாண்டு 48 ரூபாயாகவும் அதிகரித்தது.
இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டு வரை AKS 75 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் மொத்த வருவாயில் 100 கோடி ரூபாய் ARR என்றும் மொத்த வருவாய் அதிகரிப்பு 150-200 சதவீதம் இருப்பதாகவும் நிதி தெரிவித்தார்.
AKS வளர்ச்சியைக் கண்டு ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தை வாங்கிய மிந்த்ரா நிறுவனம், அதன் பிராண்ட் ஆக்சலரேட்டர் திட்டத்திற்காக AKS உடன் இணைந்துகொண்டது. இந்தத் திட்டம் தொழில்நுட்ப அறிவு, பகுப்பாய்வு, மிந்த்ரா தரப்பிலிருந்து பிராண்டிங் ஆதரவு போன்றவை வாயிலாக வளர்ந்து வரும் உள்ளூர் பிராண்டுகளின் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுவதை நோக்கமாகக் கொண்டதாகும்.
ஃப்ரான்சைஸ் அறிமுகப்படுத்தி உற்பத்தி செயல்பாடுகளை நிறுவனத்திற்குள்ளாகவே அமைக்கவும் AKS திட்டமிட்டுள்ளது. அத்துடன் ஆஃப்லைன் செயல்பாடுகளை அதிகரிக்க நாகாலாந்தில் ஏற்கெனவே இரண்டு ஸ்டோர்களை திறந்துள்ளது.
2019-ம் ஆண்டு மத்தியில் இந்தியா முழுவதும் குறைந்தபட்சம் 10 ஸ்டோர்களைத் திறக்க திட்டமிட்டுள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில் முன்னணி 10 ஆடை பிராண்டுகளில் ஒன்றாக தனது நிறுவனத்தை நிலைநிறுத்த விரும்புகிறார் நிதி.
”வெற்றி என்பது விரிவான விஷயங்களை உள்ளடக்கியது என்கிறார் நிதி. வணிக ரீதியான இலக்குகளை எட்டுவதோ அதிக வளர்ச்சியடைவதோ மட்டுமே வெற்றியல்ல. என்னைப் பொறுத்தவரை வெற்றி என்பது மகிழ்ச்சியும் ஆத்மதிருப்தியும் சேர்ந்ததாகும்,” என்றார்.
”AKS என்னுடைய இரண்டாவது குழந்தை,” என்று அவர் கூறும்போதே இந்நிறுவனம் அவர் வாழ்க்கையில் இரண்டறக் கலந்துள்ளது என்பதை நாம் தெரிந்துகொள்ளமுடியும்.
ஆங்கில கட்டுரையாளர் : அதிரா நாயர் | தமிழில் : ஸ்ரீவித்யா