கோவை தொழில் முனைவோர்களுக்கு ஊக்கம் அளித்த யுவர்ஸ்டோரி தமிழ்நாடு விழா!
வளர்ந்துவரும் சிறு, குறு வணிகங்களுக்கும், ஸ்டார்ட் அப்களுக்கும் பெரும் வெளிச்சமோ, வெகுஜன மக்களின் அங்கீகாரமோ பெரிய அளவில் கிடைப்பதில்லை. எங்கேனும் நடக்கும் அவர்களது விழாக்களை பற்றிய துண்டு செய்தியோடு பத்திரிக்கைகளும் அதன் பங்கை முடித்துக் கொள்கின்றனர். அப்படிப்பட்ட நிலையில், அவர்களுடைய கதைகளை வெளிகொணர்ந்து உலகம் அறிய செய்திடவே ஆரம்பிக்கப்பட்ட யுவர்ஸ்டோரியின் பத்தாண்டு நிறைவில், கதையாளர்களை கொண்டாடுவதற்காக, ஏற்படுத்தபட்டதே ‘தமிழ்நாடு ஸ்டோரி’ விழா... இதன் ஒரு பகுதி 31-ம் தேதி கோவை நகரத்திலும் 1-ம் தேதி மதுரையிலும் நடந்தது.
’தொழிலில் வளர்ச்சி அடைவதற்கான ரகசியம்’ (secret to scale up in 2020) என்ற தலைப்பில் கோவையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் தைரோகேர் வேலுமணி, நேச்சுரல்ஸ் நிறுவனத்தின் சி.கே.குமரவேல், ஆம்பியர் நிறுவனத்தின் ஹேமலதா அண்ணாமாலை, ஜோஹோ நிறுவனத்தின் குப்புலஷ்மி, ஸ்ரீ கிருஷ்ணா இன்ஸ்டிட்யூட் தலைவர் எஸ்.மலர்விழி, மனிதவள மேலாளர் சுஜித் குமார், மற்றும் முதலீட்டாளர் சிவராஜா ராமநாதன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தைரோகேர் வேலுமணி விழாவில் பேசுகையில், 30 ஆண்டுகளுக்கு முன்பு எவரையும் தெரியாமல் மும்பைக்கு ரயில் ஏறினேன். சில நாட்கள் பிளாட்பாரத்தில் கூட தங்கினேன். வேலை, குடும்பம் என்றான பிறகு வேலையை விடலாம் என முடிவெடுத்து தொழில் தொடங்கினேன்.
“என்னைப் பொறுத்தவரை தொழிலில் முக்கியம் விலைதான். விலை சரியாக இருக்கும் பட்சத்தில் வாய்ப்புகள் தேடிவரும். அப்போது அனைவரும் தைராய்ட் சோதனைக்கு 500 வாங்கினார்கள். ஆனால் அதனை நாங்கள் ரூ.100க்கு கொடுத்தோம். மூலப்பொருட்களை அதிக அளவில் வாங்கும் போது எங்களால் குறைந்த விலையில் கொடுக்க முடிந்தது. தவிர செயல்பாடு ரீதியாகவும் பல மாற்றங்களை செய்தோம். அதனால்தான் எங்களால் தொடர்ந்து பெரிய வெற்றி அடைய முடிந்தது.”
சில மாதங்களுக்கு முன்பு என்னுடைய மகள் இந்த பணத்தை வைத்து என்ன செய்யப்போகிறீர்கள் என கேட்டார். சமூக சேவை செய்வேன் என கூறியபோது, நோயாளிகளிடம் வாங்கி என்ன சமூக சேவை எனக் கூறினார். அதனால் மேலும் கட்டணத்தை 60 ரூபாய்க்கு குறைத்தேன். இதன் காரணமாகவும் எங்களின் வருமானம் உயர்ந்தது, என்றார் வேலுமணி.
தொழில்முனைவோர்களுக்கு அடிப்படை என நான் நினைப்பது சிக்கனம்தான். சிக்கனம் இல்லை என்றால் பெரிய வெற்றிய அடைய முடியாது எனக் கூறினார்.
அடுத்து பேசிய நேச்சுரல்ஸ் குமரவேல், அருள் இல்லாதவர்களுக்கு அவ்வுலகம் இல்லை பொருள் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை என்பது போல பொருள் வேண்டும்.
”நீங்கள் உங்களுக்கு மட்டும் பொருள் சேர்க்க வேண்டும் என்றால் வேலைக்குச் செல்லலாம். பலருக்கும் பொருள் சேர்க்க வேண்டும் என்றால் தொழில்முனைவோராகலாம்,” என்றார்.
இங்கு வந்திருக்கும் அனைவரும் பெரிய ரிஸ்க் எடுத்திருக்கிறீர்கள். இது அனைவருக்குமான பாதை கிடையாது. தற்போதைய இந்தியாவின் போராட்ட வீரர்கள் தொழில்முனைவோர்கள் என்று கூறுவேன். இவர்களால்தான் இந்தியாவை மாற்றமுடியும்.
இப்போதைக்கு நான் சலூன் தொழில் செய்து வருகிறேன். இப்போதைக்கு பிரச்சினையில்லை. இந்த தொழில் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் தரமான பணியாளர்கள் தேவை. அதனால் பணியாளர்களை உருவாக்கும் பணியையும் நாங்கள் செய்கிறோம். இதில் எங்களுக்கு பெரிய லாபம் இல்லை. ஆனால் இந்த பிரிவு சிறப்பாக செயல்பட்டால்தான் முக்கிய தொழில் வளர்ச்சியடையும். அதனால் தொழிலின் நீண்டகால வளர்ச்சிக்கு தேவையானவற்றிலும் தொழில்முனைவோர்கள் கவனம் செலுத்த வேண்டும் என கூறினார்.
ஆம்பியர் எலக்ட்ரிக்ஸ் நிறுவனர் ஹேமலதா அண்ணமலை பேசியபோது, கணவர் மற்றும் குழந்தைகளுடன் கோவை வரும் போது எங்களுக்கு யாரையும் தெரியாது. ஆனால் பத்தாண்டுகளுக்கு பிறகு கோவையில் முக்கியமான நிறுவனமாக நாங்கள் மாறி இருக்கிறோம். நம் உழைப்பை தாண்டியும் சில ஆசிர்வாதங்கள் தேவை என நினைக்கிறேன். அதனால்தான் சிறிய நகரத்தில் இருக்கும் என்னால் ரத்தன் டாடாவை சந்தித்து அவருடன் உரையாடி, அவருடைய முதலீட்டை பெற முடிந்தது.
10 ஆண்டுகளுக்கு முன்பு எலெக்ட்ரிக் வாகன தயாரிப்புப் பிரிவில் 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இருந்தார்கள். ஆனால் இப்போது சில நிறுவனங்கள் மட்டுமே இருக்கிறோம். இதில் நாங்கள் லாபம் ஈட்டும் நிறுவனமான மாறி இருக்கிறோம். உற்பத்தித் துறையில் பெண்கள் பணிபுரியம் சூழல் இருக்காது என்னும் நிலைமை இருக்கிறது. ஆனால் எங்களுடைய பணியாளர்கள் எண்ணிக்கையில் 40 சதவீதம் பெண்கள்தான்,” என்றார்.
ஆனால் இதைத்தாண்டியும் வளர்ச்சி அடைய வேண்டும் எனில் பெரிய முதலீடு தேவை. அதனால் நிறுவனத்தின் பங்குகளை விற்க முடிவெடுத்தோம். தவிர ஏற்கெனவே இருக்கும் முதலீட்டாளர்களுக்கும் வெளியேற வாய்ப்பு கொடுத்தாக வேண்டும். தற்போது பெரும்பான்மையான பங்குகள் கிரீவ்ஸ் காட்டன் நிறுவனம் வசம் இருந்தாலும், தலைமைச் செயல் அதிகாரியாக நான் தொடர்கிறேன். முழு சுதந்திரம் எனக்கு இருக்கிறது. வளர்ச்சிக்கு முதலீட்டாளர்களும் அவசியம் என கூறினார்.
மாற்றம் ஃபவுண்டேஷன் சுஜித்குமார், ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கு மனிதவள மேம்பாடு எத்தனை முக்கியம் என பகிர்ந்தார்.
இங்கு பேசிய அனைவரும் வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் எனக் கூறினார்கள். ஆனால் நான் வளர்ந்த பிறகு எப்படியெல்லாம் செலவு செய்யலாம் என்று பேசலாம் என இருக்கிறேன். இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் வேலை பார்த்தாலும் நான் என்.ஜி.ஓ தொடங்குவேன் என்று நினைத்து பார்க்கவில்லை. எனக்கு சூழ்நிலை இவ்வாறாக அமைந்தது.
பள்ளிக்குழந்தைகளுடன் உரையாடுவது எனக்கு பிடித்தமான ஒன்று. சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை அருகே உள்ள கிராமத்துக்கு சென்றிருந்தேன். அங்குள்ள மாணவி, `அண்ணே என்ன படித்தால் எனக்கு உடனே வேலை கிடைக்கும்’ எனக் கேட்டார். சரி நீ எப்படி படிப்பாய்? என கேட்டபிறகு அந்த பெண் கூறியது என்னுடைய வாழ்க்கையை மாற்றியது.
பொதுத்தேர்வில் எவ்வளவு மார்க் வாங்குவேன் எனத் தெரியாது. ஆனால் இதுவரை மூன்று ரிவிஷன் தேர்வுகளில் வாங்கிய குறைந்தபட்ச மதிப்பெண் 1150-க்கு மேல் என்று கூறிய அந்த பெண் மேலும் தொடர்ந்தார். எனக்கு அம்மா இல்லை. அப்பா மட்டுமே, அவரும் குடும்பத்துகாக எதுவும் செய்யவில்லை. காலையில் 3 மணிக்கு எழுந்து ஐந்து மணி வரை படிப்பேன். அதன் பிறகு தம்பி தங்கைக்கு சமைத்து வைத்துவிட்டு, இரண்டு வீடுகளுக்கு பாத்திரம் தேய்க்க சென்றுவிடுவேன்.இதேபோல மாலையிலும் என்று அவர் கூறினார்.
இந்தக் குழந்தைக்கு எதாவது செய்ய வேண்டும் என யோசித்தேன். எனக்கு தெரிந்து ஒரு கல்லூரி தலைவருக்கு போன் செய்து ஒரு இலவச சீட் கிடைக்குமா எனக் கேட்டேன். சிறிது நேரம் யோசித்த அவர் 20 சீட் தருகிறேன் என சொல்லிவிட்டார். இப்போது பொறுப்பு என் மேல். இதனால் மாற்றம் அறக்கட்டளையை தொடங்கி இருக்கிறோம். இங்கு நாங்கள் எந்த பணமும் நன்கொடையாக வாங்குவதில்லை. மாணவர்களை படிக்க வைக்கிறோம்.
இங்கு பேசிய பலரும் மனிதவளம் குறித்து பேசினார்கள். என் அனுபவத்தில் நான் சொல்வது,
“நிறுவன ஊழியர்கள் மீது கவனத்தை செலுத்தி அவர்களை பாராட்டுங்கள், அப்போது உங்களின் தொழிலும், நிறுவனம் தானாகவே வளர்ச்சிப் பாதையில் செல்லும்.”
இதனைத் தொடர்ந்து, யுவர்ஸ்டோரி செய்தி ஆசிரியர் தீப்தி நாயர் கலந்துரையாடல் நிகழ்வை நடத்தினார். அதில் ஜோஹோ கொள்கை பரப்பாளர் குப்புலஷ்மி, ஸ்ரீ கிருஷ்ணா இன்ஸ்டிட்யூட் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் திருமதி. எஸ். மலர்விழி, தைரோகேர் வேலுமணி, நேச்சுரல்ஸ் சிகே குமாரவேல் மற்றும் நேடிவ்லீட் சிவராஜா ஆகியோர் ‘தொழில் வளர்ச்சிக்கு தேவையானவை பற்றிய கலந்துரையாடல் செய்தனர். பங்கேற்பாளர்கள் கேள்விகளுக்கும் பதில் அளித்தனர்.
அடுத்து கோவை மண்ணில் உதித்த சில வெற்றி நிறுவனங்களின் நிறுவனர்களுக்கு யுவர்ஸ்டோரி விருது வழங்கி கவுரவித்தது. ‘Rising Entrepreneur' அதாவது வளர்ந்துவரும் தொழில்முனைவர் விருது; ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் திரு. கிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. ஸ்டார்ட் அப் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு உதவிடும் அமைப்புகளையும் கவுரவித்தது யுவர்ஸ்டோரி. ’Ecosystem Enabler' என்ற அவ்விருது; PSG Step சார்பாக Dr.ருத்ரமூர்த்தி மற்றும் Dr.சுரேஷ் குமார் பெற்றுக்கொண்டனர். Codissia சார்பாக அதன் தலைவர் ராமமூர்த்தி பெற்றுக்கொண்டார். Forge Accelerator சார்பாக சங்கர் வானவராயருக்கு விருது வழங்கப்பட்டது.
கோவையில் கோலாகலமாக நிறைவடைந்த யுவர்ஸ்டோரி ‘Tamil Nadu Story' விழாவை அடுத்து இனி தமிழக தொழில்முனைவோர் கதைகளை அதிகளவில் பதிவிட உள்ளது யுவர்ஸ்டோரி என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.