'Tesla for west; Ola for Rest' - யுவர்ஸ்டோரி TechSparks விழாவில் ஓலா பாவிஷ் அகர்வால்!
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த யுவர்ஸ்டோரி-யின் ஆண்டு விழாவான ‘TechSparks 2023' நிகழ்வு பெங்களுரூவில் இன்று தொடங்கியது.
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த யுவர்ஸ்டோரி-யின் ஆண்டு விழாவான ‘TechSparks 2023' நிகழ்வு பெங்களுரூவில் இன்று தொடங்கியது. 14வது ஆண்டாக நடைபெறும் ‘டெக்ஸ்பார்க்ஸ்’ நிகழ்வில் கலந்து கொள்ள ஸ்டார்ட் அப் உலகில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்கள் வந்திருந்தனர்.
அனைவரையும் வரவேற்கும் விதமாக யுவர்ஸ்டோரி நிறுவனர் ஷ்ரத்தா ஷர்மா பேசினார்.
“யுவர்ஸ்டோரி தொடங்கி இது 15வது ஆண்டு ஆகிறது. கடந்த 18 மாதங்களாக ஸ்டார்ட் அப் உலகில் புதுப்புது வார்த்தைகள் பேசப்பட்டு வருகின்றன. ஃபண்டிங் விண்டர் என்னும் சொல் மிகவும் பிரபலமாகப் பேசபடுகிறது. இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டை போல இந்த ஆண்டும் பலர் வந்திருக்கின்றனர், இன்னும் பல ஆண்டுகளுக்கு டெக்ஸ்பார்க்கை இதேபோல் நடத்த திட்டமிட்டிருக்கிறோம்,” என்றார்.
தற்போது பார்வையாளர்களாக இருப்பவர்கள் மேடைக்கு வந்து உரையாட வேண்டும். ஏற்கெனவே பலர் இதுபோல மேடை ஏறி இருக்கிறார்கள், நீங்களும் வரவேண்டும். இந்த நிகழ்ச்சிக்கு பெங்களூருவில் இருந்து மட்டுமல்லாமல் இந்தியாவின் பல நகரங்களில் இருந்தும் வந்திருக்கும் அனைவரையும் வரவேற்கிறேன், என பேசிய ஷ்ரத்தா ஓலாவின் நிறுவனர் பவிஷ் அகர்வாலை மேடைக்கு அழைத்தார்.
ஓலா பாவிஷ் அகர்வால்
தற்போது ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதி கிடைப்பதில் சிக்கல் இருக்கிறதே எனும் கேள்வியுடன் ஓலா நிறுவனர் பாவிஷ் அகர்வாலுடன் உரையாடலைத் தொடங்கினார் ஷ்ரத்தா. இதற்கு விரிவாக பதில் அளித்தார் பவிஷ்.
“தற்போதைய ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் அதிர்ஷ்டசாலிகள். நீண்ட கால வெற்றியை சுவைக்க வேண்டும் என்றால் இதுதான் சரியான நேரம். இப்படிப்பட்ட சூழ்நிலையை கடக்கும் நிறுவனங்கள் எளிதாக மேலே வருவார்கள். ஃபண்டிங் விண்டர் என்பதெல்லம் ஒரு நரேட்டிவ். தகுதியான நிறுவனங்களுக்கு தொடர்ந்து நிதி கிடைத்து வருகிறது. மேலும் தொழில்முனைவோர்கள். பணத்துக்காக தொழில் தொடங்கவில்லை. தொழில் மேல் இருக்கும் ஆர்வம் காரணமாக வருகிறார்கள். அவர்கள் இந்த சிக்கலை எப்படி கடக்க வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்த சூழ்நிலை இந்திய ஸ்டார்ட் அப் துறைக்கு சாதகமாகவும் ஸ்டார்ட் அப் துறையை பலப்படுத்தும்,” என தெரிவித்தார்.
ஓலாவில் தொடங்கிய பயணம் தற்போது நான்கு நிறுவனங்களை கொண்டிருக்கும் அளவு உயர்ந்துள்ளது. எப்படி இதை சமாளிக்கிறீர்கள் எனும் அடுத்த கேள்வியை கேட்டார் ஷ்ரத்தா.
ஓலாவில் ஆரம்பித்தோம். பின்னர் ஓலா எலெக்ட்ரிக், தற்போது பேட்டரி, மற்றும் ஏஐ துறையில் நுழைந்து, நான்கு நிறுவனங்கள் நடத்திவருகிறோம். எங்களது நிறுவனத்தில் 9-5 பணி என்ற கலாசாரம் கிடையாது. நாங்கள் பெரிய இலக்குகளுக்காக செயல்படுகிறோம். ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு இலக்கு இருக்கிறது. உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமானால்,
“Tesla for west;for Rest என்பதுதான் எங்கள் இலக்கு. இந்த இலக்குக்கு வழக்கமான கலாச்சாரம் வேலைக்காகாது. உதாரணத்துக்கு நம்முடைய தாத்தா தலைமுறையினர் சுதந்திரத்துக்காக போராடினார்கள், அப்பாகள் நம்முடைய உணவு, உடை உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்காகப் போராடினார்கள். தற்போது 30 முதல் 40 வயதுள்ளவர்கள் இந்தியாவின் அடுத்தகட்ட வளார்ச்சிக்காக வேலை செய்ய வேண்டும்,” எனக் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் பாவிஷ் அகர்வால் மனைவியும் இருந்தார். அவரை மேடைக்கு அழைத்த ஷ்ரத்தா அவரிடமும் உரையாடினார்.
பாவிஷ் மனைவி ராஜ் கூறும்போது,
“இப்போது மகிழ்ச்சியாக இருந்தாலும் இந்த பாதை மிகவும் கடினமானது. பாவிஷ்க்கு தேவையான சமயத்தில் நான் உதவுவதும், எனக்குத் தேவையான சமயத்தில் அவருக்கு உதவுவதும் அவசியம். அவருக்கும் உதவ வேண்டும் என்றால் நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை,” என பாவிஷ் மனைவி பேசினார்.
ஓலா எலெக்ட்ரிக் பற்றி மேலும் சொல்லுங்கள் என்று கேட்டதற்கு, தற்போது ஸ்கூட்டர்கள் விற்பனையாகின்றன. அடுத்து பைக் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதனை தொடர்ந்து கார்கள் வெளியாகும் திட்டமும் இருக்கிறது. எங்களுடைய ஸ்கூட்டர் ஆலையில் 3500 பெண்கள் இருக்கிறார்கள்.
”தேவை அதிகரிக்கும்போது பெண்களின் எண்ணிக்கையும் உயரும். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது பொதுவாக இந்தியாவில் வேலை பார்க்கும் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது. இந்தியாவில் பெண்களின் பங்களிப்பை உயர்த்தினால் அது குடும்பங்களுக்கு மட்டுமல்லாமல் நாட்டுக்கும் பெரிய அளவில் பயனுள்ளதாக இருக்கும். அடுத்து வட இந்தியாவில் வாராணாசியில் தொடங்க திட்டம் இருக்கிறது. எப்போது என்பது தெரிவில்லை.”
எப்போது ஓலாவின் ஐபிஓ? ஒவ்வொரு நிறுவனத்துக்கு எவ்வளவு நேரம் ஒதுக்குகிறீர்கள் எனும் கேள்விக்கு,
“ஐபிஓ குறித்து நான் எந்த பதில் சொன்னாலும் அது தவறாக புரிந்துகொள்ளப்படும். ஆனால் ஓலா மற்றும் ஓலா எலெக்ட்ரிக் ஆகியவை அடுத்த ஆண்டு ஐபிஓ வெளியாகும்,” என்றார்.
தற்போது நான்கு நிறுவனங்கள் உள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு கட்டத்தில் இருக்கிறது. ஒவ்வொரு நிறுவனத்திலும் சரியான குழு வழிநடத்துகிறது. எங்கெல்லாம் தேவையோ அங்கு கவனம் செலுத்துகிறேன். ஆனால், தற்போது ஏஐ நிறுவனம் ‘krutrim' மிகவும் புதிய நிறுவனம் அதற்கு அதிக நேரம் தேவைப்படுகிறது.
இந்தியாவில் ஏகப்பட்ட வாய்ப்புகள் இருக்கின்றன. எனர்ஜி, ஏஐ, ஏஐ மூலம் சாப்ட்வேர் துறையை மாற்றுவது எனப் பெரிய பங்களிப்பு செய்ய முடியும். அறிவியல் தொடர்பான கண்டுபிடிப்புகள் 1850 முதல் 1950 வரை மட்டுமே ஆக்டிவாக இருந்தது. அதனை தொடர்ந்து அந்த கண்டுபிடிப்புகளை வைத்து நாம் வளர்ச்சி அடைகிறோம் இனி அடுத்த கட்ட கண்டுபிடுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனக் கூறினார்.
”ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வெற்றி விகிதம் குறித்த கேள்விக்கு, இங்கு வெற்றியை வைத்து மட்டும் அளவிட முடியாது. 100 நிறுவனங்கள் தொடங்கப்பட்டால் 10 நிறுவனங்கள் பெரிய வெற்றி அடையும், ஒரிரு நிறுவனங்கள் மிக மிகப் பெரிய குழுமமாக மாறும். அப்படியானல் முயற்சி செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக வெற்றி பெரும் நிறுவனங்களின் எண்ணிக்கை உயரும். தவிர பலருக்கு வேலை கிடைக்கும். ஒரு நிறுவனம் தோற்றால் கூட அடுத்த நிறுவனத்தை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அதனால் ஸ்டார்ட் அப்-ஐ பொறுத்தவரை முயற்சிதான் முக்கியம்,” எனப் பேசி முடித்தார். பவிஷ்.
அடுத்ததாக ’டெக் 30’ எனும் அடுத்தகட்ட டெக்னால்ஜி நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டன. அப்போது பேசிய பாவிஷ், நான் மிக சிறிய அளவில் இருக்கும்போது இங்கு மேடை ஏறினேன். அதுபோல உங்களுக்கும் இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பெரிய வெற்றி அடைய வாழ்த்துகள் என பவிஷ் வாழ்த்தி விடைபெற்றார்.