Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

‘கடனை அடைக்க உதவியது என் யூடியூப் சேனல்’ - 1 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ்களுடன் 'மிசஸ் அபி'

"எங்க அப்பா ஆசைப்பட்ட மாதிரியான பெண்ணாக என்னை மாற்றியுள்ளது இந்த யூ டியூப். ஆனால், அதை பார்க்க தான் அவர் எங்களோடு இல்லாமல் போய்விட்டார். என் கடனை எல்லாம் அடைத்துவிட்டேன். அடகு வைத்த நகையெல்லாம் மீட்டுவிட்டேன். அப்பா ஸ்தானத்திலிருந்து அவர் செய்ய வேண்டிய செய்முறை, கடமைகளை செய்கிறேன்"

‘கடனை அடைக்க உதவியது என் யூடியூப் சேனல்’ - 1 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ்களுடன் 'மிசஸ் அபி'

Friday June 24, 2022 , 4 min Read

ப்யூஸ் போன டியூப் லைட்டை மீண்டும் எரிய வைக்க முடியுமா? கண்ணாடிப் பாட்டிலை ரெண்டு துண்டாக வெட்டி எடுக்க முடியுமா? பேப்பரைக் கொண்டு தேங்காயை உடைக்க முடியுமா? - இது போன்ற இன்னும் பல 'முடியுமா?' கேள்விகளுக்கு வியக்க வைக்கும் பதில் வைத்திருக்கிறார் உமா மகேஸ்வரி.

இணையத்தாருக்கோ 'மிசஸ் அபி' என்றால் நன்கு பரீட்சயம்.

கடந்த 4 ஆண்டுகளாய் யூடியூப்பில் 'Mrs Abi Time' எனும் சேனலில் வீட்டுப்பொருள்கள் கொண்டு ஆச்சரியமான அறிவியல் எக்ஸ்ப்ரீமென்ட்களை செய்து வீடியோ அப்லோடி, 1 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை தன்வசப்படுத்தியுள்ளார்.

வீடியோ எடிட்டிங், எக்ஸ்ப்ரீமென்ட்ஸ், கேமிரா முன் நிற்பது என எந்தவொரு அனுபவ அறிவுமின்றி, ஒரு புறம் கடன் தொல்லை, மறுபுறம் சுற்றத்தார் எதிர்ப்பு என திரும்பிய திசையெல்லாம் இருந்த முட்டுக்கட்டைகளை தகர்த்து யூடியூப்பராக கெத்தாய் வலம் வரும் அபி எனும் உமா மகேஸ்வரியின் உத்வேகக் கதை இது...

abi

கோயம்புத்துாரைச் சேர்ந்த உமா மகேஸ்வரி, ஐடிஐ படித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். எப்படியாவது முன்னுக்கு வந்துவிட வேண்டுமென்ற நடுத்தர குடும்பத்தார்களுக்கே உரிய வெறியில், தொடர்ந்து பல முயற்சிகளை எடுத்துள்ளார்.

தொலைத்துாரக் கல்வியில் டிகிரி முடித்து, அடுத்தடுத்து பெட்டரான பணியைத் தேடி, முதலீடு செய்த இடத்தில் ஏமாற்றமடைந்து, இறுதியில் சொந்தமாக டீ, காபி, ஸ்நாக்ஸ் கடையை திறந்தார் உமா. கடையும் கல்லா கட்டாமல், கடனைக் கட்ட வைத்தது. என்னடா இது? என வாழ்க்கை எண்ண வைக்கும் தருணத்தில் சிலர் துவண்டு விழுவர், அபி போன்றவர்கள் அதை துவம்சம் செய்யக் கூடியவர்கள். அதற்கு அவர் தேர்ந்தெடுத்த தளம் தான் யூடியூப்.

"எங்க வீட்ல மொத்தம் 3 பொண்ணுங்க. கஷ்டப்படுகிற குடும்பம் தான். அப்பா கூலி வேலைப் பார்த்தாலும், எங்கள எப்படியாச்சும் படிக்க வைத்திட நினைத்தார். பெண்களுக்கு படிப்பு ரொம்ப முக்கியம். யாரையும் நம்பி இல்லாமல், பொண்ணுங்க சாதிக்கணும்னு சொல்லி தான் எங்க அப்பா எங்கள வளர்த்தார்.

குடும்பச் சூழலால் ஐடிஐ படித்துவிட்டு வேலைக்குச் சென்றேன். பணிக்கு சென்ற இடத்தில் தான் என் கணவருடைய அறிமுகம் கிடைத்தது. காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.

வாழ்க்கையில் அடுத்த நிலைமைக்கு சென்று விட வேண்டும் என்கிற வைராக்கியம் எனக்குள் எப்போதும் இருந்தது. அதன் முதல் படியாய் எண்ணி இரண்டு நிறுவனத்தில் முதலீடு செய்து, ஏமாந்து போனேன். அந்த சமயத்தில் தான் டீ, காபி, ஸ்நாக்ஸ் கடையை திறந்தேன். ஆனா, நினைச்ச அளவுக்கு கடை வருமானம் அளிக்கவில்லை.

“ஒவ்வொரு மாதமும் கடை வாடகை, வேலை ஆட்கள் கூலி, மூலப்பொருட்களுக்கான செலவு என மேற்கொண்டு கடனைப் பெருக்கி, பெரியத் தொகையாக சேர்ந்து நின்றது. சாப்பாட்டுக்கே இல்லையென்றாலும் கடனை அடைத்தே ஆக வேண்டிய கட்டாயம். ஏதாவது செய்ய வேண்டும் என்ற யோசனையில் எனக்கு முதலில் தோன்றியது யூடியூப் சேனல் தொடங்குவது தான். ஏன்னா, முதலீடே இல்லாமல் வருமானத்திற்கு வழிக்காட்டுவது அதுமட்டும் தானே...” என்கிறார்.
abi

3 ஆண்டுகளுக்கு முன்பு யூடியூப்பில் சேனல் துவங்குகையில், எல்லோரும் குக்கிங் வீடியோ போட்டுக் கொண்டிருந்தனர். நானும் அதே வழியில் தான் போனேன். பிறகு,

”வீட்டில் பயனற்று கிடக்கும் பொருட்களையே எப்படியெல்லாம் இயங்க வைக்கலாம், தண்ணீர்த் தொட்டி கிளினீங், டூப்ளிகேட் சிசிடிவி, ரேஷன் அரிசியை பட்டை தீட்டுவது போன்ற வீடியோக்களையும், பாட்டில் கட்டிங் போன்ற எக்ஸ்பீரிமென்ட் வீடியோக்களைப் பதிவிட்டேன்.”

நான் அரசுப்பள்ளியில் தான் படித்தேன். எனக்கு பள்ளியில் படிக்கும் போதிருந்தே பாடங்களில் படிக்கும் எக்ஸ்பீரிமென்ட்களை செய்து பார்க்க ஆசை. எங்க ஸ்கூலில் லேப் கிடையாது. அப்போதெல்லாம் ப்ராக்டிக்கல் கிளாஸ் இருக்காது.

ஒருமுறை தனியார் பள்ளிக்கு சென்றிருந்தோம். அப்போது அங்கு லேப்பிலிருந்த பொருட்களையெல்லாம் பார்த்து, அவ்ளோ ஆசையாக இருந்தது. ஸ்கூலில் தான் ப்ராக்டிக்கல் கிடையாது. ஆனா, வீட்டில் எல்லா எலெக்ட்ரிக்கல் வொர்க்கும் நான் தான் பண்ணுவேன்.

அதனால், எக்ஸ்பீரிமென்ட்களை செய்வதையே வீடியோ பதிவிடுவதில் ஆர்வம் அதிகமாக இருந்தது. கடையை நடத்திக் கொண்டே, சேனலுக்கான வேலைகளை மேற்கொள்வேன். வீடியோ எடிட்டிங்கும் அந்த அளவிற்கு தெரியாத நிலையில், யூடியூப்பில் எடிட்டிங் கற்றுக்கொண்டேன்.
abi
சேனல் தொடங்கிய 3 மாதத்தில் மானிடைசேஷனுக்கு தகுதிப் பெற்றது. அடுத்த 1.5 மாதத்தில் யூடியூப்பிலிருந்து ரூ.13,000 பணம் வந்தது. எனக்கு அளவுகடந்த சந்தோஷமாகிருச்சு. ஏன்னா, நான் படித்துவிட்டு வேலைக்கு சென்று வாங்கிய முதல் சம்பளமே ரூ.1,250 தான். வேலைக்குச் சென்று அதிகபட்சமாக ரூ.8,000 வரை தான் சம்பாதித்துள்ளேன். அப்படியிருக்கையில், ரூ.13,000 எனக்கு ரொம்ப பெரியத் தொகையாக இருந்தது.

சரியான வழித்தடத்தை பற்றிக் கொண்டோம் என்ற நம்பிக்கை பிறந்து, வித்தியாசமான கன்டென்ட்களை யோசித்து, இரவு பகலாக எடிட்டிங் வேலைகள் செய்து உழைக்கத் தொடங்கினேன்.

'இது அபி'ஸ் டைரி' என்ற பெயரில் மற்றொரு யூடியூப் சேனல் துவங்கி, குழந்தைகளுக்கான எழுது மேஜை, பென்சில், சாக்பீஸ் எப்படி செய்வது போன்ற சிறுசிறு பொருட்களில் செயல்முறையை விளக்கும் வீடியோக்களை பதிவிடத் தொடங்கினேன். அந்த சேனலும் ரீச்சாகியது.

abi

ஆனால், எதிர்பாராமல் 2 சேனலுமே ஹேக்காகிவிட்டது. அப்போ, ஒரு சேனலில் 1 லட்சம் சப்ஸ்கிரைபர்களும், இன்னொரு சேனலில் 5 லட்சம் சப்ஸ்கிரைபர்களும் இருந்தார்கள். இப்போது சப்ஸ்கிரைபர்ஸ் எண்ணிக்கை எளிதில் கூடுகிறது. 3 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலை வேறு. ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு ஒரு சப்ஸ்கிரைபர் ஏறினாலே சந்தோஷமாக இருக்கும். அப்படி, கொஞ்சம் கொஞ்சமா சப்ஸ்கிரைபர்கள் சேர்ந்த நிலையில் தான் சேனல் ஹேக்காகிவிட்டது.

ஆனால், நான் சோர்வடையவில்லை. எனக்கு எப்படியாச்சும் சேனலை மீட்டு கொண்டு வந்துவிட வேண்டும் என்பது மட்டுமே எண்ணமாக இருந்தது. நிறைய முயற்சிகள் செய்தேன். கடைசியா 'மிசஸ் அபி 2.0' என்ற பெயரில் மூன்றாவதாக ஒரு சேனலை ஓபன் பண்ணேன். என் சப்ஸ்கிரைபர்ஸ் என்னைத் தேடி வந்தாங்க. அதுவே பெரிய நம்பிக்கைக் கொடுத்து, தொடர்ந்து வீடியோ பதிவிட்டேன்.

2 சேனல்களையும் ரெக்கவர் பண்ணி, இப்போது 3 சேனல்களிலும் வெவ்வேறு விதமான கன்டென்ட்களில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறேன். 'மிசஸ் அபி டைம்' சேனல் 1 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை எட்டி விட்டது.

abi
யூடியூப் தளத்தில் நிலைத்திருக்க கன்டென்ட் ரொம்ப முக்கியம். கன்டென்ட் புதுசு புதுசா யோசித்து கொண்டே இருக்க வேண்டும். ஒரு முறை உலகின் காரமான சிப்ஸூகளுள் ஒன்றான 'ஜோலோ சிப்ஸ்' சாப்பிடுவதை வீடியோவாக எடுத்து பதிவிட்டேன். அதன் விளைவாய் வயிற்று குடலில் புண் ஏற்பட்டு, காய்ச்சல் வந்துவிட்டது. காய்ச்சலால் பிபி குறைந்து கீழே விழுந்து தலையில் அடிப்பட்டுவிட்டது. அடிப்பட்ட காயம் ஆறினாலும், அவ்வப்போது தலைவலி வந்து பிரச்னைக் கொடுக்கிறது.

ஆனால், அதற்காக எல்லாம் நான் சோர்வடைய மாட்டேன். ஏனெனில், எங்க அப்பா ஆசைப்பட்ட மாதிரியான பெண்ணாக என்னை மாற்றியுள்ளது இந்த யூடியூப். ஆனால், அதை பார்க்க தான் அவர் எங்களோடு இல்லாமல் போய்விட்டார்.

மாதம் சுமார் ரூ.1,00,000 யூடியூப்பிலிருந்து வருவாயாக கிடைக்கிறது. என் கடனை எல்லாம் அடைத்துவிட்டேன். பிள்ளைகளை நல்ல பள்ளியில் படிக்க வைக்கிறேன். அடகு வைத்த நகையெல்லாம் மீட்டுவிட்டேன். அப்பா ஸ்தானத்திலிருந்து அவர் செய்ய வேண்டிய செய்முறை, கடமைகளை செய்கிறேன். வேறு என்ன வேண்டும்!" என்று அபி பேசி முடிக்கும் வரை பாசிட்டிவ் வைப்சை கடத்திக் கொண்டிருந்தார்.