‘புள்ளிக்கோலத்தில் புது பிசினஸ்’ - மாதம் 1 லட்சம் ஈட்டும் தீபிகா வேல்முருகன்!
வீட்டை அழகாக்கும் புள்ளிக் கோலங்களால் அலங்கரிக்கப்பட்ட தனித்துவமான மரப்பொருட்கள் விற்பனையில், மாதம் ரூ 1,00,000 வருவாய் ஈட்டி வருகிறார் தீபிகா வேல்முருகன்.
"இது எனக்கு வருவாய் ஈட்டித் தரும் தொழில் மட்டுமில்லை, நம்பிக்கையை அள்ளி தரும் நலம்விரும்பி" எனும் தீபிகா, வீட்டை அழகாக்கும் புள்ளிக் கோலங்களால் அலங்கரிக்கப்பட்ட தனித்துவமான மரப்பொருட்கள் விற்பனையில், மாதம் ரூ 1,00,000 வருவாய் ஈட்டி வருகிறார்.
பழமை மற்றும் பாராம்பரியப் பொருட்கள் மீது தீபிகாவிற்கு எப்போதும் தனிக் காதல். அதனாலே, கனவு வீட்டினை கட்டும்போதும், கட்டியப் பிறகும், கலைநயமிக்க பாராம்பரியப் பொருட்களை சேகரித்து வீட்டை அலங்கரிக்கத் தொடங்கியுள்ளார்.
அப்படியாக, ஒருமுறை வீட்டிலிருந்த தொட்டில் கட்டையில் அழகிய ஓவியங்களை வரைந்து, வீட்டை அலங்கரித்துள்ளார். அதன் புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரவே, அதன் கலைநயம் எண்ணற்றோரை ஈர்த்தது.
அதே போல் ஒரு தொட்டில் கட்டையை விற்கச் சொல்லி பலரும் கோரிக்கை வைத்தனர். அதுநாள் வரை அவரது பொழுதுபோக்கான பெயிண்டிங், அவரை தொழில் முனைவராக்கும் என்று தீபிகா எண்ணவில்லை. இன்று, அவரது பொழுதுபோக்கு மாதம் ரூ.1 லட்சம் வருவாய் ஈட்டித் தரும் தொழிலாக மாறியுள்ளது.
2019ம் ஆண்டு அவரது 'ஹோம் 2 செரிஷ்' (Home2cherish) என்ற பிராண்டின்கீழ் பழைமையை உயிர்ப்பிக்கும் வகையிலான பூஜை மற்றும் வீட்டறைகளை அலங்கரிக்கும் மரப்பொருள்களை விற்கத் தொடங்கினார் தீபிகா வேல்முருகன்.
சொந்த ஊர் கோயம்புத்துார். படித்தது எல்லாம் அங்கு தான். காஸ்டியூம் டிசைனிங்கில் பட்டப்படிப்பு முடித்து, தனியார் நிறுவனத்திற்காக டீ-சர்ட்களின் முன்புறம் டிசைனிங் செய்து அளித்து வந்தேன். திருமணத்திற்கு பிறகு திருச்சி ஸ்ரீரங்கத்தில் செட்டிலாகும் சூழல் நேரிட்டது.
திருமணம், இரு குழந்தைகள், அவர்களை கவனித்துக் கொள்ளுதல் என வாழ்க்கை ஒரு வட்டத்துக்குள் சுருங்கியது. ஆனால், கிடைக்கும் நேரங்களில் எனது பொழுதுபோக்கான பெயின்டிங்கை விடாமல் மேற்கொண்டு வந்தேன். மரப்பலகைகளிலும், மரப்பொருட்களிலும் வண்ணங்களைத் தீட்டி, வரைந்தேன். ஆனால், எனது பொழுதுபோக்கே என்னை தொழில் முனைவராக்கியது. இருந்தாலும், நான் இதை தொழிலாக எண்ணவில்லை. என்னுடைய பேஷனை தொடர்ச்சியாக மேற்கொள்ள எனக்குக் கிடைத்த வாய்ப்பாகவே பார்க்கிறேன்," என்று கூறித் தொழில் மீதுள்ள சிநேகத்தை வெளிப்படுத்தினார் தீபிகா.
தீபிகாவின் கைவண்ணம், அவரது கற்பனைக்கு உயிரூட்டும் ஒரு தச்சர், மற்றும் அவரது கணவரின் உறுதுணை ஆகியவற்றை மட்டுமே நம்பி தொழிலைத் தொடங்கியுள்ளார். தொழில் துவங்கிய தொடக்கத்தில் ஒன்று, இரண்டு ஆர்டர்களே கிடைத்துள்ளது. நாட்கள் செல்ல அவரது கிரியேட்டிவ் திறனும் அதிகரித்து, புதியப் புதிய தயாரிப்புகளை ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்தி கொண்டே வந்துள்ளார். அதிலொன்று தான் கோலப்படிகள்.
வீட்டு வாசலில் வைத்து அகல்விளக்கு ஏற்றுவதற்கு தகுந்தவாறு மரப்படிகளை வடிவமைத்து, அதில் புள்ளிக் கோலங்களை வரைந்து கூடுதல் அழக்கூட்டி கோலப்படிகளை விற்பனை செய்யத் துவங்கினார். தீபிகாவின் சுயப்படைப்பாற்றலால் உருவாகிய கோலப்படிகளே அவருக்கு மக்கள் மத்தியில் நன்வரவேற்பையும், அங்கீகாரத்தையும் பெற்றுத்தந்தது. அவரது பெஸ்ட் செல்லிங் தயாரிப்புகளுள் ஒன்றாகவும் மாறியது கோலப்படிகள்.
"எனக்கு தெரிந்து நான் 3ம் வகுப்பு படிக்கும் போதிருந்து புள்ளிக்கோலங்களை வரைந்து வருகிறேன். புள்ளிக் கோலம் வரைவதில் அம்மா பயங்கர எக்ஸ்பெர்ட். சின்ன வயதில் அவங்க வாசலில் கோலம் போடும் போது, பக்கத்திலே நான் அதைப் பார்த்து கோலமிடுவேன். முதன் முறையாக கார்த்திகைத் தீபத்திற்காக, வாசலில் அகல்விளக்கு வைப்பதற்கு ஏற்றவாறு மரப்படிகளை வடிவமைத்து தருமாறு தச்சரிடம் கூறினேன். எதிர்பார்த்தபடி மரப்படிகளை வடிவமைத்து கொடுத்தார். அதில், புள்ளிக்கோலத்தை வரைந்து வாசற்படியில் வைத்து அகல்விளக்கேற்றினேன். இன்ஸ்டாகிராமில் கோலப்படிக்கு நல்ல ரீச் கிடைத்தது. அகல்விளக்குகளை ஏற்றுவதற்காகவும், பூஜை அறையில் சாமி சிற்பங்களை தாங்கி நிற்கும் படிகளாகவும் கோலப்படிகளை மக்கள் பயன்படுத்துகின்றனர்.
நமது கலாச்சார அடையாளங்களுள் ஒன்றாக புள்ளிக் கோலங்கள் விளங்குவதால், இந்த டிசைன் மக்களை எளிதில் சென்றடைந்தது. முன்பெல்லாம், வாசலில் மாட விளக்குகள் அழகாய் காட்சியளிக்கும். இன்று, அப்பழக்கமே அழிந்து போனது. அப்பழக்கத்தை மீட்டெடுக்கும் வகையில் மரத்திலாளான வால்ஷெல்ஃப்களை தயாரிக்கலாம் என்று தோன்றியது. இப்படி, ஒவ்வொரு சிறுசிறு சம்பவங்களும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளும் புது தயாரிப்புகளை உருவாக்குவதற்கான உந்துதலாக இருக்கிறது.
”ஒரு கஸ்டமர் பொன்னியின் செல்வன் நாவலின் கதாபாத்திரங்களை மினி கதவில் வரைந்து தருமாறு கூறினார். அதன்பிறகு, மினி கதவில் விநாயகர், அஷ்ட லெட்சுமி, அரசப் பெண்களின் ஓவியங்களை வரைந்து கொடுத்தேன். உண்மையில், மக்கள் பழமையை விரும்புகின்றனர். பராம்பரியத்தை மாடர்ன் உலகுக்கு ஏற்றவாறு மக்களிடையே கொண்டு செல்வதில் என்னால் சிறுபங்காற்ற முடிகிறது என்பதில் பெரும் மகிழ்ச்சி," என்று ஆனந்தமாய் பகிர்ந்தார்.
ஒரே ஒரு தயாரிப்புடன் துவங்கிய 'ஹோம் 2 செரீஷ்' பிராண்டின்கீழ் இன்று கோலப்படிகள், தொட்டில் கட்டை, சுவர்அலங்காரங்கள், மினி கதவுகள், பல்லாங்குழி, மனைப் பலகை என 50 வகையான தயாரிப்புகள் இருக்கின்றன. ரூ.800ல் தொடங்கி ரூ.30,000 வரை மதிப்பிலான தயாரிப்புகளை இந்தியா முழுவதும் விற்பனை செய்கிறார். கோலப்படிகளுக்கு நாளுக்கு நாள் டிமாண்ட் அதிகரித்து, வெளிநாடுகளையும் சென்றடையத் தொடங்கியது.
"பொதுவாக ஒவ்வொரு ஆர்டரும் முடிக்க 45 நாட்கள் அவகாசம் எடுத்துக் கொள்வேன். ஏனெனில் ஆர்டர் எடுத்த பிறகே, அதற்கான வேலைகள் துவங்கும். தச்சரிடமிருந்து மரச்சாமான் பெற்றபின், அதில் கோலமிடுதல், ஓவியங்களை வரைதல் வேலைகளை மேற்கொள்ளத் துவங்குவேன்.
சிறு வயதிலிருந்தே புள்ளிக்கோலமும், பெயிண்டிங்கிலும் ஈடுப்பட்டு வருகிறேன். அதனால், கோலமாவில் கோலம் போடுவதற்கும், பெயிண்டில் வரைவதற்கும் பெரிய சவால்களை சந்திக்கவில்லை. வொர்க் முடிந்தவுடன் வார்னிஷ் செய்து, இறுதி பரிசோதனைக்கு பிறகே கஸ்டமர்களுக்கு அனுப்புவேன். அதுவரை, எனது கஸ்டமர்களும் பொறுமையாக காத்திருப்பார்கள்.
மாமரம், தேக்கு மரம், ரப்பர் மரக்கட்டைகளையே பயன்படுத்துகிறோம். ஒவ்வொரு வாடிக்கையாளரும் பொருட்களை பெற்றுக் கொண்ட பின் நல்லாயிருக்குனு சொல்லமாட்டாங்க, நல்லாயிருமானு தான் சொல்வாங்க. அதனால், மரக்கட்டைகளின் தரத்தில் சமரசமே செய்து கொள்ள மாட்டேன். எனது தயாரிப்புகளுக்கு லைஃப் டைம் கேரண்டி உண்டு.
”இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்கும் தயாரிப்புகளை அனுப்பி வருகிறேன். ஹைதராபாத் மற்றும் பெங்களூர் மக்கள் அதிகப்படியாக இதை விரும்பி, ஆர்டர் செய்கின்றனர். தவிர, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், நார்வே, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, நியூசிலாந்து, தென்ஆப்ரிக்கா ஆகிய நாடுகளுக்கும் தயாரிப்புகளை அனுப்பி வைத்துள்ளேன். இதில், மாமியார்களுக்கு பரிசாக வழங்க அதிகமான பெண்கள் ஆர்டர் செய்கின்றனர். மாதத்திற்கு 35 ஆர்டர்கள் என ரூ.1,00,000 வருவாய் ஈட்டுகிறேன். ஆனால், இது எனக்கு வருவாய் ஈட்டிதரும் தொழில் மட்டுமில்லை, நம்பிக்கையை அள்ளி தரும் நலம்விரும்பி." என்று பெருமையுடன் கூறிமுடித்தார் தீபிகா.
இன்ஸ்டாகிராம் பக்கம் :