'2070-க்குள் பூஜ்ஜியம் கரியமில மாசு' - ஐநா மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!
2030-க்குள் கரியமில வாயு வெளியேற்றத்தையும் 1 பில்லியன் டன் அளவு குறைக்கவும் திட்டம்!
கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் COP26 உச்சி மாநாட்டின் போது பிரதமர் மோடி பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். குறிப்பாக காலநிலை மாற்றம் குறித்த அவரின் பேச்சு பேசுபொருளாகி உள்ளது.
"காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இந்தியா கடுமையாக போராடி வருகிறது. இந்தியாவின் முயற்சிக்கான பலன்கள் விரைவில் தெரியவரும். இந்தியா தனது அனைத்து கொள்கைகளிலும் காலநிலை மாற்றத்தை மையக் கருத்தாக கொண்டு செயல்பட்டு வருகிறது.”
குறிப்பாக, பாரிஸ் ஒப்பந்த வாக்குறுதிகளின்படி, செயல்பட்ட ஒரே பெரிய நாடு இந்தியா மட்டுமே என்பதை உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. இதுவரை அனைத்து காலநிலை நிதி வாக்குறுதிகளும் வெறுமையானவை, வளர்ந்த நாடுகள் 1 டிரில்லியன் டாலர் காலநிலை நிதியை விரைவில் உறுதி செய்ய வேண்டும், என்ற பிரதமர் மோடி, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள 5 வாக்குறுதிகளை சபையில் அளித்தார்.
அதன்படி,
“2030-க்குள் 500 ஜிகாவாட் அளவிலான புகைபடிம எரிபொருள் அல்லாத வழிகளில் மின்சார உற்பத்தித் திறன் பெருக்கப்படும். அதே 2030-க்குள் 50 சதவீத மின்சாரத் தேவையை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் இந்தியா பெரும். மேலும், 2030ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை இந்தியா 1 பில்லியன் டன் அளவு குறைக்கும். இப்போதிருந்து அதற்கான நடவடிக்கைகள் தொடங்கும். இந்தியா கார்பன் தீவிரத்தை 45 சதவீதம் குறைக்கும். 2070ஆம் ஆண்டுக்குள் பூஜ்ஜ்யம் கரியமில வாயு மாசு என்ற இலக்கை இந்தியா அடையும். இந்த ஐந்து அம்சங்களும் காலநிலை நடவடிக்கைக்கு இந்தியாவின் முன்னோடியில்லாத பங்களிப்பாக இருக்கும்.,” என்றார்.
உலகளாவிய காலநிலை விவாதத்தில் தணிப்புக்கு கிடைத்த முக்கியத்துவத்தை தழுவல் பெறவில்லை. பருவநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் வளரும் நாடுகளுக்கு இது அநீதி. இந்தியாவைப் போலவே, பெரும்பாலான வளரும் நாடுகளுக்கு விவசாயத் துறைக்கு பருவநிலை பெரும் சவாலாக உள்ளது.
குடிநீர் ஆதாரங்கள் முதல் மலிவு விலை வீடுகள் வரை அனைத்தும் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக மீள்தன்மை கொண்டதாக மாற்றப்பட வேண்டும். அடுத்தத் தலைமுறையினர் மத்தியில் இந்தப் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம்.
காலநிலை மாற்றத்தில் வாழ்க்கை முறை மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒரு உலகத்திற்கான முக்கிய அடிப்படையாக மாறக்கூடிய காலநிலையின் சூழலில் ஒரு வார்த்தை இயக்கத்தை நான் பரிந்துரைக்க விரும்புகிறேன். இந்த வார்த்தைச் சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை. நாம் அனைவரும் ஒரு கூட்டுப் பங்காளியாக ஒன்றிணைந்து, 'சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறையை' ஒரு இயக்கமாக முன்னோக்கி எடுத்துச் செல்வது அவசியம். சுற்றுச்சூழல் உணர்வுள்ள வாழ்க்கை முறைக்கான வெகுஜன இயக்கமாக இது மாறலாம்.
மீன்பிடித்தல், விவசாயம், ஆரோக்கியம், உணவுத் தேர்வுகள், பேக்கேஜிங், சுற்றுலா, ஆடை, நீர் மேலாண்மை மற்றும் எரிசக்தி போன்ற பல்வேறு துறைகளில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய இலக்குகளை அடைய இந்த இயக்கம் உதவும்.
”வளர்ந்த நாடுகள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை சீக்கிரம் காலநிலை நிதியாகக் கிடைக்கச் செய்யும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது. காலநிலை தணிப்பு முன்னேற்றத்தை நாம் கண்காணிக்கும் போது, காலநிலை நிதியையும் நாம் கண்காணிக்க வேண்டும்," என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
தொடர்ந்தவர், இந்தியாவும் மற்ற வளரும் நாடுகளின் வலியைப் புரிந்துகொண்டு பகிர்ந்து கொள்கிறது மற்றும் அவர்களின் எதிர்பார்ப்புகளைப் பற்றி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. பல வளரும் நாடுகளுக்கு பருவநிலை மாற்றம் அவர்களுக்கு முன்னால் இருக்கும் மிகப் பெரிய நெருக்கடியாகும், இது அவர்களின் இருப்பையே அச்சுறுத்துகிறது. இன்று உலகைக் காப்பாற்ற நாம் பெரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இது காலத்தின் தேவை, என்றும் பேசினார்.