'100 மில்லியன் பயனாளிகள்' - மைல்கல்லை எட்டியது Zoho!
சென்னையை தலைமையமாகக் கொண்ட சர்வதேச தொழில்நுட்ப நிறுவனமான ஜோஹோ, தனது 55 வர்த்தக சேவைகளுக்கு 100 மில்லியன் பயனாளிகளை கடந்துள்ளதாக அறிவித்துள்ளது.
சென்னையை தலைமையமாகக் கொண்ட சர்வதேச தொழில்நுட்ப நிறுவனமான ஜோஹோ, தனது 55 வர்த்தக சேவைகளுக்கு 100 மில்லியன் பயனாளிகளை கடந்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த மைல்கல்லை அடையும் முதல் சுயநிதி சாஸ் நிறுவனமாக ஜோஹோ விளங்குகிறது.
கடந்த ஆண்டு இந்நிறுவனம் ஆண்டு வருவாயாக ஒரு பில்லியன் டாலரை எட்டிய நிலையில் இந்த வளர்ச்சியை பெற்றுள்ளது.
நீடித்த வளர்ச்சியில் கவனம் செலுத்தும் நேரத்தில் அணுக தக்க தொழில்நுட்பத்தை சீராக வழங்கி வரும் ஜோஹோ 2008ல் ஒரு மில்லியன் பயனாளிகளை எட்டிய நிலையில் தற்போது 100 மில்லியன் பயனாளிகளை எட்டியுள்ளதாக இது தொடர்பான நிறுவன செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. இதில் 50 மில்லியன் பயனாளிகள் கடந்த ஐந்தாண்டுகளில் இணைந்துள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
150க்கும் மேற்பட்ட நாடுகளில் ஏழு லட்சத்திற்கும் மேலான வர்த்தகங்களுக்கு நிறுவனம் தொழில்நுட்ப சேவை அளித்து வருகிறது.
“தங்கள் வர்த்தகம் மூலம் எங்கள் மீது நம்பிக்கை வைத்து 100 மில்லியன் பயனாளிகளை அடைய வைத்த வாடிக்கையாளர்களுக்கு நன்றி. இது எந்த ஒரு நிறுவனத்திற்கும் முக்கிய மைல்கல்லாகும். அதிலும் குறிப்பாக சுயநிதியில் இயங்கும் நிறுவனத்திற்கு இன்னும் இனிப்பானதாகும்,” என்று ஜோஹோ இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.
அடுத்த பத்தாண்டுகளுக்கான புதுமையாக திட்டங்களை நிறுவனம் கொண்டிருப்பதாகவும், உலகம் முழுவதும் பல கோடி பயனாளிகளுக்கு சேவை அளிக்க ஆழ் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அடுத்த எட்டு வாரங்களில் ஜோஹோ தனது ஆண்டு மாநாடான ஜோஹோலிக்சை 16 நாடுகளில் நடத்த உள்ளது. இந்தியாவில் பெங்களூருவில் அக்டோபர் 10, 11 தேதிகளில் இந்த மாநாடு நடைபெறுகிறது.
Edited by Induja Raghunathan