Freshworks மீது Zoho அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு!
பிரெஷ்வொர்க்ஸ் நிறுவனர்கள், வர்த்தகத் தகவல்கள், வாடிக்கையாளர்கள் விவரங்கள் உள்ளிட்டவற்றை முறையற்று பயன்படுத்தியதாக ஜோஹோ தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கிளவுட் அடிப்படையில் மென்பொருளை ஒரு சேவையாக வழங்கி வரும் நிறுவனமான 'ஜோஹோ ' (Zoho), 'பிரெஷ்வொர்க்ஸ்' Freshworks மற்றும் அதன் நிறுவனர்கள் கிரிஷ் மாத்ருபூதம், ஷான் கிருஷ்ணசாமி, (இருவருமே முன்னாள் ஜோஹோ ஊழியர்கள்), மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா வடக்கு மாவட்ட நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த மனுவின் நகல் யுவர்ஸ்டோரியிடம் இருக்கிறது. மனுதாரரான ஜோஹோ கார்ப், பிரெஷ்வொர்க்ஸ் நிறுவனத்தை துவக்குவதற்கு முன் அதன் நிறுவனர்கள் கிரீஷ் மற்றும் ஷான் கிருஷ்ணசாமி, 9 ஆண்டுகள் ஜோஹோவில் பணியாற்றினர் மற்றும் ஜோஹோ சேவைகள், நிதி அம்சங்கள், விலை மற்றும் வாடிக்கையாளர் தகவல்கள் ஆகியவற்றை அறிந்திருந்தனர். ஜோஹோ ஊழியர்கள் உருவாக்கம், ஜோஹோவின் போட்டி வர்த்தகத் தகவல்களை அறிந்திருந்தனர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பிரெஷ்வொர்க்சை துவக்க வெளியேறிய பிறகு, கிரீஷ் மாத்ருபூதம், பிரெஷ்வொர்க்ஸ் துவக்க முதலீடை கோரும் முயற்சியில், ஜோஹோவின் ரகசியத் தகவல்களை சேர்த்திருந்தார், ஜோஹோவில் பணியாற்றிய அனுபவத்தை பயன்படுத்தினார் மற்றும் தனது புதிய ஸ்டார்ட் அப் ஜோஹோ போலவே செயல்படும் என தெரிவித்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
"தகவல் மற்றும் நம்பிக்கையில், கிரீஷ், ஷான் கிருஷ்ணசாமி; ஜோஹோவின் செய்முறை (நோ ஹவ்), சேவை உருவாக்கம், சந்தைத் தகவல்கள் ஆகியவற்றை மேற்கொண்டு, பிரெஷ்வொர்க்சில் பயன்படுத்தினர். ஜோஹோவில் இருந்த போது, ஜோஹோவின் ஐடி நிர்வாக மென்பொருளான, மேனேஜ் இஞ்சினின் பிராடக்ட் மேனேஜ்மண்டின் துணைத்தலைவராக கிரீஷ் மாத்ருபூதம் இருந்தார். இந்தப் பொறுப்பில், மேனேஜ் இஞ்சினின் வாடிக்கையாளர் தலைவராகவும் இருந்தார்.”
‘‘வாடிக்கையாளர்களுக்கு செயல்திறன் வாய்ந்த ஆதரவை வழங்க, ஜோஹோவுக்கு (மற்ற இதே போன்ற மத்திய அளவு நிறுவனங்களுக்கு), சேவையில் என்ன எல்லாம் தேவை என்பது தொடர்பான பிரத்யேகமான, பொதுவெளியில் இல்லாத தகவல்களை இதன் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது,” என்றும் ஜோஹோ குற்றம் சாட்டியுள்ளது.
ஜோஹோவின் வர்த்தக ரகசியங்கள், ரகசியமான வர்த்தகத் தகவல்கள், பொதுவெளியில் இல்லாதத் தகவல்கள் (நிறுவன நிதி அம்சங்கள், ஊதியம், ஆய்வு, மேம்பாடு, உற்பத்தி மற்றும் மார்க்கெட்டிங் தொடர்பானவை), ஆகியவற்றை, ஜோஹோவில் பணியில் இருக்கும் போது மற்றும் பணியில் இருந்து விலகிய பிறகு, ரகசியமாக வைத்திருப்பதற்கான காப்பு ஒப்பந்ததில் ஊழியர்கள் கையெழுத்திட வேண்டும். ஊழியர்கள் ரகசியம் காக்க வேண்டிய தன்மை, தொழில்நுட்ப விவரங்கள், சேவை உருவாக்க வரைபடம், மார்க்கெட்டிங் திட்டம், வாடிக்கையாளர் பட்டியல், வாய்ப்புள்ள வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட அனைத்து ரகசிய வர்த்தகத் தகவல்களுக்கும் பொருந்தும்” என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜோஹோ இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு மற்றும் பிரெஷ்வொர்க்ஸ் இணை நிறுவனர் கிரீஷ் மாத்ருபூதம் இருவரும், அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் வசிக்கின்றனர்.
ஜோஹோவில் 6,000 பேர் பணியாற்றுகின்றனர். சென்னையில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் தென்காசி பண்ணையில் இருந்து உணவு வழங்குகிறது. கிரீஷ் கிளவுட் கம்ப்யூட்டிங்கில் 20 ஆண்டு அனுபவம் பெற்றுள்ளார். ஜெண்டிஸ்க், சேல்ஸ்போர்ஸ் ஆகியவற்றுக்கு போட்டியாக விளங்குகின்றனர்.
"இந்த குற்றச்சாட்டுகளை பிரெஷ்வொர்க்ஸ் தீவிரமாக எடுத்துக் கொள்கிறது. இதற்கு பதில் அளிக்கவும் தீவிரமாக உள்ளோம். இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் வழங்க வழக்கறிஞரை அமர்த்தும் ஆலோசனையில் உள்ளோம்,” என்று பிரெஷ்வொர்க்ஸ் இணை நிறுவனர் கிரீஷ் மாத்ருபூதம், யுவர்ஸ்டோரிக்கு இ-மெயிலில் தெரிவித்துள்ளார்.
"ஜோஹோவுடன் போட்டியிட, ஜோஹோவின் ரகசிய மற்றும் போட்டித்தன்மை மிக்க வர்த்தகத் தகவல்களை முறையற்று பயன்படுத்தும் செயலை பிரெஷ்வொர்க்ஸ் தொடர்ந்தது. சந்தை சூழல், விலை, வர்த்தகச் சேவைகளுக்கான ஜோஹோவின் வர்த்தக திட்டம் ஆகியவற்றை ஜோஹோ ஊழியர்கள் அறிவார்கள் எனும் புரிதலுடன், ஜோஹோவின் ரகசியத் தகவல்களை அணுக, பிரெஷ்வொர்க்ஸ், நூற்றுக்கும் மேற்பட்ட ஜோஹோ ஊழியர்களை தனது நிறுவனத்தில் பணிக்கு சேர்த்துக்கொண்டது என்றும் ஜோஹோ தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
“தகவல் மற்றும் நம்பிக்கையில், பிரெஷ்வொர்க்ஸ், ஜோஹோவின் வாடிக்கையாளர் தகவல்களை முறையற்று அணுகியது. பிப்ரவரி 24 2020ல் கூட, பிரெஷ்வொர்க்ஸ், ஜோஹோ வாடிக்கையாளர் தகவல் அடிப்படையில் ஜோஹோ வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டுள்ளது. இவற்றில் சிலவற்றில், ஜோஹோ கிளவுட் சேவையை அணுகுவதற்காக வாடிக்கையாளர்கள் சமர்பித்த இ-மெயில் மூலம் பிரெஷ்வொர்க்ஸ், ஜோஹோ வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டுள்ளது.
ஜோஹோ வாடிக்கையாளர்கள் பட்டியல், விலை மற்றும் வாடிக்கையாளர்கள் தேவை உள்ளிட்ட விவரங்களைக் கொண்ட ஜோஹோவின் ரகசியமான சிஆர்.எம் தரவுகளை முறையற்று அணுகியதன் மூலம் மட்டும், இந்த இமெயில் முகவரிகளை பிரெஷ்வொர்க்ஸ் பெற்றிருக்க ஒரே வழி,” என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால், இரு நிறுவனர்களுமே கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர். ஜோஹோ (அப்போது அட்வெண்நெட்), 1996ல் ஸ்ரீதர் வேம்புவால் துவக்கப்பட்டு, மென்பொருள் சேவையில் சொந்த நிதியில் யூனிகார்னாக வளர்ந்துள்ளது.
கிரீஷ், 2010ல் பிரெஷ்வொர்க்ஸ் நிறுவனத்தைத் துவக்கினார். நிறுவனம், 399 டாலர் அளவு நிதி திரட்டியுள்ளது. 3.5 பில்லியன் டாலர் சந்தை மதிப்பு கொண்டதாக கருதப்படுகிறது. பிரெஷ்வொர்க்ஸ், 35,000 கட்டண வாடிக்கையாளர்கள், 2,50,000 வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. ஜோஹோ தனது வருவாய் அம்சங்களை வெளியிடுவதில்லை.
இரு நிறுவனங்களும், சிறு மற்றும் மத்திய தொழில் நிறுவனங்களை மையமாகக் கொண்ட சேவைகளை அறிமுகம் செய்து, இந்த பிரிவில் கவனம் செலுத்த துவங்கியதால் போட்டி உண்டானதாக கூறப்படுகிறது. இந்த மோதல் இந்திய மென்பொருள் சேவை துறைக்கு நல்லது அல்ல என்றும், இரு நிறுவனங்களுமே தங்களுக்கான சந்தை பங்கை கொண்டுள்ளதாகவும் துறை நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
ஸ்ரீதர் வேம்பு மற்றும் கிரீஷ் இருவருமே பரஸ்பரம் மதிப்புடன் நடந்து கொண்டாலும், இந்திய யூனிகார்ன் நிறுவனங்களின் முதல் மோதலாக இது உருவெடுத்துள்ளது.
ஆங்கிலத்தில்: விஷால் கிருஷ்ணா | தமிழில்: சைபர்சிம்மன்