உபெர் ஈட்ஸ் நிறுவனத்தை ஜோமாட்டோ கையகப்படுத்தியதன் காரணம் என்ன?
Uber Eats நிறுவனத்தின் இந்திய செயல்பாடுகளை Zomato எத்தனை டாலருக்கு கைப்பற்றியது தெரியுமா...
ஆன்லைன் உணவு டெலிவரி சேவையான ஜோமேட்டோ (Zomato) உபெர் ஈட்ஸ் நிறுவனத்தின் இந்திய செயல்பாடுகளை 350 மில்லியன் டாலருக்கு கையகப்படுத்தியுள்ளது.
பங்கு பரிவர்த்தனை அடிப்படையிலான இந்த கையக்கப்படுத்தலின் படி, உபெர் ஈட்ஸ் (Uber Eats) நிறுவனத்தின் தாய் நிறுவனமான அமெரிக்க இணைய கால் டாக்சி நிறுவனமான உபெர், ஜோமேட்டோ நிறுவனத்தில் 10 சதவீத பங்குகளை பெற்றிருக்கும்.
இந்த கையகப்படுத்தலை அடுத்து, இந்தியாவில் உபெர் ஈட்ஸ் தனிப்பிரிவாக செயல்படாது. அதன் வாடிக்கையாளர்கள் ஜோமேட்டோ செயலிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
உபெர் ஈட்ஸ் நிறுவன ஊழியர்களை ஜோமேட்டோ ஏற்றுக் கொள்ளாது என்றும் இந்த ஊழியர்கள் உபெரின் மற்ற பிரிவுகளுக்கு மாற்றப்படலாம் அல்லது நீக்கப்படலாம் என இந்த ஒப்பந்தம் குறித்து அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த ஒப்பந்தம் குறித்து இரு நிறுவனங்களும் நேரடியாக கருத்து தெரிவிக்கவில்லை என செய்திkaL தெரிவிக்கிறது. இந்த ஒப்பந்தம் தொடர்பான முயற்சி கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்று வந்ததாக தெரிகிறது.
’இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. உபெர் ஈட்ஸ் பயனாளிகள், ஜோமேட்டோ செயலிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்’ என ஒப்பந்தம் குறித்து அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
“ஜோமேட்டோ நிறுவனத்தை பொருத்தவரை, மூன்றாவது இடத்தில் உள்ள உபெர் ஈட்ஸ் நிறுவனத்தை வாங்குவது, தீவிர போட்டி மிக்க உணவு டெலிவரி சந்தையில் ஸ்விக்கியை முந்த உதவும்,” என்று இந்த ஒப்பந்தம் குறித்து நன்கறிந்த இன்னொருவர் கூறியுள்ளார்.
தமிழகம், மத்திய பிரதேசம் மற்றும் கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் உபெர் ஈட்ஸ் நல்ல சந்தை பங்கை பெற்றிருந்ததாக பெயர் குறிப்பிட விரும்பாத உபெர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
அலிபாபாவின் துணை நிறுவனமான ஆண்ட் பைனான்சியல் தலைமையில் நடைபெற்ற நிதி திரட்டும் சுற்று மூலம் அண்மையில் ஜோமேட்டோ 3 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் 150 மில்லியன் டாலர் நிதி திரட்டிய பின்னணியில் இந்த கையகப்படுத்தல் நிகழ்ந்துள்ளது.
உபெர் நிறுவனம் கடந்த ஆண்டு பொது பங்குகளை வெளியிட்ட பிறகு, எதிர்பார்த்த வளர்ச்சியை பெறாத நிலையில், நஷ்டம் அளிக்கும் பிரிவுகளை மூடி வருகிறது. 2019ல் டிசம்பர் வரையான ஐந்து மாதங்களில் உபெர் நிறுவனத்தின் உணவு டெலிவரி பிரிவு ரூ.2,197 கோடி நஷ்டம் அடைந்ததாக தெரிகிறது.
உபெர் ஈட்ஸ் நிறுவனத்தை முதலில் ஸ்விக்கி கையகப்படுத்த முயல்வதாக செய்தி வெளியானது. எனினும் இந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. 2017ல் உபெர் உணவு சேவை பிரிவில் நுழைந்தது.
தொகுப்பு: சைபர்சிம்மன்