வீட்டில் சமைத்து மாதம் ஆயிரங்களில் ஈட்டும் வாய்ப்பு - வருகிறது ‘Zomato Everyday'
வீட்டில் சமைக்கப்பட்ட உணவை ஜொமேட்டோவில் ஆர்டர் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஹோட்டலில் சாப்பிடவேண்டும் என்றால் வீட்டை விட்டு வெளியே செல்லவேண்டிய காலம் மலையேறிவிட்டது. இது ஸ்மார்ட்போன் யுகம். உள்ளங்கையில் இருக்கும் கையடக்க ஸ்மார்ட்போனை வைத்து எதையும் வாங்கிவிடலாம், எங்கும் சென்றுவிடலாம். அனைத்தும் சாத்தியமே.
ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்ய உதவும் பிரம்மாண்ட தளம்
. இந்தத் தளத்தின் மூலம் உங்களுக்குப் பிடித்தமான உணவகத்தைத் தேர்வு செய்து உணவை ஆர்டர் செய்யலாம்.Zomato வீட்டு உணவு
ஹோட்டலில் விதவிதமாக உணவு வகைகள் பரிமாறப்பட்டாலும்கூட, என்றோ ஒருநாள் சுவைக்கும்போது கிடைக்கும் திருப்தி தினமும் கிடைக்காது. தொடர்ந்து நான்கைந்து நாட்கள் சாப்பிட்டாலே போதும், சலிப்பு தட்டிவிடும். வீட்டில் சமைக்கும் உணவிற்காக மனம் ஏங்க ஆரம்பித்துவிடும்
வீட்டில் சமைக்கப்பட்ட உணவை ஜொமேட்டோவில் ஆர்டர் செய்து சாப்பிடமுடியும் என்றால் நம்புவீர்களா? ஆம். இந்த வசதியை Zomato Everyday என்கிற சேவை மூலம் ஜொமேட்டோ அறிமுகம் செய்துள்ளது.
இனி ஹோட்டலில் பணிபுரியும் பிரபல செஃப் மட்டுமல்ல, வீட்டில் சமைப்பவர்களுடம் தங்களை செஃப் என அடையாளப்படுத்திக்கொள்ளலாம். டெல்லியின் குருகிராம் நகரத்தில் மட்டும் தற்போது இந்த அம்சம் அறிமுகம் செய்யப்படுகிறது. இங்கு கிடைக்கும் வரவேற்பை வைத்து மற்ற பகுதிகளுக்கும் இந்த சேவை விரிவுபடுத்தப்படும் எனத் தெரிகிறது.
இரு தரப்பினருக்கும் பலன்
வீட்டு சாப்பாட்டிற்காக ஏங்குவோருக்கு வீட்டு சாப்பாடு கிடைக்கும் என்பது ஒருபுறம் இருக்க, நன்றாக சமைக்கத் தெரிந்தோர் வருமானம் ஈட்டவும் இந்தத் தளம் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது.
வீட்டு உணவு வேண்டும் என்று நினைப்பவர்கள் ஜொமேட்டோ தளத்துடன் இணைக்கப்பட்டுள்ள இந்த அம்சத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதேபோல், பிரமாதமாக சமைப்பவர்கள் ஜொமேட்டோ தளத்துடன் இணைந்து தாங்கள் சமைத்த உணவை பசியுடன் இருப்போரிடம் கொண்டு சேர்க்கலாம்.
வணிக செயல்பாடு
Zomato Everyday அம்சத்தைப் பயன்படுத்தி வருமானம் ஈட்ட விரும்புவோர், சமையல் செய்து பேக் செய்து வைத்தால் போதும். உணவு தேவைப்படுவோர் இந்தத் தளத்தின் மூலம் உணவை ஆர்டர் செய்வார்கள். டெலிவர் நபர் வீட்டிலிருந்து பேக் செய்யப்பட்ட உணவை சேகரித்து வாடிக்கையாளரிடம் ஒப்படைப்பார்.
இந்தத் தளத்தைப் பயன்படுத்தி நீங்கள் உங்கள் சமையலை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க விரும்பினால், தேவை அதிகமிருக்கும் உணவு எது என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும். எந்த உணவு உங்கள் கைப்பக்குவத்தில் சுவையாக இருக்குமோ, அதை விற்பனை செய்வதுதான் சிறந்தது. அப்போதுதான் தொடர்ந்து வாடிக்கையாளர்களிடமிருந்து ஆர்டர்களைப் பெறமுடியும்.
ஜொமேட்டோ தளத்துடன் பதிவு
முதல்கட்டமாக உணவு மற்றும் பானங்கள் வணிகம் என்பதால் முறையான FSSAI உரிமத்தைக் கட்டாயம் பெறவேண்டும்.
உங்கள் உணவகத்திற்கு ஒரு பெயரைத் தேர்வு செய்துகொண்டு ஜொமேட்டோ தளத்தில் பதிவு செய்துகொள்ளவேண்டும்.
FSSAI உரிமத்தின் நகல், ஜிஎஸ்டி எண், பேன் கார்ட் எண், வங்கிக் கணக்கு தொடர்பான தகவல்கள், உங்கள் ரெஸ்டாரண்ட் மெனு, சிறந்த 5 உணவு வகைகளின் புகைப்படங்கள் ஆகியவற்றுடன் பதிவு செய்துகொள்ளவேண்டும்.
ஜொமேட்டோ தளத்துடன் இணையும் உணவகத்தின் வருவாய் 60 சதவீதம் வரை அதிகரிப்பதாகவும் 10 மடங்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள் என்றும் ஜொமேட்டோ தெரிவிக்கிறது.
நாள் ஒன்றிற்கு 20 ஆர்டர்கள் கிடைத்தாலும்கூட, இந்தத் தளத்திற்கான கமிஷன் தொகை போக, மாதம் 30,000 ரூபாய் வரை சம்பாதிக்கமுடியும்.
'சுடச்சுட வீட்டு சாப்பாடு’ - 1 மில்லியன் டாலர் நிதி பெற்று வேகமாக வளர்ச்சி அடையும் ‘Cookr’