தமிழக வெள்ளமும் மனிதநேய உள்ளமும்: ஒட்டுமொத்த ரயில் பயணிகளின் பசியாற்றிய கிராம மக்கள்!
“அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்” என்ற வள்ளுவனின் வாக்கிற்கு சிறந்த உதாரணமாக மாறியிருக்கின்றனர், மேலூர் புதுக்குடி கிராம மக்கள். அப்படி அவர்கள் என்ன செய்தார்கள் என அறிந்துகொள்வோம்.
“அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்” என்ற வள்ளுவனின் வாக்கிற்கு சிறந்த உதாரணமாக மாறியிருக்கின்றனர், மேலூர் புதுக்குடி கிராம மக்கள். அப்படி அவர்கள் என்ன செய்தார்கள் என அறிந்துகொள்வோம்...
கனமழையால் தண்டவாளங்களில் அரிப்பு ஏற்பட்டு, ஒரு விரைவு ரயில் 800 பயணிகளுடன் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படுகிறது. நட்டாற்றில் விட்டது போல் பயணிகள் நிலைகுலைந்து நிற்க, ஒரு ரயிலில் இருந்த ஒட்டுமொத்த பயணிகளுக்கும் சோறுபோட முன்வந்தனர் மேலூர் புதுக்குடி கிராம மக்கள்.
வெள்ளக்காடான ஸ்ரீவைகுண்டம்:
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களை கடந்த வாரம் கனமழை ஆட்டிப்படைத்தது. ஒராண்டிற்கு பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்ததால் ஊர்கள் அனைத்தும் வெள்ள நீரால் சூழப்பட்டன. கடந்த 17-ம் தேதி இரவு 8.25 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட செந்தூர் விரைவு ரயில், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தை 9.10 மணிக்கு சென்றடைந்தது.
ரயில் தண்டவாளத்தை மழைநீர் சூழ்திருப்பதால் நிறுத்தப்பட்டிருப்பதாகவும், சில மணி நேரங்களில் பிரச்சனை சரி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட, பயணிகள் சற்றே குழப்பம் அடைந்தனர். இதனால் அன்றிரவு முழுவதும் ரயில் தங்கிய பயணிகள், மறுநாள் காலையில் பசி தாங்காமல் உணவு தேடி ஊருக்குள் செல்ல ஆரம்பித்தனர்.
கிராம மக்களின் மனித நேயம்:
தண்டவாளத்தில் சூழ்ந்திருந்த மழைநீரிலேயே நடந்து சென்று, அருகில் இருந்த வெறும் 25 வீடுகளை மட்டுமே கொண்ட மேலூர் புதுக்குடி என்ற சிறிய கிராமத்தை அடைந்தனர். அங்கிருந்த பெட்டிக்கடைகளில் ஏராளமான பயணிகள் வந்து தின்பண்டங்களை வாங்குவதை பார்த்த கிராம மக்கள், நிலவரத்தை விசாரிக்க ஆரம்பித்துள்ளனர்.
அப்போது பயணிகள் நேற்றிரவு முதல் ரயில் நிலையத்தில் சிக்கியிருப்பதையும் உண்ண உணவில்லாமல் தவிப்பதையும் கிராம மக்களிடம் கூறியுள்ளனர். இதைக் கேட்ட கிராமத்தினர் ரயில் பயணிகளை தங்களது கிராமத்தில் வந்து தங்கிக்கொள்ளும்படி அழைப்பு விடுத்துள்ளனர்.
ஆனால், அந்தக் கிராமத்தில் இருந்ததோ சொற்ப வீடுகள்தான். மழைநீர் வேறு கிராமத்திலும் சூழ்ந்திருந்தது. இருப்பினும் ரயில் பயணிகளுக்கு உதவ முடிவெடுத்த கிராமத்தினர், அவர்களை அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தங்க வைத்தனர்.
500 பேருக்கு உணவு:
அதுமட்டுமின்றி வெறும் 50 பேர் மட்டுமே உள்ள கிராமத்தினர் ஒன்றிணைந்து, தங்களது வீடுகளில் இருந்த உணவு பொருட்களை எடுத்து வந்து, கோயில் வளாகத்திலேயே ரயில் பயணிகளுக்கு உணவு தயாரிக்க ஆரம்பித்தனர். பருப்பு சாதம், புளியோதரை, தயிர் சாதம் என பல வகையான உணவுகளை தயார் செய்தனர். கோயிலில் தங்கியிருப்பவர்களுக்கு மட்டுமின்றி, ரயிலில் இருக்கும் நூற்றுக்கணக்கான பயணிகளுக்கும் உணவை எடுத்துச்சென்று வயிறார பரிமாறியுள்ளனர்.
இதுகுறித்து பெண் பயணி ஒருவர் கூறுகையில், “மேலூர் புதுக்குடி கிராம மக்கள் இல்லை என்றால் எங்களால் இருந்திருக்கவே முடியாது. அவர்களால் தான் எங்களால் இப்போது பேசவே முடிகிறது. யாரேன்றே தெரியாத எங்களுக்கு உணவளித்தனர். குழந்தைகளுக்கு பால், பெரியவர்களுக்கு சாப்பாடு என தங்களால் டிந்ததை பெரிய மனதுடன் செய்தார்கள்” என்றார்.
மேலூர் புதுக்குடி கிராம மக்கள் ஒன்றல்ல, இரண்டல்ல சுமார் 500 பயணிகளுக்கும் 4 வேளை பசியாற உணவளித்துள்ளனர். தங்கள் கிராமத்தை வெள்ளம் சூழ்ந்து, தங்களுக்கே யாராவது உதவ வரமாட்டார்களா என்ற நிலையில் இருந்தாலும், 2 நாட்களுக்கு யாரேன்றே தெரியாத மக்களுக்கு தங்களால் ஆன உதவியை செய்து கொடுத்துள்ளனர்.
அத்துடன் தங்களது வீடுகளில் இருந்த மாடுகளில் பால் கறந்து ரயிலில் இருந்த முதியவர்கள், குழந்தைகளுக்கு வழங்கியுள்ளனர். கிராமத்தினரின் உதவியைக் கண்டு நெகிழ்ந்து போன ரயில் பயணிகள் பலரும் தங்களிடம் உள்ள பணத்தை தர முன்வந்துள்ளனர். ஆனால், அதிலிருந்து ஒரு ரூபாயைக் கூட வாங்காத கிராம மக்கள், அதனை வேண்டுமென்றால் கோயில் உண்டியலில் போட்டுவிடுங்கள் என அன்புக் கட்டளை இட்டுள்ளனர்.
இதுகுறித்து ரயில் பயணிகளில் ஒருவர் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், “மழை வெள்ளம் சூழப்பட்டதால் கிராம மக்களால் வெளியே சென்று பொருட்களை வாங்க முடியவில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அவரவர் வீட்டில் இருந்த அரிசி, பருப்பை எடுத்து வந்து எங்களுக்கு உணவளித்தனர்” என்றார்.
பசித்த வயிறுடன் நின்ற தங்களை உணவளித்து காப்பாற்றிய கிராம மக்களை ரயில் பயணிகள் கடவுளுக்கு நிகராக பாராட்டியுள்ளனர். இதேபோல், சென்னை வெள்ளத்திலும், தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளிலும் பல நல்லுள்ளங்கள் மனிதநேய உதவிகளை செய்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
Edited by Induja Raghunathan