Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

மரவள்ளி இலையில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் தெரியுமா?

CTCRI நிறுவனம் பல ஆண்டுகளாகவே மரவள்ளி இலையிலிருந்து உயிரிப் பூச்சிக்கொல்லி தயாரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே, ஒரு துணை தயாரிப்பாக மின்சாரம் தயாரிக்கும் முயற்சியில் ஜெயபிரகாஷ் ஈடுபட்டிருக்கிறார்.

மரவள்ளி இலையில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் தெரியுமா?

Wednesday May 04, 2022 , 2 min Read

சூரிய ஒளியிலிருந்து மின்சாரம், தண்ணீரிலிருந்து மின்சாரம் என்கிற வரிசையில் தற்போது மரவள்ளி இலையிலிருந்து மின்சாரம் எடுப்பதற்கான வழிமுறையைக் கண்டுபிடித்திருக்கிறார் ICAR-Central Tuber Crops Research Institute (CTCRI) முதன்மை விஞ்ஞானி டாக்டர் சி ஏ ஜெயபிரகாஷ். இவர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர்.

CTCRI நிறுவனம் பல ஆண்டுகளாகவே மரவள்ளி இலையிலிருந்து உயிரிப் பூச்சிக்கொல்லி தயாரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே, ஒரு துணை தயாரிப்பாக மின்சாரம் தயாரிக்கும் முயற்சியில் ஜெயபிரகாஷ் ஈடுபட்டிருக்கிறார்.

1

மரவள்ளி இலைகளிலிருந்து பூச்சிக்கொல்லிக்கான மூலக்கூறுகளை எடுத்த பிறகு அவை பயோ-கழிவுகளாக எஞ்சிவிடுகின்றன. இதை எந்த வகையில் பயன்படுத்திக்கொள்ள முடியும் என ஜெயபிரகாஷ் யோசித்துள்ளார். இந்த யோசனையின் விளைவாகவே மின்சாரம் எடுக்கும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

”பயோ கழிவுகளில் இருந்து மீத்தேன் எடுக்க முடியும். ஆனால், இலைகளிலிருந்து மீத்தேன் எடுக்க முடியாது. காரணம் செல்லுலோஸ், செமிசெல்லுலோஸ் போன்றவை இலைகளில் இருக்கும்,” என ஜெயபிரகாஷ் விவரிக்கிறார்.

இதுபற்றி மேலும் விரிவாக ஆய்வு செய்ய நினைத்தார் ஜெயபிரகாஷ். நிபுணத்துவம் பெற்ற மைக்ரோபயாலஜிஸ்ட்களைத் தொடர்பு கொண்டார். அந்த நிபுணர்களில் ஒருவர்தான் டாக்டர் கிருஷ்ண குமார். இவர் National Institute for Interdisciplinary Science and Technology (NIIST) மூத்த முதன்மை விஞ்ஞானி. பயோகழிவுகளில் மீத்தோஜெனிக் பாக்டீரியா அதிகம் உற்பத்தியாகும் என்பதை இவர் கண்டறிந்தார்.

“உயிரி பூச்சிக்கொல்லி தயாரிக்கும்போது இலைகள் வெப்பமூட்டப்படும். இந்த செயல்முறையில் இலைகளின் உண்மையான மூலக்கூறு அமைப்பு மாறிவிடும். இதனால் பாக்டீரியா பன்மடங்கு அதிகரிக்கும்,” என்கிறார் ஜெயபிரகாஷ்.

இதைத் தொடர்ந்து கார்பண்டையாக்சைட், ஹைட்ரோசல்ஃபைட் போன்றவற்றை நீக்குவது அடுத்த சவாலாக இருந்ததாக தெரிவிக்கிறார் ஜெயபிரகாஷ்.

“சல்லடை போன்ற செயல்முறையில் கார்பண்டையாக்சைட் நீக்கப்பட்டது. அதேபோல் நீர்ம பொருட்கள் வடிகட்டி எடுக்கப்பட்டன,” என்கிறார்.

இறுதியாக பலூன்களில் மீத்தேன் சேகரிக்கப்பட்டு, ஒரு பிரத்யேக ஜெனரேட்டர் உதவியுடன் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

டாக்டர் ராஜலட்சுமி என்கிற கெமிஸ்ட் மற்றும் ஸ்ரீஜித், ஜோசப் டாம் ஆகிய இரு பிஎச்டி மாணவர்கள் ஜெயபிரகாஷின் இந்த ஆய்வில் உதவியுள்ளனர்.

தகவல் உதவி: நி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் | தொகுப்பு: ஸ்ரீவித்யா