'சிரிப்பதும் கூட யோகா தான்'- யோகா ஸ்டுடியோ இளம் நிறுவனர் சர்வேஷ்
வாழ்க்கைமுறையையே யோகாவாக மாற்றும் இந்தியாவின் மிக இளமையான சி.ஈ.ஓ!
நாளையாவது யோகா செய்ய வேண்டும் என்று நினைத்துக்கொண்டே அடுத்த நாள் காலை 5 மணிக்கு அலாரம் வைத்துவிட்டு, மறுநாள் அது அடிக்கும்போது அணைத்துவிட்டு தூங்குபவரா நீங்கள்? பிறகு, அன்று முழுவதும் “இன்னிக்காவது ஒழுங்கா எழுந்து யோகா பண்ணியிருந்தா சுறுசுறுப்பா இருந்துருக்கும்.” என்று உச்சு கொட்டுபவரா?
“யோகாவும் த்யானமும் தினமும் ஒரு மணி நேரம் பழகும் கலை அல்ல. யோகா என்பது ஒரு வாழ்க்கைமுறை. மகிழ்ச்சியைத் தரும் எந்த செயலும் யோகா தான். நடனம், நடை, சமையல், சிரிப்பு, எழுத்து என மனதிற்கு பிடித்ததை செய்யும் எல்லாமே ஒரு விதமான யோகா தான்,”
என்ற புதிய அர்த்தத்தை தனது ‘ஜோர்பா ஸ்டுடியோ’வின் மூலம் செயல்படுத்தி வருகிறார் சென்னை இளைஞர் சர்வேஷ் சசி. தனது 21-ஆவது வயதில், யோகா மற்றும் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட துறையில் ‘மிகவும் இளமையான இந்திய தொழில்முனைவர்’ என்ற சிறப்பையும் பெற்றுள்ளார் இவர்.
ஜோர்பா (Zorba) என்ற வார்த்தைக்கான பொருள் ‘ஒவ்வொரு நாளையும் தரமாக வாழ்வது’ என்பது தான். இந்த குறிக்கோளை அடைவதற்கான வழியாக யோகா, த்யானம் மட்டுமில்லாமல் நோய்களை குணப்படுத்தும் ஹீலிங் பயிற்சிகள், தெரபி முறைகள், ஜும்பா, நடனம், என பல நவீன கலைகளை பயிற்றுவித்து வருகிறது ‘ஜோர்பா – எ ரினைஸான்ஸ் ஸ்டுடியோ’ (Zorba- A Renaissance Studio).
துவக்கம் எப்படி?
தனது 19 வயதில் சர்வேஷ் 40 நாட்களுக்கு தொடர் மௌன பயிற்சி மேற்கொண்டார். தன்னை தானே தனிமையில் உணர்ந்துக்கொள்ளும் ஒரு பயிற்சியாக நினைத்து செய்த போது, சர்வேஷுக்கு இது பல உண்மைகளை உணர்த்தியது. “எனது தந்தைக்கு யோகா கற்றுத் தந்த குருஜி என்னிடம் பல வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்தார். அவருடனான உரையாடல்கள் என்னை ஈர்த்தன. எனக்கு சிறு வயதிலிருந்தே யோகாவின் மீது அதீத ஈர்ப்பு இருந்தது. பள்ளியில் பல போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளேன். அவர் பகிர்ந்த உண்மைகள், எனது திறமைகள் இவையனைத்தும் சேர்ந்து என் வாழ்க்கையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தின. ஒரு புதிய சிந்தனையை உருவாக்கின. அப்படி தோன்றியது தான் இந்த யோகா சம்பந்தமான தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம்.”
சில வருடங்களுக்கு முன்பு தான், நவீன வாழ்க்கையில் சிக்கிக்கொண்டிருக்கும் பலர் உடல், ஆரோக்கியம் குறித்த விஷயங்களில் ஈடுபாடு கொள்ளத் துவங்கினார்கள். அந்த சமயம், யோகா ஸ்டுடியோக்கள் பிரபலமாயின. இந்தத் துறையின் வளர்ச்சியை தனது தந்தையிடம் புரிய வைத்து, அவரது உதவியுடன் ‘ஜோர்பா – தி ரினைஸான்ஸ் ஸ்டுடியோ’வை 21 டிசம்பர் 2013-ஆம் வருடம் நிறுவ முனைந்தார் சர்வேஷ்.
வீழ்ந்து மீண்ட நொடிகள்:
ஜோர்பாவிற்கு வருபவர்கள் அந்த இடத்தை தங்களது இரண்டாவது வீடாக பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில், சில லட்சங்கள் செலவு செய்து, பிரபல ஓவியர் மற்றும் சினிமா கலை இயக்குனர் தோட்டாதரணி அவர்களால் என் ஸ்டுடியோ வடிவமைக்கப்பட்டது".
துவங்கி இரண்டு மாதங்களில் செய்த முதலீட்டை திரும்பப்பெறும் அளவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த சமயத்தில், சர்வேஷ் தொழில் நன்றாக சென்று கொண்டிருந்ததால், மற்ற வேலைகளை கவனிக்கத் தொடங்கினார். திடிரென ஒரு நாள், இடி விழுந்ததைப் போல் அவரது வங்கிக் கணக்கில் பணம் மைனஸ்-ஸில் செல்வதாக தகவல் வந்தது. தனது தொழிலை மீண்டும் மேலே கொண்டுவருவதற்கான முக்கியத்துவமும் அவசரமும் அப்பொழுது தான் சர்வேஷுக்கு புரிந்தது. இந்த வீழ்ச்சியை சரி செய்ய, 21 நாட்கள் அலைந்து திரிந்து பலரை சந்தித்து கிட்டத்தட்ட 3 லட்சம் ருபாய் திரட்டினார். இந்த சம்பவம் அன்று அவருக்கு உணர்த்திய பாடம்:
“ஒரு தொழில்முனைவர், தான் வீழ்ந்தால் தன்னை தாங்கிப்பிடிக்க யாரோ இருக்கிறார்கள் (பண விஷயத்தில் குறிப்பாக) என்று அலட்சியமாக இருக்கவே கூடாது. தனது சொந்த உழைப்பை மட்டுமே நம்பி தொழில் செய்ய வேண்டும்”, என்கிறார்.
தனது வளர்ச்சியின் காரணமாக, தனது தொழிலுக்கு கிடைத்த ஆதரவின் காரணமாக, உடல் ஆரோக்கியத் துறையில் பிரபலமான நிறுவனம் ‘தல்வால்கர்ஸ்’ சர்வேஷ் சசியின் ‘ஜோர்பா’ நிறுவனத்தில் பெரும் அளவிற்கு முதலீடு செய்துள்ளனர்.
எது யோகா?
யோகா என்பது வெறும் சூர்யநமஸ்காரம் அல்ல. காலையில் 5 மணிக்கு எழுந்து செய்யும் தியானம் மட்டுமே அல்ல. எது உடலையும், மனதையும், ஆத்மாவையும் இணைக்கிறதோ அது அனைத்துமே யோகா தான். எழுதுவது யோகா; வரைவது யோகா; சந்தோஷமாக மனம் ஒன்றி நண்பர்களுடன் பொழுதைக் கழிப்பது யோகா; நடனம் யோகா; இசை ஒரு விதமான யோகா; யோகா என்பது ஒரு முழுமையான வாழ்க்கைமுறை என்பதை உலகிற்கு புரிய வைப்பதை நோக்கமாக கொண்டுள்ளார் சர்வேஷ். உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல் மன மகிழ்ச்சியையும் தரும் பயிற்சிகளை நடத்தி வருகிறது ஜோர்பா.
“கடந்த 28 மாதங்களில் 2400 பேர் பயனடைந்துள்ளனர். கேன்சர், மன அழுத்தம் உள்ளிட்ட பல உடல் மற்றும் மன நோய்களை அதிசயிக்கும் வகையில் குணப்படுத்தியுள்ளோம்” என்று பூரிக்கிறார் சர்வேஷ்.
நவீன பயிற்சிகளான பெடல்பூட் யோகா, ஏரியல் யோகா, கார்பரேட் யோகா என பல புதுமைகளையும் செய்த வருகிறார்.
“வெள்ளை உடை அணிந்தோ, அல்லது காவி உடையில் அமர்ந்து செய்வது மட்டுமே யோகா என்ற நிலையை மாற்ற வேண்டும் என்பதே ஜோர்பாவின் குறிக்கோள் என்கிறார்.
யோகா துறையை தொடர்ந்து விளையாட்டில் எனக்கு ஆர்வம் உள்ளதால், ஒரு பல்நோக்கு பயனுடைய விளையாட்டு அரங்கம் ஒன்றை உருவாக்கப்போகிறேன். அதனை தொடர்ந்து உணவுத்துறையிலும் கால் பதிக்க ஆர்வம் உள்ளதால் ஒரு கபே தொடங்குவதற்கான திட்டமும் உள்ளது” என்று கூறுகிறார் 23 வயதே நிரம்பியுள்ள, இலட்சியங்கள் நிறைந்த தொழில்முனைவர் சர்வேஷ் சசி.
இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்
தொடர்பு கட்டுரைகள்:
யோகா மேதை பி.கே.எஸ். ஐயங்கார் உதிர்த்த 40 உத்வேக முத்துகள்!
கற்பித்தலில் பல உண்மைகளை கண்டறியும் யோகா பயிற்சியாளர் ரிங்கு சூரி!