விவசாயிகளை இணையத்தில் இணைக்கும் ‘ரெயின்போ அக்ரி’- கோவை இளைஞர்களின் முயற்சி!
இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் விவசாயம் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால் பல பிரச்னைகளால் இன்று விவசாயம் ஒரு கேள்விக்குறியான விஷயமாக மாறி அதை விட்டு வேறு தொழிலுக்கு மாறும் நிலையிலேயே பெரும்பாலான விவசாயிகள் உள்ளனர். விவசாயத்தை ஊக்குவிக்க பசுமைப் புரட்சி, வெண்மை புரட்சி என பல உள்ள நிலையில் தொழில்நுட்ப உதவியுடன் விவசாயத்திற்கு வானவில் போன்ற பல வண்ணங்களை அளிக்கும் வகையில் விவசாயிகளை ஒருங்கிணைக்கும் செயலி புரட்சியில் களமிறங்கியுள்ளனர் தமிழக இளைஞர்கள். அவர்கள் உருவாக்கி வெற்றிகரமாக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளால் பயன்படுத்தப்பட்டு வரும் ‘ரெயின்போஅக்ரி’ (Rainbowagri) செயலி பற்றி அதன் நிறுவனர் மற்றும் செயல் அதிகாரி செல்வகுமார் தமிழ் யுவர் ஸ்டோரியிடம் பகிர்ந்து கொண்ட உத்வேக கலந்துரையாடல்:
2011ம் ஆண்டுக்குப் பின்னர் ஸ்மார்ட்ஃபோனின் பயன்பாடு உலகம் முழுவதிலும் அதிவேக வளர்ச்சியைக் கண்டுள்ளது. ஆனால் விஞ்ஞானமும் கண்டுபிடிப்புகளும் அடித்தட்டு மக்களைச் சென்றடைந்தால் மட்டுமே அந்த வளர்ச்சிக்கான பயன் இருக்கும் என்று விரும்புகிறார் பொறியியல் பட்டதாரி செல்வகுமார். இந்த உந்துதலே செயலி உருவாக்க அடித்தளம் அமைத்தது என்று கூட சொல்லாம் என்கிறார் விவசாயப் பின்னணியில் வளர்ந்து இன்று விவசாயிகளிடம் செல்போன் மற்றும் செயலி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் இளம் தொழில்முனைவர்.
செயலிக்கான அடித்தளம்
மற்ற இளைஞர்களைப் போலவே நானும் பல கனவுகளோடு பொறியியல் பட்டம் பெற்றேன். அதன் பின்னர் ஐடி துறையில் நல்ல சம்பளத்தில் வேலையும் கிடைத்து வாழ்க்கை நல்ல முறையில் சென்று கொண்டிருந்தது. எனினும் உழவுத் தொழிலுக்கு உணர்வுப் பூர்வமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. விவசாயப் பின்னணியில் நான் வளர்ந்தது கூட இதற்கு முக்கியக் காரணமாக இருக்கலாம் என்கிறார் செல்வகுமார். நானும் எனது நண்பர் திருகுமாரும் ஒன்றாக சில ஆண்டுகள் ஐ.டி. துறையில் பணியாற்றிய பின்னர் அந்தத் துறை தொடர்பான அறிவும் போதுமான அனுபவமும் கிடைத்தது, இதைத் தொடர்ந்து பல புதிய ஸ்டார்ட் அப்களை நாங்கள் இருவரும் முயற்சித்தோம், ஆனால் அவை எதுவுமே உணர்வுப் பூர்வமாக அமையவில்லை. இந்தத் தொடர் முயற்சிகளின் போது எங்களுக்கு உதித்த யோசனை தான் ‘விவசாயிகளுக்கும் இணையதள வசதி’ என்னும் திட்டம். என் நண்பரும் விவசாயப் பின்னணியைக் கொண்டவர் என்பதால் எங்களுக்கு இந்தத் திட்டம் மிகவும் பிடித்துப் போய்விட்டது. எனினும் இது சேவை சார்ந்த திட்டம் என்பதால் பணியை விட்டு முழு நேரமாக இதில் செயல்பட மாற்று ஏற்பாடு செய்தோம்.
2012ல் 'கிரீனோடெக் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்தைத் தொடங்கினோம். இந்நிறுவனம் ஐடி துறைக்கான புதிய தயாரிப்புகள், இணையதள தயாரிப்புகள் மற்றும் பிரச்னைகளுக்கான தீர்வுகளை வழங்கம் வகையில் செயல்பட்டு வருகிறது. இது போதுமான லாபத்தையும், நற்பெயரையும் ஐடி துறையினர் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. இதன் அடுத்த பரிமாணமாக 8 மாதங்களுக்குப் பிறகு 2013 ஆகஸ்ட் மாதத்தில் நாங்கள் வெளியிட்ட எங்களது சொந்த தயாரிப்பு தான் ரெயின்போ அக்ரி செயலி, உழவர்களுக்கும் இணையதள சேவையை வழங்குவதே இதன் சிறப்பு. முதலில் சென்னை அடையாறில் இருந்து செயல்பட்டு வந்த எங்கள் நிறுவனம் தற்போது கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது என்று சொல்கிறார் செல்வகுமார்.
ரெயின்போஅக்ரியின் சிறப்புகள்
ரெயின்போஅக்ரி விவசாயிகளுக்கான செல்போன் இணையதளத்திற்கான தீர்வு, இது உழவர்களையும் உலகம் முழுவதும் உள்ள பங்குதாரர்களையும் ஒரே டிஜிட்டல் நெட்வொர்க்கின் கீழ் இணைக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டது.
“இந்திய அரசு 2013ல் openDataappschallenge ஐ அறிமுகம் செய்த போது நாங்கள் எங்கள் செயலி மூலம் பல்வேறு தகவல்களை திரட்டி அவற்றை விவசாயிகளுக்கு நேரடியாக கிடைக்கச் செய்தோம். அதே போன்று இந்த செயலியில் விவவாயிக்குத் தேவையான வானிலை அறிக்கைகள், சந்தைவிலை, அணைகளின் நீர்மட்டம் உள்ளிட்ட செய்திகளை வழங்கினோம். இந்த செயலியின் மூலம் பயிர்களின் சூழற்சி முறையை தெரிந்து கொள்வதோடு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட உரம் மற்றும் பூச்சிக்கொல்லி விற்பனையாளர்களிடம் நேரடி தொடர்பு வைத்துக் கொள்ளவும் முடியும்”
என்று தங்களின் செயலி விவசாயிகளுக்குச் செய்து வரம் சேவைகளை பட்டியலிடுகிறார் செல்வகுமார்.
மற்ற செயலிகளைப் போல அல்ல ரெயின்போ அக்ரி செயலி என்று கூறும் அவர், இது விவசாயிகளுக்கானது என்பதால் எங்கள் குழு சாலை வழி பயணமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு விவசாயிகளை நேரில் சந்தித்து இதுபற்றி விளக்கிக் கூறினோம். ஆனால் எங்களது செயலியை அவர்கள் யாரும் பெரிதாக பொருட்படுத்தவில்லை, உண்மையில் சொல்லவேண்டுமெனில் சிலர் நாங்கள் பகலில் கிராமத்தை வேவு பார்த்து இரவில் கொள்ளையடிக்கும் கும்பலோ என்று சந்தேகத்தோடு பார்த்ததாகச் சொல்கிறார் செல்வகுமார்.
எனினும் நாங்கள் சோர்ந்து போய்விடவில்லை, எங்களது விடாமுயற்சியின் பலனாக ஒரு திருப்புமுனை ஏற்பட்டது நாங்கள் சேலம் விவசாய சங்கத் தலைவர் ஒருவரை சந்தித்து எங்களுடைய செயலியை பற்றி விளக்கம் அளித்தோம், அவருக்கு செயலியின் செயல்பாடுகள் பிடித்துப் போகவே இதை ஒரு தகவல் செயலியாக கட்டமைக்க ஆலோசனை கூறினார், இதன் மூலம் விவசாயிகளுக்கு எச்சரிக்கைத் தகவல் அனுப்பி உதவ முடியும் என்று செயலியின் செயல்பாடுகளை விளக்குகிறார் செல்வகுமார்.
பிராண்டிங், தகவல்தொடர்பு, மார்க்கெட்டிங் மற்றும் விவசாயிகளுக்கு இருக்கும் நன்மைகள் என்ற நான்கு தாரக மந்திரத்தை அப்படையாகக் கொண்டு செயல்படுகிறது இந்த செயலி.
இந்த செயலியின் மற்றொரு சிறப்பம்சம் அரசு ஊக்குவித்து வரும் 'விவசாய தயாரிப்பாளர்கள்' (Farmer producers) இதன் மூலம் பயனடைகின்றனர். குறிப்பிட்ட அளவிலான விவசாயிகளை ஒருங்கிணைக்கும் விவசாயக்குழுக்களே நிறுவனமாக பதிவு செய்த கொள்பவர்களே விவசாய தயாரிப்பு நிறுவனங்கள் என அழைக்கப்படுகின்றனர். விவசாயக் குழுக்கள் அமைக்க உதவுவதோடு அவர்கள் பற்றிய தகவல்களை டிஜிட்டல் மையப்படுத்தி அரசாங்க பலன்களை அவர்களுக்கு நேரடியாக கிடைக்கச் செய்யும் வகையில் இந்த செயலி செயல்பட்டு வருகிறது. இது வரை இந்தச் செயலி மூலம் 15 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளதாகச் சொல்கிறார் அவர். தற்சமயம் தமிழகம் முழுவதும் உள்ள 25 விவசாய தயாரிப்பு நிறுவனங்களைச் சேர்ந்த விவசாயிகள் ரெயின்போ அக்ரி செயலியை பயன்படுத்தி வருவதாக பெருமைப்படுகிறார் செல்வகுமார்.
எனினும் விவசாயிகளை ஸ்மார்ட்ஃபோன் மூலம் இணைப்பது என்பது உண்மையில் சவாலான காரியம். ஏனெனில் அவர்கள் அனைவரிடமும் ஸ்மார்ட்ஃபோன் இருக்காது என்பதோடு அவற்றை பயன்படுத்தும் முறையில் தெளிவு இல்லாத சூழலும் இருந்தது. இதற்கான தீர்வாக நாங்கள் எடுத்த அடுத்த முயற்சி விவசாயிகளை நெட்வொர்க் என்ற ஒரு குடையின் கீழ் இணைத்து அவர்கள் வாழ்விலும் பொருளாதார ரீதியிலும் இணைப்பதற்காக 4 விதமான செயலிகளை அறிமுகம் செய்திருக்கிறோம்.
• விவசாயி பற்றியத் தகவல்களோடு விளைநிலம் அமைந்திருக்கும் இடம், விளைச்சல் செய்யப்படும் பயிர்கள் பற்றிய குழுக்களை விவசாயி அறிந்து கொள்ள உதவுவது.
• நீர்வரத்து, வானிலை நிலவரம் பற்றி எச்சரிக்கை குறுந்தகவல்கள் மற்றும் குரல்பதிவுடன் கூடிய தகவல்களை வழங்குகிறது மற்றொரு செயலி. இதன் மூலம் ஒரு விவசாயி தங்களின் குழு முழுமைக்கும் ஒரு தகவலை குறுந்தகவலாகவோ அல்லது குரல் பதிவாகவோ அனுப்ப முடியும். இந்தத் தகவல் ஒரே நேரத்தில் அவர்கள் சார்ந்த குழுவை சென்றடையும்.
• இதே போன்று கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் தகவலை விவசாயிகளிடம் உரிய நேரத்தில் சென்றடையச் செய்வதில் இது முக்கிய பங்காற்றுகிறது. ஈரோடு மாவட்டத்தில் இந்த செயலியை பயன்படுத்தி தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை விவசாயிகளுக்கு உகந்த தகவலை அனுப்ப உதவியதற்காக தமிழக அரசு 2014ம்ஆண்டு விருது கொடுத்து கவுரவித்துள்ளது.
• விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கொடுப்பதில்லை என்ற கவலையையும் இந்த செயலி போக்கிவிடுகிறது. விவசாயப் பொருளை கொள்முதல் செய்வோர் நேரடியாக விவசாயியை தொடர்பு கொண்டு விலை நிர்ணயம் செய்து விளைபொருளை பெற்றுக் கொள்ளமுடியும். இதனால் விவசாயி லாபம் அடைவதோடு, இடைத்தரகர்களிடம் இருந்தும் விவசாயி தப்பித்துக் கொள்ளலாம். குவிண்டால் கணக்கில் ஒரு பொருள் தேவை என்றால் அந்தத் தகவல் அனைத்து விவசாயக் குழுக்களுக்கும் எங்கள் செயலி மூலம் தகவல் தெரிவிக்கப்படும், விவசாயி அவர்களிடத்தில் உள்ள பொருளின் அளவை பகிர்ந்த உடன் மொத்தம் எவ்வளவு பொருள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொண்டு உடனடியாக விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்து கொள்ள முடிவதால் விவசாயிகளை ஒருங்கிணைக்கும் எங்களின் முயற்சி வெற்றி கண்டுள்ளது என்றே கருதுகிறோம் என்கிறார் செல்வகுமார்.
• விளைபொருள்களை வாங்கவும் விற்கவும் தனித் தனியான சேவையை இந்தச் செயலி வழங்குகிறது, இதன் மூலம் லாபம் விவசாயியை நேரடியாக சென்றடைகிறது என்பது அவர்களின் கூற்று.
தற்சமயம் இந்த செல்போன் செயலியை தென்இந்தியாவின் 6 மாநிலங்களில் தேசிய அளவில் கொண்டு செல்வதற்காக நபார்ட் உடன் இணைந்து செயல்பட்டு வருகிறார் விவசாயத்தில் நவீனத்தை புகுத்தி வரும் செல்வகுமார். இந்தியாவில் விவசாயிகளுக்காக செயல்படும் முதல் தளம் என்ற பெருமையை ரெயின்போஅக்ரி செயலி பெற்றள்ளதாகப் பெருமைப்படும் செல்வகுமார், மைக்ரோசாப்ட்டின் 'கோட் ஃபார் ஹானர்' விருது. 'எக்ஸ்ப்பிரெஸ் ஐடி' விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளதாகவும் கூறுகிறார்.
வாழ்வில் மறக்க முடியாத துயரம்
செல்வகுமார் முதல் தலைமுறைபட்டதாரி, கரூர் மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். “என் பெற்றோர் விவசாயம் செய்து வருகின்றனர். உள்ளூரிலேயே பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் கோவை குமரகுரு கல்லூரியில் இளநிலை மெக்கானிக்கல் என்ஜினியரிங் பட்டம் பெற்றேன். அதைத் தொடர்ந்து அங்கு ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் தரத்தை உறுதிபடுத்தும் பொறியாளராக என்னுடைய பயணத்தைத் தொடங்கினேன். அந்த நிறுவனம் சந்திக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண உதவுவது, எந்திரங்களுக்கு ஐஎஸ்ஓ 9001 சானறிதழ் வழங்குவது என என்னுடைய பணி சென்று கொண்டிருந்தது. காலச்சக்கரத்தில் நான் என்னுடைய வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கினேன், சின்ட்டல் இந்தியா மும்பையில் நடத்திய நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று மென்பொருள் பயிற்றுனராக பணி கிடைத்தது. ஐரோப்பா மற்றும் வடஅமெரிக்காவின் பெரிய அளவிலான பன்நாட்டு ஐடி நிறுவனங்களின் ERP ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளதாக” கூறுகிறார் செல்வகுமார்.
கல்லூரி நாட்களில் இருந்தே மக்கள் நலன் அளிக்கும் விஷயங்களில் தொழில்நுட்பத்தை புகுத்த வேண்டும் என்பது என்னுடைய ஆசை. நண்பர்களுடன் சேர்ந்து நான் பயோ கேஸை கொண்டு பள்ளிக்கு வெளிச்சம் கொடுக்கும் ஒரு திட்டத்தை வெற்றிகரமாக செய்தேன். அந்த இடம் கோவை அருகில் உள்ள ஒரு கிராமம் அங்கு காட்டு யானைகள் ஆதிக்கம் அதிகமிருக்கும். இந்த திட்டம் கல்லூரியில் அனைவரிடம் இருந்து பாராட்டை பெற்றாலும் குடும்பச் சூழல் காரணமாக நான் தொழில்முனைவு கனவை கல்லூரி முடித்த உடனே அடைய முடியவில்லை. எனினும் அந்த தாகம் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது மென்பொருள் துறையில் 8 ஆண்டுகள் பணியாற்றிய பின்பு ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொடங்க முடிவுசெய்தேன், இது இந்த உலகம் மேலும் சிறப்பான வாழ்வை வாழ உதவ வேண்டும் என்றும் நான் கருதினேன். 2009ல் நான் ஒரு தீர்க்கமான முடிவெடுத்தேன் அதிக சம்பளம் தரும் பிரெஞ்ச் பன்னாட்டு பணியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவின் ஒரு ஸ்டார்ட் அப்பில் முதல் 10 ஆட்களில் நானும் ஒருவனாக சேர்ந்தேன். இந்த முடிவு என்னுடைய பணி மற்றும் வாழ்க்கைச் சூழலை மாற்றி அமைத்தது.
விவசாயிக்கான செயலி கண்டுபிடித்தது ஏன்?
ஸ்டார்ட் அப்களுக்கு எல்லைகளே கிடையாது, அது மற்றவர்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்றியமைக்க உதவ வேண்டும் என்பதில் நம்பிக்கை உள்ளவர் செல்வகுமார். நாங்கள் ஏன் விவசாயிகளுக்கென ஒரு செயலியை கண்டுபிடித்தோம் என்பற்கு ஆழமான பின்னணி இருக்கிறது என்றும் கூறுகிறார் அவர்.
“2002ம் ஆண்டு நாங்கள் எங்களுடைய 10 ஏக்கர் நிலத்தில் மரவள்ளிக் கிழங்கு பயிர் செய்தோம். 10 மாத விளைச்சலுக்குப் பிறகு அறுவடைக்குத் தயாராக இருந்தன கிழங்குகள். 10 லட்ச ரூபாய் முதலீடு செய்து பயிரிட்ட செடிகளுக்கு உரிய விலை கிடைக்காததால் முழுவதும் நஷ்டத்தில் சிக்கிக் கொண்டோம். வங்கிக்கு கடன் செலுத்த முடியாததால் எங்களின் அசையும் சொத்துகளை ஒவ்வொன்றாக விற்று கடனை அடைத்தோம், இந்த மோசமான அனுபவம் ஒருவித அச்சுறுத்தலை என்னுள் ஏற்படுத்தியது.
மற்ற தொழிலைப் போல அல்ல விவசாயம். விவசாயம் மிகவும் உணர்ச்சி பெருக்குடைய துறை ஏனெனில் விவசாயி விளைச்சல் பயிர்களை குழந்தைகளைப் போல வளர்க்கின்றனர், அவற்றின் அன்றாட வளர்ச்சியை பார்த்து மகிழ்கின்றனர், பயிர் விளைச்சல் நல்லபடியாக இல்லை என்றால் கவலையடைகின்றனர் என்கிறார் செல்வகுமார்.
என்னைப் போலவே விவசாயம் பற்றி நன்கு அறிந்த மற்றும் அவற்றின் மோசமான அனுபவங்களை அனுபவித்தவர் என்னுடைய சிறந்த நண்பர் திருக்குமார், அவர் எங்கள் நிறுவனத்தின் இணை நிறுவனராக கிடைத்தது என்னுடைய அதிர்ஷ்டம். நாங்கள் எங்களுடைய ஐடி பணியை ஒரே நாளில் தொடங்கினோம் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டு ஒரே இடத்தில் பல ஆண்டுகள் தங்கி இருந்தோம். பங்குச்சந்தை வர்த்தகம் மற்றும் முதலீடுகள் என நாங்கள் இருவரும் இணைந்து பல்வேறு முயற்சிகளை செய்து பார்த்தோம். ஆனால் ஒன்றும் உணர்வுப்பூர்வமாக அமையவில்லை. கடைசியில் எங்களுக்கு கை கொடுத்தது தான் இந்தச் செயலி என்று சந்தோஷப்படுகிறார் அவர்.
சவாலைக் கண்டு அஞ்சக் கூடாது
நாங்கள் ஒரு ஸ்டார்ட் அப் தொடங்குவதற்கு எங்களின் நண்பர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர் ஆனால் எங்களுக்கு உதவ யாரும் முன்வரவில்லை. ஸ்டார்ட் அப்பை நல்ல விதமாக முன்எடுத்துச் செல்வது குடும்பச் சூழலை சமாளிப்பது என எங்கள் முன் இரண்டு விதமான சவால்கள் இருந்தன.
செயலி தொடங்க எங்களுக்கு 2 கோடி ரூபாய் வரை முதலீடு தேவைப்பட்டது, எங்களது சேமிப்பில் இருந்து முதலீட்டு பணத்தை செலவு செய்தோம். சில மாதங்களில் எங்களுடைய சேமிப்புப் பணம் மொத்தமும் செலவடைந்து அன்றாட வாழ்க்கை நடத்தவே சிரமப்பட்டோம். எனினும் நம்பிக்கையை மட்டும் விட்டுவிடவில்லை, கிரீனோடெக் நிறுவனம் மூலம் போதுமான வருமானம் கிடைப்பதால் நாங்கள் எங்கள் நிலைமையை சமாளித்துக் கொண்டு இந்த செயலியை சேவை நோக்கில் தற்போது கட்டணமில்லா சேவையாக வழங்கி வருகிறோம் என்று சொல்கிறார் செல்வகுமார். மற்ற குடும்பத்தினரை போலவே எங்கள் குடும்பத்தாரும் என்னுடைய எதிர்காலம் மற்றும் நிறுவனத் தொடக்கம் பற்றி மிகவும் அக்கறையோடு இருந்தனர். எங்கள் குடும்பம் எங்களது வருமானத்தை நம்பித் தான் இருக்கிறது. மாத சம்பளத்தை விட்டு புதிய தொழில் தொடங்கும் போது அந்த கஷ்டத்தைத் தாக்குபிடிப்பது சற்று கடினம் தான்.
விவசாயத்துறையில் தொழில்நுட்பத்தை புகுத்துவது ஒரு புதிய முயற்சி என்பதோடு சவால் நிறைந்ததும் கூட இது இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இந்த உலகத்திலேயே மிகவும் கடினமான விஷயம் விவசாயிகளின் நம்பிக்கையை பெறுவது, நாம் பல முறை அவர்களை சந்தித்தால் மட்டுமே அவர்கள் நம்முடன் கலந்து பேசவே முன்வருகின்றனர் என்று சொல்கிறார் சவால்களுக்கெதிராக எதிர்நீச்சல் போட்டுவரும் செல்வகுமார். நாங்கள் ஏறத்தாழ 2 லட்சம் கிலோமீட்ர் விவசாயிகளைத் தேடி பயணித்திருக்கிறோம் என்றும் கூறுகிறார் அவர்.
எதிர்காலத் திட்டம்
தற்போது 25 விவசாய தயாரிப்பு நிறுவனங்களோடு இணைந்து செயல்பட்டு வரும் ரெயின்போ அக்ரி செயலியை நாடு முழுவதும் மாவட்டத்திற்கு ஒரு அலுவலகம் வீதம் செயல்படும் வகையில் வளர்த்தெடுத்து, அனைத்து விவசாயியையும் ஒரே தகவல் இணைப்பின் கொண்டு வர வேண்டும் என்ற இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார் செல்வகுமார். இந்த முயற்சியின் மூலம் இந்தியாவின் 50 சதவிகித மக்கள் தொகையில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதோடு விவசாயத்தை லாபம் ஈட்டும் தொழிலாக மாற்றியமைக்க முடியும் என்று நம்பிக்கையோடு சொல்கிறார் அவர். இறுதியாக வள்ளுவரின் குரல் ஒன்றைக் கூறி உரையாடலை முடித்தார் செல்வகுமார் :
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை
உழவுத் தொழிலில் இருக்கும் நெருக்கடிகளை எண்ணி, வேறு வேறு தொழிலுக்குச் சென்றாலும் உலகம் ஏரின் பின்தான் இயங்குகிறது. அதனால் எத்தனை வருத்தம் இருந்தாலும் உழவுத் தொழிலே முதன்மையானது என்று விவசாயத்தின் மீது அசராத நம்பிக்கை வைத்திருக்கிறார் செல்வகுமார்.
இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்
தொடர்பு கட்டுரைகள்:
'நன்றே செய், அதை இன்றே செய்': ஆஸ்திரேலிய வேலையை துறந்து விவசாயி ஆன சுரேஷ் பாபு!