சர்வதேச அமைதி பரிசுக்கு 12 வயது தமிழக மாணவனின் பெயர் பரிந்துரை!
2013-ல் மலாலா யூசூப் அமைதிக்கான சர்வதேச பரிசை குழந்தைகள் பிரிவில் பெற்றார். அந்த மாபெரும் விருதுக்கான பரிந்துரையில் இந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனின் பெயரும் உள்ளது என்றால் நம்பமுடிகிறதா? ஆம் திருவண்ணாமலையைச் சேர்ந்த 12 வயது மாணவன் சக்தி, சர்வதேச அமைதிப் பரிசுக்காக இந்தாண்டு இந்தியா சார்பாக பரிந்துரைக்கப்பட்டுள்ளார். விண்ணப்பித்துள்ள 169 குழந்தைகளில் இளம் வயதானவர் சக்தி என்பது குறிப்பிடத்தக்கது.
நரிக்குறவர் இனத்தை சேர்ந்த சக்தி நடத்திய இடைவிடாத விழிப்புணர்வு பிரச்சாரம் மூலம் 25 மலைவாழ் குழந்தைகள் பள்ளியில் படிக்க சேர்ந்தனர். பள்ளியில் இருந்து பாதியில் நின்ற சக்தி, வீடு வீடாக சென்று பழங்குடி மக்களின் குழந்தைகளின் பெற்றோர்களை சந்தித்து அவர்களை பள்ளிக்கு அனுப்பச்சொல்லி பிரச்சாரம் செய்தார். தான் படிப்பை பாதியில் விட்டதால் சில காலம் தெருவில் பிச்சை எடுத்தும், சிறு பொருட்களை சாலைகளில் விற்றும் வாழ்ந்து வந்ததை எடுத்துக்காட்டாக கூறி கல்வியின் அவசியத்தை அவர்களுக்கு புரியவைத்தார் சக்தி.
’ஹேண்ட் இன் ஹேண்ட்’ என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு சக்தி மற்றும் அவரின் குடும்பத்தை அணுகி, அரசின் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தில் சேர கேட்டுக் கொண்டனர். அதன் படி பூங்காவனம் என்ற இடத்தில் சிறப்பு பயிற்சி மையத்தில் சேர்ந்தார் சக்தி.
இதைப் பற்றி க்விண்ட் பேட்டியில் பேசிய சக்தி,
”நான் தீபாவளி, பொங்கல் சமயத்தில் வீட்டுக்கு நன்றாக உடையணிந்து செல்லும்போது, எல்லாரும் என்னை பார்த்து எங்கிருந்து வந்தாய் என்று கேட்பார்கள். அதற்கு நான் நன்றாக சாப்பிடுகிறேன், தூங்குகிறேன் மற்றும் படிக்கிறேன் என்பேன். நன்றாக படித்தால் மற்ற இடங்களில் கஷ்டப்படத் தேவையில்லை. இதைச் சொல்லி அங்குள்ள பெற்றோர்களை அவர்களின் குழந்தைகளை பள்ளிக்கு படிக்க அனுப்ப சம்மதிக்க வைத்தேன்,” என்கிறார்.
தன்னார்வ தொண்டு அமைப்பின் இணை நிறுவனர் கல்பனா சங்கர் தன் பழைய நினைவுகளை குறிப்பிடுகையில்,
“கிழிந்த, அழுக்கு நிறைந்த ஆடைகளை அணிந்து திரிந்த சக்தி, இப்போது தான் சுத்தமான உடை அணிந்து, சுகாதாரமாக இருக்கவேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார். தன் வீட்டிலும் இந்த பழக்கத்தை பின்பற்றுகிறார்.”
மேலும் பேசிய அவர், சக்தி தான் மட்டும் மாறாமல் தன் இன மக்களை பெரிதும் மாற்றி வருகிறார். அதன் காரணமாகவே அவரின் பெயர் அமைதிக்கான சர்வதேச விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
கட்டுரை: Think Change India