தமிழ் நாட்டில் பிறந்து, வளர்ந்து, படித்து பன்னாட்டு கம்பெனி வேலைக்கு வெளிநாடு செல்லும் இளைஞர்களுக்கு மத்தியில் மதுரையைச் சேர்ந்த மதன் சற்று வித்தியாசமானவர் தான். ‘நேம் போர்ட்’ கூட இல்லாத மதுரையின் பல நிறுவனங்களை இக்கால தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப சர்வதேச தரத்திற்கு மாற்றிவிடுகிறார் மதன். “சீப்ரா” (cbra) என்ற பிராண்ட் டெவலப்பிங் நிறுவனத்தை நடத்திவரும் மதனின் பரபரப்பான பணிகளுக்கிடையே தமிழ் யுவர்ஸ் ஸ்டோரி இணையதளத்திற்காக சந்தித்தோம்.
உங்களைப் பற்றி சொல்லுங்க என்றதும், புன்னகையோடு, “நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே மதுரை தான். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தான் பி.எஸ்.ஸி கம்யூட்டர் சயின்ஸ் படித்தேன். படித்து முடித்தவுடன் எல்லோரையும் போல சின்னதா ஒரு கம்பெனில வேலை பார்த்தேன். அப்போ தான் நான் உணர்ந்தேன் எனக்கான வேலையும், பாதையும் இது இல்லை என்று. என்ன செய்யலாம் எப்படி செய்யலாம் என்ற யோசனையோடு சில நாட்கள் கடந்தது. எனக்கு சின்ன வயதிலிருந்தே டிசைனிங் மீது ஆர்வம் அதிகம். எதாவது ஒரு படத்தை பார்த்தால் இது இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே, இப்படி அதன் டிசைன் இருந்தால் நன்றாக இருக்குமே என்று மனதிற்குள்ளே கற்பனை செய்வேன். அந்த டிசைனிங் ஆர்வத்தை வைத்து எதாவது செய்யலாம் என்று யோசித்த போது தான். நாம் ஏன் ஒரு வெப் டிசைனர் ஆகக்கூடாது என்று தோன்றியது. உடனே தைரியமாக ஒரு முடிவெடுத்தேன். நான் இனி வெப் டிசைனர் தான்".
உடனே பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டேன். வீட்டில், ஏன் வேலையே விட்டுவிட்டாய் என்று கேட்டார்கள்.
“எனக்கு இந்த வேலை பிடிக்கவில்லை, நான் சொந்தமாக வெப் டிசைனிங் தொழில் செய்ய இருக்கிறேன்” என்றேன்.
எந்த வீட்டில் தான் உடனே சரி என்று சொல்வார்கள்? முதலில் பயந்தார்கள். வேண்டாம் என்று சொன்னார்கள், பிறகு சரி போ.. உன் இஷ்டம் என்று சொல்லிவிட்டார்கள். உடனே ஒரு கம்யூட்டரை வாங்கினேன். ஆபிஸ் போட்டேன். ஒரே ஆளாக மதுரையில் இருக்கும் நிறுவனங்களுக்குச் சென்று ஆடர் கேட்டேன். சிலர் அவர்களின் வெப்சைட்டை சரி செய்யும் பணியை தந்தார்கள். அதை சரி செய்து கொடுத்தேன். நன்றாக இருக்கிறது, என்றார்கள் அந்த பொழுது தான் என் வாழ்வில் மறக்க முடியாதவை. உறுதியாக ஒரு முடிவை எடுத்து அதில் வெற்றி காணும் போது வரும் சந்தோசம் தான் இவ்வுலகில் மிகப்பெரியது.
தனி ஆளாக எல்லா வேலையையும் செய்யும் போது அந்த அனுபவம் எப்படி இருந்தது?
உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் கஷ்டமா இருந்தது. நானே எல்லா வேலையும் செய்ய வேண்டும். ஆர்டர் எடுக்க, கலெக்சன் செல்ல, பில் போட, டிசைனிங் செய்ய என எல்லா வேலையும் நான் ஒரே ஆளாக செய்வேன். சில சமயங்களில் வருமானமே இருக்காது. ரொம்ப கஷ்டமா இருக்கும். ஆனால், இது நான் தேர்ந்தெடுத்த பாதை. எனக்கு பிடித்த பாதை. எவ்வளவு கஷ்டம் வந்தாலும் சரி சமாளிப்போம் என்று நினைத்துக்கொள்வேன். அந்த எண்ணம் தான் என்னை இந்த நிலைக்கு உயர்த்தியிருக்கிறது.
தொடர்ந்து பல ஆர்டர்கள் வந்தது. எல்லாவற்றையும் நான் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் என்னால் சமாளிக்க முடியவில்லை. வீட்டில் நிலைமையை எடுத்துச் சொன்னேன். மாமா, தம்பி, அத்தை என எல்லோரும் அவர்களால் முடிந்த உதவிகளை செய்தார்கள். இப்போது எனக்கென ஒரு டீம் இருக்கிறது. 2007ல் ஆரம்பித்த பயணத்தில் 500 வெப்சைட்டுகளுக்கு டிசைன் செய்த சாதனையை 'சீப்ரா'வுடன் இன்று நாங்கள் கொண்டாடுகிறோம், என்றார் மகிழ்ச்சியாக.
சென்னை போன்ற பெரிய நகரங்களில் வெப் டிசைனிங் செய்வதற்கும் மதுரை போன்ற நகரங்களில் வெப் டிசைனிங் செய்வதற்குமான சவால்கள் என்ன?
என்னுடைய அனுபவத்தில் சொல்ல வேண்டுமென்றால் மதுரையில் வெப் டிசைனிங் பற்றிய விழிப்புணர்வு குறைவு. சென்னை போன்ற மெட்ரோ சிட்டியில் வெப் டிசைனிங் பற்றிய ஆர்வமும் எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கும். ஆனால் மதுரையில் அப்படி இல்லை. இன்னும் மதுரையில் இருக்கும் பெரிய பல நிறுவனங்களுக்கு வெப்சைட் இல்லை. இந்த நிலை மாற வேண்டும் என்பது தான் என்னுடைய ஒட்டுமொத்த நோக்கம். அதற்கும் மேல் நான் மதுரைகாரன். எல்லோரும் தெரிந்த முகமாக இருப்பார்கள். என்னுடைய மதுரையில் இருக்கும் நிறுவனங்கள் என்னால் அடுத்த நிலைக்கு செல்கிறது என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பாக "டிஜிட் ஆல்" என்கிற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருக்கிறோம். அதன் மூலம் மாணவர்கள், வீட்டில் இருக்கும் தாய்மார்கள், அந்த கால பட்டதாரிகள் என பலதரப்பட்ட மக்களுக்கு இதன் மூலம் கம்ப்யூட்டர் பயன்பாடு மற்றும் செயல்பாடுகளை இலவசமாக சொல்லிக்கொடுக்கிறோம்.
மதுரையில் பெரும்பாலும் ஜீப்ராவை அணுகும் வாடிக்கையாளர்கள் என்ன எதிர்பார்ப்போடு வருகிறார்கள்?
பெரும்பாலும் வெப்சைட் வேண்டும் என்பார்கள். அல்லது இருக்கும் வெப்சைட்டை சரி பண்ண வேண்டும் என்பார்கள். நாங்கள் வெப்சைட்டோடு நின்றுவிடுவதில்லை, அவர்களுக்குத் தேவையான பிஸ்னஸ் கார்டு, பில்லிங், லோகோ, ஆபீஸ் டிசைன் இப்படி எல்லாமும் செய்து கொடுக்கிறோம். வெறும் பெயரை மட்டும் சுமந்துகொண்டு வரும் ஒரு நிறுவனத்திற்கு ஒரு ப்ராண்ட் உருவாக்கி மார்க்கெட்டில் வெற்றி பெறத் தேவையான அனைத்தையும் செய்கிறோம். ரோட்டில் இறங்கி பேனர் மட்டும் இன்னும் கட்டவில்லை. இப்போது நீங்கள் என்னிடம் வருகிறீர்கள், உங்களுக்கு ப்ராண்ட் உருவாக்கி கொடுக்கிறேன். அது உங்களுக்கு பிடித்துவிட்டது. நீங்கள் இன்னொருவரிடம் என்னை பரிந்துரைப்பீர்கள், அவர் என்னிடம் வருவார். இப்படி என் மீதான நம்பிக்கையில் அடிப்படையில் வரும் பரிந்துரைகள் தான் என் பலம். இது தான் என் வெற்றிக்கான ரகசியம். அவ்வளவு தான்.
வெப் டிசைன் மற்றும் ப்ராண்ட் தொழிலில் இறங்கும் இளம் தலைமுறையினருக்கு என்ன சொல்ல விரும்பிகிறீர்கள்?
இந்த தொழிலில் வெற்றிபெற வேண்டுமென்றால் முதலில் ஆர்வமும், அதன் மீது காதலும் வேண்டும். தொழிலை காதலிப்பவர்கள் என்றுமே தோற்றதில்லை. என்று முடித்தார்.
இணையதள முகவரி: cbra
இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்
தொடர்பு கட்டுரைகள்:
தொழிலில் வெற்றி பெற, இயங்கும் இடத்தை விட விடாமுயற்சியே முக்கியம்: மதுரை சிவகுமார் நம்பிக்கை
மதுரை பெண் தன் கண்டுபிடிப்புகளால் சிலிக்கான் வேலி வரை சென்ற கதை!