கதைகளைப் பயன்படுத்தி குடிசைவாழ் குழந்தைகளின் வாழ்க்கையை மாற்றும் ’கதா’
அரசு சாரா நிறுவனமான கதா 30 வருடங்களாக நலிந்த குழந்தைகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது...
பல வருடங்களுக்கு முன்பு ஒரு இளம் மாணவி டெல்லியின் கோவிந்த்புரி பகுதியில் இருக்கும் கதா லேப் பள்ளியில் சேர்ந்தார். அவரது மன உறுதியைப் போலவே அவரது கனவும் வலுவாக இருந்தது. அருகாமையிலிருக்கும் குடிசைப் பகுதியைச் சேர்ந்த இந்த மாணவி ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்கிற கனவுடன் இருந்தார். பல ஆண்டுகள் கழித்து கதா ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்வின்போது சிகப்பு சுழல்விளக்கு பொருத்தப்பட்ட ஒரு வெள்ளை அம்பாசிடர் வருவதை குழுவினர் பார்த்தனர். கதாவில் படித்த அதே பெண் இப்போது அவர்கள் முன்னால் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக வந்து இறங்கியதைப் பார்த்து ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியில் திளைத்தனர். அந்த ஐஏஎஸ் அதிகாரி தனது பயணத்தின் தொடக்கம் குறித்த நினைவுகளை பகிர்ந்துகொள்ளவே அந்த நிகழ்விற்கு வந்திருந்தார்.
பல தலைமுறைகளாகவே கதை என்பது கற்றலுக்கான சிறந்த வழி. நமது அம்மா, பாட்டி போன்றோர் சொல்லும் வீரம், சாகசம், மதிப்பு ஆகியவை குறித்த கதைகளைக் கேட்டு அதிகம் தெரிந்துகொண்டுள்ளோம். ஆனால் கிராமப்புறத்தில் வசிக்கும் 300 மில்லியன் ஏழை மக்கள் எப்படிப்பட்ட கதைகளைக் கேட்பார்கள்? கிராமப்புற மக்களின் ஏழ்மை நிலையினால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
டெல்லியின் குடிசைப்பகுதிகளில் வசிக்கும் நலிந்த குழந்தைகள் மீது சிறப்பு கவனம் செலுத்தும் விதத்தில் ’கதா’ என்கிற அரசு சாரா நிறுவனம் செயல்படுகிறது. இந்தக் குழந்தைகளின் வளர்ச்சி, நல்வாழ்வு, திறமை, குறிப்பாக கல்வி ஆகிவற்றை பாதிக்கக்கூடிய அனைத்து அம்சங்களையும் மாற்றும் நோக்கத்தில் செயல்படுகிறது. குறைவான வருவாய், தங்குமிடம், குடிநீர், சுகாதாரம், ஊட்டச்சத்து, ப்ரீ ஸ்கூல் மற்றும் பிற பள்ளிகள் போன்றவை இல்லாதது மிகப்பெரிய சவாலாக உள்ளது. இதை எதிர்கொள்ள உதவுகிறது இந்நிறுவனம்.
கதா நிறுவனர் கீதா தர்மராஜன் கூறுகையில்,
குழந்தைகள் மகிழ்ச்சியாக கற்கவும் வறுமையின் பிடியிலிருந்து வெளியே வர உதவும் விதத்திலும் கடந்த 29 வருடங்களாக கதை மூலம் கற்பிக்கும் முறையை நாங்கள் பயன்படுத்துகிறோம். அப்படிப்பட்ட ஒரு வலுவான டூலை பயன்படுத்தி 90,00,000-க்கும் அதிகமான குழந்தைகள் தங்களது வறுமையிலிருந்து வெளிவர உதவியுள்ளது கதா. இதில் 29,000 பேருக்கு ஐடியில் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. 3,70,000 பெண்களுக்கு வருவாய் ஈட்டும் திறனும் சமூக செயற்பாட்டுத் திறனும் கற்பிக்கப்பட்டுள்ளது.
‘டார்கெட்’ என்கிற குழந்தைகள் பத்திரிக்கையில் துவங்கியது கீதாவின் எடிட்டோரியல் அனுபவம். அதைத் தொடர்ந்து பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வெற்றி பெற்ற முன்னாள் மாணவர்கள் பத்திரிக்கையான ’தி பென்சில்வேனீயா கெஜட்’ பத்திரிக்கையில் பணிபுரிந்தார். கீதா ஒரு எழுத்தாளர். முப்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் புத்தகங்கள் எழுதியுள்ளார். அத்துடன் பத்திரிக்கைகளில் 450-க்கும் மேற்பட்ட கட்டுரைகளும் எழுதியுள்ளார்.
துவக்கம்
’தமாஷா’ என்கிற பத்திரிக்கை 1988-ல் முதல் தலைமுறையாக பள்ளி செல்வோருக்காக உருவாக்கப்பட்டது. இதில் துவங்கியது ’கதா’வின் பயணம். 1989-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி கதா நிறுவப்பட்டது. தற்செயலாக அந்நாள் உலக எழுத்தறிவு நாளாகவும் அமைந்தது குறிப்பிடத்தக்கது. படிப்பதில் இருக்கும் மகிழ்ச்சியை அதிகரிப்பதும் குழந்தைகளிடையே புத்தகத்தின் மீதான விருப்பத்தை அதிகரிப்பதுமே கதாவின் நோக்கம். மேலும் கதைகளின் வலிமையைக் கொண்டு கிராமப்புறங்களில் வறுமையில் வாடும் மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துவதே கதாவின் நோக்கமாகும்.
கீதா நினைவுகூறுகையில்,
“பென்சில்வேனியாவின் நூலகங்களைப் பார்வையிட்டுக் கொண்டே செல்லும்போதுதான் கதாவிற்கான விதை என் மனதில் விதைக்கப்பட்டது. என்னுள் இரண்டு எண்ணங்கள் தோன்றின – முதலில் பல மொழிகளைக் கொண்டிருப்பது இந்தியாவிற்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம். இரண்டாவது இந்தியக் குழந்தைகளால் ஏன் அந்த மொழிகளில் படிக்க முடியவில்லை?”
2015-ம் ஆண்டு கதாவின் நிர்வாக இயக்குனராக செயல்பட்டார் கீதா. உலகெங்குமுள்ள குழந்தைகளை அணுகும் விதத்தில் தனித்துவமான பிரச்சாரங்களை மேற்கொண்டார். தனித்துவமான கதை மூலம் கற்பிக்கும் முறையை உருவாக்க விரும்பினார். இதுவே கதா லேப் பள்ளியின் பாடதிட்டத்தை உருவாக்க அடித்தளமாக அமைந்தது. இன்றும் தொடர்ந்து ப்ரெசிடெண்டாகவும் கதா ஆளுநர்கள் குழுவின் தலைவராகவும் உள்ளார்.
வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துதல்
கதைகள் பதிலை நோக்கிய பாதையில் இட்டுச்செல்வதில்லை. மாறாக கேள்வியெழுப்ப வைக்கிறது. குழந்தைகள் ஏன் என்கிற கேள்வியைக் கேட்க கதைகள் உதவுகிறது. இது குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்டுவதுடன் விமர்சன சிந்தனையாளர்களாக மாற்றுகிறது. இந்தச் சிந்தனைதான் மாற்றத்திற்கு வழிவகுக்கிறது,” என்று விவரித்தார் கீதா.
2030-ம் ஆண்டில் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 50 சதவீதத்தினர் நகரத்தில் இருப்பார்கள் என்று மதிப்பிடப்படுகிறது. நாட்டில் நகர்புற மக்கள்தொகை அதிகரித்து வருவதால் நகர்புற வறுமையும் அதிகரிக்கும்.
எனவே டெல்லி முழுவதுமுள்ள குடிசைப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு தரமான பள்ளிப்படிப்பும் சிறந்த கதைபுத்தகங்களையும் வழங்குவதில் கவனம் செலுத்துகிறது கதா. குழந்தைகளின் வளர்ச்சி, நல்வாழ்வு, திறமை ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அனைத்து அம்சங்களையும் கொண்ட கதையை உருவாக்க விரும்புகிறது கதா.
கல்வி என்பதன் பொருள் வளர்ச்சி
UNICEF மற்றும் டெல்லி அரசாங்கம் ஆகியவற்றுடன் இணைந்து 1988-ம் ஆண்டு கதா தனது முதல் கற்பித்தல் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது டெல்லியின் குடிசைப்பகுதியில் வசிக்கும் அனைத்து குழந்தைகளிடமும் கல்வியைக் கொண்டு சேர்க்கும் முயற்சியாகும். பின்னர் ராஜஸ்தான் அரசும் தங்களது பள்ளிக்குழந்தைகளுக்கு எடுத்துச்செல்லவேண்டும் என்று ஆர்வம் காட்டியது. 2001-ம் ஆண்டு கதா குழுவினர் தெருவில் இருக்கும் குழந்தைகளுக்காக ‘தமாஷா ரோட்ஷோ’ என்கிற முயற்சியை மேற்கொண்டனர். பள்ளிக்குச் செல்ல தயார்படுத்துவதற்காகவும் முறையான பள்ளிப்படிப்பைப் பெற உதவும் வகையிலும் இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
பத்மஸ்ரீ விருது பெற்ற கீதா கூறுகையில், “இது அவர்களை படிப்பில் தலைசிறந்தவர்களாக மாற்றுகிறது. இளம் வயதிலேயே கதை வாயிலாக கற்பிக்கும் முறையை பின்பற்றியதால் நிதி பற்றாக்குறை காரணமாகவோ அல்லது விருப்பமின்மை காரணமாகவோ பள்ளிப்படிப்பை நிறுத்திவிடும் நடவடிக்கையை தடுத்து எங்களுடன் மாணவர்களை தக்கவைத்துக்கொள்ள முடிந்தது. கடந்த 29 ஆண்டுகளாக கதை வாயிலாக கற்பிக்கும் எங்களது முறை கதா லேப் பள்ளியில் மட்டுமல்லாது 1000 க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளிலும் பின்பற்றப்படுகிறது.”
குழு அளவு
8,000 எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், ஓவியர்கள், புகைப்படக்கலைஞர்கள் மற்றும் பிற படைப்புத்திறன் கொண்டவர்களுடன் கதா குழுவினர் பணிபுரிகின்றனர். மேலும் அடிமட்ட அளவில் 30,000 தன்னார்வலர்கள் உள்ளனர். இந்த நெட்வொர்க்கைக் கொண்டு டெல்லியில் 950 சமூகத்தினரை சென்றடைந்துள்ளனர். இதில் ஒவ்வொரு குழந்தையையும் படிப்பு சென்றடையவேண்டும் என்கிற நோக்கத்தில் 800 பகுதிகளில் தீவிரமாக செயல்படுகிறது. ’ஐ லவ் ரீடிங்’ என்கிற ப்ரோக்ராம் இந்தியா முழுவதும் நடத்தப்படுகிறது. இந்தியாவில் 35 நகராட்சிகளில் செயல்படுகிறது. இந்தியா முழுவதுமுள்ள சிறந்த புத்தகங்கள் மொழிபெயர்க்கப்பட்டதால் எல்லைகள் தாண்டி வளங்கள் சென்றடைய உதவுகிறது.
ஆதரவளித்தவர்கள்
இந்த அரசு சாரா நிறுவனம் டெல் ஃபவுண்டேஷன், டாடா ட்ரஸ்டஸ், மஹிந்திரா ஃபவுண்டேஷ் போன்ற மிகப்பெரிய பன்னாட்டு மற்றும் பைலேட்ரல் ஃபவுண்டேஷன்ஸ் ஆகியவற்றுடன் நீண்ட காலம் இணைந்து செயல்பட்டது. கதாவின் ப்ரோக்ராம் எண்ணற்ற குழந்தைகளை சென்றடைவதற்கு இந்த ஃபவுண்டேஷன்கள் தாராளமாக நிதியுதவி செய்தது. UNICEF உள்ளிட்ட பல்வேறு ஐக்கிய நாட்டு ஏஜென்சிகள் கதாவின் ப்ரோக்ராமிற்கு பங்களித்தனர்.
பல்வேறு தனிநபர்கள் குறிப்பாக HNIs ப்ரோக்ராமிற்காக தொடர்ந்து நன்கொடையளித்தனர்.
டெல்லி அரசாங்கமும் 1991-ம் ஆண்டு முதல் நகரத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்களின் நெட்வொர்க்கை அணுக அனுமதியளித்து இந்த அரசு சாரா நிறுவனத்திற்கு ஆதரவளித்தது.
எனினும் நன்கொடையளிக்கப்படும் ஒவ்வொரு ரூபாயும் குழந்தைகளிடையே கல்வியறிவை பரப்புவதற்காக முறையாக திறம்பட பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்வதற்காக குறைந்த பட்ஜெட்டில் புதுமையளிக்கும் கொள்கையை பின்பற்றியது கதா. உதாரணத்திற்கு ’ஐ லவ் ரீடிங்’ பிரச்சாரத்திற்காக ஆயிரக்கணக்கான அடிமட்ட ஆதரவாளர்களை ஒன்றிணைத்து ஒருவர் மற்றவருக்கு பரிந்துரைத்ததன் மூலம் விரிவடைந்தது கதா.
மாற்றத்தை ஏற்றுக்கொள்ளுதல்
இந்தியாவில் பள்ளிப்படிப்பைப் பொருத்தவரை தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெறுவதில் மட்டுமே கவனம் செலுத்தப்படுகிறது. கற்றலில் இருக்கும் மகிழ்ச்சியை கொண்டு சேர்ப்பதில்லை. இந்த அணுகுமுறையை மாற்றுவதே கதா குழுவிற்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது.
கோவிந்த்புரியில் கதா லேப் பள்ளியை அமைக்கையில் பெற்றோர்கள் தரப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது கதாவிற்கு சவாலாக அமைந்தது. பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பத் தயங்கினர். ஏனெனில் பெரும்பாலான குழந்தைகள் குடும்பப் பொறுப்பை சுமந்து அவர்கள் மட்டுமே வருமானம் ஈட்டி வந்தனர். பன்னிரண்டு வருட கல்வி என்பதை எந்த குடும்பமும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.
எனவே கதா முதலில் பெண்களுக்கான வருமானம் ஈட்டும் திட்டங்களைத் துவங்கியது. இதனால் பெண்கள் ஆசிரியர் பணியிலும் பேக்கிங், எம்பிராயிடரிங் ஆகிய பணிகளிலும் ஈடுபட்டனர். முதலில் கிடைத்த சிறிய வெற்றியினைத் தொடர்ந்து 1,00,000 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வருவாய் ஈட்டும் திறனில் பயிற்சியளித்தது கதா. பத்தாண்டுகளுக்கு முன்பு அந்தக் குடும்பங்கள் சம்பாதித்தைக் காட்டிலும் இன்று 20 மடங்கு அதிகமாக சம்பாதிக்கின்றனர்.
இந்தப் புதுமையானது டெல்லியின் பாதியளவு குடிசைப்பகுதிகளை சென்றடைந்துள்ளது. இன்று பெரும்பாலான தாய்மார்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகின்றனர்.
ஆங்கில கட்டுரையாளர் : ஷரிகா நாயர்