Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

பெண்கள் வீட்டில் இருந்தே எளிதாக தொடங்கக் கூடிய 10 ஆன்லைன் வணிகங்கள்!

பெண்கள் தங்கள் வீட்டில் இருந்தவாறே குறைந்த முதலீட்டில் லாபகரமான வணிகத்தை உருவாக்க உதவக்கூடிய சில யோசனைகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

பெண்கள் வீட்டில் இருந்தே எளிதாக தொடங்கக் கூடிய 10 ஆன்லைன் வணிகங்கள்!

Friday November 15, 2019 , 3 min Read

குறைந்த விலையில் ஸ்மார்ட்ஃபோன், மலிவு விலையில் டேட்டா, இணையத்தை எளிதாக அணுகக்கூடிய நிலை போன்றவை மின் வணிகத்தை அமைப்பதை எளிதாக்கியுள்ளது.


தொழில்முனைவில் அதிக அனுபவமில்லாத பெண்கள்கூட தங்களது வீட்டில் இருந்தவாறே வணிகத்தைத் தொடங்கலாம். வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்களையோ மின் வணிக தளங்களையோ பயன்படுத்தி குறைந்த செலவில் எளிதாக வணிகத்தை அமைக்க முடியும்.

1

நீங்கள் வணிகம் தொடங்க உந்துதலளிக்கக்கூடிய சில யோசனைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

1. உணவு சேவை

இன்று உணவு ஆர்டர் செய்ய ஏராளமான செயலிகள் உள்ளன. இவை விரைவாகவும் எளிதாகவும் மக்களிடன் உணவைக் கொண்டு சேர்க்கிறது. உணவு சேவையைக் குறிப்பாக, மக்கள் அதிக எண்ணிக்கையில் பணிபுரியும் இடங்களில் இந்தச் சேவையை வழங்கி பலனடையலாம். வீட்டில் ஏற்கெனவே இருக்கும் சமையல் சாதனங்களைக் கொண்டே எளிதாகத் தொடங்கலாம்.


கூடுதலாக மளிகைப் பொருட்களையும் பேக்கேஜிங் பொருட்களையும் வாங்கினால் போதுமானது. வாட்ஸ் அப் பயன்படுத்தி ஒரு குழுவை உருவாக்கிக் கொள்ளலாம். தினசரி மெனுவை குழுவில் அனுப்பி ஆர்டர்களைப் பெறலாம். இந்த வணிகத்தை அமைக்க வெறும் 5,000 ரூபாய் செலவிட்டால் போதும்.

2. ஆபரணங்கள் உருவாக்கலாம்

கைகளால் செய்யும் ஆபரணங்கள் தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்பதால் மக்களிடையே மிகவும் பிரபலமாகியுள்ளது. க்வில்லிங், டெரக்கோட்டா அல்லது மற்ற வகையான வடிவமைப்புகளை உருவாக்குவதற்கான படைப்பாற்றல் உங்களிடம் இருக்குமானால் வாட்ஸ் அப் குழுக்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அல்லது இன்ஸ்டாகிராம் கணக்கைத் தொடங்கி சந்தைப்படுத்தலாம்.


இவற்றில் நீங்கள் கைகளால் உருவாக்கிய கம்மல், நெக்லெஸ், ப்ரேஸ்லெட் போன்றவற்றைக் காட்சிப்படுத்தலாம். 10,000-20,000 ரூபாய் வரை செலவிட்டு மணிகள், வயர்கள், நூல், கற்கள் போன்ற மூலப்பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். ஆனால் டிசைனும் தரமும் சிறப்பாக இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டியது அவசியம்.

3. பேப்பர் மற்றும் துணிப் பைகள்

பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை மக்கள் தவிர்த்து வருகின்றனர். இதனால் பேப்பர் மற்றும் துணிப் பைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.


பேப்பர் பைகள் தயாரிக்க, கைகளால் தயாரிக்கப்பட்ட பேப்பர்களை ஸ்டோர்களில் வாங்கிப் பயன்படுத்தலாம். அல்லது சணல், காட்டன் போன்ற துணி வகைகளைப் பயன்படுத்தலாம். துணி, பேப்பர், இன்க், நூல், லேஸ் போன்ற மூலப் பொருட்களை மட்டுமே வாங்கவேண்டும் என்பதால் இதற்கான முதலீடு மிகவும் குறைவு.

4. பேக்கிங்

உங்களுக்கு பேக்கிங் செய்வதில் ஆர்வம் இருக்குமானால் குக்கீஸ், பிஸ்கெட், ப்ரௌனீஸ், ப்ரெட், கேக் போன்றவற்றை வீட்டிலேயே உங்களால் தயாரிக்க முடியுமானால் நீங்கள் இந்தப் பிரிவைத் தேர்வு செய்யலாம். மைக்ரோவேவ் அவன், பேக்கிங் பொருட்கள் போன்றவை இருந்தால் போதும். மைக்ரோவேவ் அவன் 4,000 ரூபாயில் கிடைக்கும். மற்ற மூலப்பொருட்களின் செலவுகளுடன் சேர்த்து 5,000 ரூபாய் முதல் 15,000 ரூபாய்க்குள் முதலீடு செய்தால் போதும்.  

5. ஊறுகாய் மற்றும் ஜாம்

வீட்டில் தயாரிக்கப்படும் ஊறுகாய்களுக்கும் ஜாம்களுக்கும் மக்களிடையே எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு. இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் வீட்டில் இவற்றை தயாரிக்க முடியாமல் போகிறது. எனவே ரசாயனங்களையோ பதப்படுத்தும் பொருட்களையோ சேர்க்காமல் வீட்டிலேயே தயாரிக்கப்படும் ஊறுகாய் மற்றும் ஜாம் வகைகளை மக்கள் விரும்பி வாங்குகின்றனர்.


அதிகளவில் ஆர்டர்கள் கிடைத்துவிட்டால் மிகவும் லாபகரமாக இருக்கும். இதற்கான மூலப்பொருட்களை மொத்தமாக வாங்குவதற்கும் பேக் செய்வதற்கும் சில ஆயிரங்களை முதலீடு செய்யவேண்டியிருக்கும்.

6. மெழுகுவர்த்தி

வாசனை தன்மை அதிகம் கொண்ட மெழுகுவர்த்தி மக்களிடையே பிரபலமாகி வருகிறது. மிகக்குறைந்த முதலீட்டுடன் இவற்றை வீட்டிலேயே தயாரிக்கலாம். மெழுகு, திரி, நறுமண எண்ணெய், நறுமணப்பொருள், பாத்திரம் போன்றவை இருந்தால் போதுமானது.


வைன் க்ளாஸ், மேசன் ஜாடி போன்றவற்றைக் கொண்டு மெழுகுவர்த்தியை அலங்கரிக்கலாம். வாசனையிலும் நிறங்களிலும் புதுமையைப் புகுத்தி மக்களை ஈர்க்கும் வகையில் மெழுகுவர்த்திகளை உருவாக்கி போட்டியாளர்களிடையே தனித்துவமாக செயல்படலாம்.

7. சோப் மற்றும் ஷாம்பூ கட்டிகள்

சோப் தயாரிப்பு ஒரு கலை. எளிமையான பயிற்சி மூலம் இதைக் கற்றுக்கொள்ளமுடியும். பெரும்பாலான நகரங்களில் இதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இன்று பலர் இயற்கையான ஆர்கானிக் காஸ்மெடிக் பொருட்களையே விரும்புவதால் கைகளால் தயாரிக்கப்படும் சோப், ஷாம்பூ ஆகியவற்றிற்கு தேவை அதிகரித்துள்ளது.


நறுமண எண்ணெய் போன்ற மூலப்பொருட்களின் விலை சற்று அதிகமாக இருப்பினும் ஒட்டுமொத்த முதலீடு குறைவாகவே இருக்கும். ஷாம்பூ உடன் கண்டிஷனரையும் தயாரிக்கலாம்.

8. ஆடைகள்

அமேசான், ஃப்ளிப்கார்ட், போன்ற மின் வணிக தளங்களிலோ சமூக ஊடக தளங்களிலோ ஆடைகளை விற்பனை செய்து வருவாய் ஈட்டலாம். உள்ளூர் சந்தையில் இருந்து மொத்த விற்பனையாளர்களிடமிருந்தோ துணிகளை வாங்கிக்கொண்டால் அவற்றை ஆன்லைனில் அதிக விலைக்கு விற்பனை செய்து லாபம் ஈட்டலாம். மால் அல்லது பெரிய ஸ்டோர்களில் கிடைக்காத தனித்துவமான ஆடைகளை விற்பனை செய்யும் பட்சத்தில் இந்த வணிகம் லாபகரமாக இருக்கும்.

9. யூட்யூப் சானல்

மலிவு விலையில் டேட்டா கிடைப்பதாலும் அதிவேக இணைய சேவை கிடைப்பதாலும் பலர் யூட்யூப் நட்சத்திரங்களாக மாறியுள்ளனர். ஸ்மார்ட்ஃபோன் கேமரா, வீடியோ எடுத்து எடிட் செய்யும் திறன் போன்றவை இருந்தால் போதுமானது. நீங்கள் வீடியோக்களை உருவாக்கி யூட்யூபில் பதிவேற்றம் செய்து Google AdSense பயன்படுத்தி வருவாய் ஈட்டலாம்.


புதுமையான உள்ளடக்கத்தை உருவாக்கினால் வெற்றிகரமாக செயல்படலாம். சமையல் வீடியோக்கள், DIY கலை மற்றும் கைவினை, மேக் அப் பயிற்சி, வீட்டு வைத்திய வீடியோக்கள் போன்றவை உருவாக்க மிகவும் எளிதானது. அத்துடன் பிரபலமானது. நீங்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவில் நிபுணத்துவம் பெற்றிருந்தால் அதைக் கொண்டு சானல் உருவாக்கி வெற்றியடையலாம்.

10. அப்பளம் செய்தல் (பப்படம்)

இந்திய வீடுகளில் நீங்கா இடம் பிடித்திருப்பது பப்படம். ஆண்டு முழுவதும் இதற்கான தேவை உள்ளது. மிகக்குறைந்த முதலீட்டுடன் எளிதாக அமைக்கக்கூடிய வணிகம் இது. பப்பட் மேக்கர் மற்றும் நீங்கள் தயாரிக்க விரும்பும் அப்பளம் வகையை தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் ஆகியவை இருந்தால் போதுமானது. தனிப்பட்ட நுகர்வோருக்கோ கடைகளுக்கும் விசேஷங்களுக்கும் மொத்தமாகவோ விற்பனை செய்து லாபம் ஈட்டலாம்.


ஆங்கில கட்டுரையாளர்: நிரந்தி கௌதமன் | தமிழில்: ஸ்ரீவித்யா