Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

இந்தியாவில் உள்ள 10 முக்கிய பிரச்சனைகள்: தொழில் முனைவோர் சிந்திக்க வேண்டிய நேரம் இது!

இந்தியாவில் உள்ள 10 முக்கிய பிரச்சனைகள்: தொழில் முனைவோர் சிந்திக்க வேண்டிய நேரம் இது!

Tuesday August 02, 2016 , 7 min Read

இன்றைய தொழில்முனைவு காலத்தில், உங்களின் அத்தியாவசிய தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் சேவை நிறுவனங்கள் கொட்டிக் கிடக்கின்றன. உடை, உணவு, தங்க இடம் என எந்தவித தேவைக்கும் உதவிக்கரம் நீட்ட ஸ்டார்ட் அப்'கள் காத்திருக்கின்றன. பசி என்றால் 'ஃபுட்பான்டா', வரும் வாரம் செல்லவேண்டிய பார்ட்டிக்கு ஏற்ற உடை வேண்டுமா? 'மின்த்ரா', 'ஜபாங்'... உள்ளன, வீடு வேண்டுமா? 'ஹெளசிங்.காம்' என்று சேவைகளை அள்ளித்தருவதற்கென தொடக்க நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு நிறுவப்பட்டுள்ளன. 


சிறந்த தலைமை கொண்டு இந்தியா வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இருப்பினும் பல இடங்களில் சவால்களும் இருக்கின்றன, இந்த சவால்களை சந்திக்க, அதற்கு தகுந்த பதிலை தர, நம் நாடு திறமையை ஒன்றிணைக்கும் முயற்சிகளை எடுக்க வேண்டும். குறிப்பாக, திறன்மிக்கவர்களை அரசு வெளியில் இருந்து அழைத்துவந்து தொழில்முனைவை ஊக்குவிக்க நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். தாங்கள் செய்வதை நேசிப்பவர்கள் பெரிய பிரச்சனைக்களுக்கான தீர்வை சுலபமாக கண்டறிவர். அவர்கள் லாபத்திற்காக மட்டும் பணிபுரிவோரை விட சிறந்த ஒரு தீர்வை தருவர். 

image
image


திறமை, பல்துறை அனுபவம், இவை இரண்டையும் ஆதரிக்கும் அரசு இருந்தால் நாட்டில் முக்கியப் பிரச்சனை மற்றும் சவால்களுக்கான தீர்வுகளை கண்டு அதை சரிசெய்ய சேவைகளை அளித்து, நம் நாட்டை வளர்ச்சி நாடாக கொண்டு செல்ல முடியும்.


இன்று இந்தியாவில் நிலவி வரும் 10 முக்கிய பிரச்சனைகள் என்ன? அதற்கான தீர்வை தொழில்முனைவு நிறுவனங்கள் எப்படி கொடுக்க முடியும் என்று பார்ப்போம்:

1. தரமான மருத்துவச்சேவை

இன்று நம் நாட்டின் மிகமுக்கியத் தேவை என்னவெனில், அருகாமையில் கிடைக்கும் தரமான மருத்துவசேவை. உலகெங்கும், குறிப்பாக இந்தியாவில் மக்கள், தரமான, நம்பகத்தகுந்த மருத்துவ சேவை அளிக்கும் மையங்கள் இல்லாமல் தவிக்கின்றனர். தற்போதுள்ள மையங்களில் சிகிச்சை பெற்று வருவோருக்கும் கசப்பான அனுபவமே கிடைக்கின்றது. ஒரு திரைப்படத்துக்கு டிக்கெட் வாங்கவும், அருகிலுள்ள நல்ல ஹொட்டல் எதுவென அறியவும் ஆப் கள் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால் வீட்டருகில் ஒரு நல்ல மருத்துவரை கண்டுபிடிப்பது என்பது கடின செயலாக இன்றளவும் உள்ளது. நோயாளிகளின் ரெக்கார்டுகள் கட்டுக்கட்டான பைல்களாக பராமரிக்கப்படுகிறது, ஆன்லைனில் பதிவு செய்திருந்தாலும் அதை சரிவர உபயோகிக்க முடியாத நிலையே உள்ளது. பலமுறை நோயாளிகளின் உடல்நலத்தைப் பற்றி முழு தகவல்கள் இல்லாமல் சரியான சிகிச்சை அளிக்கமுடியாமல் போகிறது. 


இத்தனை குறைபாடுகள் உள்ள மருத்துவசேவையில் தொடக்க நிறுவனங்கள் கவனம் செலுத்தி இதற்கான தீர்வுகளை அளிக்கலாம். உடல் ஆரோக்கியம் புதிய பரிமாணத்தை கண்டு வருகிறது. விரைவில் ஸ்மார்ட்போன்கள் மருத்துவர் இடத்தை பிடித்து, 80 சதவீததிற்கும் மேலான உடல் சம்பந்தமான பிரச்சனைக்களுக்கு விடை அளிப்பதாய் அமையப்போகிறது, 

2. பொதுப் போக்குவரத்து

இந்தியா என்றாலே, நகரங்கள் எங்கும் குழப்பமான போக்குவரத்து முறை, அதிக அளவிலான வாகனங்கள், திட்டமிட்ட நேரத்தில் ஓடாத மெட்ரோ ரயில்கள், சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல், குறைவான டாக்சி சேவை, இவையெல்லாம் பொதுப் போக்குவரத்து பற்றி நம் நினைவுக்கு வருபவை. 

மாநில அளவிலான போக்குவரத்து துறைகள் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு இல்லை. தனியார் நிறுவனங்களும் இதில் பெரிதாக ஒன்றும் செய்துவிட முடியவில்லை. சில கட்டுப்பாடுகளால் தனியார் நிறுவனங்களால் போக்குவரத்தில் மாற்றங்களை ஏற்படுத்த முடியவில்லை. 


கார் உரிமை மற்றும் டாக்சி சேவைகளில் தனியாரின் பங்கு பெரிதாக விரிவடைந்துள்ளது. ஓலா (102 நகரங்களில் 20,000 வாகனங்கள்), உபெர் (கோடிகளில் முதலீடு செய்து இந்தியாவில் விரிவாக்கம்) டாக்சி சேவை நிறுவனங்கள் போக்குவரத்துத் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. இவை பொதுப் போக்குவரத்தின் அதிக தேவையை காட்டுவதோடு, இதுவரை அந்த இடத்தை நிரப்ப அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையும் உணர்த்துகிறது. 

3. சுகாதாரம்

இந்தியா போன்ற வளரும் நாடுகளின் முக்கிய பிரச்சனையே சுகாதார குறைபாடு. சுகாதாரத் துறையில் தனியாரின் தலையீடு அவசியமாகி உள்ள நிலையில் உள்ளது தெளிவாக அனைவருக்கும் புலப்படுகிறது. சுகாதார மேம்பாட்டிற்கு, அதற்குத் தேவையான பொருட்களையும், சேவைகளையும் தகுந்த விலையில் வழங்கவேண்டிய தருணம் இது.


தனியார் தொழில் புரிய, ஒரு பெரிய சந்தையை கொண்டுள்ளது சுகாதாரத்துறை. 2.6 பில்லியன் மக்கள் அதாவது உலக மக்கள் தொகையில் 41% பேர் அடிப்படை சுகாதார தேவைகள் இன்றி உள்ளனர் என்கிறது கணக்கெடுப்பு. அதனால் ஸ்டார்ட் அப் கள் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் ஆகிய துறைகளில் புதிய எண்ணங்களை உருவாக்கி செயல்படுத்த வேண்டிய அவசியம் தற்போது உள்ளது. 'சுலப்' நிறுவனம் இத்துறையில் கால் பதித்து ஒரு தன்னிகரற்ற இடத்தை பிடித்து பலருக்கு எடுத்துக்காட்டாய் விளங்கிவருகிறது. 

4. கழிவு மேலாண்மை

இந்தியாவின் பெரு நகரங்கள் சுமார் 1,88,500 டன் கழிவுகள், (1 வருடத்தில் 68.8 மில்லியன் டன்கள்) மற்றும் ஒவ்வொரு பத்தாண்டுக்களில் கழிவு உற்பத்தி 50% உயர்வை கண்டு வருகிறது. இதில் 80% கழிவுகள் பொதுவெளியில் கொட்டப்பட்டு உடல்நல பிரச்சனைகள், சுற்றுப்புற சீர்கேடு மற்றும் அதனால் ஏற்படும் பருவநிலை மாற்றங்களுக்கு வழிவகுக்கிறது. ப்ளாஸ்டிக் மற்றும் இ-கழிவுகள் இதில் பெரும் பங்கு வகிக்கிறது.


இதற்கெல்லாம் தீர்வை இந்தியா காணவேண்டிய அவசர நிலையில் உள்ளது. இதற்குத் தேவையான புதுமை மற்றும் புத்தாக்கத்துடன் கூடிய ஐடியாக்களை தொழில்முனைவோர் உருவாக்கினால், 'ஸ்வச் பாரத் அபியான்' திட்டத்தின் வெற்றியை நோக்கி செல்ல வாய்ப்புள்ளது. இல்லையெனில், வருங்காலம் பல கோர முடிவுகளை சந்திக்க வேண்டி இருக்கும். 

5. சுற்றுச்சூழல் மாசு

இந்தியாவில் சுற்றுச்சூழலில் மாசு, நாளுக்குநாள் பெருகிய வண்ணம் உள்ளது. இதனால் சுற்றுச்சூழல்- காற்று, நிலம், நீர்; இவை பாதிக்கப்பட்டு பல பிரச்சனைகளுக்கு காரணிகளாக விளங்கி வருகிறது. திறன்மிகு வல்லுனர்களைக் கொண்டு மாசுக்கட்டுபாட்டிற்கு புதிய வழிகளை, தொழில்நுட்பத்தின் உதவியோடு கண்டெடுப்பது காலத்தின் தேவையாக உள்ளது.


சுற்றுச்சூழல் பாதிப்பிற்கு முக்கிய காரணமாக இருப்பது கார்கள், அதிலிருந்து வெளிவரும் புகை. ஒரு வாகன ஓட்டுனர் தன் வாழ்நாளில், கிட்டத்தட்ட 106 நாட்களை பார்கிக்ங் இடம் தேடி அலைய வீணப்படிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது. இதுவே போக்குவரத்து நெரிசல், காற்றில் மாசு உருவாக வித்திடுகிறது. இந்தியாவிற்கு புத்திசாலித்தனமான போக்குவரத்து முறைகள் தேவை உள்ளது. இங்கு தான் தொடக்க நிறுவனங்கள் தங்கள் புத்தியை பயன்படுத்தி மாசுக்கட்டுப்பாடு இருக்கும் விதம் யுக்திகளை செயல்படுத்த வேண்டும்.


'கார் பூலிங்' அதாவது இரண்டு, மூன்று பேர் சேர்ந்து கார்களை பகிர்ந்து பயணிக்கும் முறை ஒரு தீர்வாகும். இது போக்குவரத்து நெரிசலை குறைப்பதோடு, சுற்றுச்சூழலில் மாசுவின் அளவையும் குறைக்க உதவும். 


ஒற்றை-இரட்டை போக்குவரத்து முறையை டெல்லி அரசு அறிமுகப்படுத்தி நல்ல தொடக்கத்தை கண்டது. டெல்லியில் மாசு அளவை கட்டுப்படுத்த, டெல்லி அரசும், சிகாகோ பல்கலைகழகமும் சேர்ந்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை 2025 இல் ஏற்படுத்தியுள்ளது. இரண்டு மாத சவாலாக எடுத்துக்கொள்ளப்பட்டு, அறிவிக்கப்பட்ட, '‘Urban Labs Innovation Challenge – Delhi’ மாசுக் கட்டுப்பாடு மற்றும் காற்று, நீர் தரத்தை உயர்த்த வழி சொல்லும் புதிய ஐடியாக்களை வரவேற்றது. சிறந்த ஐடியா கொண்டுவரும் நிறுவனத்துக்கு 2 கோடி விதைநிதி வழங்கப்படும் என்று அறிவித்தது. 


இதனால் ஸ்டார்ட் அப் கள் இந்த சவாலை ஏற்க போட்டிப்போட்டுக் கொண்டு செயல்படுகின்றன. தொழில்நுட்பம் மற்றும் அறிவை பயன்படுத்தி புதிய வழிகளை கண்டறிய ஆவலாக பணியாற்றுகின்றனர். 'ஸ்மார்ட்ஏர் பில்டர்ஸ்', எனும் டெல்லியைச் சேர்ந்த ஸ்டார்ட் அப், உட்புறம் பயன்படுத்தக்கூடிய ஏர் ப்யூரிஃபையர் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.


இது, காற்றை மாசுப்படுத்தும் முக்கிய பொருளான PM2.5, எதிர்த்து செயல்பட்டு சுற்றுச்சூழலை பாதுக்காக்கும் விதம் தயாரிக்கப்பட்டுள்ளது. PM2.5 என்பது கார், ட்ரக் போன்ற வாகனங்களில் இருந்து வெளியேறும் மாசு, நிலக்கரி மற்றும் பயோமாஸ் எரிப்பு மாசுவில் இருந்து உருவாகுவது ஆகும். 

6. அனைவருக்கும் தரமான கல்வி

இந்தியாவில் மேற்கல்வி, ஒருசிலருக்கு மட்டுமே சாத்தியமாக இருந்த காலம் இருந்தது. கோச்சிங் வகுப்புகள் பணக்காரர்களுக்கே கட்டுப்படி ஆனது. ஆனால் இன்றும், வருமானம் பெருகிய நிலையிலும், தரமான கல்வி என்பது சிலருக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. இங்குதான் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தலையீடு அவசியமாகிறது. கல்வி தொடர்பு சேவைகள் ஒரு வரமாக பார்க்கப்படுகிறது. 


கேமிங், இளைஞர்களை அடிமையாக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் துறை. விளையாட்டு அவர்களிடையே ஏற்படுத்திய தாக்கத்தை ஏன் கல்வி ஏற்படுத்தவில்லை? அதற்கு ஏற்ற ஆப்களை தயாரித்து படிப்பில் அடிமையாக்க முயற்சிகளை எடுக்கலாமே? புதிய புத்தாக்க எண்ணங்களுடன் கல்வி சார்ந்த சேவைகள் இந்த நேரத்தின் அவசியமாகும். நம் நாட்டில் எதிலும் இல்லாத அளவு கல்வித்துறையில் பெரும் வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. அதை கல்வி ஸ்டார்ட் அப்'கள் நன்கு பயன்படுத்தி, தரமான, சுலபமாக கிடைத்திடும் கல்வி முறையை உருவாக்கலாம். 

7. மின்சாரம்

பிறந்த குழந்தைகளைக் காக்கும் கருவி (Incubator) போன்ற சிறிய சாதனம் செயல்படுவதற்கு தொடர்ந்து மின்சாரம் தேவைப்படுகிறது. சிறிய நகரங்களை எடுத்துக் கொண்டால், அதிலும் குறிப்பாக அங்குள்ள மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகள் மற்றும் வயதானோர்களுக்கு தேவையான அத்தியாவசியங்கள் வழங்குவதில் மின்சாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது. நம் நாட்டில் நிலவும் நிலைமைக்கு ஏற்ப பொருட்கள் மற்றும் சேவைகளை நவீனமயப்படுத்தலே, இக்காலத்தின் அவசிய தேவை ஆகும். அதிலும் கிராம மற்றும் சிறு நகர்ப்புற பகுதிகளில் மக்கள் சந்திக்கும் நம்ப முடியாத, அலைபாயும் மின்சார சக்தி முக்கியமாக நவீனமயமாக்கப்பட வேண்டியதாகும்.


ஏனெனில் மின்சக்தியை சமநிலைப்படுத்துவது, ஓவர்லோட், மின்சார விநியோகப்படுத்துவதில் இழப்பு என இதில் பல பிரச்சனைகள் உண்டு. இவற்றை சரி செய்வதற்கு எந்த வித அடிப்படை தொழில்நுட்ப முன்னேற்றமும் தேவையில்லை; புதிய தீர்வுகளே தேவை. பெங்களூரில் ஸ்டார்ட்அப் ஒன்று, இப்பிரச்சனைக்கு புதுமையான தீர்வைக் கொண்டுவந்துள்ளது. அதாவது திருட்டு மற்றும் வர்த்தக காரணங்களினால் ஏற்படும் மின்சார இழப்பு, பூஜ்யமாக இருக்கும் என உத்தரவாதம் அளித்துள்ளது. அவர்கள் வடிவமைத்த தயாரிப்பானது, வாடிக்கையாளர்களுக்கு எந்த ஒரு சிரமமும் அளிக்காமல், மின்சார குறைப்பை செயல்படுத்துகிறது. மேலும் இது மின் வெட்டுகளையும் தவிர்த்து, முழு விநியோகிக்கப்பட்ட மின்சாரம், மின்சார செலவு கணக்கிடுதல் மற்றும் கட்டணம் செலுத்தும் செயல்முறைகளைத் தானியங்கச் செய்கிறது.

8. பெண்களின் பாதுகாப்பு

2013இல் இந்தியாவில் பெண்களுக்கு எதிராக 3,09,546 குற்ற சம்பவங்கள் நடந்திருக்கிறது என தேசிய குற்றப்பதிவு பணியகம் (National Crime Records Bureau) அறிவித்துள்ளது. கடந்த ஐந்து வருடங்களாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து கொண்டு மட்டுமே இருக்கிறது. நம் நாட்டில் பாதுகாப்பானது, குறிப்பாக பெண்கள் பாதுகாப்பானது, பெருகி வருவது வருத்ததிற்குரிய விஷயங்களில் ஒன்றாகும். அன்றாட வாழ்க்கையில் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு தொழில்நுட்பமும் அதன் சேவைகளால் தீர்வு காண முடியும்.


செயலிகள் போன்ற தொழில்நுட்ப தயாரிப்புகள் மூலம் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் சேவைகளை நிறைய ஸ்டார்ட்அப்-கள் கண்டுபிடிக்க தொடங்கிவிட்டனர். அவை ஜிபிஎஸ் டிராக்கிங், வரைப்படங்களில் பாதுகாப்பில்லாத இடங்களைக் காட்டுதல், அவசர தொடர்புகளுக்கு எச்சரிக்கை அனுப்புதல், கத்தும் அலாரங்கள் போன்ற அம்சங்கள் கொண்டு வடிவமைக்கப்படுகின்றன.

9. சுத்தமான குடிநீர் 

இந்தியாவின் பெரும்பாலான நகர்ப்புறங்களில் இருக்கும் குழாய்களில், ஒவ்வொரு இரண்டு முதல் பத்து நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. ஆனால் அது எந்த நாள் என்று தெரிந்து கொள்வது தான் கடினமான ஒன்றாய் உள்ளது. சுத்தமான குடிநீர் பெறுவது, இந்தியாவில் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகும். வளர்ந்து வரும் மக்கள் தொகை, விரைவான நகரமயமாக்கல் மற்றும் விவசாயம், எரிசக்தி, தொழிற்சாலை முதலியவற்றிக்காக அதிகரித்து வரும் தண்ணீர் தேவை ஆகியவை எல்லாம் தண்ணீர் தேவையின் பிற காரணிகளாக உள்ளன.


யுனிசெப்-இன் அறிக்கைப்படி, இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கினருக்கு மட்டுமே அவரவர் வளாகத்தில் குடிநீர் கிடைக்கிறது என்கிறது. இந்தியாவில் பரவும் நோய்களில் நான்கில் மூன்று பங்கான நோய்கள் தண்ணீரில் உள்ள அசுத்தங்களாலே ஏற்படுகிறது.


மக்களுக்கு சுத்தமான குடிநீரே கிடைக்கிறது என்பதை உறுதி செய்தவதற்கு தொழில் முனைவில் இறங்கிய பி.லக்ஷ்மி ராவ் ஒரு எடுத்துக்காட்டாய் திகழ்கிறார். 2015 நவம்பர் மாதத்தில், தண்ணீர் ஏடிஎம் வசதியை இவர் அறிமுகப்படுத்தினார். ஐந்து ரூபாய்க்கு சுத்தமான குடிநீரை மக்கள் அதன் மூலம் பெறலாம். இந்த ஏடிஎம் இயந்திரமானது நிலத்தடி நீர் மற்றும் மாநகராட்சி கார்ப்ரேஷன் தண்ணீரைப் பிரித்தெடுத்து சுத்தமான தண்ணீரை வழங்குகிறது. இது சாதாரண தூய்மையாக்கி அல்ல. இந்த இயந்திரம் ஏழு சுத்திகரிப்பு செயல்முறை கட்டங்களை மேற்கொள்கிறது. நாட்டில் அனைவருக்கும் தூய்மையான குடிநீர் கிடைக்குமாறு புதுமையான தீர்வுகள் கண்டுப்பிடிப்பதற்கு ஸ்டார்ட்அப்கள் ஒரு சரியான தடமாக உள்ளது.

10. இந்திய குற்றங்கள்

நாட்டில் குற்றங்கள் அளவுக்கு மீறி போய் கொண்டிருக்கையில், குற்றங்களை தடுக்க தொழில்நுட்பம் மற்றும் புதுமையான தீர்வுகளின் உதவி காலத்தின் அவசிய தேவையாக உள்ளது. ஸ்டார்ட்அப்-களுக்கு தேவையான நிதி பற்றி எல்லாம் அதிகம் பேசுகிறோம். ஆனால் குற்றங்களை தவிர்க்க வல்லதாய் ஒரு வழியை இதுவரை யாரவது தொழில்முனைந்து இருகிறார்களா?


இது போன்ற கேள்விக்கு ஒரு பதிலாய் விளங்குபவர் தான், தொழில்முனைவர் ஸ்ருதி தீக்சித். பள்ளிகளில் நடக்கும் பாலியல் முறைகேடு மற்றும் வன்முறை சம்பவங்கள் குறித்து அறிந்து மிகவும் கவலையுற்ற ஒரு தாயான இவர், அவரே சுயமாக ஸ்மார்ட்போன் போன்ற "மை ஸேஃப் பஸ்" எனும் சாதனம் ஒன்றை உருவாக்க முடிவெடுத்தார். இந்த சாதானத்தை பள்ளி பேருந்தில் பொறுத்திவிட்டால், அப்பேருந்தில் நடப்பதை நிகழ் நேர காட்டியாக கண்காணிக்க முடியும்.


தொழில்நுட்பமானது குற்றங்களைக் கண்காணிக்க வழிவகுக்கிறது. ஆனால், இது தீர்வாகாது. சமூகம் மற்றும் அரசு சட்ட நடவடிக்கைகளிலும் மாற்றம் உருவாக்குவது கட்டாயமாகும். இந்தியா ஒவ்வொரு நாளும் மாற்றத்தை சந்தித்து வருகிறது. சிறப்பாய் செழிக்கவே மாறிக்கொண்டும் வருகிறது. மற்ற நாடுகளின் கண்டுபிடிப்புகளை காபி செய்யவேண்டிய அவசியம் இந்தியாவிற்கு இல்லை; எனினும், பாரம்பரிய வழிகளால் தீர்வு காண முடியாத குற்றம் மற்றும் அநியாயங்களை எதிர்கொள்ள, படைப்பாற்றல் கொண்டு கண்டுப்பிடிக்கப்படும் புதுமையான தீர்வுகள் நம் நாட்டிற்கு அவசியமானது.


தற்போது வரையில் சுமார் 5000 ஸ்டார்ட்அப்-கள், மக்களின் வாழ்க்கையை எளிதானதாகவும் ஆற்றலுடையதாகவும் மாற்ற அயராது உழைத்துக் கொண்டிருக்கின்றன. எப்படியாகினாலும், மேற்கூறிய சவால்களை எதிர்கொள்ள இன்னும் தீவிர சிந்தனையும் வலுவான தீர்வுகளும் நமக்கு தேவை.


ஆங்கில கட்டுரையாளர்: நிகிதா பாட்டியா

(பொறுப்புதுறப்பு: இக்கட்டுரையில் கூறப்படுள்ள கருத்துக்கள் கட்டுரையாளரின் சொந்த கருத்துகளாகும். யுவர்ஸ்டாரி அதற்கு பொறுப்பேற்காது.)