லாக்டவுனில் 3000 சர்ப்ரைஸ்கள்; ரூ.1.5 லட்சம் மாத வருவாய்; பலரை ஆனந்தப்படுத்தும் ஜோடி!
கொண்டாட்டங்களை அழகாக்குபவர்கள், பர்த்டே பேபிகளை ஆச்சரியப்படுத்தி, ஆனந்தமாக்குபவர்கள். ஆம், அவர்கள் தான் சர்ப்ரைஸ் பிளானர்ஸ். ஒருவரது பிறந்தநாளிலோ, ஸ்பெஷல் நாளிலோ சர்ப்ரைஸ் பிளான் செய்து சந்தோஷமாக்குவதே அவர்கள் செய்யும் பணி.
கலகலவென கலர்ஃபுல்லாயிருக்கும் மாலில், ஒரு கூட்டம் ஆடல், பாடலுடன் ஜமாயிப்பது அடிக்கடி காணும் ஒரு காட்சியாக இருக்கிறது. பர்த்டே விழாக்களில் முகமறியா நபர்கள் கிட்டாருடன் பாடல் பாடி இசைக்கின்றனர். குடும்ப விழாக்களில் கரடி உடை அணிந்திருப்பவர் சட்டென்று தோன்றி, ஆச்சரியப்படுத்துகிறார். - உண்மையில் யார் இவர்கள்?
அவர்கள் கொண்டாட்டங்களை அழகாக்குபவர்கள். பர்த்டே பேபிகளை ஆச்சரியப்படுத்தி, ஆனந்தமாக்குபவர்கள். ஆம், அவர்கள் தான் சர்ப்ரைஸ் பிளானர்ஸ். ஒருவரது பிறந்தநாளிலோ, ஸ்பெஷல் நாளிலோ சர்ப்ரைஸ் பிளான் செய்து சந்தோஷமாக்குவதே அவர்கள் செய்யும் பணி.
அப்பணியை செவ்வென செய்வதில் கெட்டிக்காரர்களாக உள்ளனர் 'மேஜர்ஸ் அண்ட் மைனர்ஸ்' சர்ப்ரைஸ் பிளானிங் நிறுவனம். சென்னையைச் சேர்ந்த தீபக் ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி பிரியங்காவால், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட 'Majors and Minors' மாதத்திற்கு 150 சர்ப்ரைஸ் பிளான்களை வெற்றிகரமாக செய்து, ரூ1,50,000 வருவாய் ஈட்டுகிறது.
சர்ப்ரைஸ் எனும் கிஃப்ட்!
ப்ரெண்ட் ஒருத்தருக்கு பர்த்டே வந்தது. அவரு அனிருத்தோட பயங்கர ஃபேன். நாங்க ப்ரெண்ட்ஸலாம் சேர்ந்து பர்த்டே-க்கு அவரை சர்ப்ரைஸ் பண்ணலாம்னு நினைச்சோம். என்ன பண்ணோம், அனிருத்தோட சாங்ஸ்லாம் செலக்ட் பண்ணி மேஷ்அப் மாதிரி செய்யலாம்னு பிளான் பண்ணோம். பர்த்டே அன்னிக்கு காலைல அவரு இருந்த அப்பார்ட்மென்ட்டுக்கு கிட்டார் துாக்கிட்டு போயிட்டோம்.
எங்களோட நோக்கம் எல்லாம் ப்ரெண்டை எப்படியாச்சும் சர்ப்ரைஸாக வச்சுரனும்னு மட்டும்தான் இருந்ததே தவிர, சுத்தி என்ன நடக்குதுனு பாக்கவேயில்லை. சாங்ஸ் பாடி முடிக்கிறோம் பயங்கர கிளாப்ஸ். அதுல பக்கத்து வீட்டுக்காரங்க ஒருத்தவங்க 'ரொம்ப நல்லா பண்ணீங்க, எங்க வீட்டுலையும் ஒருத்தவங்க பர்த்டே வருது. இதே மாதிரி பண்ணமுடியுமா?'னு கேட்டாங்க. அந்த சமயத்தில் ஸ்பார்க் ஆகிய ஐடியா தான் இது.
தொழில் ஐடியா கிடைத்ததே தவிர, அதை சரியான பாதையில் கொண்டு செல்ல அதிகம் போராட வேண்டியிருந்தது. குடும்பத்திலிருந்தும் எந்த சப்போர்டும் கிடைக்கல.
எம்.காம் முடித்துவிட்டு ஆபிஸ் வொர்க்கோ, பேங்க் வேலைக்கோ சென்றால் லைபஃபில் செட்டிலாகலாம் என்பது அவர்களுடைய எண்ணமாக இருந்தது. படித்துமுடித்து கிட்டார் கற்று கொண்டபின், சினிதுறையில் இசையமைப்பாளர்களிடம் பணிபுரிந்து கொண்டிருந்தேன். குறும்படங்களுக்கு இசையமைத்தேன். அந்த துறையிலாவது முன்னேறுவேன்னு குடும்பத்தில் எதிர்பார்த்து கொண்டிருந்ததால் அவங்களுக்கு கொஞ்சம் வருத்தம்.
என்ன வேலை செய்கிறேனு வெளில சொல்ல முடியாது. 6 வருடங்களுக்கு முன்பு சர்பரைஸ் பிளானர்னு சொன்னா யாருக்கும் அவ்ளோ தெரியாது.
இருந்தாலும், நட்பு வட்டாரங்களும் அவர்களை சார்ந்த சுற்றங்களும், தொடர்ச்சியாக சர்ப்ரைஸ் ஆர்டர் கொடுத்தனர். வேறு என்ன செய்யலாம்னு யோசிச்சப்போ, செலிபிரிட்டிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தால் சோஷியல் மீடியாக்களில் நல்ல ரீச் கிடைக்கும்னு நினைச்சோம்.
அந்த சமயத்தில், நடிகை சிம்ரன் மேமுக்கு பர்த்டே வந்தது. அவங்களுக்கு சர்ப்ரைஸ் பிளான் பண்ணாலம்னு அவங்களுடைய கணவரை அணுகினோம். அவரும் ரொம்ப சப்போர்ட் செய்தார். அந்த வீடியோவும் சோஷியல் மீடியாவில் வைரலாகியது. மேஜர்ஸ் அண்ட் மைனர்சை பற்றியும் மக்களுக்கு தெரியவந்தது. சரியான நேரத்தை நெருங்கிட்டோம்னு தோன்றியது.
வேலன்டைன்ஸ் டேவில் குவிந்த ஆர்டர்கள்
ஒரே நாளில் 35 சர்ப்ரைஸ்கள்!
புதுவிதமாக என்ன சர்ப்ரைஸ் பிளான்லாம் செய்யலாம்னு நானும், என் மனைவியும் யோசித்தோம். அதுவரை 'கிளாசிக்' எனும் கிட்டாரில் இசையமைத்து சர்ப்ரைஸ் பண்ணி கொண்டிருந்தோம். அதன்பிறகு, ரெஸ்டாரென்டில் 'கேண்டில் லைட் டின்னர்', 'ப்ளாஷ் மாப்', காரில் கொடுக்கப்படும் 'லவ் ஆன் வீல்ஸ்', 'படகு சர்ப்ரைஸ்' என பல பிளான்களை யோசித்தோம்.
ஆனால், இதையெல்லாம் நடைமுறைக்கு கொண்டுவருவது சவாலாக இருந்தது. ரெஸ்டாரென்ட்டுடன் டை-அப் செய்வதற்கும், சென்னை துறைமுகத்தில் அனுமதி வாங்கவும் யாரை அணுகவேண்டும் என்று தெரியாமல் தேடி அலைந்தோம். நண்பர்களின் உதவியால் அனைத்தும் சாத்தியமாகியது.
மேஜர்ஸ் அண்ட் மைனர்ஸ் தொடங்கிய ஒரு வருடம் பொறுமையுடன் உழைப்பை மட்டுமே நம்பியிருந்தோம். நம்பிக்கை வீண்போகவில்லை. 6 வருடங்களாக தொழிலை கொண்டுசெல்ல வைத்துள்ளனர் எங்களது கஸ்டமர்கள்.
எத்தனை தடவை தான் வாட்ச்சும், ஃப்ளவர் வாஷும் கொடுப்பது என்ற சலிப்பில், ஸ்பெஷல் டேவில் சந்தோஷமாகி, சர்ப்ரைஸாக்கும் அனுபவத்தையே ஏன் பரிசாக கொடுக்கக்கூடாது என்று எண்ணியவர்களாலே இன்று சர்ப்ரைஸ் பிளானர்ஸ் என்ற துறை வளர்ச்சி பெற்றுள்ளது. பொதுவாக, பெண்களே அதிகளவில் சர்ப்ரைஸ் பிளான் புக் செய்கின்றனர். அதிலும், பர்த்டே மற்றும் கல்யாண நாட்களுக்காகவே அதிகம் ஆர்டர் கொடுக்கின்றனர், என்கின்றனர்.
வெளிநாடுகளில் அதிகளவில் காதலை தெரிவிப்பதற்காகவே சர்ப்ரைஸ் பிளானர்சை அணுகுவர். ஆனால், இந்த வருடம் லவ்வர்ஸ் டேவில் 35 சர்ப்ரைஸ்கள் புக் ஆகியது. காலையில் 6 மணிக்கு தொடங்கி மாலை வரை ஒரே நாளில் அத்தனை சர்ப்ரைஸ்களையும் செய்து முடித்தோம்.
பிறந்த நாள் கொண்டாட்டங்களில் கேக் ஆர்டர் செய்வதுபோன்று, சர்ப்ரைஸ் பிளானர்களை புக் செய்வது வழக்கமான ஒன்றாக மாறிவருகிறது. ஏனெனில், சர்ப்ரைஸ் கொடுக்கப்படும் போது எடுக்கப்படும் வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டாகின்றனர்.
செலிபிரிட்டிகளுக்கு அளிக்கப்படும் சர்ப்ரைஸ்களின் வீடியோக்களை யூடியூப் சேனல்களில் செய்தி போன்று வெளியிடுகின்றனர். சமீபத்தில், டிவி நடிகர்களான ஸ்ரேயா-சித்துவிற்கு கொடுத்த மொட்டைமாடி டென்ட் சர்ப்ரைஸ் வைரலாகியது. இந்த மொட்டைமாடி டென்ட் சர்ப்ரைஸ் பிளான் என் மனைவிக்காக நான் திட்டமிட்டது.
ரெமோ பட சீனும்... மொட்டை மாடி சர்ப்ரைஸ் பிளானும்...
எங்களுடையது லவ் மேரேஜ். காதலித்த நாட்களிலிருந்து இப்போது வரை நாங்கள் முதன் முதலில் சந்தித்த நாள், பிறந்தநாள், கல்யாணநாள், ஏன் மன்த்லி அனிவர்சி கூட கொண்டாடுவோம். ஒருவருக்கொருவர் சின்ன சின்ன விஷயங்களில் சர்ப்ரைஸ் பண்ணிபோம்.
சமீபத்தில் மனைவியின் பிறந்தநாளுக்கு மொட்டைமாடியில் டென்ட் கட்டி செலிபிரேட் பண்ணோம். அவங்க பயங்கரமாக சப்ரைஸ் ஆகிட்டாங்க. அப்போ கண்டிப்பா மத்தவங்களுக்கும் பிடிக்கும்னு, மொட்டைமாடி சப்ரைஸையும் லிஸ்டில் சேர்த்தோம். இப்போ, அதிகமாக அந்த சர்ப்ரைஸ் பண்ணிட்டு இருக்கோம். அந்த சர்ப்ரைஸ் பிளானின் இன்ஸ்பிரஷனே ரெமோ படத்தில்வரும் புரபோசல் சீன் தான்.
ஏன்... இந்த சர்ப்ரைஸ்-ஐ நாங்களே பண்ணிட முடியாதானு தோணலாம். கண்டிப்பா பண்ண முடியும். ஆனால், அந்த சர்ப்ரைஸ் சொதப்பாமா கொண்டு போகணும். சர்ப்ரைஸ் ஆகுறது அந்த ஒரு நிமிடத்தில் நடக்கிறது. அந்த டைமிங்கை மிஸ் செய்திடக்கூடாது. சப்ரைஸ் கொடுக்க போறவங்க கூடவே இருந்து, சகலமும் சரியாக நடக்குதுனா கவனிக்கனும்.
கடைசியில, அந்த நாளை என்ஜாய் செய்யாமல், கரெக்ட்டா சர்ப்ரைஸ் பண்ணிடுவோமா என்கிற டென்ஷன் வந்திடும். இதுமாதிரி என்னுடய கஸ்டமர் ஒருத்தர் அவரே முயற்சி செய்து சொதப்பியதாக பகிர்ந்தார்.
ரூ.1,50,000-ல் ஒரு சர்ப்ரைஸ்... | லாக்டவுனில் 3000 சர்ப்ரைஸ்...
எந்தவொரு சர்ப்ரைசிலும், பிடித்தவர்களின் பிடித்த விஷயங்கள் இருக்கவேண்டும் என்று விரும்புவார்கள். 2 வருஷத்துக்கு முன்னாடி ஒருத்தருக்கு காஸ்ட்லியாக ரூ.1,50,000 பட்ஜெட்டில் ஒரு சர்ப்ரைஸ் செய்தோம்.
ஜாகுவார் கார், லக்ஸரியான கப்பல், பிரைவேட் ஜெட் வாடகை எடுத்து காலையிலிருந்து மாலை வரை முழுக்க முழுக்க வாகனங்களில் செலிபிரேட் செய்தோம். இப்போது, தனியார் ஜெட் வாடகைக்கு விடுவதை நிறுத்திவிட்டனர்.
நானும், என் மனைவி பிரியங்காவும் சேர்ந்து தொடங்கிய இந்நிறுவனத்தில், இன்று எங்களிடம் 30 - 40 பேர் பகுதி நேரமாக பணிபுரிகின்றனர். கல்லுாரி மாணவர்கள் தான் அதிகம் பணிபுரிகிறார்கள்.
தமிழகத்தில் எல்லா ஊருக்கும் பயணித்து, சர்ப்ரைஸ் பண்ணிகிட்டு இருந்தோம். கொரோனாவால் நிலைமை அப்படியே மாறி போனது. எந்த ஆர்டரும் இல்லாமல், தொழில் முடங்கிருமோனு பயந்தோம். என்னசெய்யலாம்னு யோசித்தோம். அப்போ தான் டிஜிட்டல் சர்ப்ரைசை அறிமுகப்படுத்தினோம்.
விர்ச்சுவல் உலகில் வீடியோ கால் மூலமாக சர்ப்ரைஸ் செய்யும் பிளான்களைத் திட்டமிட்டோம். நான் நினைச்சு பார்க்காத அளவிற்கு டிஜிட்டல் சர்ப்ரைஸ் ஹிட்டடித்தது.
லாக்டவுனில் மட்டும் 3000 டிஜிட்டல் சர்ப்ரைஸ் செய்தோம். லாக்டவுன் இருக்கும் வரை தான் டிஜிட்டல் சர்ப்ரைஸ் இருக்கும் என்று நினைத்தோம். ஆனால், குடும்பத்தை பிரிந்து வெளிநாட்டில் இருப்பவர்களுக்கான வாய்ப்பாக அமைந்து, இன்று வரை மாதத்திற்கு 75 சர்ப்ரைஸ்கள் ஆர்டர் செய்கின்றனர். 40 ரெகுலர் சர்ப்ரைஸ், 75 டிஜிட்டர் சர்ப்ரைஸ் என மாதத்திற்கு 150 சர்ப்ரைஸ்கள் செய்கிறோம். மாதத்திற்கு ரூ.1,50,000 வருவாய் கிடைக்கிறது.
6 வருடத்தில் எண்ணற்றவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளோம். செலிபிரிட்டிகளில் சிம்ரன், விக்ரம், நயன்தாரா, விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், அருண்விஜய், நித்யாமேனன், விஷால், விஜய்டிவி நட்சத்திரங்கள் பலருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளோம்.
செலிபிரிட்டிகள் மட்டுமில்லை, யாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்தாலும் அவுங்க எமோஷனலாகி உணர்வுகளை வெளிப்படுத்துவர். பார்ப்பதற்கு அழகாக இருக்கும், சந்தோஷமாக இருக்கும். அதில், விஜய்சேதிபதி சாருக்கு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று சர்ப்ரைஸ் பண்ணோம். அவர் ரொம்பவே சந்தோஷமாகி, கட்டிபிடிச்சு எனக்கு முதன் முதலாக கிட்டார் வாசித்து பாடுனது நீங்க தான் சொன்னாரு," என்று மகிழ்வுடன் தெரிவித்தார் தீபக்.