வாட்ஸ் அப் மூலம் லட்சக்கணக்கில் வருவாய் ஈட்டும் சாதனை அரசிகள்!
ப்ரீத்தி சின்ஹா, சண்முகப்பிரியா, மேகா பாஃப்னா ஆகியோர் வெவ்வேறு துறைகளில் வணிகத்தைத் தொடங்கவும் வளர்ச்சி அடைய Whatsapp பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.
இந்தியாவில் மிகவும் அதிகமான அளவாக 400 மில்லியன் பயனர்கள் வாட்ஸ் அப் பயன்படுத்துகின்றனர். இரண்டாண்டுகளில் இதன் பயனர் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது. வாடிக்கையாளர்களுடனான தொடர்பு, சமூக வணிகம், நிதி, மின்வணிகம், சில்லறை வர்த்தகம் என வெவ்வேறு பிரிவுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
பெண் தொழில்முனைவோர்களை ஊக்குவித்து அவர்களது வளர்ச்சிக்கு ஆதரவளிக்க மகளிர் தொழில்முனைவோர் தளம் (WEP), வாட்ஸ் அப் மற்றும் நிதி ஆயோக் இந்த ஆண்டு ஜூலை மாதம் ஒரு பார்ட்னர்ஷிப்பை அறிவித்தது.
நாட்டில் உள்ள எண்ணற்ற பெண்கள் வாட்ஸ் அப் வாயிலாக தீவிரமாக வணிகம் செய்து ஒவ்வொரு மாதமும் மில்லியன் கணக்கில் வருவாய் ஈட்டி வருகின்றனர்.
புனேவைச் சேர்ந்த மேகா பாஃப்னா வாட்ஸ் அப் வாயிலாக மட்டுமே மிகச்சிறந்த சாலட்களை விற்பனை செய்து வருகிறார். ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றில் முழு நேரமாக பணியாற்றினார். சாலட்கள் உருவாக்குவதில் இவருக்கு ஆர்வம் இருந்ததால் பகுதி நேரமாக அதில் ஈடுபட்டார். பின்னர் இதையே முழுவீச்சில் செயல்படும் வணிகமாக மாற்றிக்கொண்டார்.
”எனக்கு எப்போதும் சாலட்கள் தயாரிப்பது பிடிக்கும். எனக்காக மட்டும் தயாரிக்காமல் மற்றவர்களுக்கும் சாலட் தயாரித்து வழங்கத் தீர்மானித்தேன். சாலட் ஒன்றை புதுமையாகத் தயாரித்து அதை என் நண்பர்களுக்கும் அக்கம் பக்கத்தினருக்கும் வாட்ஸ் அப் வாயிலாக அனுப்பினேன்,” என்றார்.
அதைத் தொடர்ந்து மேகா அதை புனே மகளிர் குழுவில் ஃபேஸ்புக்கில் பதிவு செய்தார். அதில் வாட்ஸ் அப் வாயிலாக ஆர்டர் செய்யுமாறு பதிவிட்டார். மெல்ல வணிகம் வளர்ச்சியடையத் தொடங்கியது.
சென்னையைச் சேர்ந்த சண்முகப்பிரியா தன் மாமியாரைப் போன்றே புடவை விற்பனை செய்யத் தீர்மானித்தபோது அவரது வாழ்க்கையே மாறிப்போனது. அவர் பணியை விட்டு விலகிய பின்பு வருவாய் ஈட்டும் வழிமுறைகளை ஆராய்ந்தார். உடனே விற்பனை செய்வதற்காக ஒரு பை நிறைய புடவைகள் வாங்கினார். அவரது கணவரும் அவருக்கு ஊக்கமளித்தார். நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் வாட்ஸ் அப் மூலம் புடவைகளை விற்பனை செய்யத் தொடங்கினார். விரைவில் அவரது வணிகம் சூடு பிடித்தது.
ஹெர்ஸ்டோரி உடனான உரையாடலில் பிரியா முன்பு கூறும்போது,
“நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அடங்கிய குழுவில் விற்பனை செய்யத் தொடங்கினேன். படிப்படியாக பரிந்துரைகளின் பேரில் பலர் என்னைத் தொடர்புகொண்டனர். எனவே நான் வாட்ஸ் அப் புடவை விற்பனையார்கள் அடங்கிய முகநூல் பக்கத்தைத் தொடங்கினேன். இன்று இதில் 70,000-க்கும் அதிகமான விற்பனையாளர்கள் உள்ளனர்,” என்றார்.
ப்ரீத்தி சின்ஹா 2014-ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து ஹைதராபாத் திரும்பியபோது அதிக உடல் எடையுடன் இருந்தார். இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு அவரால் சரியான உடல் எடைக்குத் திரும்பமுடியவில்லை. உடல்நலத்தின்மீது அக்கறை செலுத்த தீர்மானித்தார். உள்ளூர் விளைச்சல் குறித்தும் காய்கறிகள், பழங்கள், கொட்டை வகைகள், கீரை வகைகள் போன்றவை குறித்தும் ஆராய்ந்தார்.
அவர் வசித்த ஹைதராபாத் பகுதியில் இருப்பவர்களுக்கு சாலட் தயாரித்து வழங்கினார்.
“ஒரு நாள் நான் சாலட் தயாரித்து ஃபிட்னெஸ் ஆர்வலர்களிடம் கொடுத்தேன். அதை சுவைத்துப் பார்த்து கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டேன். இதில் ஆர்வம் காட்டிய நபர்களின் தொலைபேசி எண்ணைக் குறித்துக்கொண்டு வாட்ஸ் அப் குழுவை உருவாக்கினேன். அந்தக் குழு வாயிலாக வெவ்வேறு வகையான சாலட்களை விற்பனை செய்யத் தொடங்கினேன். ஆரம்பத்தில் சாலட்களைத் தயாரித்து நானே டெலிவர் செய்தேன். இதனால் வாடிக்கையாளர்களின் கருத்துக்களை நேரடியாகப் பெறமுடிந்தது,” என்று நினைவுகூரந்தார்.
வணிக வளர்ச்சி
மேகாவின் வாட்ஸ் அப் குழு குறுகிய காலத்திலேயே வளர்ச்சியடைந்தது. விரைவில் ஒரு நாளைக்கு சுமார் 200 ஆர்டர்களும் மொத்த ஆர்டர்களும் வரத் தொடங்கியது. இவரது வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் ஐடி துறை, பிபிஓ, மருத்துவமனை போன்ற பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். தற்போது டெலிவரி செய்யும் நபர்கள் உட்பட 15 பேர் அடங்கிய குழுவாக செயல்படுகின்றனர்.
இவர் கிட்டத்தட்ட 22 வகையான சாலட்களை விற்பனை செய்கிறார். ஒரு மாதத்தில் ஒருமுறை வழங்கும் சாலட் வகை அதே மாதத்தில் மீண்டும் வழங்கப்படுவதில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சாலட் வகையை விற்பனை செய்கிறார். இவற்றில் பதப்படுத்தும் பொருட்கள் எதுவும் சேர்க்கப்படுவதில்லை. டெலிவர் செய்யப்படுவதற்கு முன்பு ஃப்ரெஷ்ஷாக தயாரிக்கப்படுவதால் 24 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.
தற்போது சண்முகப்பிரியா சுமார் 11 வாட்ஸ் அப் குழுக்களை நிர்வகித்து வருகிறார். ஃபேஸ்புக் குழுவில் புடவைகளை சந்தைப்படுத்த எட்டு பேர் அடங்கிய குழு செயல்படுகிறது. இவரது வணிகம் சிறப்பாக வளர்ச்சியடைந்ததால் இவர் தனது வீட்டின் முதல் மாடியை புடவைகள் சேமிக்கும் இடமாக மாற்றியமைத்துள்ளார். இதில் வாடிக்கையாளர்களுக்கென தனிப்பட்ட நுழைவாயில் உள்ளது. புடவைகளை டெலிவர் செய்ய வெவ்வேறு லாஜிஸ்டிக்ஸ் அல்லது கூரியர் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறார்.
ப்ரீத்தி சின்ஹா எட்டு மாதங்கள் சோதனை முயற்சி மேற்கொண்டதை அடுத்து மக்களிடையே தேவை அதிகரித்திருப்பதைக் கண்டார். நிறுவனத்தைப் பதிவு செய்து கொண்டார். பின்னர் முழுமையான ஆரோக்கியத்துடன்கூடிய சாலட்களை வழங்குவதற்காக ஊட்டச்சத்து நிபுணர்களை இணைத்துக்கொண்டார். ’க்ரீன்ஸ் அண்ட் மோர்’ என்கிற தனது நிறுவனத்தைப் பதிவு செய்துகொண்டார்.
வாட்ஸ் அப் வாயிலாக வணிகம்
மேகா தனது சாலட் வணிகத்தில் சுமார் 3,500 ரூபாய் முதலீடு செய்தார். தற்போது தனது முழு நேரப் பணியைத் தொடந்தவாறே சாலட் வணிகத்தில் ஈடுபட்டு ஒவ்வொரு மாதமும் 1.25 லட்ச ரூபாய் வருவாய் ஈட்டுகிறார்.
”நாம் வணிகம் செய்யும் முறையை வாட்ஸ் அப் மாற்றி அமைத்துள்ளது. என்னுடைய வணிகம் முழுமையாக வாட்ஸ் அப்பையே சார்ந்துள்ளது. வீட்டிலிருந்து செயல்பட்டு வரும் எனது வணிகத்தை சற்று பெரிய வளாகத்திற்கு மாற்றி வளர்ச்சியடைய திட்டமிட்டுள்ளேன்,” என்றார்.
ப்ரீத்தி சிறியளவில் தொடங்கிய முயற்சி வளர்ச்சியடைந்து வருவது அவருக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
“தொழிலைத் தொடங்கிய முதல் நாளில் இருந்தே லாபகரமாக செயல்பட்டு வருகிறோம். ஆரம்பகட்டத்திலேயே 30,000 சாப்பாடுகள் வரை விற்பனை செய்தோம். கார்ப்பரேட் அளவில் விரிவடைய Zomato’s Food@work, ஹங்கர் பாக்ஸ் போன்றவற்றை இணைத்துக்கொண்டு வளர்ச்சியைத் துரிதப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
இந்நிறுவனங்கள் வருவாய் பகிர்தல் முறையில் செயல்படுவதால் ஆரம்பகட்ட மூலதன செலவு குறையும். இதுவரை சந்தா சேவைகளுக்காக தயாரிப்புகளை சரிபார்க்கும் பணி முடிந்துள்ளது. கார்ப்பரேட்களில் தயாரிப்பு ஏற்றுக்கொள்ளப்படுவதை சரிபார்க்கும் பணி நிறைவடைந்தால் அதை அடிப்படையாகக் கொண்டு முக்கிய இடங்களில் தனிநபர்களுக்கான ஃப்ரான்சைஸ் முறை எளிதாக திட்டமிடப்படும்,” என்றார்.
சண்முகப்பிரியாவின் ’யுனிக் த்ரெட்ஸ்’ தினமும் 50-80 புடவைகள் விற்பனை செய்கிறது. பண்டிகைக் காலங்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கிறது. 2016-17 ஆண்டில் 2.4 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டதாக இவர் தெரிவிக்கிறார். ஒட்டுமொத்தமாக ஏழு முதல் பத்து சதவீதம் லாபம் இருப்பதாகவும் மொத்த விற்பனை வாயிலாக ஏழு சதவீதமும் மறு விற்பனை வாயிலாக பத்து சதவீதமும் லாபம் ஈட்டப்படுவதாக தெரிவிக்கிறார்.
வாட்ஸ் அப் சர்வதேச தலைவர் வில் கேத்கார்ட் ஜூலை மாதம் கூறும்போது,
“சிறு வணிகங்கள் வலுவான பொருளாதாரத்தின் முதுகெலும்பாகும். இந்தியாவின் அடுத்த தலைமுறை பெண் தொழில்முனைவோர்களை உருவாக்குவதில் வாட்ஸ் அப் பங்களிப்பது பெருமையளிக்கிறது,” என்றார்.
மேலும் பலர் வாட்ஸ் அப் தளத்தைப் பயன்படுத்தி தங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்வதுடன் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்திக்கொள்ள இந்த வெற்றிகரமான பெண் தொழில்முனைவோர்கள் உந்துதலளிக்கின்றனர்.
ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: ஸ்ரீவித்யா