ஒரே நாளில் 1,00,000 முன்பதிவுகள்: ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மிகப்பெரிய சாதனை!
அறிமுகம் செய்வதற்கு முன்பே முன்பதிவு செய்யப்பட்ட ஸ்கூட்டராக சாதனை!
கால் டாக்சி நிறுவனமான ஓலா-வின் மின் வாகனப் பிரிவான ஓலா எலெக்ட்ரிக் நேற்று தனது ஓலா ஸ்கூட்டருக்கான முன்பதிவை ஆரம்பித்தது. 499 ரூபாய் செலுத்தி வாடிக்கையாளர்கள் தங்கள் ஓலா ஸ்கூட்டரை olaelectric.com தளத்தில் முன்பதிவு செய்யலாம் என்றும் இந்த தொகை திருப்பிச் செலுத்தக்கூடிய வைப்புத்தொகையாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், இந்த முன்பதிவு தொடங்கிய ஒரே நாளில் 1,00,000 முன்பதிவுகளைப் பெற்றுள்ளதாக ஓலா தெரிவித்துள்ளது. இதன்மூலம் பைக்கை அறிமுகம் செய்வதற்கு முன்பே முன்பதிவு செய்யப்பட்ட ஸ்கூட்டராக ஓலா உலகளவில் முதல் நிறுவனமாக திகழ்கிறது.
இந்த சாதனை குறித்து, ஓலாவின் தலைவரும் குழு தலைமை நிர்வாக அதிகாரியுமான பாவிஷ் அகர்வால் கூறுகையில்,
“எங்கள் முதல் மின்சார வாகனத்திற்கு இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைத்த மகத்தான ஆதரவைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். வாடிக்கையாளர்களிடம் இருந்து இந்த எதிர்ப்பாராத டிமான்ட், மக்கள் எலக்ட்ரிக் வாகனத்துக்கு மாற விரும்புவதை தெளிவாகக் காட்டுகிறது. உலகம் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒரு நிலையான போக்குவரத்துக்கு மாறும் நோக்கத்தில் இது எங்களின் பங்குகாகும். இது ஆரம்பம் மட்டுமே," என்று தெரிவித்திருக்கிறார்.
ஓலா ஸ்கூட்டர் என்பது ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்திலிருந்து ஒரு புரட்சிகர தயாரிப்பு ஆகும். இது உலகின் மிகப்பெரிய, மிக முன்னேறிய மற்றும் பசுமையான இரு சக்கர தொழிற்சாலையாகும். இது தமிழ்நாட்டில் ஓசூரில் அமைக்கப்பட்டு வருகிறது.
ஓலா ஃபியூச்சர் ஃபாக்டரியின் முதல் கட்டம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. விரைவில் தயாரிப்பு மேற்கொள்ளவுள்ளது. ஆண்டுக்கு 10 மில்லியன் வாகனங்கள் தயாரிக்கும் வகையில் அடுத்த ஆண்டுக்குள் ஆலை முழு அளவில் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.